இவர்கள் என்று தான் திருந்துவார்களோ?
மனிதன் படைத்த மதங்கள் மனித வாழ்க்கையை மாசுப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றது. ஆனால் இறைக் கொடுத்த “இஸ்லாம்” மார்க்கமாக மனித வாழ்க்கைக்கு ஒளி விளக்காகத் திகழ்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவர் மற்றும் அனைத்து மக்களுக்கும் இனிய எளிய வாழ்க்கை முறையை சொல்லிக் கொடுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.
இதன் ஒழுக்க முறைகள், பண்பாடுகள், வணக்க முறைகள், சகோதரத்துவம் இவைகளைக் கண்டு அனாச்சாரத்திலும் அசிங்கங்களிலும் வாழ்ந்துக் கொண்டிருந்த மக்கள் இனிய வாழ்க்கை வாழ இஸ்லாத்தை நோக்கி ஓடிவருவதை உலகம் கண்கூடாகக் கண்டுக் கொண்டிருக்கின்றது. அசிங்கங்களையே அழகாக நினைத்துக் கொண்டு வாழும் அமெரிக்காப் போன்ற மேலை நாட்டு மக்கள் இஸ்லாத்தை விரும்பி அதன் பக்கம் ஓடி வருவதற்கு ஒரே முக்கியமான காரணம் “இஸ்லாம்” தூய்மையானது என்பது தான்.
மனித வாழ்க்கையை ஒரு நெறி முறையோடு நடத்திச் செல்லும் மார்க்கம் இஸ்லாம் என்றும் வாழ்க்கைக்கும் வாழ்க்கையின் வணக்க வழிபாட்டுக்கும், குர்ஆனும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையுமே சிறந்தது என்று மேலை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை நோக்கி வருகின்றார்கள்.
பல மனிதர்களின் பல வகையான கருத்துக்களைக் கேட்டு பலவாறாக வாழ்ந்த மக்கள் அந்த வாழ்க்கை ஒரு மாயைஸஸ..’ மரணிக்கும் வரை மனநிறைவான வாழ்க்கையைத் தரும் மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான் என்று ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தை நோக்கி பயணப்பட்டு வந்துக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் ஸஸஸ’
முஸ்லிம் குடும்பங்களில் பிறந்து முஸ்லிம் பெயர்களை சூட்டிக் கொண்டு வாழும் நம் சகோதர மக்களை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
குர்ஆன், ஹதீஸ் இரண்டும் தான் வாழ்க்கை பயணத்தின் வழிகாட்டி என்று மாற்று மதத்தைச் சார்ந்த பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டு அந்த இரண்டையும் ஆராய முற்பபட்டு விட்டார்கள். இந்த விஷயத்தில் நமது சகோதரர்கள் ஏனோ பின்தங்கி நிற்கிறார்கள். இவர்கள் குர்ஆன், ஹதீதை ஏற்றுக் கொண்டும், அதை ஆராயாததின் விளைவு, இஸ்லாம் எனும் மார்க்கத்தை விட்டு வெகு தூரம் விலகிச் செல்கின்றார்கள். இருந்தாலும் தான் இஸ்லாத்தின் வழியிலேயே இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பாமரர்களை மட்டும் குறை கூறி பலன் இல்லை. இவர்களின் இந்த நிலைக்குக் காரணம் படித்த ஆலிம்கள் தான் (ஒரு சிலரைத் தவிர) என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காலங்காலமாக இதுதான் இஸ்லாம் என்று இழிவான, ஷிர்க்கான செயல்களையே வணக்க வழிபாடுகளாக மக்கள் மத்தியில் போதித்து வந்துள்ளார்கள். இன்னும் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆனும், ஹதீஸ் கிரதங்களும் அரபியில் இருப்பதால் ஆலிம்களுக்கும் கொண்டாட்டமாகி விட்டது. தன் விருப்பத்திற்கு மார்க்கத்தை வளைத்து வருவாய்க்கு வாய்க்கால் கட்டிக்கொண்டார்கள். ஆனால் கற்றறிந்த ஆலிம்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது;
”நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்கு பயப்படுபவர்களே உலமாக்கள்” (ஆலிம்களாவர்). (அல்குர்ஆன் 35:28)
இன்றைய காலக் கட்டத்தில் கற்றறிந்த ஆலிம் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் அல்லாஹ்வுக்கு பயப்படுவதாகத் தெரியவில்லை. இவர்கள் அல்லாஹ்வுக்கு பயப்படுபவர்களாக இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று அவன் தூதருக்கு வழிபட்டு நடப்பார்கள்.
அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள் (அதனால்) நீங்கள் அல்லாஹ்வின் அருளுக்குள்ளாவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
மேலேயுள்ள வசனத்தின் பொருள் ஆலிம்களின் வாயளவில் இருந்த போதும் அதை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும்(கற்றரிந்தவர்கள்) வழிபட்டு அந்தத் தூதரின் சொல், செயல், அங்கீகாரங்களை மக்கள் மத்தியில் வைத்திருந்தால், அதன் வழியில் அவர்களை அழைத்திருந்தால் மத்ஹப் பிரிவினைகளும், மண்ணரை மோகங்களும், புதைக்குழி பூஜைகளும், பச்சைக்கொடி, பச்சைப் போர்வை பாசங்களும் என்றோ ஒழிந்து கண்ணோடு மண்ணாகி இருக்கும்.
கற்றறிந்தவர், தான் சொல்வதைச் சட்டமாக மக்கள் ஏற்க வேண்டும் என்ற வரட்டு கெளரவத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவு குர்ஆன், ஹதீஸ் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்டு, சில மடையர்கள் எழுதிய கட்டுக்கதைகளை எல்லாம் தலை விரித்தாட விட்டு எண்ணற்ற அனாச்சாரங்களுக்குத் துணைப்போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
மக்கள் அறிவீனர்களையே தமது மார்க்க போதகர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். அதற்கு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தரமும் கெட்டு பிறரையும் வழிக்கெடுப்பார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)
மார்க்க போதகர்களே! சிந்தித்துப் பாருங்கள். இறைவா! நீ எல்லாருக்கும் நேர்வழிக் காட்டுவாயாக.
கு. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை, M.A. ஹனீஃபா, பொட்டல் புதூர்.
source: http://annajaath.com/