நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மக்கத்து குறைஷிகளும்
… “இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்ல! சூனியமும் அல்ல! ஜோசியமும் அல்ல! (உத்பா அபுல் வலீத்)
… குறைஷிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். (உத்பா அபுல் வலீத்)
… அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது. (உத்பா அபுல் வலீத்)
… அவருக்கு அருகில் சென்றபோது மிகப்பெரிய ஆண் வாலிப ஒட்டகம் ஒன்று எனக்குத் தென்பட்டது. அதனுடைய தலையைப் போல, அதனுடைய கோரைப் பற்களைப் போல, வேறெந்த ஒட்டகத்தையும் நான் பார்க்கவில்லை. (அபூ ஜஹ்ல் (அபுல் ஹிகம்)
… குறைஷிகளே! உங்களது நிலையை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு ஏதோ மிகப்பெரியசிக்கல் ஏற்பட்டிருக்கிறது” (நழ்ர் இப்னு அல் ஹாரிஸ்)
… இந்த மூன்று கேள்விகளைக் கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதில் கூறினால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட (நபி) தூதராவார். அவ்வாறு கூறவில்லையெனில்…, (மதீனா யூதர்கள்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் உத்பா :
ஹம்ஜா ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இரு வீரர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து சற்று பின்வாங்கினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனும் முஸ்லிம்களுடனும் உண்டான தங்களது நடவடிக்கைகளை மாற்றத் தொடங்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை விரும்பி முஸ்லிம்களுக்கு ஆசாபாசங்களையும் ஆசைகளையும் காட்டினர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும், அழைப்புப் பணிக்கும் முன்னால் உலகமனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் அது முஃமின்களுக்கு கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது என்பது இந்த அறிவீனர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆகவே, இவர்கள் தங்களது முயற்சியில் படுதோல்வி கண்டனர்.
ஹம்ஜா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இஸ்லாமைத் தழுவி, நாளுக்குநாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்ப்போம்: ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். உத்பா இப்னு ரபீஆ குறைஷிகளிடம் “குறைஷிகளே! நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே! நீ சென்று அவரிடம் பேசிவா” என்றனர்.
உத்பா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று “எனது சகோதரனின் மகனே! நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய்! அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய்! அறிஞர்களை முட்டாளாக்கி விட்டாய்! அவர்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் குறை கூறிவிட்டாய்! முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய்! நான் உனக்கு முன்பு சில விஷயங்களை எடுத்து வைக்கிறேன். அதை நன்கு யோசித்து ஒரு முடிவைச் சொல். அதில் ஏதாவதொன்று உனக்கு விருப்பமானதாக இருக்கலாம்” என நயமாக பேசினான்.
இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அபுல் வலீதே! சொல்! நான் கேட்கிறேன்” என்றார்கள். அவன் “எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப் பெரியசெல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களைச் சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம். அல்லது உனக்கு ஏதேனும் ஜின்களின்” தொல்லை இருந்து அதை உன்னால் தடுக்க முடியவில்லையென்றால், உன்னை நாங்கள் குணப்படுத்துவதற்காக எங்களின் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கின்றோம். ஏனெனில், சில நேரங்களில் ஜின்களின் சேட்டை மிகைத்து வைத்தியம் பார்க்கும் அவசியம் ஏற்படலாம்” என்று கூறினான்.
உத்பா அவனது பேச்சை முடித்த பிறகு “அபுல் வலீதே! நீ உனது பேச்சை முடித்துக் கொண்டாயா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க அவன் “ஆம்!” என்றான். “இப்போது நான் சொல்வதைக் கேள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற “அவ்வாறே செய்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ என்று ஆரம்பித்து அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். முதுகுக்குப்பின் தன்னுடைய கைகளை ஊன்றி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுவதை மிகக் கவனமாகக் கேட்டான். பிறகு ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதி ஸஜ்தா செய்து முடித்தார்கள். பின்னர் “அபுல் வலீதே! நீ செவியேற்க வேண்டியதையெல்லாம் செவியேற்று விட்டாய். நீயே இப்பொழுது முடிவு செய்துகொள்!” என்று மொழிந்தார்கள்.
அதற்குப் பிறகு உத்பா அவனது நண்பர்களிடம் திரும்பி வந்தபோது அவர்கள் தங்களுக்குள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபுல் வலீத் முகம் மாறியவனாக வந்திருக்கின்றான்” என்று பேசிக் கொண்டனர். உத்பா வந்தவுடன் “நீ என்ன செய்தியை கொண்டு வந்திருக்கின்றாய்” என வினவினர். “இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்ல! சூனியமும் அல்ல! ஜோசியமும் அல்ல! குறைஷிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது. மற்ற அரபியர்கள் அவரை அழித்துவிட்டால் அதுவே நமக்குப் போதும். நமது நோக்கமும் அதுவே! மாறாக, மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டால் அவருக்குக் கிடைக்கும் ஆட்சி உங்களுடைய ஆட்சியே! அவருக்குக் கிடைக்கும் கண்ணியம் உங்களுடைய கண்ணியமே! அவர் மூலமாக கிடைக்கும் அனைத்து பாக்கியங்களுக்கும் நீங்களும் முழு உரிமை பெற்றவர்கள்” என்று கூறினான். இதனைக் கேட்ட அவர்கள் “அபுல் வலீதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தன்னுடைய நாவன்மையால் உன்னை வசியப்படுத்தி விட்டார்” என்றனர். “அவரைப் பற்றி எனது கருத்து இதுதான். இனி உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டான். (இப்னு ஹிஷாம்)
மற்றும் சில அறிவிப்புகளில் வருவதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 13ம் வசனத்தை ஓதியபோது “முஹம்மதே போதும்! போதும்!! என்று கூறி தனது கையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயின் மீது வைத்து, இரத்த உறவின் பொருட்டால் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்குக் காரணம், அல்லாஹ்வின் எச்சரிக்கை உண்மையில் நிகழ்ந்துவிடும் என்று அவன் பயந்ததுதான். பிறகு எழுந்து சென்று தனது கூட்டத்தாரிடம் இதற்கு முன் கூறப்பட்டது போன்று செய்திகளை கூறினான். (இப்னு கஸீர்)
பேரம் பேசும் தலைவர்கள்
உத்பாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த பதிலால் குறைஷிகள் முற்றிலும் நிராசை அடைந்து விடவில்லை. ஏனெனில், உத்பாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அது கோரிக்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பதாக ஆகமுடியாது. எனவே, மிகுந்த ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் பிரச்சனையின் பல கோணங்களை அலசியப் பின், ஆலோசனை செய்வதற்காக சூரியன் மறைந்ததும் கஅபாவின் பின்புறம் குறைஷித் தலைவர்கள் ஒன்று கூடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்து வரச் செய்தனர். ஏதோ நன்மையை இவர்கள் நாடிவிட்டார்கள் என்ற பேராவலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரைந்து வந்து அவர்களருகில் அமர்ந்தபோது உத்பா கூறியதையே குறைஷித் தலைவர்கள் கூறினர். அதாவது உத்பா மட்டும் கூறியதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை நம்பவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து கூறினால் நம்மை நம்பி ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்வார் என்று அவர்கள் எண்ணினார்கள் போலும்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த குறைஷிகளுக்குக் கூறிய பதிலாவது: “நீங்கள் கூறுவது எதுவும் என்னிடமில்லை. உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.”
இத்திட்டம் நிறைவேறாததால் மற்றொரு திட்டத்திற்குச் சென்றனர். அதாவது “நீங்கள் உங்களது இறைவனிடம் கூறி இம்மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும்; இவ்வூர்களை செழிப்பாக்க வேண்டும்; அவற்றின் நதிகளை ஓடவைக்க வேண்டும்; இறந்துவிட்ட முன்னோர்களைக் குறிப்பாக, குஸை இப்னு கிலாஃபை உயிர்ப்பிக்க வேண்டும்; மரணித்தவர்கள் எழுந்து நீங்கள் கூறுவது உண்மை என்று கூறினால் நாங்கள் உங்கள் கூற்றை நம்பிக்கைக் கொள்வோம்” என்று கூறினார்கள். அதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் கூறிய பதிலையே கூறினார்கள்.
மற்றொரு திட்டத்தையும் முன் வைத்தனர். “அதாவது நீங்கள் உங்களைக் காப்பதற்கு உங்களுடைய இறைவனிடம் ஒரு மலக்கை (வானவரை) அனுப்பும்படி கோருங்கள். நாங்கள் அவருடன் பேசித் தெரிந்துகொள்வோம். உங்களுக்காகப் பல தோட்டங்களையும், மாட மாளிகைகளையும் தங்கம், வெள்ளியினாலான கஜானாக்களையும் அருளும்படி கோருங்கள்” என்றனர். இதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன் கூறிய பதிலையே கூறினார்கள்.
அடுத்து மற்றொரு திட்டத்திற்கு சென்றனர். “அதாவது எங்களுக்கு வேதனையை இறக்குங்கள்; வானத்தை உடைத்து எங்கள் மீது போடுங்கள்; நீங்கள் எச்சரிப்பவற்றை இப்போதே எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அது அல்லாஹ்வின் நாட்டம். அவன் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த இணைவைப்பவர்கள் “நாங்கள் உங்களுடன் உட்கார்ந்து உங்களிடம் பல கேள்விகளைக் கேட்போம்; பல கோரிக்கைகளை விடுப்போம் என்பது உங்களது இறைவனுக்குத் தெரியாதா? நீங்கள் எங்களுக்கு பதில் சொல்வதற்குத் தேவையானதை உங்களுக்கு இறைவன் கற்றுத் தரவில்லையா? நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவன் எங்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டனர்.
இறுதியாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உங்களை அழிக்கும் வரை அல்லது நீங்கள் எங்களை அழிக்கும்வரை நீங்கள் எங்களுக்கு இழைத்த அநீதத்திற்காக நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்” என்றார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்து எழுந்து தனது குடும்பத்தினர்களிடம் வந்தார்கள். தான் விரும்பியபடி தமது சமூகத்தினர் இஸ்லாமை ஏற்காததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலையடைந்தார்கள். (இப்னு ஹிஷாம்)
அபூஜஹ்லின் கொலை முயற்சி :
கூட்டத்திலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து சென்றவுடன் அபூஜஹ்ல் அகந்தையுடன் “குறைஷிக் கூட்டமே! நமது மார்க்கத்தை இகழ்வது நமது முன்னோர்களை ஏசுவது நம்முடைய அறிஞர்களை முட்டாளாக்குவது நம்முடைய சிலைகளைத் திட்டுவது – இவற்றைத் தவிர வேறெதனையும் செய்ய மாட்டேன் என்று முஹம்மது கூறிவிட்டார். ஆகவே, அவர் தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது மிகப்பெரிய ஒரு கல்லால் அவர் தலையை நசுக்குவேன் என்று அல்லாஹ்விடம் நான் உடன்படிக்கை செய்கிறேன். அவ்வாறு செய்தபின் நீங்கள் என்னை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தாலும் சரி அல்லது அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினாலும் சரி. அப்து மனாஃப் குடும்பத்தினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும்” என்றான். அதற்கு அக்கூட்டத்தினர் “ஒருக்காலும் நாம் உம்மை கைவிட்டு விட மாட்டோம்; நீ விரும்பியபடியே செய்!” என்றனர்.
அன்று காலையில் அபூஜஹ்ல் தான் கூறியதைப் போன்று ஒரு கல்லுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். வழக்கம்போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலையில் வந்து தொழ நின்றார்கள். குறைஷிகள் அபூஜஹ்ல் செய்வதை வேடிக்கை பார்க்க தங்களது சபைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தா செய்தபோது அபூஜஹ்ல் கல்லை சுமந்தவனாக நபியவர்களை நோக்கிச் சென்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் வந்ததும் பயந்து நிறம்மாறி திடுக்கிட்டவனாக திரும்பினான். அவனது இரு கைகளும் கல்லின்மீது ஒட்டிக் கொண்டன. வெகு சிரமத்துடன் கல்லை கையிலிருந்து வீசினான். அதைப் பார்த்த குறைஷிகள் ஒரே குரலில் “அபுல் ஹிகமே! என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். அதற்கு “நான் உங்களுக்கு நேற்று கூறியதை நிறைவேற்றுவதற்கு அவருக்கு அருகில் சென்றபோது மிகப்பெரிய ஆண் வாலிப ஒட்டகம் ஒன்று எனக்குத் தென்பட்டது. அதனுடைய தலையைப் போல, அதனுடைய கோரைப் பற்களைப் போல, வேறெந்த ஒட்டகத்தையும் நான் பார்க்கவில்லை. அது என்னைக் கடிக்க வந்தது” என்றான்.
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் தோழர்களிடம், “அப்படித் தோற்றமளித்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவன் நெருங்கியிருந்தால் அவர் அவனை அழித்திருப்பார்” என்று கூறினார்கள்.
சமரச முயற்சி :
குறைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதலில் உலக ஆசை காட்டினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மசியாததால் அடுத்து நபியவர்களை எச்சரித்தனர், அச்சுறுத்தினர். அதற்கும் நபியவர்கள் அஞ்சாததால் குறைஷிகள் மாற்று வழியைத் தேடினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மார்க்கம் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்று பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் அவர்கள் ஆழ்ந்து கிடக்கின்றனர். (அல்குர்ஆன் 42:14)
என்று அல்லாஹ் அவர்களைப்பற்றி கூறியதுபோலவே அவர்கள் இருந்தனர்.
அடுத்த கட்ட முயற்சியாக, மார்க்க விஷயங்களில் கொஞ்சம் இவர்கள் விட்டுத் தருவது, கொஞ்சம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுக் கொடுப்பது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பேரம் பேசிப் பார்க்கலாம் என முடிவெடுத்தனர். இதன்மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைப்பது உண்மையானதாக இருந்தால் தாங்களும் அந்த உண்மையை அடைந்தவர்களாகலாம் என்று கருதினர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஅபாவை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்போது அவர்களை அஸ்வத் இப்னு அல் முத்தலிப், வலீத் இப்னு முகீரா, உமைய்யா இப்னு கலஃப், ஆஸ் இப்னு வாயில் ஆகியோர் சந்தித்தனர். இவர்கள் தங்களது கோத்திரத்தில் மிக மதிப்பு மிக்கவர்களாக விளங்கினார்கள். இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “முஹம்மதே! வாருங்கள்! நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குகிறோம்; நாங்கள் வணங்குவதை நீங்களும் வணங்குங்கள்; நாம் அனைவரும் இவ்விஷயத்தில் கூட்டாக இருப்போம். அதாவது, நீங்கள் வணங்குவது நாங்கள் வணங்குவதை விட நன்மையாக இருப்பின் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு கிடைத்துவிடும். நாங்கள் வணங்குவது நீங்கள் வணங்குவதை விட நன்மையானதாக இருப்பின் அதில் உங்களுக்கும் ஒரு பங்கு கிடைத்துவிடும்” என்று கூறினார்கள்.
இவர்களின் கூற்றுக்கு மறுப்பாக இறங்கிய இறைவசனம்:
(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). (அல்குர்ஆன் 109:1-6)
என்ற அத்தியாயம் அல் காஃபிரூனை முழுமையாக அல்லாஹு தஆலா இறக்கி வைத்தான். (இப்னு ஹிஷாம்)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: குறைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “நீங்கள் எங்கள் கடவுள்களைத் தொட்டால் போதும், நாங்கள் உங்களது கடவுளை முழுமையாக வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் அத்தியாயம் அல் காஃபிரூனை இறக்கி வைத்தான். (அத்துர்ருல் மன்ஸுர்)
தஃப்ஸீர் இப்னு ஜரீல் வருவதாவது: குறைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “எங்களது கடவுளை நீங்கள் ஓர் ஆண்டு வணங்குங்கள். உங்களது கடவுளை நாங்கள் ஓர் ஆண்டு வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது,
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?
என்ற அத்தியாயம் ஜுமன் 64 வது வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
இவ்வாறான அற்பத்தனமிக்க பேச்சுவார்த்தைகளைத் தீர்க்கமான முடிவைக்கொண்டு அல்லாஹ் முறியடித்தும் குறைஷிகள் முழுமையாக நிராசையாகவில்லை. மாறாக, மேலும் சற்று இறங்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனின் போதனைகளில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற அடுத்த கோரிக்கையை முன்வைத்தனர். இதோ இவர்களின் கூற்றைப்பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உங்களை நோக்கி,) “இது அல்லாத வேறொரு குர்ஆனை நீங்கள் கொண்டுவாருங்கள். அல்லது (எங்கள் இஷ்டப்படி) இதனை மாற்றிவிடுங்கள்” என்று கூறுகின்றனர்.
அவர்களின் இக்கூற்றுக்கு என்ன பதில் சொல்லவேண்டுமோ அதை அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்:
(அதற்கு அவர்களை நோக்கி “உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 10:15)
மேலும், இவ்வாறு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக எச்சரிக்கை செய்தான்.
நாம் உங்களுக்கு வஹி மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அது அல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. (அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். (அல்குர்ஆன் 17:73-75)
மறு ஆலோசனை :
எல்லா பேச்சுவார்த்தைகளிலும், பேரங்களிலும், அனுசரித்தலிலும் குறைஷிகள் தோல்வியடைந்து என்னசெய்வது என்று புரியாமல் திகைத்திருந்தபோது அவர்களில் ஒரு ஷைத்தான் “நழ்ர் இப்னு அல் ஹாரிஸ்’ என்பவன் ஓர் ஆலோசனையைக் கூறினான். “குறைஷியர்களே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வையும் உங்களால் கொண்டுவர முடியவில்லை. முஹம்மது உங்களில் வாலிபராக இருந்தபோது உங்களின் அன்பிற்குரியவராகவும், பேச்சில் உங்களில் உண்மையாளராகவும், அமானிதத்தை அதிகம் பேணுபவராகவும் இருந்தார். ஆனால், அவர் முதிர்ச்சி அடைந்து இம்மார்க்கத்தை அவர் கொண்டு வந்தபோது நீங்கள் அவரை “சூனியக்காரர்” என்று கூறினீர்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சூனியக்காரராக இருக்க முடியாது. சூனியக்காரர்களைப் பற்றியும் அவர்களின் ஊதுதல், முடிச்சுகளைப் பற்றியும் நாம் நன்கறிவோம். பிறகு அவரை “ஜோசியர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோசியரும் அல்லர். ஏனெனில் ஜோசியக்காரர்களையும் அவர்களது பொய்யாகப் புனையப்பட்ட புளுகுகளையும் நாம் நன்கறிவோம். அடுத்து அவரை “கவிஞர்” என்பதாகக் கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கவிஞரும் அல்லர். ஏனெனில், கவியையும் அதன் பல வகைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவரை “பைத்தியக்காரர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் பைத்தியக்காரரும் அல்லர். பைத்தியத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இவருக்கு பைத்தியத்தின் எந்தக் குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. குறைஷிகளே! உங்களது நிலையை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு ஏதோ மிகப்பெரியசிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவன் கூறி முடித்தான்.
எல்லா எதிர்ப்புகளுக்கும், சவால்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அனைத்து ஆசாபாசங்களையும் தூக்கி எறிந்தார்கள். எந்நிலையிலும் தடுமாறவில்லை. மேலும், அவர்களிடம் உண்மை, ஒழுக்கம், பேணுதல், சிறந்த நற்பண்புகள் ஆழமாகக் குடிகொண்டிருந்தன. இதைக் கண்ட இணைவைப்பவர்களுக்கு முஹம்மது உண்மையில் தூதராக இருப்பாரோ? என்ற சந்தேகம் வலுத்தது. எனவே, யூதர்களுடன் தொடர்பு கொண்டு முஹம்மதைப் பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். நழ்ர் இப்னு ஹாரிஸ் அவர்களுக்கு ஏற்கனவே மேற்கூறியவாறு உபதேசம் செய்திருந்தான். அவனையே மற்ற ஓருவருடன் சேர்த்து மதீனாவில் உள்ள யூதர்களிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
நழ்ர் இப்னு ஹாரிஸ் மதீனா சென்று அங்குள்ள யூத அறிஞர்களைச் சந்தித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து விவாதித்தான். அவர்கள், நீங்கள் அவரிடம்
“1) முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?
2) பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?
3) ரூஹ் (உயிர்) என்றால் என்ன?
இந்த மூன்று கேள்விகளைக் கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதில் கூறினால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட (நபி) தூதராவார். அவ்வாறு கூறவில்லையெனில் அவர் தானாக கதை கட்டி பேசுபவரே என அறிந்துகொள்ளலாம்” என்றனர்.
நழ்ர் மக்காவிற்கு வந்து “குறைஷிகளே! உங்களுக்கும் முஹம்மதுக்கும் இடையிலுள்ள பிரச்சனைக்குச் சரியான தீர்வைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறி யூதர்கள் கூறியதை அவர்களுக்கு அறிவித்தான். குறைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அம்மூன்று கேள்விகளையும் கேட்டனர். அவர்கள் கேட்ட சில நாட்களுக்குப் பிறகு “கஹ்ஃப்’ என்ற அத்தியாயம் அருளப்பட்டது. அதில் குகைவாசிகளாகிய அவ்வாலிபர்களின் வரலாறும், பூமியை சுற்றி வந்த துல்கர்னைன் என்பவன் சத்திரமும் தெளிவாக விவரிக்கப்பட்டது. ரூஹைப் பற்றிய பதில் குர்ஆனில் “இஸ்ரா’ என்ற அத்தியாயத்தில் இறங்கியது. இதைத் தொடர்ந்து குறைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உண்மையாளரே, சத்தியத்தில் உள்ளவரே’ என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டனர். ஆனாலும் அநியாயக்காரர்கள் ஏற்க மறுத்தனர். (இப்னு ஹிஷாம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புப் பணிக்கு இணைவைப்பவர்கள் செய்த எதிர்ப்பின் ஒரு சிறு பகுதியே இதுவரை நாம் கூறியது. பல வகைகளில் முயன்றனர். படிப்படியாக பல வழிகளை இதுவல்லாமல் மாற்றிக் கொண்டே இருந்தனர். வன்மையை அடுத்து மென்மை, மென்மையை அடுத்து வன்மை; சர்ச்சையை அடுத்து சமரசம்; சமரசத்தை அடுத்து சர்ச்சை; எச்சரித்தல், பிறகு ஆசையூட்டுதல்; ஆசையூட்டுதல், பிறகு எச்சரித்தல்; ஊளையிடுதல், பிறகு அடங்குதல்; தர்க்கித்தல், பிறகு நயமாக பேசுதல்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டுக் கொடுக்க வேண்டுதல்; பிறகு தாங்களே விட்டுக் கொடுத்தல்; இவ்வாறு கொஞ்சம் முன்னேறுதல்; உடனே பின்வாங்குதல் என்று என்ன செய்வதென்றே புரியாமல் நிலை தடுமாறி நின்றனர். ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் குறுக்கிடாமல் ஒதுங்கிக் கொள்வதும் அவர்களுக்குக் கசப்பாக இருந்தது. அவர்களின் நோக்கமே இஸ்லாமிய அழைப்பை அழிப்பதும் இறைநிராகரிப்பை வளர்ப்பதும்தான். பல வழிகளில் இவர்கள் முயன்றும் பல தந்திரங்களைக் கையாண்டும் அனைத்திலும் இவர்கள் தோல்வியையே கண்டனர். இறுதியாக, வாளெடுப்பதைத் தவிர அவர்களுக்கு முன் வேறுவழி தோன்றவில்லை. ஆயினும், வாளேந்துவதால் பிரிவினை அதிகமாகலாம்; உயிர்ப்பலிகள் ஏற்படலாம் என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் பெரும் குழப்பத்தில் தத்தளித்தனர்.
அபூதாலிபின் முன்னெச்சரிக்கை :
குறைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொன்று விடுவதற்காக தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய அதே சமயத்தில் உக்பா, அபூஜஹ்ல், போன்றவர்களின் செயல்கள் மூலம் அந்த எண்ணம் அவர்களிடம் உறுதியாக இருக்கிறது என்பதை அபூதாலிப் நன்கு உணர்ந்து கொண்டார். எனவே, ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினர்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்விரு கிளையிலுமுள்ள முஸ்லிம்கள் மற்றும் நிராகரிப்பவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். இதற்காக அனைவரும் கஅபாவில் ஒன்றுகூடி ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அபூதாலிபின் சகோதரன் அபூலஹப் இதற்கு உடன்படாமல் அவர்களை விட்டுப் பிரிந்து மற்ற குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)
( جَزَاكَ اللَّهُ خَيْرًا : ”முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரலாறு” (ரஹீக் அல் மக்த்தூம் நூலிலிருந்து )