ஐயம்: ஹரம் ஷரீஃபில் நபி வழிக்கு மாற்றமாக 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்? 8+3 (or) 12+3 என்று இங்கு தொழும் தொழுகைகள் தஹஜ்ஜுதைக் குறிக்குமா? அல்லது நோன்புகாலச் சிறப்பு தொழுகை என்றாகுமா?
தெளிவு: ரமழான் இரவுகளில் நாம் சிறப்பித்துத் தொழும் “தராவீஹ்” என்ற தொழுகையை ஹதீஸ்களில் நாம் எங்கும் காண முடியவில்லை. ஹதீஸ் நூல்களில் “”தராவீஹ்” என்ற வார்த்தையே இத்தொழுகையைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது யாவரும் தெரிந்த விஷயமாகும். ஆனால் ரமழான் மாதம் மட்டுமின்றி எல்லா மாதங்களிலும் இரவுத் தொழுகை தொழப்பட்டடுள்ளதற்கான ஆதாரங்களை ஹதீஸ்களில் பரவலாக காண முடிகிறது.
ஸலாத்துல்லைல் = இரவுத் தொழுகை, கியாமுல்லைல் = இரவு நின்று வணங்கள், தஹஜ்ஜத் என்ற தொழுகை என்ற மூன்று பெயர்களில் இத்தொழுகைப் பற்றி விபரங்களை காண முடிகிறது.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: இரவின் பகுதியில் உமக்கு உபரி(நபிலான) யான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் சிறப்பால்) உம்முடைய இறைவன் “மகாமம் மஹ்மூதா” என்னும் (சிறப்பு மிக்க) இடத்தில் உம்மை எழுப்பக் கூடும். (அல்குர்ஆன் 17:79)
மீண்டும் ஒரு முறை இவ்வசனத்தைக் கவன மாக படிக்கவும். அல்லாஹ் இரவின் பகுதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழும்படி ஆணையிடும் தஹஜ்ஜத் தொழுகை-நபிலா(உபரியா)னது என்பதை அறியலாம். இதனை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவ்வென தினசரி செய்து வந்ததால் அது நமக்கு சுன்னத் -நபி வழி-ஆகியுள்ளது. இவ்விதம் தினசரி இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதது 8+3=11 ரகா அத்துக்கள் தான் என்பதை நாம் பல்வேறு ஆதாரங்கள் மூலம் இது வரை பல தடவைகள் விளக்கியுள்ளோம்.
சிறப்புமிக்க ரமழான் மாதத்தின் இரவுகளை வணக்கங்களில் ஈடுபடுத்த இதே தொழுகையை நீட்டி, தங்களது கால்கள் வீங்குமளவு நின்று பெரும் சூராக்களை ஓதி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுள்ளதற்கு ஆதாரங்களையும் ஹதீஸ் நூல்களில் காண முடிகிறது. அதுவும் இரவின் பிற்பகுதியில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுள்ளதையே காண முடிகிறது. இன்று நடை முறையிலுள்ளது போல வெகு வேகமாக- ஓதுவதையோ என்னவென விளங்கிக் கொள்ள முடியாத வேகத்தில்-ஓதுவதையோ,அதுவும் இரவின் முற்பகுதியில் நடந்தையோ நபி வழிகளில் காண முடியவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபரியான (நபிலான) இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டாக தொழும்படி ஆணையிட்டிருப்பதையும் எல்லா ஹதீஸ் நூல்களிலும் காணலாம். இது ஒரு முதவாதிரா-பல நபித் தோழர்களால் அறிவிக்கப்பட்ட-நபி மொழியாகும். இதன்படி நாம் இரவில் உபரியான- நபிலான-கவனிக்க: சுன்னத்தானதல்ல நபிலான தொழுகைகளை இரண்டிரண்டாக தொழலாம்.
நபிலான தொழுகைக்கு ஒரு வரையறை கிடையாது. அவரவர் விருப்பப்படி எத்தனை ரகாஅத்துக்கள் வேண்டுமானாலும் இரண்டிரண்டாக தொழலாம். இதனை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது. ஆனால் சுன்னத்தானதாக தொழ நாடினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்தவை மட்டுமே சுன்னதாகும் என்பதை அறிந்தால் எங்கும் தகராறு வராது.
மக்கா ஹரம் ஷரீபில் ரமழானின் இரவுகளில் 20 ரகாஅத்துக்கள் மட்டுமல்ல இரவு முழுவதும் இமாம்கள் மாறி மாறி இரண்டிரண்டாக இரவுத் தொழுகை நடத்தப்படுகிறது. விரும்புகிறவர்கள் விரும்புகிறவரை தொழுதுவிட்டு சடைவு ஏற்பட்டால் எழுந்து போய்விடுவதையும் அங்கு பார்க்கலாம்.
இமாமும் மக்களும் அங்கு மாறிக் கொண்டேயிருப்பார்கள். இது நாமும் அறிந்ததே! தயவு செய்து மக்கா ஹரம் ஷரீபின் இமாம்களை விசாரியுங்கள். அவர்கள் நபில் தொழுவதாக, தொழ வைப்பதாகவுமே கூறுவார்கள். அதனை நாம் எப்படி மறுக்க முடியும்? நபி மொழிக்கு தவறானது என எப்படி கூற முடியும்?
மாறாக அவர்கள் சுன்னத்தான தொழுகை தொழு வைப்பதாகக் கூறினால் அதனை நாம் ஏற்கத் தேவையில்லை. அதற்கான முடிவை அல்லாஹுவிடம் விட்டு விட்டு சுன்னத்தான தொழுகை எனில் 8+3 தொழுங்கள். நபிலான தொழுகை எனில் தாங்கள் நாடியளவு, முடிந்த அளவு இரண்டிரண்டாக தொழுங்கள். அல்லாஹ் உங்களுக்கும், நமக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.
-அந்நஜாத்