ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் சமமாக நடத்துங்கள்
நீதமானதொரு குடும்பத் தலைவி தனது ஆண் குழந்தையையும், பெண்குழந்தையையும் நீதமாகவும், சரிசமமாகவும் நடத்துவாள். அவர்கள் இருவரில் ஒருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், இன்னொருவரை தாழ்த்துவதுமான பழக்கங்களை மேற்கொள்ள மாட்டாள். ஏனெனில், இஸ்லாம் இத்தகைய வேறுபாடு காட்டுவதை அங்கீகரிப்பதில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு குழந்தை பிறப்பிற்கும் இன்னொரு குழந்தைப் பிறப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் சில வேளைகளில், ஒரு குழந்தையை விட இன்னொரு குழந்தை மீது அதிகப் பாசத்தைப் பொழியச் செய்து விடும்.
இவ்வாறான பாகுபாட்டுடன் வளர்க்கப்படும் குழந்தைகள் மனதளவில் காயமடைகின்றன. அந்தக் காயம் வளரும் பொழுது, சக சகோதர, சகோதரிகள் மீது குரோதமும், வெறுப்பும், தாழ்வு மனப்பான்மையும் உருவாகக் காரணமாக அமைந்து விடுகின்றன. பாதிக்கப்பட்ட குழந்தையின் மனதை உள நோயான பொறாமை ஆக்கிரமித்து, அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அரிக்க ஆரம்பித்து விடுகின்றது.
எனவே, இத்தகைய உள நோயற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றவர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கிடையே பாரபட்சம் காட்டாதிருக்கட்டும். அவர்களது இதயங்களை குரோதங்கள், வஞ்சகங்கள், பொறாமை போன்ற நோய்களற்ற பிரதேசமாக மலரட்டும். இதனையே இஸ்லாமும் வலியுறுத்துகின்றது.
அல் நுஃமான் இப்னு பஷீர் ரளியல்லாஹு அன்ஹு என்பவரது தந்தை, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்பாக வந்து, இந்த எனது மகனுக்கு எனது அடிமை ஒருவரை அன்பளிப்புச் செய்கின்றேன் என்று கூறிய பொழுது, இவருக்குக் கொடுத்தது போலவே மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு, அவர், ‘இல்லை’ எனப் பதில் தந்தார். இதனைக் கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த உனது மகனுக்கு நீங்கள் கொடுத்த அடிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
இன்னொரு அறிவிப்பின்படி,
இவரைப் போலவே அனைத்து (குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட்டதா? என வினவப்பட்ட பொழுது, எனது தந்தை கூறினார்கள், ‘இல்லை’, என்றதும், இறதை;தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘அல்லாஹ்வைப் பயந்து கொள்’, அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துங்கள், என்று கூறினார்கள்.
மூன்றாவது அறிவிப்பின்படி,
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள், ஓ பஷீர், உங்களுக்கு மற்ற குழந்தைகள் யாரும் இருக்கின்றார்களா?, அவர் கூறினார், ஆம்..! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள், இவருக்குக் கொடுத்தது போலவே மற்ற குழந்தைகளுக்கும் கொடுத்தீர்களா? பஷீர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார் : ‘இல்லை’. பின் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார், இதற்கு சாட்சியாக இருக்கும்படி என்னைக் கேட்காதீர்கள், ஏனென்றால், பாரபட்சமானதற்குத் துணை போக நான் விரும்பவில்லை என்று கூறியதோடு, உங்களது மற்ற குழந்தைகளையும் சரிசமமாக நடத்துவதற்கு நீர் விரும்பவில்லையா? (பஷீர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்) நிச்சயமாக..! அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தவே விரும்புகின்றேன் என்ற பொழுது, இறைத்தூதுர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அவ்வாறெனில், இதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று கூறினார்கள்.
எனவே, இறைவனைப் பற்றிய அச்சம் கொண்டுள்ள பெண்மணி தனது குழந்தைகளில் எவரிடமும் பாரபட்சத்துடன் நடக்காமல், அவர்கள் அனைவரையும் சமமான முறையில் நடத்த வேண்டும். பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக இருந்தாலும் சரி, உடைகள் எடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது முத்தம் கொடுத்தாலும் அனைவருக்கும் அதனைக் கொடுக்க வேண்டும். இதுவே இஸ்லாத்தின் வழிமுறையாகும்.
பாசத்திலும் நேசத்திலும் ஆணையும் பெண்ணையும் வேறு பிரிக்காதீர்கள்
உண்மையாக இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் பின்பற்றித் தான் வாழ வேண்டும் என்று உறுதியோடு இருக்கின்ற எந்த முஸ்லிமும் தனது பிள்ளைகளுக்கிடையே, ஒருவரை இன்னொருவரை விட உயர்வாகவோ, தாழ்வாகவோ கருத தனது மனதில் இடம் கொடுக்க மாட்டார். இத்தகைய மனநிலையானது அன்றைய அஞ்ஞான காலத்து மனநிலையை ஒத்ததாகும்.
பெற்றவள் தனது அனைத்து பிள்ளைகளுக்கிடையேயும் வேற்றுமை பாராட்டாமல் நடந்து கொள்ளக் கூடியவளாக இருப்பாள். குழந்தைகள் என்பவர்கள் இறைவனது அருட்கொடைகள். அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு வந்திருக்கும் பரிசுப் பொருட்கள். அவர்கள் ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களில் எவரையும் நாம் வெறுத்து ஒதுக்கவும் முடியாது, ஏன் இந்தக் குழந்தைதான் வேண்டும், இந்தக் குழந்தை வேண்டாம் என்று நமது விருப்பப்படியும் அந்தப் பரிசுப் பொருட்களை இறைவனிடமிருந்து கேட்டுப் பெற முடியாது. அது அவனது தீர்மானத்தில் உள்ளதாகும்.
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்;. தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)
இறைவன் தந்த இந்த அருட்கொடையை, உண்மையில் இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும் பேணி நடக்க விரும்புகின்ற பெண்மணி, உதாசினமாக எண்ண மாட்டாள். இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு எதுவாக இருந்தாலும், அதனைக் கண்ணியத்துடன் பெற்றுக் கொண்டவளாக, அதன் மீது பூரண கவனம் செலுத்துவதுடன், அதனை மிகவும் கவனமான முறையில் வளர்த்தெடுக்கப் பாடுபடக் கூடியவளாக இருப்பாள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்ற இந்த நபிமொழியைப் பாருங்கள்:
ஒரு பெண் தனது இரு பெண் குழந்தைகளுடன் என்னிடம் வந்து தர்மம் கேட்டாள். என்னிடம் அப்பொழுது ஒரு பேரீத்தம் பழத் துண்டைத் தவிர வேறு எதனையும் காணவில்லை. அதனை நான் அவளுக்குக் கொடுத்தேன். அதனைப் பெற்றுக் கொண்ட அவள், அதனை இரு கூறாகப் பிரித்து இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு, தனக்கென அதிலிருந்து எதனையும் உண்ணவில்லை. பின் தனது குழந்தைகளுடன் அங்கிருந்து சென்று விட்டாள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது வீட்டிற்குள் வந்ததும், நடந்தவற்றை நான் அவர்களிடம் கூறினேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யாருக்கு பெண் குழந்தைகள் கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டதோ, அவர்கள் அந்தப் பிள்ளைகளை நல்ல முறையில் பேணி வளர்த்தார்களென்றால், மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அவர்கள் திகழ்வார்கள் என்று கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்புச் செய்த இன்னுமொரு நபிமொழியில்;
இரு பெண் குழந்தைகளுடன் ஒரு ஏழைப் பெண் என்னிடம் வந்தாள். அவளிடம் நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். அதில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒன்றைக் கொடுத்து விட்டு, தனக்கொன்றை எடுத்து தனது வாயிற்கருகில் கொண்டு சென்றாள். அவளது குழந்தைகள் அதனையும் தன்னிடம் தருமாறு கேட்கவும், தான் தின்ன இருந்த அந்த பேரீத்தம் பழத்தை, இருகூறாகப் பிளந்து அவர்களிடம் கொடுத்து விட்டாள். இந்தக் காட்சி என்னை மிகவும் பாதித்து விட்டது (என்று கூறும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், இதனை) நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறிய பொழுது, அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு சொர்க்கத்தை அருள்வானாக அல்லது இதன் காரணமாக அவள் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டாள் என்றும் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;
எவரொருவருக்கு மூன்று பெண்மக்கள் இருந்து, அவர்கள் உறைவிடத்தையும், அவர்களது சுக மற்றும் துக்கங்களைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களென்று சொன்னால், அல்லாஹ் அவர்களை அவ்வாறு அவர்களிடம் காட்டிய அன்பிற்குப் பகரமாக, சொர்க்கத்தில் நுழைவிக்கின்றான். ஒரு மனிதர் கேட்டார், இரண்டு பெண்மக்கள் இருந்தால் யா ரசூலுல்லாஹ்? அவர்கள் இரண்டு பெண்மக்களைப் பெற்றிருந்தாலுமே என்று கூறினார்கள். இன்னொரு மனிதர் கேட்டார், ஒரு பெண் பிள்ளையைப் பெற்றிருந்தால், யா ரசூலுல்லாஹ்? இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார், அவர் ஒன்றைப் பெற்றிருந்தாலும் சரியே..(சுவனத்தில் நுழைவிக்கப்படுவார்) என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவரொருவருக்காவது பெண் பிள்ளை பிறந்தால், அதனை உயிருடன் புதைக்கவும் இல்லை அல்லது வெறுக்கவும் இல்லை, இன்னும் ஆண் பிள்ளைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவளைத் தாழ்த்தவும் இல்லை, இத்தகைய பெற்றோரை) அல்லாஹ், சுவனத்தில் நுழைவிக்கின்றான். (நூல்: அல் ஹாகிம்)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு பெண் மக்களின் மீது எந்தளவு இருந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளும் அதேவேளையில், அவர்கள் பெண்களில் புதல்விகளை மட்டும் குறிப்பிடவில்லை, சகோதரிகளையும் பேணி வளர்த்தாலும், அவ்வாறு வளர்க்கக் கூடிய சகோதரன் சொர்க்கச் சோலைகளில் புகுத்தப்படுவான் என்று அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”(உங்களில் எவருக்காவது) மூன்று புதல்விகள் அல்லது மூன்று சகோதரிகள் இருக்க அவர்களை நல்ல முறையில் நடத்தினால், அதன் காரணமாக அல்லாஹ் அவனை சுவனத்தில் நுழைவிக்கின்றான்.” (நூல்: புகாரீ)
அத்தபரானியில் வந்துள்ள இன்னுமொரு நபிமொழியில், இறைத்தூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;
என்னுடைய உம்மத்தில் எவரொருவருக்கு மூன்று பெண் மக்கள் அல்லது மூன்று சகோதரிகள் இருந்து, அவர்களை வாலிபமாகும் வரைக்கும் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தாரென்று சொன்னால், அதன் காரணமாக அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார், என்று கூறிய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தனது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் சரிசமாக வைத்து, (இவ்வாறு சரிசமமாக இருவரும் சுவனத்தில் இருப்போம்) என்று கூறினார்கள்.
நீதமாக நடக்கக் கூடிய எந்தத் தாயும், ஆண் மக்களை உயர்த்தி, பெண் மக்களை தாழ்த்தி, அவர்களை வளர்ப்பது குறித்து புகார் கூற மாட்டாள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபிமொழிகளை அவள் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டாளென்று சொன்னால், எந்தக் குழந்தையிடமும் பாரபட்சம் காட்டாது, பெண்பிள்ளைகளை சரிவர நடத்துவதன் மூலம் சுவனத்தில் சுவகரீத்துக் கொள்ளக் கூடியவளாக மாறி விடுவாள். அதன் மூலம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுவனத்தில் உலா வரக் நற்பாக்கியம் பெற்றவளாகவும் மாற்றம் பெற்று விடுவாள்.
இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுப் பின்பற்ற நினைக்கும் குடும்பத்திலும் சரி, அல்லது சமூகத்திலும் சரி பெண்குழந்தைகள் பேணப் படுவார்கள், பாதுகாக்ககப்படுவார்கள், மதிக்கப்படுவார்கள். குறிப்பாக இன்றைய நுகர்வோர் கலாச்சாராத்தில், மேற்கத்திய நாகரீகத்தினர் நடத்துவது போல பெண்மக்களை சந்தைப் பொருட்களாக காட்சிக்கு உலா வர விட மாட்டார்கள். கண்ணியமான முறையில் அவர்களை சீராட்டி வளர்க்கப்படுவார்கள்.
என்னதான் குடும்ப அங்கத்தினர்களின் அன்பும், ஆதரவும் பெண் மக்களுக்கு இருப்பினும், ஒரு தாய் தான் அவளுக்கான சிறந்த துணையாக இருக்க முடியும். அவளது ஒவ்வொரு பருவத்திலும் அவளுக்குள் ஏற்படக் கூடிய மனநிலை மாற்றங்கள், தடுமாற்றங்களைக் கணித்து சீர் திருத்த முயற்சிகளை எடுக்க வேண்டும். இன்னும் அவள் திருமணம் முடித்துக் கொடுக்கப்படும் வரைக்கும்.., ஏன், அதற்கு அப்பாலும் கூட தனது குடும்ப அனுபவங்களை தனது மகளுக்கு வழங்குவதன் மூலம் சென்ற இடத்திலும் சிறப்பான வாழ்க்கை முறையினை அவளுக்கு வார்த்துக் கொடுக்க முடியும்.
இன்றைக்கு குடும்ப அமைப்பு என்பது சிதறி வருகின்றது. அநாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் சேவைக்காக அமைக்கப்பட்டது போக, இப்பொழுது அதுவும் ஒரு தொழிலாக வளர்ந்து வருகின்றது. நாளைய முதியோர்களாகிய நாம், இன்றைக்கு நமது குழந்தைகளை சரியான இஸ்லாமிய வழிகாட்டலின்படி வளர்க்கவில்லை என்று சொன்னால், நாளைய முதியோர் இல்லத்தில் நமது பெயரும் பதியப்பட்டு விட்ட பின், அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை.
அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கும், மனிதர்களின் சட்ட திட்டங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. இன்றைக்கு ஒவ்வொரு கணமும் மேற்குலகு தேய்ந்து கொண்டு வருவதற்குக் காரணம் தேடிய புள்ளியலாளர்கள், இறுதியான முடிவுக்கு வந்ததென்னவோ, குடும்ப அமைப்பு சிதறியதே என்றும் கண்டுபிடிப்பைத் தான். அங்கே, பெண் பிள்ளைகள் போகப் பொருளாக பவனி வந்ததன் விளைவு, கள்ளக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, விவாகரத்து அதிகரிப்பு, பெண்களிடையே போதைப் பொருள் உபயோகம், தற்கொலை, மனநிலை பாதிப்பு ஆகிய சமூக அவலங்களும், நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
சீர் கெட்ட வாழ்வா? கண்ணியமாக வாழ்வா? தேர்ந்தெடுத்துப் பின்பற்றுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுவனத்தில் உலா வர ஆசைப்படுங்கள்.