ஐயம்: அறியாத காலத்தில் ஷிர்க் வைத்த நிலையில் இறந்த தாய், தகப்பனாருக்காக வேண்டி (அவர்கள் பிள்ளைகள்) துஆ கேட்கலாமா? ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தேவை?
தெளிவு: தங்களை முஸ்லிம்கள் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்களைப் பற்றி கேட்கிறீர்கள் என்ற எண்ணுகிறோம். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் தவறான பாதுகாவலர்களாக ஆக்குவது கொண்ட வாழ்ந்தவர்களபைப் பற்றி கேட்கிறீர்கள் என்று எண்ணுகிறோம்.
அவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் தவறான போதனைகள் காரணமாக, அவுலியாக்களைத் தங்கள் பாதுகாவலர்களாக ஆக்குவது கொண்டு அதாவது தர்காக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நேர்ச்சை செய்வது கொண்டும், அவர்களிடம் தங்களின் வேண்டுதல்கைளை வைப்பது கொண்டும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கொடிய குற்றத்தைச் செய்தவர்கள். இவர்களையே அறியாத காலத்தில் ஷிர்க் வைத்த நிலையில் இறந்த தாய், தந்தையர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்களுக்காக அவர்களின் பிள்ளைகள் துஆ கேட்கலாமா? என்பதே உங்களின் ஐயம்.
இது நிதானமாக அணுக வேண்டிய ஒரு விஷயம். அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும் ஏற்று, சாட்சி கூறி தங்களை முஸ்லிம்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளவர்களை நாமும் முஸ்லிமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படிபட்டவர்கள் செய்யும் ஷிர்க்கான செயல்களுக்கு நிச்சயம் அல்லாஹ் மறுமையில் தண்டனை அளிப்பான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆயினும் இவ்வுலகில் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பளிப்பதற்கு உலகில் எந்த முஸ்லிமுக்கும் அதிகாரம் இல்லை.
எனவே இறுதிநபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தைச் சேர்ந்த யாரையும் அவர்கள் தர்கா சடங்கு, கத்தம், ஃபாத்திஹா, மெளலூது போன்ற ஷிர்க்கில் கொண்டு சேர்க்கும் அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழ்ந்து மடிந்திருந்தாலும் அவர்கள் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்வுடைய அதிகாரத்திலுள்ளது; அதில் நாம் தலையிடக் கூடாது என்பதை விளங்கி அவர்களை முஸ்லிம்களாகவே நினைத்து அவர்களுக்காக “துஆ” செய்வதே பிள்ளைகளிள் கடமையாகும்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தகப்பனார் ஆஜர், நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தகப்பனார் அப்துல்லாஹ் போன்றவர்களைப் பற்றி குர்ஆன், ஹதீஸில் காணப்படும் ஆதாரங்களை இந்த விஷயத்தில் ஆதாரமாக எடுக்க முடியாது. அவர்களது நிலை பற்றி அல்லாஹ் தெளிவாக அறிவித்து விட்டான். எனவே இங்கு ஐயத்திற்கு இடமே இல்லை.
ஆனால் அல்லாஹ்வையும் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஒப்புக் கொண்டு சாட்சி சொன்னதால் முஸ்லிம்கள் என்ற நிலையில் மரணித்தவர்கள் பற்றிய உண்மையான நிலைப் பற்றி நமக்குத் தெரியாது. அது பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடமிருந்து யாரும் பெறவில்லை. பெறவும் முடியாது. காரணம் யாருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு “நுபுவத்துடைய வஹி” வருவதில்லை. மறுமையில்தான் அவர்களது நிலைப்பற்றி அறியப் போகிறோம். எனவே அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் துஆ கேட்பதற்கு குர்ஆன், ஹதீஸில் தடை ஏதும் இல்லை.
கேள்வி-பதில் – by அந்நஜாத்