கட்டிடங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
ஐயம்: செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தை மேலும், மேலும் பெருக்க, கட்டிடங்களாக வாங்கி வாடகைக்கு விடுகின்றனர்.
அப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமதிக்கு கட்டிடங்கள் இருந்தாலும், அவற்றில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையாகப் பெற்றாலும், வருடம் முடிவதற்குள் வாடகையாகப் பெற்ற பணத்திற்கும், புதிய கட்டிடங்களை வாங்கி விடுகின்றனர்.
ஜகாத் பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டாலும் சொத்துக்கள் இருக்கின்றனவே அல்லாமல், ஜகாத் கொடுக்க பணமாக இல்லை என்று தங்களின் செயலை நியாயப்படுத்துகின்றனர்.
குர்ஆன், ஹதீஸ்படி இது சரியா?
தெளிவு: நீண்ட காலமாக சொத்துக்களின் பெருமதிக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. அவற்றிலிருந்து பெறப்படும் வாடகைக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதும் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே வேரூன்றி இருக்கிறது; விவசாயம் செய்யும் நிலத்தின் கிரயத்திற்கு ஜகாத் கொடுப்பதில்லை; அதிலிருந்து விளையும் பொருட்களுக்கு ஜகாத் கொடுக்கும் ஆதாரத்தை வைத்து இவ்வாறு யூகம் (“கியாஸ்”) செய்துள்ளனர். ஆழ்ந்து சிந்திக்கும் போது இந்த யூகம் தவறு என்பது புரிய வருகிறது.
விவசாயத்தின் மூலம் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விவசாயத்தின் அசல் நோக்கம் உணவு உற்பத்தியாக இருக்கிறது; அப்படியிருந்தும் அந்த உற்பத்தி நீர் இறைக்காமல் சுயமாக விளைவதாக இருந்தால் பத்தில் ஒன்றும் நீர் இறைத்து விளைவதாக இருந்தால் இருபதில் ஒன்றும் அறுவடை செய்தவுடன் கொடுத்து விட வேண்டும். வருடத்தில் மூன்று போகங்கள் விளைந்தால் மூன்று போகங்களுக்கும் கொடுத்துவிட வேண்டும். இங்கு பணங்காசைப் போல் ஒரு வருடம் பூர்த்தியானால்தான் கொடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை. விளைந்ததற்கு விளைந்து அறுபடை செய்தவுடன் கொடுத்து விட வேண்டும்.
எனவே விவசாய வகைக்குரிய ஜகாத் ஆதாரத்திலிருந்து வாடகைக் கட்டிடங்களுக்குரிய ஜகாத்தை யூகம் (கியாஸ்) செய்தவர்கள் முறைப்படி செய்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஒவ்வொரு மாத வாடகையிலிருந்தும் பத்திலொரு பங்கை ஜகாத்தாக கணக்கிட்டு கொடுத்து விட சட்டம் இயற்றி இருக்க வேண்டும். காரணம் தானே விளைவது போல் எவ்வித உழைப்புமின்றித்தான் வாடகை வருவாய் வருகிறது. இவ்வாறு சட்டம் வகுத்திருந்தாலாவது, வருடம் முடிவதற்குள் வாடகைப் பணத்திற்கும் கட்டிடம் வாங்கி சொத்து சேர்த்துக் கொண்டு “ஜகாத்’ கொடுக்காமல் ஏமாற்றும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
ஆனால் உண்மையில் சொந்த உபயோகத்திலுள்ள கட்டிடங்கள், வாகனங்கள் இவற்றிற்குத்தான் “ஜகாத்’ கடமை இல்லையே தவிர வருமானத்தை நோக்கமாகக் கொண்டு முதலீடு செய்யும் ஒவ்வொரு முதலீட்டுக்கும் அந்த முதலீட்டின் நாற்பதில் ஒரு பங்கு “ஜகாத்” கடமை என்பதே சரியாகும். இது வியாபார நோக்கத்துடன் கொள்முதல் செய்து வைக்கும் பொருட்களுக்கும் “”ஜகாத்” கடமை என்ற அடிப்படையிலாகும்.
ஒரு வியாபாரி வருட இறுதியில் தன்னிடமுள்ள பொருட்களின் பெறுமதியில் கடன் கழித்த பின் எஞ்சிய முதலீடு + செலவு போக ஈட்டி வைத்துள்ள ஆதாயம் இரண்டிற்கும் “”ஜகாத்”கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்.
இதே போல் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் ஒருவர் வருட இறுதியில் தன்னிடமுள்ள வாகனங்களின் அன்றைய பெறுமதி + அவர் ஈட்டிய வருமானத்தில் செலவு போக எஞ்சியிருக்கும் தொகை இரண்டிற்கும் “ஜகாத்’ கொடுக்க கடமைப்பட்டுள்ளார். அவர் ஈட்டிய வருமானத்தில் எஞ்சியிருப்பதைக் கொண்டு புதிதாக ஒரு வாகனத்தை வாங்கிக் கொண்டு வாகனங்களுக்குத்தான் “ஜகாத்’ கடமை இல்லையே என்று சொல்லி ஜகாத்திலிருந்து தப்ப முடியாது. சொந்த உபயோகத்திற்கு வைத்திருக்கும் வாகனத்திற்கும், வருமானத்தை நோக்கமாகக் கொண்டு வாங்கிவிடும் வாகனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
இதே போல கட்டிடங்கள் விஷயத்திலும் சொந்த உபயோகத்திற்குரிய கட்டிடங்குக்குத்தான் ஜகாத்திலிருந்து விதி விலக்குண்டு. மற்றபடி வாடகை வருமானத்தை எதிர்பார்த்தோ, தொழில்கள் மூலம் வருமானத்தை எதிர்பார்த்தோ கட்டப்படும் கட்டிடங்கள் முதலீட்டுவகையிலேயே சேர்க்கப்பட வேண்டும். முதலீடாககக் கருதி அவற்றின் பெறுமதி+அவை மூலம் பெறப்படும் ஆதாயங்களில் செலவு போக எஞ்சி இருக்கும் பணம் இவற்றை வருட இறுதியில் கணக்கிட்டு “ஜகாத்’ கொடுத்து விடுவதே முறையாகும், சரியாகும். சொந்த உபயோகத்திலுள்ள பெண்கள் அணியும் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற நகைகளுக்கே “ஜகாத்’ உண்டு என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல் இருக்கிறது.
இந்த நிலையில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் நிலத்திலும், கட்டிடங்களிலும் போடப்படும் பணத்திற்கு “ஜகாத்’எப்படி கடமை இல்லாமலிக்கும் என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து விளங்க வேண்டும். நிலங்களை வாங்கி விற்கும் தொழில் செய்பவர்கள் (Real Estate)அவர்கள் வாங்கி விற்கும் கட்டிடங்கள் நிலங்கள் (அவை விவசாயத்திற்குரிய நிலங்களாக இருந்தாலும் சரியே) இவற்றில் முதலீடு செய்துள்ளதாக கணக்கில் கொண்டு, அவர்கள் செய்துள்ள முதலீடுகள் + அவற்றிலிருந்து பெறப்பட்ட ஆதாயங்களிலிருந்து செலவு போக எஞ்சி இருப்பவற்றை வருட இறுதியில் கணக்குப் பார்த்து நாற்பதில் ஒன்றை ஜகாத்தாக கணக்கிட்டுக் கொடுத்து விடுவதே முறையாகும்.
சொந்த உபயோகங்களுக்காக உள்ள கட்டிடங்கள், வாகனங்கள் இவற்றிற்கு “ஜகாத்’ கடமை இல்லை என்ற இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையை வியாபார நோக்கத்துடன் ஆதாயத்தைக் கருதி வாங்கப்படும் கட்டிடங்களுக்கும், வாகனங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இது இவ்வுலகில் அவர்களின் வருமானத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தித் தருவதோடு மறுமையிலும் அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து பாதுகாப்பபைத் தரும்.
source: அந்நஜாத்