மனிதன் உடல் ரீதியான நோய்கள், உபாதைகள், வேதனைகள் எனச் சங்கிலித் தொடராய்ச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, உளவியல் ரீதியான தாக்கத்துக்கும் அதிகளவு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
21 ஆம் நூற்றாண்டில் பல கண்டுபிடிப்புகள், அரிய சாதனைகள் என வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த நூற்றாண்டின் முக்கிய நோயாக ‘மன அழுத்தம்” இருக்கும் என அண்மைக் கால ஆய்வுகள் கூறுகின்றன. உடல் ரீதியான நோய்களுக்கு அடுத்தபடியாக உளவியல் ரீதியான தாக்கத்துக்குள்ளாகி அந்தத் துறையைச் சார்ந்த உள, மன, நல, மருத்துவர்களையே மனிதர்கள் அதிகம் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உளவியல் மருத்துவர்களுக்குத்தான் கிராக்கி அதிகம்.
இன்று உலகளவில் ஆண்டு தோறும் 10 இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாற்பது வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். 15 வயது முதல் 24 வயது வரையானவர்களே இவ்வாறு அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் 70 வீதமானவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன ரீதியான நோய்க்குச் சிகிச்சை பெறுகின்றனர் என்ற புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன.
77 வீதமானோர் குடும்ப உறவுகளினால் மன அழுத்திற்கும் மனோ பயத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
76 வீதம் பேர் போதுமான உறக்கம் இல்லாமல் உள்ளனர்.
70 வீதமானோர் உடனே கோபப்படுபவர்களாக உள்ளனர்.
58 வீதமானோர் தலை வலியால் அவதிப்படுகின்றனர்.
55 வீதமானோருக்கு குறைந்த நண்பர்களே உள்ளனர்.
50 வீதமானோர் புதிய பொருட்களை நுகர முடியவில்லை என்பதனையே பெரிய கவலையாக கொண்டவர்கள் எனத் தெரிவிக்கும் தகவல்கள் அதிகமான மன அழுத்தம் ஓரு நபரின் உயிரியல் வயதை 30 வருடங்கள் கூட்டுகிறது என்றும் கூறுகிறது.
அடுத்ததாக, இலங்கையை எடுத்துக் கொண்டால் நாளொன்றுக்குச் சராசரியாக 12 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என அண்மைக்கால அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கையில் தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ‘ஸ்ரீலங்கா சுமத்திரயோ’ என்ற அமைப்பே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரை வருடம் ஒன்றுக்கு 4,380 பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர். 2008 ஆம் ஆண்டளவில் 8 வயது தொடாக்கம் 71 வயது வரையான 4,120 தற்கொலை மரணங்கள் இலங்கையில் நிகழ்ந்துள்ளன. ஆண்கள்தான் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் இவ்வாறு அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் தாக்கங்களே காரணம் எனவும் ஆய்வுகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளன.
மனிதனுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தம் ,கவலை, தோல்வி, பிரச்சினை, பயம், நீடித்த எதிர்பார்ப்புகள் இவைகளும் தற்கொலைகளுக்குக் காரணமாகின்றன.
அமெரிக்காவின் APA (அமெரிக்க உளவியல் சம்மேளனம்) ஆய்வின்படி,மனிதர்களுடன் சம்பந்தப்பட்ட 12 உள நோய்கள் பிரதான அங்கம் வகிக்கின்றன எனக் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக, மனச்சோர்வு, மனச்சிதைவு, பசி இன்மை, தூக்கமின்மைஸ எனக் குறிப்பிடலாம் 35 வயதுக்குப் பிறகு மனச் சோர்வு, பயம், பதட்டம், உளச்சிதைவு ஆகியன அதிகரிக்கின்றன.
உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படக் காரணம், நமது எண்ணங்களின் சுழற்சி முறை, நடைமுறை வாழ்க்கை மற்றும் நம்மைச் சூழவுள்ள சுற்றுச் சூழல்களாகும். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வீதமானவை அழுத்தமான சூழல் காரணமாகவே வருபவை என சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிவிக்கப்படுகிறது.
நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் எண்ணங்கள் நின்று நிதானிக்கப் பெரும்பாலும் தவறி விடுகின்றன. தளர்வான சமுதாயமாக இல்லாமல் எண்ணங்கள் சிதறியடிக்கப்படும் ஒரு இறுக்கமான நெருக்கடியான சமுதாயமே நிலவுகின்றது. எது நல்லது? எது கெட்டது என்று பிரித்தறியும் முன்னரே அவசரமாகச் சிந்தித்துச் சுயகட்டுப்பாட்டை இழந்து விடுகின்றனர். உளவியல் மற்றும் பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்துப் பிரித்தறியும் சமயோசிதத்;தைத் தவறவிடுகிறான். சரி என நினைத்துப் பிழையாகச் செய்வதும் பிழையாக இருக்குமோ என்று நினைத்துச் சரியானதைச் செய்யாமல் விடுவது எல்லாமே உத்தரவிடும் எண்ணங்களின் தாக்கங்களாகும்.
எத்தனை இறுக்கமான சூழலாகவிருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சினைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்குக் கொண்டு செல்லும். நுரையீரலுக்குச் சுத்தமான காற்றைக் கொண்டு செல்லும். எனவே, மன அழுத்தத்தைக் குறைக்கச் சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க்.
அமைதியான எண்ணம்,ஆர்ப்பரிக்கும் எண்ணம் எனப் பல தொகுப்புகள் ஒருவரின் மனதினுள்ளே அடக்கப்பட்டுள்ளன. சாதாரண நடத்தையுள்ள ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 60,000 எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதேவேளை, அசாதாரண நடத்தை உள்ள ஒருவருக்கு 90,000 எண்ணங்கள் தோன்றி மறைகின்றன.
தனி மனித வாழ்வோ சமூக வாழ்வோ எதுவென்றாலும் எண்ணங்களின் அடிப்படையில்தான் அனைத்தும் அமைகின்றன. நடைமுறை வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ள போட்டுக் கொடுக்கும் எண்ணங்களை விட திருத்தத்தை மேற்கொள்ளும் எண்ணங்களைப் பின்பற்றுவதே சிறந்தது. பெரும்பாலும் ஒருவன் நியாயமற்ற காரணங்களையும் இல்லாத விடயங்களையும் எண்ணி, எண்ணியே உள்ளத்தை வருத்திக் கொள்வதுடன் வறட்டுக் கௌரவம், பிடிவாதம், தாழ்வு மனப்பான்மை, சந்தேகம், நம்பிக்கையீனம் போன்றவைகளால் அதிகளவு மன அழுத்தத்துக்கு (STRESS) உள்ளாகிறான்.
வாழ்க்கை முடிவு வரை பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது வாழ்வின் எல்லை வரை துரத்தும். ஓடி மறைய முடியாது. தடுக்கி விழலாம் ஆனால் விழுந்தபடி கிடப்பதுதான் தவறு. சட்டென எழுந்து முன்னேறும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நமது குழப்பம், பிரச்சினைகளிலிருந்து விடுபட இறை நம்பிக்கை, புரிந்துணர்வு, பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம், அவசர அவசரமாக எதையுமே ஏன் மகிழ்ச்சியையும் தேட முடியாது. எமது ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக நிம்மதி, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை எல்லாம் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். வீட்டை விட்டு வீதி விளக்கில் போய் தேடுவதனால்தான் உள்ளதையும் தொலைத்து விட்டு உளச்சிதைவுக்கு ஆளாகி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறான்.
தனக்கேற்படும் எந்தவொரு விடயமென்றாலும் அதனை நுணுக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் இருப்பின் அதனைச் சகித்துக் கொள்வதற்கான இயலுமையும் காணப்படும். அதனை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் சலிப்பு, சோம்பல், அலட்சியப் போக்கு, எரிச்சல், நம்பிக்கையீனம் எனத் தொடர்ந்தால் எல்லாவற்றிலும் வெறுமைதான் ஏற்படும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற திருப்தியற்ற நிலை தோன்றி விடும். மேலும் சிலரோ அவசரமாக ஓடுகிறார்கள். உழைக்கிறார்கள், வாழ்கிறார்கள். அவர்களையும் வெறுமை போர்த்திக் கொள்கிறது.
இன்றைக்குப் பெரும்பாலும் எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தாலும் எண்ணங்கள் வறுமைப்பட்டுப் போய்விட்டன. மனிதன் தன்னைச் செழிப்பாக வைத்திருக்க மறந்து விடுகிறான். வார்த்தைகளிலும் அழகு நடையில்லை, உள்ளத்திலும் ஆரோக்கியம் இல்லை. அளவுக்கு அதிகமான அர்த்தமற்ற எண்ணங்கள் சிந்தனைகளால் உளச்சோர்வுக்கு ஆளாகி குடற்புண், நீரிழிவு, மாரடைப்பு எனச் சிக்கிக் கொள்கிறான்.
ஒருவனுக்கு அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் அந்திநேர நிழல்போல் வளர்ந்து கொண்டே செல்கின்றன. வாழ்க்கை உள்ளவரை எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.இது நியாயமானதுதான் என்றாலும் உள்ளத்தை அதிகளவு வருத்தி குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தளவு தளர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எமக்குத் தோன்றுகின்ற எல்லா எண்ணங்களையும் ஒரேயடியாக ஒரே கூடையில் போட்டு இறுக்கமாகக் கட்டிச் சிக்கலாக்கிவிட்டால் தெளிவான இலட்சியங்களைத் தேர்ந்தெடுப்பது கஷ்டமாகி விடும். தளர்வாக RELAXATION) இருக்கும் போது உடம்புக்கும் மூளைக்கும் சுதந்திர உணர்வு ஏற்படுகிறது. மூளை ஒரு மூலதனம். அழகாக நிதானமாகச் செலவிட வேண்டும். குறிக்கோள் எது என்பதனை முதலில் தீர்மானித்து அதனை அடையும் வழி வகைகளை ஆராய வேண்டும்.
ஒருவனை ஆக்கவும் அழிக்கவும் இந்த எண்ணங்களே போதுமானவை. ஏனென்றால், உள்ளம் என்பது கழிவுக் கூடம். எண்ணங்களைத் தூய்மைப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். பதப்படுத்த வேண்டும். அதற்கு மிக மிக முக்கியமாக ஆன்மீக இறை நம்பிக்கையை அதிகளவில் வளர்த்துக் கொள்ள வேண்டும். (MEDITATION) தியானம் மிகச் சிறந்தது. மனதில் ஏற்படும் பல விகாரமான எண்ணங்கள், சிக்கல்கள், தொய்வுகளுக்குச் சிறந்த அருமருந்தாக இந்தத் தியானம் அமைகின்றது என மருத்துவர்கள், உளவளத் துணையாளர்கள் அதிகளவில் வலியுறுத்துகின்றனர். (இன்றைய மேற்கத்தேயவாதிகள் நிம்மதியையும் இறைவனையையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்)
நிம்மதி நம் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும் என்றால் குடும்பம், சமூகம்,சமுதாயம் என்ற வட்டத்துடன் ஒத்துழைத்து வாழ வேண்டுமென்றால் வேகமாகச் சுழலும் எண்ணங்கள் அமைதியுற்று தெளிவு பெற இறைதியானம் மிகச் சிறந்தது.
ஆகவே, எண்ணங்களின் பல பக்க விளைவுகளால் ஏற்படும் உடல் நோய்க்கு மருத்துவம் அர்த்தமற்றது. மாத்திரைகளுக்கு விடை கொடுத்து விட்டு மனத்துக்கு மருந்து செய்தால் உடலும் உள்ளமும் ஆரோக்கியம் உள்ளதாக இருக்கும்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு: 17-07-2011