அப்பட்டமான அவலங்கள்!
காலங்காலமாக திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. விருந்துகள் பரி மாறப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால்திருமணச் சடங்கு முறைகள் விருந்து முறைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன. தமிழகத்திலேயே பல ஊர்களில் வெவ்வேறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.ஒரு பக்கம் தவ்ஹீது முழக்கங்களினால், இஸ்லாமிய நபிவழித் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இன்னும் அனாச்சாரச் சீரழிவுகளில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம்களையும் கண்டு கொண்டு தான் இருக்க வேண்டிய நிலை.
உதாரணமாகத் திருமண முறையில் பின்பற்ற வேண்டிய மஹர் விஷயத்தில் நம்மில் எத்தனை பேர் அதை நியாயமாக முறையாக கொடுக்கிறோம் என்று பார்த்தால் ஓரிலக்க சத விகிதத்தில் தான் இருக்கிறோம். கைக்கூலி வாங்கப்படுகின்றது; திருமணத்தில் மாப்பிள்ளை நயாப் பைசா கூட செலவில்லாமல் மணமுடிப்பது வாடிக்கையான நிகழ்வாகத்தான் உள்ளது.
ஆம்! ஏழை முதல் பணக்காரர் வரை அவரவர் வசதிக்கேற்ப திருமணம் செய்யும்போது பெண் வீட்டாரை எந்தளவுக்கு சக்கை பிழிய முடியுமோ அந்தளவுக்குச் சக்கை பிழிய வைத்து விடுகிறார்கள். பெண் வீட்டாரிடமிருந்தே தொகையும், நகையும் பெறப்பட்டு அந்த காசிலேயே மஹர் தொகை கொடுக்கும் கில்லாடிகள் தான் நமது முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மையாகும்.
சில இடங்களில் 10 பவுன் பத்தாயிரம், 25 பவுன் 25 ஆயிரம், 50 பவுன் 50 ஆயிரம் என்ற நிலயெல்லாம் இப்போது மாறி, தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப 10 பவுன் 20 ஆயிரம், 25 பவுன் 50 ஆயிரம் என்ற ரேஞ்சில் போய்க் கொண்டிருக்கிறது, பெண் வீட்டாரும் நகை தானே, நம் பெண் தானே அணிந்து கொண்டிருக்கப் போகிறாள் என்ற நினைப்பில் நகை எவ்வளவு விலை உயர்ந்தாலும் கஷ்டப்பட்டு கடன்களை வட்டிக்கு வாங்கி குமரை கரை சேர்ப்பதும் கண்கூடு.
இப்போது அதையும் தாண்டி புனிதமாக ஒத்திக்கு வீடு பார்த்து கொடுத்து விடுங்கள் என்று நாக்கூசாமல் கேட்கிறார்கள். பெண்-மாப்பிள்ளை சுதந்திர மாக வாழ வேண்டுமே என்று அதையும் செய்யத் தயாராகி விட்டனர். நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கற்புடன் உள்ள பெண்ணுக்கே இந்த நிலை என்றால் இன்னும், ஊமை, காது கேளாதவர் போன்ற ஊன குறைபாடுகளிருந்தால் சொல்ல வேண்டியதில்லை. இன்னும் எகிறிக் கொண்டிருக்கும்.
இந்த மோசமான சூழ் நிலையை முஸ்லிம்களுக்கு போதிக்க வேண்டிய ஹஜ்ரத்மார்கள் என்ற அங்கீகாரம் பெற்ற சமுதாய குருமார்(?)களோ, சமுதாய திருமணங்களில் இன்னும் மாப்பிள்ளைகளுக்கு கலிமா சொல்லிக்கொடுத்து இப்போது தான் மாப்பிள்ளையை முஸ்லிம் ஆக்கும் கேவலங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை இப்போது தான் முஸ்லிம் ஆகிறார். போகப் போக இஸ்லாத்தை தெரிந்து கொண்டு மரணிக்கும் போது முஸ்லிமாக மரணித்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? காரணம் ஒரு முஸ்லிம் ஆண் மரணிக்கும்போது ஜனாசாவை குளிப்பாட்ட வரும் அந்த மஹல்லா முஅத்தின் குளிப்பாட்டி கபனிடும்போது, அபிர் எனப்படும் நறுமணத்தூளில் இறந்தவரின் மனைவியை கூப்பிட்டு மஹர் கொடுத்து விட்டாரா/ என்று கேட்டு, கொடுக்கவில்லையாயின் நான் மன்னித்து விடுகிறேன் என்று சொல்லச் சொல்லி சத்தியம் பண்ணச் சொல்லி பிறகு அந்தத் தூளை ஜனாசாவின் மார்பில் வைத்து பரப்பி அதில் அல்லாஹ் முஹம்மத் என்று அரபியில் எழுதி, அத்துடன் கபனாடையை மூடி ஜனாசா தொழுது அடக்கம் செய்ய கொண்டுச் செல்லும் காட்சிகளும் நம் கண் முன்னே நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.
ஜனாசா தொழுகை முடிந்தவுடன் கூட்டுத் துஆக்கள் முறையே ஜனாசா தொழுகைக்குப் பின், பள்ளி வாசலில் மற்றும் மையத்தானவரின் வீட்டு வாசலில் தவணை (Instalment) முறையில் துஆ ஓதப்பட்டு வருகின்றது. மையத்தான வீடுகளில் யாஸீன், குர்ஆன் ஓதப்படுகின்றது. எத்தனை யாஸீன் ஓதியிருக்கிறார்கள் என்று கேட்டு அதையும் சேர்த்து அவருக்கு துஆ(?) செய்யப் படுகிறது.
மேலும் மூன்றாம் நாளன்று ஜியாரத் என்று காலையில் பஜ்ருக்குபின் மகாகனம் பொருந்திய மஹல்ல ஹஜ்ரத்(?) அவர்கள் இறந்தவரின் வீட்டிற்கு வந்து யாஸீன்-ஓதி துஆ செய்வார். சாம்பிராணி போட்டபின் சந்தனம், பூ. ஊதுபத்தி எடுத்துக்கொண்டு ஆட்கள் போகும்போது, ஹஜ்ரத் கபரஸ்தானுக்கு வரமாட்டார். முஅத்தின் மட்டும் துஆ செய்து சடங்குகள்(?) முடித்து வைப்பார். இதில் வசதி படைத்தவர்களோ அல்லது பள்ளி நிர்வாகப் பொறுப்பிலோ உள்ளவர்களாக மட்டும் இறந்தால் ஹஜ்ரத் கபரஸ்தானுக்கு வந்து சடங்குகளைச் செய்வார். இதில் ஓதப்படுகின்ற கூட்டு துஆக்களில் குர்ஆனில் எந்தெந்த சூராக்களில் ஜன்னத் என்கின்ற வார்த்தை வருகின்றதோ அந்த சூராவின் வரிகளை ஓதி ஆமின் சொல்பவர்களை பரவசப்படுத்தும் காட்சிகளும் உண்டு.
எவர் சத்தியம் வந்த பின்னரும் அதை மறைத்து மக்களை மடையர்களாகவே ஆக்க விரும்புவாரோ அவர் நிலையைப் பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் பல இடங்களில் எச்சரிக்கை வருகிறதே! மனிதனின் வாழ்வாதாரமாக இறக்கியருளப்பட்ட குர்ஆனை; இம்மை-மறுமைப் பேறுகளை முறையாக, முழுமையாக அறிய- ஆராய இறக்கியருளப்பட்ட குர்ஆனை, சத்தியம் செய்வதற்காகவும், மரணித்த பின் நமது பெயரில் ஓதி-ஊதினால் அது யாரை ஏமாற்றும் செயல் என்றால் அல்லாஹ்வை மட்டுமல்ல நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இறை இல்லங்களை இறைவனை மட்டுமே புகழ, நினைவு கூற பயன்படுத்த வேண்டும். ஆனால் நாமோ இறை இல்லங்களை மவ்லூது, ராத்திபுகள் ஓதி இறைவனுக்கு இணை வைக்கும் (ஒஷிர்க்) கொடிய செயல்களச் செய்வதோடு இயற்கை உபாதைகளை கழிக்க மட்டுமே பயன்படுத்தினால் நாம் இஸ்லாத்தை விட்டு வெகு தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இது எல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? என்றால் எக்காலத்திற்காகவும் தான் இறக்கியருளப்பட்ட மார்க்கம் இது என்பதை நாம் விளங்கினாலும் விளங்காவிட்டாலும் எல்லா காலத்திலும் மெளத் என்ற ஒன்று உண்டு என்பதை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பழமொழி என்று சொல்வார்கள், ஆடையே அணியாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்று, இது பழமொழி தான். இது குர்ஆனோ-ஹதீஸோ அல்ல. பத்து விபச்சாரிகளின், விபச்சாரர்களின் மத்தியில் தான் ஒருவர் கற்புள்ளவராக வாழ்ந்துகாட்ட வேண்டும். இது சவாலான-எதிர்நீச்சலான வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு, இனிய தூதராகவும், இறுதித் தூதராகவும் வாழ்ந்து காட்டிய முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறைகளை முடிந்தளவுக்கு பேணி நம்மை நாமே காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
முஸ்லிம்கள், தொழுகையாளிகள் அதிகமாக வாழக்கூடிய நகர்ப்புறங்களிலேயே மேற்கண்ட பல விசயங்கள் நடக்கின்றன என்றால், கிராமங்களில், ஒதுக்குப் புறங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிதறி கிடக்கும் முஸ்லிம்கள் சிறுநீர் கழித்துக் கூட சுத்தம் செய்வது கிடையாது. கற்கால முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற ஆக்கங்களை படிக்கவோ கேட்கவோ நேர்வது அபூர்வமே. எனவே கண்ணால் ஒரு முஸ்லிமுடைய இது போன்ற ஏதாவது ஒரு அவலத்தை நாம் காணும்போது அவர்களை புரியச் செய்து அவர்களுடைய தவறுகளிலிருந்து அவர்களை காப்பாற்றச் செய்வது நம் எல்லோர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
சொல்வது நம்மீது கடமை; கேட்பதும், கேட்காததும், அவருடைய உரிமை; ஆனால் கடமைக்குரிய பலனோ நமக்கு எப்போதும் உண்டு. நிச்சயமாக அல்லாஹ், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான(நல்ல) அமல்கள் செய்கிறர்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள்; நரக நெருப்பே இவர்கள் தங்கு மிடமாக இருக்கும். (47:12)
share by A. கமால் உசேன்
source: http://annajaath.com/