ஒரு முஸ்லிம் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பல இடங்களில் இஸ்லாத்திற்கே தொடர்பில்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் நாடகம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
Rasmin M.I.Sc
புனித ரமழான் மாதம் என்பது முஸ்லீம்களின் மிக முக்கியமான காலமாகும். உலகுக்கான வழிகாட்டி திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்.
காலை மூன்று மணிக்கே எழுந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்.
ஃபஜ்ருத் தொழுகைக்கு பள்ளியை நிறைக்கும் மக்கள் கூட்டம்.
லுஹர் தொழுகைக்கு தவறாமல் வருபவர்கள்.
அசர் தொழுகையுடன் சேர்த்து நோன்புக் கஞ்சி வாங்க வருபவர்கள்.
நோன்பைத் திறக்க வேண்டும், சூரியன் எப்போது மறையும் என வைத்த கண் வாங்காமல் காத்திருக்கும் உள்ளங்கள்.
தொழுகை தொழப் போக வேண்டும் அனைத்து வேலைகளையும் இப்போதே முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடும் தாய்மார்கள். என்று அனைவரும் ஆசுவாசமாக போற்றிப் புகழும் மாதம் தான் இந்த ரமழான்.
இஸ்லாமிய ஆன்மீகக் கருத்துக்கள் எப்போதும் பேசப்படும் இம்மாதத்தில் தற்போது அரசியலும் கலக்கப்படுவது ஓர் கவலையான உண்மையாகும்.
அரசியல்வாதிகளும், இஃப்தாரும்
அதிகாலையில் இருந்து மாலை வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் மக்கள் சூரியன் மறையும் நேரத்தில் நோன்பைத் திறப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு அங்கென்ன வேலை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!
ஆம் எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற பாணியில் கொடிகட்டித் திரியும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தங்கள் பச்சோந்தித் தனத்தை காட்டிக் கொள்ளக் கிடைத்த பெரும் சந்தர்ப்பமாக இந்த ரமழான் மாதத்தை நினைக்கிறார்கள்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோன்புக் கஞ்சி அரசியல் மிகவும் பிரபலமானதாகும்.
அம்மா வருகிறார், ஐயா வருகிறார், தமிழினக் காவலர் வருகிறார், முஸ்லீம்களின் இதயம் வருகிறார் என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய “கட்டவுட்களை” நாடு முழுவதும் இம்மாதத்தில் காணக்கிடைக்கும்.
பள்ளிவாயல்களில் நோன்பு திறக்கும் நிகழ்வு என்று கூறி அரசியல் வாதிகள் வரவேற்கப்படுவார்கள்.
தொப்பி அணிந்து, சில நேரங்களில் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு, வெள்ளையும் சொல்லையுமாக வரும் அரசியல் பிரபலங்கள். ஆன்மீக அரங்கில் தங்கள் அரசியல் தர்பாருக்கான இடத்தைப் பிடிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
ஒரு முஸ்லிம் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் பல இடங்களில் இஸ்லாத்திற்கே தொடர்பில்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் நாடகம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
நோன்பு திறத்தல் என்ற உண்ணதமான ஒரு நிகழ்வையும் அரசியல் சாக்கடையாக்க முனையும் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பள்ளிவாயல் நிர்வாகிகளே! உங்களுக்காக!
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது ஒரு புனிதப் பணி. நோன்பு திறப்பதற்கு உதவி செய்யும் பொது மக்களின் பணத்தை வீண் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்ததாதீர்கள்.
அரசியலை அரசியலுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளுங்கள், ஆன்மீக செயல்பாட்டில் நுழைத்து, புனித செயல்பாடுகளின் புனித தன்மையை கெடுக்காதீர்கள்.
அரசியல் வாதிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்து, ஆன்மீகத்தைக் கெடுக்கும் அசிங்கமான செயல்பாட்டைத் தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
source: http://rasminmisc.blogspot.com/