கே.எஸ்.முஹம்மத் ஷுஐப் .
சில ஆண்டுகளுக்கு முன் சுவிஸ் வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு DRESS CODE என்று சொல்லப்படும் ஆடை ஒழுங்கு முறைகள் குறித்த 43 பக்க விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் படி தான் தங்களது ஆடைகளை ஆண் பெண் உழியர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் பெண்கள் எடுப்பாக காட்டும் வண்ணம் இருக்கமான ஆடைகளை அணியக்கூடாது. உள்ளாடைகள் வெளியே தெரியும் வண்ணம் ஆடைகள் இருக்கக் கூடாது பெண்கள் லூஸான ஆடைகள் தான் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மொத்தத்தில் இருபாலார் ஒருவர் மற்றவரை ஈர்க்கும் வண்ணம் அங்க அவயங்கள் வெளியே தெரியும் அளவிற்கு ஆடைகள் அணியக் கூடாது என்பது தான் அந்த உத்தரவின் சாராம்சம்.
அறைகுறை ஆடை கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் சர்வசாதாரணமாகிவிட்ட இந்த நிலையில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்போது உணர்ந்து கொண்ட நிறுவனங்களுக்கு இப்போழுது தான் புத்தி வந்துள்ளது.
இதை தான் இஸ்லாம் அன்றிலிருந்து இன்று வரை போதிக்கின்றது.
“தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக அரை குறை ஆடை அணிந்து பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
மனித குலம் தோன்றிய பின்பு இன்று அவன் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியின் கட்டங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் அவனால் படிப்படியாக அடையப் பெற்றவை. ஆனால் வெட்க உணர்வு என்பது அவன் தோன்றிய போதே அவனோடு தோன்றிய ஒன்று.
துணிகள் கண்டுபிடிக்கும் முன்பே அவன் காடுகளில் இலைதழைகளை உடுத்துத் திரிந்தான். தன் மானம் காக்கவும் தன்னைச் சேர்ந்தவர்களின் மானம் காக்கவும் தனது இடையிலும் தன்னைச் சேர்ந்தவர்களின் இடுப்பிலும் மானம் மறைக்கும் வஸ்து எதாவது தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொண்டான். இலை தழை விலங்குகளின் தோல்கள் என படிப்படியாக இது வளர்ச்சி பெற்று இறுதியாக நாம் இன்று அணியும் துணிக்கு வந்து சேர்ந்தது.
முகலாயர்கள் காலத்தில் வசதியான மற்றும் நடுத்தர வருவாய் மக்கள்பெரும்பாலும் சட்டையுடன் டிரவுசர் மற்றும் சட்டைக்கு மேலே ஓவர் கோட் ஆகியவற்றை அணிந்துள்ளனர். இந்த ஓவர் கோட்டானது பள்ளி குழந்தைகள் தங்களது பள்ளிச் சீருடைக்கு மேல் அணிந்திருக்கும் கோட் போன்று அமைந்திருந்தது.
நமது நாட்டிற்கு புதுப்புது சுல்தான்கள் வரவர பல்வேறு வகை பரிமாணங்களில் புதிய நவீன ரக ஆடைகளும் அறிமுகமாகிக் கொண்டிருந்தன. சுல்தான்கள் அறிமுகம் செய்த உடைகள் ‘சுல்தான் டிரஸ்’ என்று அழைக்கப்பட்டன.
சுல்தான் டிரஸ்கள் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக கருதப்பட்டன. ஒவ்வொரு சுல்தானும் தங்களுக்கென்று ஒவ்வொரு வகையான உடை மாடல்களை அறிமுகம் செய்தனர். இந்த காலகட்டங்களில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து துணிகள் கொண்டு வரப்பட்டன. இந்த துணிகள் மிகவும் பளபளப்பானதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருந்தன.
மைசூரை ஆட்சி செய்த திப்புசுல்தான் குர்தாவையே விரும்பி அணிந்துள்ளார். இத்தகைய குர்தாக்கள் ‘திப்பு குர்தா’ என்று அழைக்கப்பட்டன. இந்த குருதாவானது குட்டையாகவும்இ கழுத்து ஓப்பனாக திறந்து நிலையிலும் இருக்கும். இந்த குருதாவின் கைகள் நீளமாகவும் அமைந்திருக்கும். திப்புவின் ஆட்சிக் காலத்தில்தான் இத்தகைய உடைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
உடைகள் எனும் போது அவை பெண்களை முதலாகக் கொண்டே தனது வடிவமைப்பை தொடங்கியது. ஆண்களை விடவும் பெண்களுக்கே மறைக்கப்பட வேண்டிய இடங்கள் அதிகமாக இருந்தன. பெண்ணை ஒரு உயிருள்ள ஜீவனாக அன்றி தன்னுடைய “உடைமைகளுல் ஒன்றாக மனிதன் பாவித்தால் (அன்று என்ன… இன்றும் அதே நிலைதான்) பெண்ணின் “மானம்” காக்கும் பொறுப்பும் அவனுக்கு வந்து சேர்ந்தது.
”முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (அல் குர்ஆன் 24:31)
காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் உடையும் அதை அணியும் விதமும் மாறுபடுகின்றன. சேலை ஒன்றே தான்! அதை நம் தமிழக பெண்கள் அணியும் விதமும் ஆநதிரா, கர்நாடகா, பெங்களூர் இன்றும் ஸ்ரீலங்கா பெண்கள் அணியும் விதமும் வெவ்வேறானது. நம் தமிழகத்திலேயே பிராமணப் பெண்கள் உடுத்தும் (மடிசார்) விதமும் தலித் பெண்கள் (தட்டு புடவை) உடுத்தும் விதமும் மாறுபட்டது. வட இந்திய மார்வாடிப் பெண்கள் அதை வேறுமாதிரி ஸ்டைலில் உடுத்துகிறார்கள். சேலை மட்டும் தான் நமது உடலை முழுமையாக மறைக்கிறது. அதுவே நமது கலாச்சார பாரம்பர்ய உடை என்ற வாதம் இன்று மெல்ல மெல்ல வடிவிழந்து வருகிறது. சேலை தான் ஆகக் கவர்ச்சியான உடை என்று இன்று சொல்லப்படுகிறது. சேலை முந்தானை விலகாமல் இருக்க பெண்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டு சதாகாலமும் அதிலேயே கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஆண்களின் கழுகுப் பார்வை சேலை உடுத்திய பெண்களை நோக்கியே திரும்புகின்றன.
”ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.” (அல் குர்ஆன் 7:26)
உடலை முழுமையாக மறைக்கும் வட நாட்டு சுடிதார் இன்று நமது பெண்களின் ஆதர்ஷ உடையாகத் திகழ்கிறது. அணிவதற்கும் எளிமையானது. (கொசுவம் மடிப்பு பற்றிய கவலை எல்லாம் அதில் இல்லை) இன்றைய நமது இளம் பெண்களில் அநேகமானவர்களுக்கு சேலை உடுக்கத் தெரியாது. உம்மா மற்றும் சாச்சி அல்லது மூத்த ராத்தாமார்களின் உதவி கொண்டு அதை உடுத்துக் கொண்டு நடப்பதற்கே அவர்கள் சிரமப்படுவார்கள். சில பெண்கள் தடுக்கி கீழே விழுவதும் உண்டு “சேலை கட்டிய மாதரை நம்பாதே…” என்றெல்லாம் இனி யாரால் கூற முடியும்? “சுடிதார் போடும் சுந்தரிகளை “நம்பாதே” என்று வேண்டுமானால் அதை மாற்றி வைத்துக் கொள்ளலாம். வேஷ்டி என்பது ஆண்களின் உடை மட்டுமல்ல அது அதிகாரத்தின் சின்னமும் கூட வேஷ்டியை மடித்துக்கட்டு’ என்றால் அதில் ஒரு அதிகார ஆணவத் தொனி தொக்கி நிற்பதை நீங்கள் உணரலாம்.
பெண்களுக்கு சுடிதார் மாதிரி இதில் ஆண்களுக்கு இன்னும் மாற்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. சிலர் இப்போது ‘பெர்முடா’ என்று ஒரு தொளதொள கால்சட்டையை அணிந்து கொண்டு திரிகிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது. வெப்ப நாடான நமது நாட்டின் சீதோஷண நிலைக்கு மிகவும் ஏற்றது வேஷ்டிதான். சுகாதாரமானதும் கூட அதுவும் எட்டுமுழ வேஷ்டியை விட நமது லுங்கிகள் இன்னும் சுகாதாரமானது. முன்பு நமது லுங்கியில் அழுக்கு பட்டால் தெரியாமல் இருப்பதற்காக பின்புறம் பட்டையாக ஒரு கலர் அடித்திருப்பார்கள்.
பெரும்பாலும் கருப்பு நீலக்கலரில் அது இருக்கும். அதை பின் புறமாகத்தான் வைத்து உடுக்க வேண்டும். அப்போது தான் அது பாந்தமாக இருக்கும். அது தெரியாத நமது சில ‘ஜனாப்’ கள் அதை முன் பக்கமாக வைத்து உடுத்தி வருவார்கள். பார்க்கவே சிரிப்பாக இருக்கும் ஸ்ரீலங்கா நாநாமார்கள் சிலர் சட்டையை வேஷ்டிக்குள் “இன்” பண்ணி வேஷ்டியை வயிற்றுக்கு மேல் கட்டி வருவார்கள். இவர்கள் என்ன மாடு பிடிக்கப் போகிறார்களா? என்ற எண்ணம் தான் அவர்களைப் பார்த்ததும் நினைவுக்கு வரும். கரிசல் காட்டு எடுத்தாளர். பெரியவர் கி.ராஜநாராயணன் ‘வேட்டி’ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் வாய்ப்பு கிடைத்தால் அதை அவசியம் படித்துப் பாருங்கள்.
ஒரே ஒரு வேஷ்டியை மட்டுமே உடமையாகக் கொண்ட கரிசல்காட்டு சம்சாரிகள் அதை பாதுகாகக்க என்ன பாடுபடுகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து எழுதியிருப்பார். உடைகள் என்பவை மானம் காக்க – என்ற நிலை மாறி அது ஒவ்வொரு சமூகத்தின் அடையாளங்களாகவும் மாறிப் போனது. ஒருவனது உடையைப் பார்த்த உடனே சொல்லி விடலாம். இவன் இன்ன மதம் சார்ந்தவன் என்று அதிகாரிக்கு ஒரு உடை அல்லாடுபவனுக்கு இன்னொரு உடை. ஆரசியல் வாதிக்கோ தனி ‘டிரேட்’ மார்க் உடை பேரறிஞர் அண்ணா ஒரு முறை கூறினார்;. “பதவி என்பது தோளில் போடும் துண்டு’ கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேஷ்டி. துண்டை இழந்தாலும் வேஷ்டியை இழக்க மாட்டோம்” அண்ணாவுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம்.
இன்றைய அரசியல் வாதிகள் நிறையப் பேருக்கு துண்டு தான் இருக்கிறது. வேஷ்டியைக் காணோம்.இன்னும் சொல்லப்போனால் இன்றைய அரசியல் வாதிகளின் உடையே மாறிப்போனது. திருமாவளவன் டாக்டர் கிருஷ்ணசாமி பேராசிரியர் ஜவாஹில்லாஹ் போன்றவர்கள் பேண்ட் ஷர்ட்டில் உலாவுகிறார்கள். துண்டுகள் (அல்லது சால்வை) அணிந்த அரசியல் வாதிகளாக இன்றும் நிலைத்திருப்பவர்கள் கலைஞர் ,அன்பழகன், வைகோ போன்றவர்கள் மட்டுமே இன்றைக்கு நாட்டின் மூன்றிலொரு பகுதியை “சேலை” தான் ஆள்கிறது. (சோனியா,மம்தா ,ஜெயலலிதா,ஷீலா தீட்சித்) மாயாவதியை கவனமாகத் தவிர்த்து விட்டேன். அவர் பெண்தான் என்றாலும் அவர் சேலை அணிவதில்லை குர்தா பைஜாமாதான் அணிகிறார். வேஷ்டி அணிந்து போனால் ஆபத்துக்குள்ளாகும் இடம் ஒன்றிருக்கிறது. அது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுயூயூ பொதுக்குழு கூட்டங்கள் மூப்பனார் தவிர காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் வேஷ்டியை பறிகொடுக்காத தலைவர்களே இல்லை எனலாம். தங்கபாலு வேஷ்டி கூட ஒரு முறை பறிபோய் இருக்கிறது.
இன்று ஆடை வடிவமைப்பு என்பது உலகம் பூராவும் பரவியுள்ள ஒரு பெருந்தொழில. இதற்காகவே பல ஃபேஷன் ஷோக்கள் நடத்தப்படுகிறது. இந்தியாவிலும் பல கோடிகள் புரளும் தொழில் இது.
பம்பாய் முதல் நமது கோயம்புத்தூர் வரை இத்தொழில் பரந்து விரிந்த அளவில் கொடி கட்டிப் பறக்கிறது.
அந்தக் கொடி பறக்காவிடில் நமது மானம் பறந்துவிடுமல்லவா…?
சிந்திக்க சில துளிகள் …
வீர திலகம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆடையை குறித்து…
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் வரலாற்று ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை, அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள்.
எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார்.
அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது.
நமது அருட்கொடை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடை எளிமை..
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் பிரிந்தது” என்றார்கள். (நூல்: புகாரி)
மனிதன் இயல்பிலேயே தனது மர்ம உறுப்புகளை மறைத்து வாழ்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதனால் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மதங்களுக்கு அப்பாற்பட்ட நாத்திகர்களும் ஆடைகள் அணிந்து தங்கள் உடலின் பாகங்களை மறைத்து கொள்வதை நாம் காண்கிறோம். இது மனித இயல்பு என்பதை திருக்குர்ஆனும் நமக்கு எடுத்துரைக்கின்றது.
மனிதன் எந்த அளவுக்குத் தன் உடலை மறைக்க வேண்டியது அவசியம்? எந்த வகையான ஆடைகளால் மறைக்க வேண்டும்? எந்த வகைத் துணிகளால் மறைக்க வேண்டும்? என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
“ஆண்களின் ஆடைகள்” எப்படி அமைய வேண்டும்? பெண்களின் ஆடைகள் எப்படி அமைய வேண்டும்? எப்படி அமையக் கூடாது என்பதைக் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் சிந்தித்து செயல்படுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
source: http://www.kayalnews.com/