இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம், இப்போது தேசிய அளவில் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும், இதே போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழக சட்டப்பேரவை தீர்மானம் குறித்து, டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு ஆதரவாக தமிழக சட்டப்பேரவையைப் போல காஷ்மீர் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினால், இப்போது இருப்பதைப் போல பா ஜ கவினர் அமைதியாக இருப்பார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தப் பிரச்சினையை வைத்து உமர் அப்துல்லா அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகக் குற்றம் சாட்டியது. அதற்காக, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதுகுறித்து பிபிசியிடம் கருத்துத் தெரிவித்த உமர் அப்துல்லா, “நான் டுவிட்டரில் தெரிவித்தது என்னவென்றால், தமிழக சட்டப்பேரவையைப் போல காஷ்மீர் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினால், நிலைமை அமைதியாக இரு்க்குமா என்பதுதான்” என்று கூறினார்.
“அஃப்சல் குரு குற்றமற்றவர் என்று நான் சொல்லவில்லை. அஃப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது என நான் சொல்லவில்லை. சட்டப்படி நடக்கக்கூடாது என நான் சொல்லவில்லை. குடியரசுத் தலைவர் எடுத்த அல்லது எடுக்காத எந்த முடிவு குறித்தும் நான் உள்நோக்கம் கற்பிக்கவில்லை. நான் சொல்வதெல்லாம், தமிழ்நாட்டைப் போல காஷ்மீர் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் பாஜக சும்மா இருக்குமா என்பதுதான்” என்றும் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்குப் பதிலாக, ராம்ஜெத்மலானி அவர்கள் அஃப்சல் குருவுக்கு ஆதரவாக ஆஜராகியிருந்தால், பாஜக என்ன சொல்லியிருக்கும் எனவும் அப்துல்லா வினவினார்.
அஃப்சல் குருவின் தண்டனையை குறைக்குமாறு அவரது தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்று கேட்டபோது, கட்சியின் சார்பில் தான் பேச முடியாது என்று தெரிவித்தார் உமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் சட்டமன்றத்திலும் தீர்மானம் வரக் கூடும்
அதே நேரத்தி்ல், காஷ்மீரைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ என்ஜினியர் ரஷீத் என்பவர், அஃப்சல் குருவின் தண்டனையை குறைக்கக் கோரி, பேரவைத் தலைவரிடம் மனுக்கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். அத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தால், ஆளுங்கட்சி அதிலிருந்து விலகி நிற்பது கடினமாகிவிடும் என நோக்கர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே, பஞ்சாப் மாநிலத்திலிருந்தும் இதேபோன்ற கோரிக்கை வந்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு டெல்லியில், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவைக் கொல்ல முயன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தேவிந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்.
இதனிடையே, கருணை மனுக்களை விரைந்து பரிசீலனை செய்ய அரசு முயற்சி எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்