இளமைக்கு வழிவிடுங்கள்!
தடைக்கல்லாக நிற்காதீர்கள், தடைகளை அகற்றி இஸ்லாம் தழைப்பதற்கு வழிகாட்டுங்கள், முன்னேற்றப் பாதையில் முனைப்புடன் செல்வதற்கு களங்கரை விளக்காக நில்லுங்கள். இஸ்லாம் உயர்ந்தோங்க ஊக்க மருந்தாகச் செயல்படுங்கள். சிவப்பு விளக்கு அகலட்டும், பச்சை விளக்கு எரியட்டும். எரியும் நெருப்பிற்கு குளிர் நீராய் அல்ல, உயிர் நாடியாய் இருங்கள்.
இமாம் புகாரீ, மற்றும் முஸ்லீம் ஆகியோரின் ஒருமித்த கருத்தைப் பெற்றதொரு நபிமொழி இது. ஒருநாள் பொழுதில் தனது இயற்கைத் தேவையைக் கழிக்க இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒதுங்குமிடம் நோக்கிச் செல்கின்றார்கள். இயற்கைத் தேவையை நிறைவு செய்து விட்டுத் திரும்பும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தண்ணீரின் தேவை என்பது மிகவும் அவசியமானதொன்று என்று உணர்கின்றார் அந்தச் சிறுவர். எனவே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை அள்ளி அங்கே வைத்து விட்டுச் செல்கின்றார்.
திரும்பி வந்து பார்த்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அங்கே தண்ணீர் பாத்திரத்தைக் காண்கிறார்கள். (இங்கே உள்ள தண்ணீரை) யார் கொண்டு வந்து வைத்தது? கேள்விகள் பிறக்கின்றன, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து..! அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற சிறுவர் தான் தங்களுக்காக இந்தத் தண்ணீரை தயார் செய்து வைத்து விட்டுச் சென்றார் என்ற பதில் கிடைக்கின்றது. இதனைக் கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மாத்திரத்திலேயே, அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிரார்த்தனைகளின் வரிகள் இதோ:
”யா அல்லாஹ்! இஸ்லாமிய மார்க்கத்தில் மிக ஆழ்ந்த தெளிவை அவருக்கு வழங்குவாயாக! (இன்னும்) அதன் விளக்கங்களில் அவருக்கு தனித்திறமையை வழங்குவாயாக!
மேற்கண்ட நபிமொழி நமக்கு எதனை உணர்த்துகிறதென்றால், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரார்த்தனையை பரிசாகப் பெற்றுக் கொண்ட அந்தச் சிறுவனின் வளர்ப்பு முறை, அவர் வளர்க்கப்பட்ட விதம், இன்னும் வயதில் மூத்தவர்களுக்குப் பணி விடை செய்ய வேண்டும், அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்ற உள்மனத்தாக்கம் தான் எனலாம்.
இத்தகைய அந்த இளைஞர் தான் பின்னாளில் மார்க்கத்தில் தெளிந்த அறிவையும், அதன் அர்த்தங்களில் மடை திறந்த வெள்ளம் போல ஞானத்தைப் பெற்றுக் கொண்டார். அவரது அந்த தெளிந்த ஞானத்தின் மூலமாக கடந்த 1400 வருடங்களுக்கு மேலாகவும், இன்னும் வரக் கூடிய நம்முடைய சந்ததிகளும் பயனடையக் கூடிய அளவில் அவரது கல்வி ஞானம் முழு சமுதாயத்திற்கும் பயன் தந்து கொண்டிருக்கின்றது. அவரைப் போன்றதொரு மார்க்கத்தில் விளக்கம் பெற்ற பெருமக்கள் இதுவரை தோன்றவில்லை என்ற நிலை தான் இருந்து கொண்டிருக்கின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களிலேயே ஒரு தனித்துவமிக்க, இறைவனது அன்பிற்கு பாத்திரமானவர், அந்த மனிதர் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் இளவல்கள் வளர வேண்டும், அதன் மூலம் வரக் கூடிய தலைமுறைகள் தளைத்தோங்க வேண்டும் என்று அவர் செலுத்திய கவனத்தை நாம் மேற்கண்ட நபிமொழிகளின் மூலம் காண முடிகின்றது. அந்த இளைஞரைப் பற்றித் தானே நாமும் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம், இன்று நேற்றல்ல, இன்னும் நாம் மட்டுமல்ல, கடந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இன்னும் வரக் கூடிய முஸ்லிம் உம்மத்தும் .., ஏன் முழு மனித சமுதாயமும் அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதன் காரணம், அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற அந்த இளைஞர் வளர்க்கப்பட்டத விதம் தான் காரணமாகும்.
அந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியும், தான் ஒருவரால் மட்டும் இந்த பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் இந்த இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு செல்ல முடியாது, இன்னும் அதற்குத் தனது குறுகிய ஆயுளும் பயன்படாது என்பதும் அவருக்குத் தெரியும். எனவே தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு போன்ற இளைஞர்களை உருவாக்கினார்கள், இஸ்லாமியப் பண்பாட்டில் வார்த்தெடுத்தார்கள், தான் மரணித்த பின்பு இந்த மார்க்கத்தைப் பாதுகாக்கவும், அதனைப் பரப்பவும் இவரைப் போன்றவர்கள் நிச்சயம் தேவை என்பதை உணர்ந்தார்கள்.
இன்றைக்கு நம் தலைமுறையில் நடந்து கொண்டிருப்பதென்ன? இந்த இஸ்லாமிய மார்க்கத்தினை வெற்றி பெற்ற மார்க்கமாக பரிணமிக்கச் செய்வதற்குத் தேவையான பொறுப்பும், கடமையுணர்வும் நம்மிடம் வெற்றிடமாகக் காணப்படுவதும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையும் தான் காணப்படுகின்றது. இதன் காரணமென்ன? நமது முன்னோர்கள் நம்மை வளர்த்த விதத்தில் எங்கோ ஓரிடத்தில் பிழை நேர்ந்திருக்கின்றது என்பதே அதன் உள்ளர்த்தமாகும். இந்த உன்னதமார்க்கத்தை தனது தோள்களில் சுமந்து எடுத்துச் செல்லக் கூடிய வலிமை மிக்கவர்களாக இன்றைய இளைஞர்கள் இருந்தும், அவர்களது அந்த உன்னத பருவத்தை அதற்கான வழிமுறைகளில் பயிற்றுவிக்காததன் காரணமாக, அவர்களது ஆற்றல்கள் இன்றைக்கு வேறுவிதமாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமாகக் கழிந்து கொண்டிருக்கும் போக்கை நாம் கண்டு வருகின்றோம். அதன் மூலம் அவர்கள் வருங்கால சந்ததிகளுக்கு இஸ்லாத்தைக் கொண்டு செல்லாமல் அல்லது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகளையோ அல்லது பழக்க வழக்கங்களையோ அல்லது அரைகுறையாகத் தான் புரிந்து கொண்டதையோ கொண்டு சென்று கொண்டிருக்கக் கூடிய நிலையைப் பார்க்கின்றோம்.
எனவே, இந்த மார்க்கத்திற்கு நேர்ந்திருக்கும் இந்த இழிநிலையைத் துடைக்கும் பொறுட்டு, இன்றைய இளைஞர்களை நாளைய இஸ்லாமிய சமுதாய மறுமலர்ச்சிக்கு எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து, அதன் அவசியம் குறித்து இங்கே நாம் சற்று கலந்துரையாடுவோம். நமது முன்னோர்கள் நமக்கு வழங்கத் தவறிய மார்க்கத்தின் அடிப்படைகளை, அவர்கள் செய்து விட்ட தவறுகளை நாமும் செய்யாது, நாளைய சமுதாயம் நம்மைக் குற்றப்படுத்தாதிருப்பதற்கு இன்றே நாம் முனைப்புடன் செயல்படுவோம். அதற்கு இந்தக் கட்டுரை உதவுமென்று நாம் நினைக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்..!
பிரார்த்தனை என்பது அவசியம்
நமது குழந்தைகளின் இம்மை மறுமை நற்பேறுகளுக்காகப் பிரார்த்தனை செய்வதில் சடைவடைந்து விடக் கூடாது. தொடர்ந்து அவர்களின் இஸ்லாமிய வாழ்வுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் தங்களது தாய்மார்;களின் தொப்புள் கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் காலம் முதல், அவர்கள் உயிருடன் இருக்கும் காலம் வரைக்கும் பிரார்த்தனைகள் என்பது அவசியம். நமது குழந்தைகள் நற்குணமுள்ள சந்ததிகளாகப் பரிணமிப்பதற்கும், நல்லொழுக்கமுள்ளவர்களாக வளர்வதற்கும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறைநம்பிக்கை, இறையச்சம், அன்பு, கருணை, பண்பாடுகள், வலிமை மற்றும் நேர்மை என்று எண்ணற்ற நன்மைகளை அருளும்படிப் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பிரார்த்தனை என்பது வணக்க வழிபாடுகளில் ஒரு அம்சமாக இருக்கின்றது. நம்மைப்படைத்த வல்லவனின் தன்மைகளுள் ஒன்றை பூரணப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. இது நாம் நமது பிள்ளைகளுக்குச் செய்யக் கூடிய கடமைகளுள் ஒன்று, இன்னும் ஒரு தந்தை தனது தனையனுக்காகக் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் அங்கீகரிக்கத் தவறுவதுமில்லை, அதனை ஒதுக்கி விடுவதுமில்லை.
இஸ்லாமியக் கல்வி மற்றும் வளர்ப்பு முறை
வழக்கமாக பெற்றோர்கள் ஒரு தவறைச் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். அதாவது இஸ்லாத்தை தனது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் பிற்போக்குத்தனத்தை அல்லது தாமதத்தைக் காட்டுகின்றார்கள், மாதங்களென்ன, வருடங்களென்ன அந்தக் குழந்தை பள்ளிவாசலுக்குச் சென்று அங்குள்ள ஆலிமிற்கு முன்னாள் உட்கார்ந்து ஓதப் படிக்கும் வரைக்கும் காத்திருக்கின்றனர். அல்லது உலகக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து விட்டு, மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விடுகின்றனர்.
ஆலிமிடம் சென்று தான் மார்க்கக் கல்வி பயில வேண்டும் என்று நினைப்பது தவறானது. ஒரு குழந்தை தனது தந்தையைப் பார்த்துத் தான் பண்பாட்டைக் கற்றுக் கொள்கின்றது. எனவே, தந்தையிடமிருந்து தான் மார்க்கத்தைப் பற்றிய போதனைகள் ஆரம்பமாக வேண்டும். அவர் தான் அந்தக் குழந்தையின் முதல் ஆலோசகர், பயிற்சியாளர்.
அவ்வாறு தனது குழந்தைக்கு இஸ்லாமியப் பயிற்சி வழங்க வேண்டும் என்று விரும்புகின்ற தந்தை முதலில், ஏகத்துவத்தைப் பற்றிப் போதிப்பதுடன், தனது குழந்தைக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை இணைத்து விட வேண்டும். இதற்கு லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கையில் நமக்கு மிகச் சிறந்த படிப்பினை இருக்கின்றது.
லுஃக்மான் தம் புதல்வருக்கு; ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்”. (அல்குர்ஆன் 31:13)
மேலே உள்ள இறைவசனத்தைக் கவனத்தில் கொண்டு, குழந்தைகளை நெறிப்படுத்துவதற்குண்டான பயிற்சிக்கான முயற்சியை ஆரம்பித்தல் வேண்டம்.