உள்ளாட்சி தேர்தல்களும் ஊரறிந்த இரகசியங்களும்!
தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மிகவிரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. இந்திய நாட்டில், மக்கள் ஜனநாயக நிர்வாகம் என்பது பாராளுமன்றம், சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி மன்றங்கள் என்ற அடிப்படையில் ஆட்சிமுறையை கொண்டது. அதாவது உச்சகட்டமாக பாராளுமன்றத்தையும் அடிமட்ட நிர்வாகமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் கூறலாம்.
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சட்டத்தினை இயற்றி அதை நடைமுறைபடுத்த முடியும். ஆனால் ஊராட்சிமன்றங்களில் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி அதை அரசுக்கு அனுப்பமுடியும். இம்மன்றங்களில் சட்டங்களை இயற்றமுடியாது.
எனவே ஊராட்சி மன்றங்களின் நிர்வாகம் என்பது அந்தந்த ஊர் மற்றும் மாவட்டங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிமன்றங்களாக மட்டுமே உள்ளது. இவ்வாறு இருந்த ஊராட்சிமன்றங்களின் செயல்பாடுகளிலும் கடந்த காலங்களில் பலமான தொய்வு ஏற்பட்டு, பின் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் பஞ்சாயத்ராஜ் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டு கிராம அளவிலான ஊராட்சிமன்றத்தின் செயல்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
எனவே ஊராட்சி மன்ற தேர்தல் என்பது ஊர் அளவிலான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகும். குறிப்பாக சிறியசாலைகள், குடிநீர் விநியோகம், சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை, உள்ளூர் நிர்வாகம், வரிவசூல், தெருமின்விளக்குகள், மற்றும் மராமத்து வேலைகளை செய்வது போன்றவற்றை முக்கிய பணியாக செய்துவரும் ஒரு அமைப்பாகும். மேலும் தங்களின் நிதி நிலைமைக்கு அப்பாற்பட்ட திட்டங்களை முறையாக தீட்டி, அதை மாநில அரசிடம் கேட்டு பெரும் ஒரு அமைப்பாகவும் இது உள்ளது. இதன் உறுப்பினர்களும் (கவுன்சிலர்கள்) அதன் தலைவரும் (சேர்மன், நகராட்சி தலைவர் மற்றும் மேயர்) மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றார்கள்.
இந்த தேர்தலை பொருத்தவரை அரசியல் கட்சிகள் பெரும்பாடுபட்டு தங்களின் கொள்கை கோட்பாடுகளை முன்னிறுத்தி களத்தில் நின்றாலும், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலுக்கு கொடுக்கும் முன்னுரிமை போல, மக்கள் இதை அரசியல் சார்புபடுத்தி பார்ப்பது மிக குறைவே!. ஏனெனில் இங்கு சாதி, இனம் பரம்பரை தலைவர் பதவி மற்றும் உள்ளூர் நிகழ்வுகளே அதீத முக்கியத்துவம் பெறுகின்றது. அதிராம்பட்டினம் அல்அமீன் பள்ளி போன்று ஒருசில ஊர்களில், சமய சமுதாய பிரச்சனைகள் இதற்க்கு விதிவிலக்காக இருக்கலாம்.
எனவே முஸ்லிம்கள் இந்த ஊராட்சிமன்ற தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சி, சமுதாய இயக்கம் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, தங்களின் பகுதியில் உள்ள நீண்டகால பிரச்சனைகள் என்னென்ன?. எவரை தேர்ந்தெடுத்தால் நம் பிரச்சனையை உடன் தீர்த்து வைக்க முயற்சி செய்வார்?. இந்த கட்சியால், இயக்கத்தினால் நமக்கு என்ன பயன் என்பதைவிட, இந்த வேட்பாளரால் நமக்கு என்ன பயன் என்று சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்!. கடந்த காலம் முழுவதும் உறுப்பினராக இருந்துவிட்டு, பிரச்சனைகளை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, பின் எந்தபிரச்சனையையும் நிறைவேற்றாத எவரையும், அவர் முஸ்லிமாக இருந்தாலும் கூட புறந்தள்ளி, வேறு சிறந்த (முஸ்லிம்) ஒருவரை இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தென்மாவட்டங்களில் உச்சகட்ட கொடுமையாக பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டு தேர்ந்தெடுத்த அவலமும் நடந்ததுண்டு. இதுபோன்ற செயல்களையும் மக்கள் அறவே தவிர்க்கவேண்டும். இதற்க்கு பதிலாக தங்கள் மக்களுக்கு இடையே, போட்டி மற்றும் பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் தங்களின் கிராமத்தில், முஹல்லாவில், ஜமாத்தில் கூட்டத்தினை கூட்டி, போட்டியின்றி அவர்களுக்குள்ளாகவே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் பணம் மற்றும் நேர விரையம் தவிர்க்கப்படும்.
சென்றமுறை உறுப்பினராக, தலைவராக இருந்தவரையே மக்கள் ஏற்றுக்கொண்டால் மீண்டும் அவரையே தேர்ந்தடுக்கலாம். இல்லை, அவர்களை பிரச்சனைக்கு உரியவராக கருதினால், எந்தவித தயவு தாட்சண்யம் இல்லாமல் புதிய ஒருவரை ஜமாத்தே தேர்ந்தெடுத்து போட்டியினை தவிர்க்க முன்வரவேண்டும். இதுவே சிறந்ததாக இருக்கும்.
Posted by அதிரை முஜீப்