அன்புச் சகோதரிகளே!
31. நீ கடைத்தெருவில் அல்லது பாதையில் செல்லும்போது ஏதாவது தீமையை கண்டால் அதை கையால் தவிர்க்கவேண்டும். அததற்கும் முடியாவிட்டால் நாவால் தடுக்கவேண்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் வெறுத்துவிட வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் சிலர் சிலருக்கு உற்ற நண்பர்களாவார்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள், தீமையை விட்டும் தடுப்பார்கள். (அத் தவ்பா- 9 : 71)
அன்புச் சகோதரிகளே!
32. பெண்களில் சிலர் கடைத்தெருக்களுக்கு செல்வதை தங்களது பொழுதுபோக்காக எடுத்துக் கொள்கின்றார்கள். இவ்வகையை சேர்ந்த பெண்களாக நீங்கள் இருக்காமலிருப்பதற்கு நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன். இவ்வாறு செய்வதனால் அதிகமானவர்கள் குழப்பத்திற்குள்ளாவதோடு நேரத்தையும் வீணாக்குகின்றார்கள்.
33. அன்புச் சகோதரிகளே!
தயவு செய்து நீ உன்மீது இரக்கங்காட்டு! அதுபோன்று உன் கணவர் மீதும் இரக்கங்காட்டு! சந்தையில் ஒரு பகுதி உன்னுடைய வீட்டிற்குள் இருக்கவேண்டுமென ஆசைப்படாதே! எனவே உனக்கு எது தேவையோ அதை மாத்திரம் வாங்குவதற்கு பழகிக்கொள்!
34. அன்புச் சகோதரிகளே!
நீ அல்லாஹ்வின்பால் தேவையுடையவளாகவும், பலவீனமுள்ளவளாகவும் இருக்கின்றாய். எனவே நீ அவனிடம் பணிவாக கையேந்தி இம்மையிலும், மறுமையிலும் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும் கேட்பாயாக! நீ அவனிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொள்வாய்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக உங்கள் நாயன் (என்றுமே) உயிரோடிருப்பவனும், வாரி வழங்குபவனுமாவான். அடியான் அவனிடம் கையேந்தி பிரார்த்தித்தால் அவற்றை வெறுமையாக திருப்பி (அனுப்புவதற்கு) அவன் வெட்கப்படுகின்றான். (ஆதாரம்: ஸுனன் இப்னுமாஜா)
மேலும் விரைவாக (பிரார்த்தனை) ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று எண்ணாதே! எந்தவொரு அடியானும் தனது இரு கைகளையும் தனது அக்குள் தெரியுமளவிற்கு உயர்த்தி அல்லாஹ்விடத்தில் ஏதாவதொன்றை கேட்டு அவன் அவசரப்படாமல் இருந்தால் அல்லாஹ் அவன் கேட்டதை கொடுக்கின்றான். என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் எவ்வாறு அவன் அவசரப்படுகின்றான்? எனக்கேட்டார்கள். அதற்கவர்கள் நான் அல்லாஹ்விடம் கேட்டேன் மேலும் கேட்டேன் அவனால் எனக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறுவதாகும். (ஆதாரம்: திர்மிதி)
உன் பிரார்த்தனையை அல்லாஹ்வை புகழ்ந்து நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது ஸலவாத் சொல்வதன் மூலம் ஆரம்பித்து அதைக்கொண்டே நிறைவுசெய்வாயாக!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
பிரார்த்தனைக்கு விடையளிக்கப்படுவதில் உறுதிகொண்டவர்களாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வை மறந்து வீண் விஷயங்களில் ஈடுபடக்கூயவர்களின் பிரார்த்தனைக்கு அவன் விடையளிக்கமாட்டான். (ஆதாரம்: திர்மிதி)
நீ பாவமான காரியங்களை கொண்டோ பிரார்த்திக்காமல் அல்லது உறவினர்களை துண்டிப்பது கொண்டோ பிரார்த்திப்பதில் எச்சரிக்கையாக இரு! வெளிப்படையாக உனது பிரார்த்தனைக்கு விடை கிடைக்கப்படவில்லை என்றால் அதற்காக நீ கவலைப்படாதே! அல்லாஹ் அதற்குரிய (நன்மையை) பலனை மறுமையில் உனக்கு சேமித்திருப்பான். அல்லது அதன்மூலம் உனது பாவங்களை மன்னிப்பான். அல்லது உனக்கு ஏற்படவிருக்கும் தீங்கிலிருந்து உன்னை பாதுகாப்பான்.
35. அன்புச்சகோதரியே!
ஃபர்ளு, ஸுன்னத்கள் மற்றும் அல்லாஹ்வை நெருங்கக்கூடிய நல்லமல்களை செய்வதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கி மாபெரும் கூலியை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைந்துகொள்வதுடன் எவ்வித அச்சமோ கவலையோ இல்லாத அல்லாஹ்வின் நேசர்களில் ஒருவராக நீயும் இருப்பாய்! மேலும் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைக்கு விடையளிக்கின்றான். அவர்களின் கவலைகளை நீக்கி அவர்களின் உள்ளங்களை அமைதியால் நிரப்புகின்றான்.
அல்லாஹ் சொல்வதாக, நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
எவன் எனது நேசரை பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கின்றேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறெதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என்பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்பை கோரினால் நிச்சயம் நான் அவனுக்கு பாதுகாப்பளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரை கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று நான் செய்யும் எந்தச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கின்றான். நானும் (மரணத்தின்மூலம்) அவனுக்கு கஷ்டம் தருவதை வெறுக்கின்றேன். (ஆதாரம்: புகாரி)
36. அன்புச் சகோதரியே !
மார்க்கத்தில் விருப்பமுள்ள தனது நாயனின் கட்டளையை ஏற்று நடக்கக்கூடிய தனது கொள்கையின் மூலம் பெருமைப்படக்கூய சகோதரியை நீ கண்டால் அவளுடன் அன்புவைத்து அவளை உனது தோழியாக்கிக்கொள்! அல்லாஹ்விற்காக அன்பு வைப்பவர்களுக்கு அவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எனது கண்ணியத்திற்காக ஒருவரையொருவர் நேசிப்பவர்களுக்கு (மறுமையில்) ஒளியிலான மேடைகள் இருக்கும். (அவர்கள் அம்மேடைகளின்மீது இருப்பார்கள்) அவர்களை பார்த்து நபிமார்களும், ஸுஹதாக்களும் தங்களுக்கும் இவை கிடைக்கவேண்டுமென ஆசைப்படுவார்கள். (ஆதாரம்: திர்மிதி)
37. அன்புச் சகோதரியே!
நீ நேரத்தை வகுத்துக் கொள்ளாவிட்டால் அது உன்னை வீணாக்கிவிடும். நீ மாணவியாக இருந்தால் உனது பாடங்களை மீட்டுவதற்கு நேரத்தை செலவிடு! நீ வீட்டுப்பெண்ணாக இருந்தால் உன் குடும்பம், கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், பயனுள்ள நூல்களை வாசிப்பதற்கும், உறவினர்களை சந்திப்பதற்கும், இதுபோன்ற நல்லவேலைகளில் ஈடுபடுவதற்கும் நேரத்தை வகுத்துக்கொள்!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அடியான் தனது ஆசைகளை எவ்வாறு செலவளித்தான் என்றும், தன் கல்வியை எதில் செயல்படுத்தினான் என்றும், தன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான். எதில் செலவளித்தான் என்றும், தன் உடலை எதில் பயன்படுத்தினான் என்றும் அவனிடம் விசாரிக்கப்படாதவரை அவனது இரு பாதங்களும் (மறுமைநாளில் அவன் நிற்கும் இடத்தைவிட்டு சிறிதளவும்) நகரமுடியாது. (ஆதாரம்: திர்மிதி)
அன்புச் சகோதரிகளே!
38. உறவினர்களை தரிசிப்பது, வயதிலும், உணவிலும் பரகத்தை ஏற்படுத்தும்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எவர் தனது உணவில் அபிவிருத்தியும், தனது வாழ்நாள் நீடிக்கவேண்டுமெனவும் விரும்புகின்றாரோ அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடக்கவும். (ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்)
எனவே உனது உறவினர்களை தரிசிப்பதற்கு ஆசைவைப்பாயாக! மேலும் உனது தரிசிப்பு அவர்களுக்கு பயனளிக்கக்கூடியதாகவும், நன்மைகளை செய்வதற்கு அவர்களை ஆர்வமூட்டக்கூடியதாகவும், தீமைகள் செய்வதைவிட்டு அவர்களை தடுக்கக்கூயதாகவும், பயனுள்ள அம்சங்களை அவர்களுக்கு கொடுக்கக்கூடியதாகவும், தீமைகளைவிட்டும் அவர்களை எச்சரிக்கக்கூடியதாகவும் இருப்பதுடன் அவர்களுக்கு சிறந்தமுறையில் அறிவுரைகூறி அவர்களின் நிலைகளைபற்றி கேட்டறிந்துகொள்!
அன்புச் சகோதரிகளே!
39. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்யக் கூடியவர்கள், அவனது மர்க்கத்தை நிலைநாட்டுவதில் அலட்சியம் செய்யக் கூடியவர்களும் உன்னை ஏமாற்றிவிடவேண்டாம். ஒருநாள் வரும் அந்நாளில் அநியாயக்காரன் தன் கைகளை கடித்துக்கொள்வான். இறைவிசுவாசி தான் ஈடேற்றம் பெற்றதற்காக பெரும் மகிழ்ச்சியடைவான். அவன் மறுமைநாளின் கஷ்டங்களை காண்பான். எனினும் தனது பட்டோலையை வலக்கையால் பிடித்துக் கொண்டிருப்பான். அவன் எதனையும் பேசுவதற்கு சக்திபெற மாட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
எவர் தனது பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கபட்டாரோ அவர் (மற்றவர்களிடம்) வாருங்கள் என்னுடைய பதிவுப்புத்தகத்தை நீங்கள் படித்துப்பாருங்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறுவார். நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை சந்திப்பேன் என்று உறுதியாக எணணியிருந்தேன் என்று உறுதியாக கூறுவார். (அல்ஹாக்கா: 69 : 19, 20)
40. அன்புச்சகோதரியே!
உனது உள்ளத்தில் அன்பையும், பாசத்தையும் விதைப்பாயாக! பெரியோர், சிறியோர் மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்புசெலுத்துவாயாக!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவன் அல்லாஹ்வால் இரக்கம் காட்டப்படமாட்டான். (ஆதாரம்: புகாரி)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் ஒரு பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் வழியில் ஒரு கிணற்றை கண்டார். உடனே அதில் இறங்கி தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கை தொங்கவிட்டபடி மண்ணை நக்கிக்கொண்டிருப்பதை கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதை போன்ற (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கி (தண்ணீரை தோலிலான) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை தமது வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்கு புகட்டினார். அல்லாஹ் அதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான் என்று அல்லாஹ்வின் தூதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(இதை செவியேற்ற) மக்கள் அல்லாஹ்வின் தூதரே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்போது மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும் என்று சொன்னார்கள். (ஆதாரம்: புகாரி)
இன்ஷா அல்லாஹ் அறிவுரைகள் தொடரும்….