அருந்ததிராய் .
[ தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?
‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள்.
‘அண்ணா குழு’வின் புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் ஃபோர்டு ஃபவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது.
சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும் மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.
(அரவிந்த் கேஜ்ரிவால் வருமான வரித்துறையில் உதவி ஆணையராக இருந்தவர். அவர் 2000மாவது ஆண்டு விடுமுறையில் சென்றதாகவும், அதன் பின்னர் பணிக்கே வரவில்லை என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. அதேசமயம், இன்று அவர் பணியில் நீடிப்பதாகவும், சம்பளம் வாங்கி வருவதாகவும் அது கூறியுள்ளது. அந்த வகையில் ரூ. 9 லட்சம் வரை கேஜ்ரிவால் பெற்றிருப்பதாக கூறியுள்ள வருமான வரித்துறை அதை அவர் திரும்பித் தர வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. – செப்டம்பர் 2, 2011 செய்தி)
20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.
மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.
தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.]
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி! – அருந்ததிராய் .
தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்த மாதரம். ஆ) பாரத் மதாகீ ஜய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜய் ஹிந்த்.
முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)
ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத, ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)
இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.
இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’ தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.
அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.
இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?
உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.
‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.
(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.
‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.
மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.
ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)
இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.
‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின் புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும் மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.
(அரவிந்த் கேஜ்ரிவால் வருமான வரித்துறையில் உதவி ஆணையராக இருந்தவர். அவர் 2000மாவது ஆண்டு விடுமுறையில் சென்றதாகவும், அதன் பின்னர் பணிக்கே வரவில்லை என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. அதேசமயம், இன்று அவர் பணியில் நீடிப்பதாகவும், சம்பளம் வாங்கி வருவதாகவும் அது கூறியுள்ளது. அந்த வகையில் ரூ. 9 லட்சம் வரை கேஜ்ரிவால் பெற்றிருப்பதாக கூறியுள்ள வருமான வரித்துறை அதை அவர் திரும்பித் தர வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. – செப்டம்பர் 2, 2011 செய்தி)
ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?
அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.
அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.
20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.
மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.
தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
– நன்றி: அருந்ததி ராய், தி இந்து (21.8.2011)
தமிழாக்கம்: வேல்விழி, அறிவுச் செல்வன்
source: http://www.vinavu.com/2011/08/28/team-anna/
அம்பானியின் பிரம்மாண்ட ஊழலைப்பற்றி மூச்சுவிட மறுக்கும் அண்ணா ஹசாரே & கோ .
…. ஊழல் சட்டபூர்வமானது என்பதைக் கடந்து, வளங்களைத் திருடிச் செல்வதில் முதலாளிகளுக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அதை பைசல் பண்ணிவிட நீதிமன்றமும் அரசுமே தயாராய் நிற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
சமீப நாட்களாக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்து வரும் முதலாளித்துவ ஊடகங்களோ, இதைப் பற்றி எதுவும் பேசாமல் மயான அமைதியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு செய்தியாகக் குறிப்பிடும் போது கூட, உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதால் தான் ஊழல் நடந்து விட்டது என்றும், கணக்குத் தணிகை அதிகாரி முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டால் பிரச்சினை தீர்ந்தது என்பது போலும் சொல்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு முறை ஊழல் வெளியாகும் போதும் அதைப் பற்றி தனித்தனியே விவாதிப்பதும், அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாய்கிழியப் பேசி விட்டு, அப்போதைக்கு கையில் மாட்டும் யாராவது ஒரு பலியாட்டின் தலையில் பாவக் கணக்கை எழுதி வைத்து விட்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக்கு ஒரு கல்மாடி என்று ஏற்கனவே மாட்டிக் கொண்ட பலியாடுகளைப் போல் இதற்கும் இனி ஒரு பலியாடு கண்டுபிடிக்கப்படுவார். பார்வையற்ற நான்குபேர் யானையைத் தடவிப் பார்த்துப் புரிந்து கொள்ள முயல்வதைப் போன்றே இவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது.
இந்த ஊழல்கள் அனைத்திலும் ஒரு இணைப்புக் கண்ணி இருப்பதை இவர்கள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களையும் அவ்வாறு பார்த்துப் புரிந்து கொள்ள விடுவதில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஊழலைப் பொருத்தவரையில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஓட்டை என்பது ஒரு விளைவு தான் – இந்த விளைவுக்கான காரணம் வேறு.
தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய ஆரம்ப காலத்தில் – ஏன் இன்றும் அதியமான் போன்றவர்கள் கூட – அதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது பொதுத்துறையின் திறமையின்மை. இவர்கள் முதலீடு செய்யும் பலமும், தொழில் நுட்பத் திறனும், வாடிக்கையாளார் சேவையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் பலமடங்கு பின்தங்கியிருப்பதாகவும், இதனால் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், இதற்குத் தனியார்களை அனுமதிப்பதே ஒரே தீர்வு என்றும் சொன்னார்கள்.
ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?
ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.
ஆக, நாட்டுக்கும் நாட்டு மக்களும் சொந்தமான இயற்கை வளங்களைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கும் படையல் போட்டு வைத்து விட்டு அதைப் பொறுக்கித் தின்ன வரும் முதலாளிகளுக்கு இடைஞ்சல் இல்லாத நடைமுறையை மேற்கொள்வது தான் ஊழலற்ற நல்ல நிர்வாகம் (good governance) என்கிறார்கள். இந்தக் கூச்சலில் வளங்கள் கொள்ளை போவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகளின் கூத்துகள் பயன்படுகின்றன.
ஆக, உண்மையாகவே ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் – அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் தேசபக்தியும் கொண்டவர்கள், அதற்கு ஊற்றுமூலமாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதைத் தவிற வேறு வழியொன்றும் இல்லை என்பதற்கு நேரடி சாட்சியாய் ரிலையன்ஸ் ஊழலே இருக்கிறது. அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகள் ரிலையன்ஸுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதுண்டா?
source: http://www.vinavu.com/2011/06/28/ambani-scam/