தண்ணீருக்குள் நிகழும் சுகப் பிரசவம்!
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் தான் இந்த `தண்ணீருக்குள் பிரசவம்’ பிரபலமாக இருக்கிறது.
பாதுகாப்பான தொட்டிக்குள் இதமான சூட்டில் நீரை நிரப்புவார்கள். அது நமது உடல் சூட்டின் அளவான 37 டிகிரி சென்டி கிரேடில் இருக்கும். பிரசவ வலி என்பது பொதுவாக 10 முதல் 12 மணிநேரம் வரை இருக்கும். அந்த வலி தொடங்கும் நேரத்தில் கர்ப்பிணியை உள்ளே இறக்குவார்கள். வயிறு முழுமையாக நீருக்குள் மூழ்கியிருக்கும். தோள்பட்டை வரை நீர் நிரம்பியிருக்கும். `பிரசவத்திற்குரிய நிலையில்’ உட்கார வைப்பார்கள். தொட்டிக்குள் இருக்கும் நீர் வெளியேறிக்கொண்டும், புதிய நீர் வந்து கொண்டும் இருக்கும்.
தண்ணீர் பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கு என்ன பலன்?
பிரசவ வலியில் 60 சதவீதம் குறையும் வாய்ப்பிருக்கிறது. தசைகள் நன்றாக ரிலாக்ஸ் ஆகும். முதுகுதண்டு வடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். குழந்தையை வெளியேற்ற கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மையும் சீராக இருக்கும்.
பிரசவ வலியை உருவாக்கி, பிரசவ செயல்பாட்டை முழுமைப்படுத்துவது ஆக்சிடோசின் என்ற ஹார்மோன். தண்ணீருக்குள் பிரசவம் நடக்கும்போது நீரின் சுழற்சி இதமாக, மிதமாக இருந்து கொண்டிருப்பதால் இந்த ஹார்மோன் சீராக வெளிப்பட்டு பிரசவ செயல்பாட்டுக்கு நன்றாக ஒத்துழைக்கும். கர்ப்பிணியின் யோனிக் குழாயின் தசைகள் நெகிழ்ந்து, குழந்தை எளிதாக வெளியே வரும் சூழலும் ஏற்படும்.
தண்ணீருக்குள் நடக்கும் பிரசவத்தில் குழந்தை வெளியே வரும்போது தண்ணீருக்குள் சிக்கிக் கொள்ளாதா?!
உன் வயிற்றுக்குள் இருக்கும் பனிக்குட நீரில் நீந்தியபடிதான் உன் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும். பிரசவத்தின்போது குழந்தை வெளியே வந்து அதன் மீது காற்று பட்டபின்பு தான் குழந்தை சுவாசம் எடுக்கும். அதனால் அது தண்ணீருக்குள் பிறந்தாலும், சுவாசம் எடுக்காது. தண்ணீரையும் குடிக்காது. தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தபின்பு தான் அதன் மீது காற்று படும். சுவாசம் எடுக்கும். இதில் பயப்படத் தேவையில்லை.
தண்ணீர் பிரசவத்தால் நிறைய பலன்கள் இருந்தாலும் பாதிப்புகளும் ஒன்றிரண்டு இருக்கத்தானே செய்யும்?!
சரிதான்! தொப்புள் கொடியின் நீளம் குழந்தைக்கு குழந்தை மாறும். குழந்தை பிறந்து வெளியே வரும்போது, அதன் தொப்புள் கொடி நீளம் குறைவாக இருந்து சரியாக கவனிக்காவிட்டால், அது கிழிந்து குழந்தையின் ரத்தம் வெளியேறி விடும். அதனால் தண்ணீரில் பிரசவம் நடக்கும்போது குழந்தையின் தொப்புள் கொடி அளவை கவனமாக கவனித்து பாதிப்பு ஏற்படாத அளவு கையாளவேண்டும்.
இன்னொரு விஷயம், பிரசவத்தின்போது தாயின் உதிரப்போக்கை தண்ணீருக்குள் சரியாக கணிக்க முடியாது. அதனால் அளவுக்குமீறி ரத்தம் வெளியேறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டியில் பயன்படுத்தும் நீர் சுத்தம் இல்லாததாக இருந்தால் தாய்க்கு `இன்பெக்ஷன்’ ஏற்படலாம். பனிக்குடம் முன்னமே உடைந்து பிரசவம் தாமதித்தாலும் இன்பெக்ஷன் ஏற்படலாம். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தண்ணீருக்குள் உன் பிரசவத்தை அமைத்துக் கொள்ள விரும்பினால் நிறைமாதத்திற்கு வரும்போதிலிருந்து உன் ரத்த அழுத்தம் கவனிக்கப்பட வேண்டும். பிரசவத்தில் குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அங்கு உன்னை பரிசோதிக்கும் டாக்டர்கள் மூலம் ஆராய வேண்டும். ஒருவேளை உன் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தாலும் தண்ணீர் பிரசவத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பிடத்தக்க வேறு எந்த நெருக்கடிகளும் இல்லாமல் இருந்தால் நீ தைரியமாக தண்ணீரில் பிரசவித்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது!
நீர்க்குடம் உடைதல் – ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது
கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.
இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
இதன் அறிகுறிகள்
திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவ முறை
34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும். ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.