அதிகார அம்மாக்களும் அடிமை ஆண்களும்!
மகனுக்கு திருமணமே செய்யாமல் நாற்பது வயது தாண்டிய பிறகும் அவனை அப்படியே ஊருகாய் போட்டுவைத்த அம்மா. திருமணம் செய்து வைத்துவிட்டு, முதலிரவின் போது “நெஞ்சு வலிக்கிதே” என்று மயங்கி விழுந்த அம்மாக்கள்.
முதலிரவு தாண்டி, தேன் நிலவுக்கு மகனை தனியாக அனுப்ப முடியாது என்று தானும் உடன் போன தாய்கள். தப்பித்தவறி மகன் தனியாக மனைவியுடம் தேன் நிலவுக்கு போனாலும் நிமிடத்திற்கு ஒரு முறை ஃபோன் செய்து அவனை பற்றிக்கொண்டே இருந்த தாய்மார்கள்
இவற்றையும் தாண்டி, மகனுக்கும் மருமகளுக்கும் கலவுறவு ஏற்பட்டுவிட்டால் மகன் எங்கே சொக்கிப்போய் அதற்கு மேல் அம்மாவை கண்டுக்கொள்ள மாட்டானோ என்று மகனை இரவு வேளைகளில், ஏதாவது காரணம் சொல்லி தன் பக்கத்திலே வைத்துக்கொண்டு தாமதமாக தனி அறைக்கு அனுப்பும் தாய்மார்கள், மகனின் படுக்கை அறை வாசலிலேயே படுத்துக்கிடக்கும் தாய்மார்கள்.
மகன் மனைவியோடு தனியாக இருக்கிறானே, என்கிற இங்கீதம் கூட இல்லாமல் கதவை கூட தட்டாமல் நேரே உள்ளே வந்து நிற்கும் தாய்மார்கள். மனைவி உடனிருந்தால் தானே இந்த வம்பெல்லாம் என்று ஏதாவது காரணம் சொல்லி புது மணப்பெண்ணை பிறந்த வீட்டிற்கே ”பேக் அப்” செய்யும் தாய்கள்.
குழந்தை குட்டி என்று ஆகிவிட்டால் என்னை மொத்தமாக மறந்துவிடுவானோ என்று மிக சரியாக மருமகளின் மாதவிடாய் தேதிகளை கணக்கிட்டு முக்கியமான அந்த நாட்களில் மட்டும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டு வைக்கும் தாய்மார்கள். குழந்தை பிறந்துவிட்டாலும் தன் மகள் வழி பேரன் பேத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, மகன் வழி பேரன் பேத்திகளை வித்தியாசப் படுத்தி நடத்தும் தாய்கள். தன் வாழ்நாள் முழுக்க, மருமகளை மட்டம் தட்டுவதை மட்டுமே தன் முழு நேர பொழுது போக்காய் கொண்ட மாமியார்கள்ஸஸஸ.என்று பலவகை தாய்குலங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். கிட்ட தட்ட எல்லா வீடுகளில் இது மாதிரி ஏதாவது ஒரு சோகக்கதை இருக்க தான் செய்கிறது.
சரி, அம்மாவுக்கு தான் இன்செக்யூரிட்டி. இந்திய பாரம்பரியம் பெண்களுக்கு எந்த பவரையுமே தராததால் மகனை தன் வசப்படுத்தி, அவன் மூலமாய் தன் காரியங்களை சாதித்துக்கொள்கிறாள்ஸ..ஆனால் பையனுக்கு பகுதறிவு வேண்டாமோ? எங்கெல்லாம் அம்மாக்கள் பையனை வைத்து பரமபதம் ஆடுகிறார்களோ, அங்கெல்லாம் தோற்றூ போகிறவர்கள் சாட்சாத் அந்த பையன்களே தான்.
உதாரணத்திற்கு ஒமரை எடுத்துக்கொள்வோம். ரொம்பவும் ஆசைபட்டு தன் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக்கொண்டான் உமர். அவன் மனைவி பேரழகி, பணக்கார வீட்டு பெண், இவன் மேல் பைத்தியமாக கிடந்தவள். இவனுக்கும் அவளை ரொம்பவே பிடிக்கும். இருவரும் ரொம்பவே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் உமர் வேலைக்கு போன பிறகு அவன் அம்மா தினமும் அவனுக்கு ஃபோன் செய்து, “உன் பொண்டாட்டி என்னை மதிக்கிறதே இல்லை. மதியானமே சப்பாத்தி சுட்டு ஹாட் பேக்கில வைக்காதே, அவன் ராத்திரி வந்த பிறகு சுடா சுட்டுக்கலாம்னு சொன்னா, என் பேச்சை கேட்காம நான் மதியானம் கொஞ்ச கண் அசந்த நேரத்துல எல்லா சப்பாத்தியும் சுட்டு வெச்சிட்டா, இது தான் நீ கட்டுன பொண்டாட்டி என்னை மதிக்கிற லட்சணம்ஸ..” என்று அழுது வைக்க, ஒமருக்கு உடனே கோபம் பொசுக்கென்று தலைக்கேறும்.
கணவன் வீட்டிற்கு வரும் போது சப்பாத்தி சுட்டுக்கொண்டு நேரத்தை வீண்டிக்க வேண்டாமே, எல்லா வேலைகளையும் முதலிலேயே முடித்துக்கொண்டால் அவனுடன் அதிக நேரம் செலவிடலாமே என்பது நர்கீஸீன் திட்டம். அவள் மாலை அழகாக ஒப்பனை செய்துக்கொண்டு, அவனுக்காக ஆசையாய் காத்துக்கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் அவளை உதாசீனப்படுத்தினான் ஒமர். என்ன காரணம் என்று சொல்லாமல் அவன் நெற்றிக்கண்ணை திறந்து, “அப்படி என்ன சோம்பேறித்தனம்… என்ன வளர்த்து வெச்சிருக்காங்க உன் வீட்டுல..” என்று சரமாறியாக அர்ச்சனை செய்ய, இதனால் ஏற்பட்ட மனகசப்பினால் அன்றிரவு இருவரும் கட்டிலின் கோடிகளில் படித்துக்கொண்டு இருக்க, இப்படியாக சப்பாத்தி மாதிரி சின்ன விஷயங்கள் அவர்கள் திருமண வாழ்க்கையை சலிப்பிற்குள்ளாக்கின.
இதற்கிடையில் உமருக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட, நர்கீஸ், இனியாவது அவன் தன்னை புரிந்துக்கொண்டு பிரியமாக இருக்க மாட்டானா என்று ஆசைபட, உமர் தொடர்ந்து தன் அம்மா, அக்கா, சித்தி, மாமி என்று எல்லோர் பேச்சையும் கேட்டுக்கொண்டு மனைவியை சதா குறை சொல்லிக்கொண்டே இருக்க, நொந்து போனாள் மனைவி. ஒரு சண்டையில் இவன் தன் வசமிழந்து அவளை போட்டு அடித்தும் விட, அவள் தகப்பானார் விஷயம் கேள்வி பட்டு ஓடிவந்தார். “இந்த காட்டுமிராண்டியோடு என் மகளை இனி நான் விடவே மாட்டேன்”, என்று கூடவே அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
“அவளா தானே போனா, அவங்க அப்பன் பெரிய பணக்காரன்ற திமிர்ல தானே போனா, அவளா திரும்ப வரட்டும், நீ அவளுக்கு ஃபோன் கூட பண்ணாதேடா” என்று தாய்குலம் ஓதி வைக்க, உமரும் அடிபிரளாமல் அப்படியே இருந்தான். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகி, கடைசியில் இரண்டு வருடங்கள் முடிந்தும் விட்டன.
“வீட்டுல ஒரு பூனை வளர்த்தா கூட அது சாப்பிட்டுச்சா, நல்லா இருக்கானு கவலை படுவோம். கட்டுன பொண்டாட்டியும், பெத்த பிள்ளையும் எப்படி இருக்காங்கனு ஒரு ஃபோன் கூட பண்ணிக்கேட்காத இவனெல்லாம் ஒரு மனுஷனா, அவனை மறந்திடு” என்று நர்கீஸுக்கு எல்லோரும் அறிவுறை கூறினார்கள். அவள் படித்த பெண், அதனால் “சும்மா வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு கவலை படுவதற்கு ஏதாவது வேலைக்காவது போகட்டுமே”, என்று அப்பா அவளுக்கு ஒர் பிஸ்னஸ் ஏற்படுத்தித்தர, பல பேரை தினமும் சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றாள் நர்கீஸ். அப்படி அவள் சந்தித்த நபர்களில், ரியாஸ் என்கிறவனுக்கு அவள் மேல் ஆசை, காதல், இரக்கம் எல்லாம் ஏற்பட்டுவிட, அவன் அவளை திருமணம் செய்துக்கொள்ள விரும்பி, அவள் பெற்றோரிடம் விண்ணப்பிக்க, ஆரம்பத்தில் ஆட்சேபித்த நர்கீஸும் போக போக இணங்க ஆரம்பிக்க, இருவருக்கும் திருமணம் முடிவானது.
உறவினர் மூலமாய் தான் உமருக்கு தெரியவந்தது. நர்கீஸ் அவனை விவாகரத்து செய்துவிட்டு, ரியாஸை திருமணம் செய்துக்கொள்ள போகிறாள் என்று. அவள் தன்னை விட்டு நிரந்திரமாக போயே போய்விட போகிறாள் என்றதும் தான் அவனுக்கு தன் இழப்பின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. நர்கீஸோடு அவன் சந்தோஷமாய் இருந்த நாட்கள் நினைவிற்கு வர, தன் மனைவியை இன்னொருத்தன் தொட போகிறானே என்கிற தவிப்பும், என் மகளை அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயமுமே அவன் தூக்கத்தை கெடுத்துவிட்டன.
வீட்டில் இது பற்றி பேச்சு தலை தூக்கியபோது, “பொம்பளை அவளுக்கே இன்னொரு புருஷன் கிடைக்கும் போது, என் பையனுக்கு நான் இன்னொரு நிகாஹ் பண்ணி வெக்க மாட்டேனா?” என்று ஆரம்பித்தாள் அவன் அம்மா. “ஆமா முதல் பொண்டாட்டியோட ரொம்ப வாழ விட்டுட்டே, இன்னொரு பொண்ணு வந்து இந்த வீட்டுல கஷ்டப்படணுமா?” என்று அப்போது மட்டும் திருவாய் மலர்ந்தார் உமரின் அப்பா. “நான் ஒருத்தன் உன் கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறது போதாதுன்னு, இப்ப என் பையன் வாழ்க்கையையும் கெடுத்துட்டியே!” அப்போது தான் உமருக்கு சட்டென பொறி தட்டியது. அது வரை அம்மாவை மீறி எதுவும் சிந்தித்தும் பார்த்திராத உமருக்கு அப்போது தான் அம்மா என்கிற உறவை மறந்து ஒரு தனி மனுஷியாக அவளை எடை போட முடிந்தது.
இவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாருடனும் ஒத்து போகாமல் எப்போதுமே இன்செக்யூராய் அம்மா இருந்தது லேசு பாசாய் அப்போது தான் அவன் நினைவிற்கு வந்தது. தங்கை தன் கணவனுடன் தங்க வந்தால், தன் படுக்கை அறையை அம்மா காலி செய்து தந்ததும், இவன் தன் மாமியார் வீட்டிற்கு போனால் மட்டும், “அங்கெல்லாம் போய் ராத்தங்காதேடா, அப்புறம் நம்மல மதிக்க மாட்டாங்க” என்று தடுத்ததும், இன்னும் இது போன்ற பல சம்பவங்களும் நினைவிற்கு வந்தன…..
அதற்குள் நர்கீஸ் ஜமாத்தில் சொல்லி விவாகரத்து வாங்கி ரியாஸை நிக்ஹா செய்துக்கொண்டாள். அடுத்த ஆண்டு அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் அதற்கு அடுத்த ஆண்டு இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தன. அப்போதும் உமருக்கு இன்னொரு நிக்ஹா செய்து முடிக்கவில்லை அவன் அம்மா. தன் அறையின் தனிமையில் தன் இழப்பை நினைத்து ஒமர் எவ்வளவோ வருந்தினான். ஆனால் அவன் அம்மா, “அந்த ராட்ஷசிகிட்டேந்து என் பையனை காப்பாத்தீட்டேன்” என்று எல்லோரிடமும் பெருமை பட்டுக்கொண்டாள்.
ஆக, எப்போதெல்லாம் ஆண்கள் தங்கள் அம்மாக்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் மரபணு அபிவிருத்தியில் தோற்றுத்தான் போகிறார்கள்.
நன்றி: ஆனந்த விகடன்