பெண்ணின் குணாதிசயங்கள் பற்றிய பொய்மைகளும் உண்மைகளும்
o மனித குணாதிசயங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன?
o மனித இயல்புகளுக்கும் குணாதிசயங்களுக்கும் பால் வேறுபாடுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
o ஆண் பெண் குணாதிசய வேறுபாடுகளும் அவற்றின் தாற்பரியங்களும்
o மானிட வரலாறு கூறுவதென்ன?
o இன்றைய நிதர்சனம் என்ன?
o சமூகக் கூற்றுக்களும் அவற்றின் தாக்கங்களும்.
மானிடர்க்கு எலும்பும் தசையும் எவ்வாறு தோற்றத்தைக் கொடுக்கின்றவோ அதுபோன்று குணாதிசயங்களும் அவரது ஆளுமைக்கும் நடத்தைக்கும் உருக்கொடுக்கும் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. குணாதிசயங்கள் எல்லோர்க்கும் ஒரேமாதிரியனதாக அமைவதில்லை. மனிதர்க்கு மனிதர் குணாதிசயங்கள் வேறுபாடுமாயினும் ஒரு பரந்த மட்டத்தில் நோக்கும்போது பால் அடிப்படையில், அதாவது,
ஆண்களுக்கென ஒருவித குணாதிசயங்களையும் பெண்களுக்கென வேறுவித குணாதிசயங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன?
ஆணுக்கு ஒருவித குணாதிசயங்களும் ஏற்படக் காரணம் என்ன?
இவை இயற்கையாக ஏற்பட்டவையா? அல்லது கற்பிக்கப்பட்டவையா?
இப்பாகுபாட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன?
என்பன எம்மை உறுத்திக்கொண்டிருக்கின்ற ஒருசில வினாக்களாகும். இவற்றிற்கு விடைகாண முயலுவது என்பது மானிட சமூக வளர்ச்சியையும் வரலாற்றையும் விஞ்ஞான பூர்வமாகவும் சித்தாந்த ரீதியாகவும் அலசி ஆராய்வதை மட்டுமன்றி இவற்றைத் தற்கால நிதர்சனங்களுடன் உரைத்துப்பார்க்க வேண்டிய ஒரு தேவையையும் முன் வைக்கின்றது.
மனித குணாதிசயங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன?
மனித இயல்புகளும் குணாதிசயங்களும் மனித செயற்பாடுகளுக்கு தோற்றத்தைக் கொடுப்பனவாயினும் இவ்விரண்டினதும் மூலங்களும் ஒன்றல்ல. மனிதர்க்கு இயற்கையாகவே சில இயல்புகள் காணப்படுகின்றன. சமூகவியலாளர் இவற்றை “இயல்பூக்கள்” என்பர். இவை அவரவர் உடற்கூற்றுத் தன்மையைப் பொறுத்தும், இவ்வுடற்கூறுகளுக்கும் சூழலுக்கும் இடையே காலமும் காலமாகும ஏற்பட்டு வருகின்ற தாக்கங்களின் விளைவாகவும் ஏற்படக்கூடியவை. ஆனால் மனித குணாதிசயங்கள் என்பவை பெற்றுக் கொள்ளப்படுபவை. அல்லது கற்றுக் கொள்ளப்படுபவை. குறிப்பாக மனிதன் சமூகமயமாக்கப்படும் போது பெற்றுக் கொள்ளுகின்ற விழுமியங்களே குணாதிசயங்களாக உருப்பெறுகின்றன. ஒருசில குணாதிசயங்கள் பரம்பரை ரீதியாகவும் கடத்தப்படுவதுண்டு.
இங்கு இயல்புகளின் தொடர்ச்சியினை பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு என்கின்றோம். குணாதிசயங்களின் தொடர்ச்சியினை பரம்பரைக் கூறுகளின் தாக்கம் என்கின்றோம். எனவே இயல்புகளும் குணாதிசயங்களும் ஒன்று போலத் தோற்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. உதாரணமாகக் கூறின் பசி என்பது இயல்பூக்கம் அச்சம் என்பது குணம்.
மனித இயல்புகளுக்கும் குணாதிசயங்களுக்கும் பால் வேறுபாடுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
பொதுவாக மனித இயல்புகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆண், பெண் இருபாலாருக்கும் ஒன்றாகவே அமையினும் ஒருசில விடயங்களைப் பொறுத்தவரையில் வேறுபட்ட இயல்புகளும் உண்டு. மனித இயல்புகளின் மூலங்கள் அவரவர் உடற்கூற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில் ஆண் பெண் உடற்கூற்றுத் தன்மையில் உள்ள வேறுபாடுகள் அவர்களில் மாறுபட்ட இயல்புகளை உருவாக்கவும் காரணமாக அமைந்து விடுகின்றன. அதாவது பெண் தன் உடற்கூற்றில் கருப்பையைக் கொண்டவளாக இருப்பதனால்தான் கருத்தரிக்கும் இயல்புடையவளாக இருக்கின்றாள். அதுபோல ஆணின் உடற்கூற்றிற்கு ஏற்ப அவனது இயல்புகளும் அமைகின்றன. எனவே ஆண்பெண் இயல்புகள் என்ற வேறுபாடு இயற்கையாகவே நிர்ணயிக்கப்படுவதைக் காண்கின்றோம்.
குணாதிசயங்களை எடுத்து நோக்குவோமாயின், ஆணுக்குரிய குணாதிசயங்கள் என்றும் பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் என்றும் பிரித்தறியப்படுகின்றன. ஆயினும் இப்பாகுபாட்டிற்கு இயற்கை எந்த வகையில் காரணமாக இருக்கின்றது என்ற வினா எழும்புகின்றது. இதற்கு சில நடைமுறை அனுபவங்களே பதில் கூறும். எமது சமூகத்தில், ஆணாகப் பிறந்த ஒருவரை பெண்ணிற்கென விதிக்கப்பட்டுள்ள குணாதிசயங்களைக் கொண்டிருப்பானேயானால் அவன் பெண்ணைப்போல் இருக்கின்றான் எனவும் அதுபோல் பெண்ணாகப் பிறந்த ஒருத்தி ஆணுக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருந்தால் ஆணைப் போன்றவள் என்றும் கூறப்படுவது யாவரும் அறிந்ததே. இவ்வுருவாக்கம் அடிப்படையில் சமூகமயமாக்கல் என்ற செயற்பாட்டின் ஊடாக ஏற்படுத்தப்படுகின்றது.
ஒரு சமூகமயமாக்கல் என்ற செயற்பாட்டின் ஊடாக ஏற்படுத்தப்படுகின்றது. ஒரு சமூகத்தில் மூத்த தலைமுறையினர் தமது இளைய தலைமுறையினரைச் சமூகத்தின் ஒரு அங்கமாக பழக்கப்படுத்துதலையே இச் செயல்முறை குறிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்தது முதலே இச் செயற்பாடு தொடங்கி விடுகின்றது. அதாவது குழந்தைகளுக்கு எத்தகைய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கின்றோமோ எத்தகைய விழுமியங்களைக் கற்பிக்கின்றோமோ அதனடியொற்றியே அவர்களது குணங்கள், மனோபாவங்கள், செயல்கள் என்பவை அமைந்து விடுகின்றன. இதன் வழியே அச்சமூகத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள், நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் முதலிய சகல விடயங்களும் இளைய தலைமுறையினர்க்கு ஊட்டப்படுகின்றன.
மேலும் இவை திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படும்போதும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும்போதும் முதலும் முடிவும் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவிற்கு மனித உணர்வுகளுடன் ஒன்றியதாகவும் சமூக கலாச்சாரத்தை பிரதிபலிப்பனவாகவும் ஆகிவிடுகின்றன.
ஆண் பெண் குணாதிசய வேறுபாடுகளும் அவற்றின் தாற்பரியங்களும்
மனிதர்கள் குணாதிசயங்களைக் கொண்டிருத்தல் தவிர்க்க முடியாத விடயம் என்பதிலும் இத்தகைய குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் சமூகத்திற்குக் கடப்பாடு இருக்கின்றது என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கமுடியாது. மேலும் ஆண் பெண் இருபாலார் மத்தியிலும் இருக்கக்கூடிய இயல்புகளின் மாறுபட்ட தன்மை அவரவர் குணாதிசயங்களிலும் பிரதிபலிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதிலும் உடன்பாடு சாத்தியமானதே. ஆனால் நாம் இன்று காணக்கூடிய பால் அடிப்படையிலான குணாதிசய வேறுபாடுகளின் பின்னணியை மேற்குறிப்பிட்ட இயல்புகளின் மாறுபட்ட தன்மைக்குள் மட்டும் எல்லைப்படுத்தி விட முடிவதில்லை.
மானிட வரலாறு கூறுவதென்ன?
மனித வரலாற்றைச் சற்றுப்புரட்டிப் பார்ப்போமாயின் ஆதிமனிதனுக்கு குழுவாழ்க்கை என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தது. இயற்கையின் சீற்றங்களில் இருந்தும், மிருகங்களின் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கொள்ளவும் தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் இக்குழு வாழ்க்கையே அடிப்படையாக இருந்தது. சுருங்கக்கூறின் அன்று தனிமனிதன் என்ற நிலைப்பாட்டிற்கே இடமில்லாதிருந்தது எனலாம்.
மனிதரது வாழ்க்கையானது அச்சம் மிகுந்ததாக எங்கும் எக்கணமும் உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் மிக்கதாகக் காணப்பட்டது. எனவே மனிதனது வாழ்விற்குரிய இயல்பூக்கமானது குழுவாழ்க்கையில் இரண்டறக் கலந்து போயிருந்தது. குழுவில் அங்கத்தவர் அழிவு மலிந்து போயிருந்ததால் புதிய உயிர்களின் வரவு மிகவும் வேண்டிதாயிற்று. அதாவது மனித அழிவைக் கட்டுப்படுத்திக் கொள்ள ஒருவித உத்தரவாதமும் இல்லாதிருந்ததால் புதிய உயிர்களின் வருகையையும், வளர்ச்சியையும் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் மிகுந்திருந்த காலம் அது.
ஆதி மனிதக் குழுவில் பெண் புதிய உயிர்களை உலகிற்குக் கொணரும் இயல்புடையவளாக இருந்தபடியால் அவளைப் பாதுகாத்து, போஷித்து வைத்திருக்க வேண்டிய தேவை. குழுக்களின் நீடிப்பிற்கு அத்தியாவசியமானது வியப்பிற்குரியதல்ல. மேலும் குழுப்புணர்ச்சி முறை மட்டுமே காணப்பட்ட நிலையில் குழு அங்கத்தவரிடையே ஆண் பெண் என்ற பால் வேறுபாட்டிற்கு அப்பால் தாய்பிள்ளைகள் என்ற உறவும் மட்டுமே அறியப்பட்டிருந்தது. எனவே குழுக்கள் பெண்ணை மையமாகக் கொண்டு உருப் பெறவும், தம்மை அடையாளம் கண்டு கொள்ளவும் செய்தன.
குழுவின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பது முழுக் குழு அங்கத்தவர்களது கடமையாக இருந்தபோதும் ஆண் பெண் இயல்புகளுக்கமைய அவரது கடமைகள் பகுக்கப்பட்டன. பெண்களின் முதல்நிலைக் கடமை குழந்தைகளைப் பெற்று வளர்த்துக் குழுவிற்கு அளிப்பதாக அமைய. ஆண்களுக்கு அது, உணவு தேடித் தம் குழுவினரைப் போஷிப்பதாய் அமைந்தது. ஒப்பீட்டு ரீதியில் நோக்கின், பெண்கள் கூடிய பாதுகாப்பான இடங்களிலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் தமது நடமாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டியவர்களாகவும் தமது கவனத்தைப் பெரும்பாலும் காய்கனி சேகரித்தல், பயிர்களை வளர்த்தல், நோய்கள் பற்றி அறிதல், அவற்றிற்கு வைத்தியம் பார்த்தல் போன்ற விடயங்களில் செலுத்துபவர்களாக விளங்கினர். ஆண்களோ இதற்குமாறாக பல இடங்களில் அலைந்து திரிந்து ஆபத்தான நிலைமைகளை எதிர்கொண்டு வேட்டையாட வேண்டியிருந்தது. அதனால் இவர்களது உடல் வலிமை பெருகியது மட்டுமன்றி இவர்களது கவனம் ஆபத்தினைச் சமாளிக்க புதிய உபாயங்களைக் கண்டுபிடிப்பதிலும், மிருகங்களை அழிப்பதற்குத் தந்திரங்களையும் ஆயுதங்களையும் கண்டுபிடிப்பதிலும் சென்றது.
இவ்வளர்ச்சி ஆதிமனிதரைக் காட்டுமிராண்டிகளாக இயற்கைக்கும் மிருகங்களுக்கும் பயந்திருந்த நிலையில் இருந்து மாற்றி தமக்குச் சவலாக இருந்தவற்றை எதிர்க்கவும், முடிந்தால் வாரப்படுத்திக் கொள்ளவும் கூடிய ஒரு நிலைக்கு இட்டுச் சென்றது. இது மனித உயிர்களின் அழிவைக் கட்டுப்படுத்தியதுடன் மட்டுமன்றி, தனிமனிதன் நீண்டகாலம் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூற்றினையும் நீடித்தது. இதற்குப் பின், மனித வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையைக் காண்கின்றோம். அதாவது மனிதன் தனது குழுவாழ்க்கையின் தொடர்ச்சிக்காக, இதுவரைகாலம் இருந்தது போன்று புதியவர்களின் வருகையில் மட்டும் தங்கியிருக்காது தனது எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமும் இதனைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் பெறுவதைக் காண்கின்றோம்.
இதுவரை ஆணும் பெண்ணும் குழுவின் அங்கத்தவர்களாக குழுவின் தேவைகளை ஒருவகையில் பூர்த்தி செய்ய கடமைப்பட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மத்தியில் ஆண் பெண் கடமைப்பட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மத்தியில் ஆண் பெண் வேறுபாடு என்பது பால் அடிப்படையிலான வேறுபாட்டையும் அதை ஒட்டிய உறவுகளைப் பொறுத்தும் இருந்ததே தவிர உயர்வு தாழ்வு என்ற கருத்திற்கு இடமிருக்கவில்லை. புதிய கண்டுபிடிப்புக்கள். அவரவர் புழங்கிய விடயங்களைப் பொறுத்து, ஆணாலும் மேற்கொள்ளப்பட்டன. பெண்ணாலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை முழுதும் குழுவின் பெயரில் வரவு வைக்கப்பட்டதுடன் குழுவின் சொத்தாகவே மதிக்கவும் பட்டன. ஆண் பெண் இருபாலாரும் ஒருவரில் ஒருவர் தங்கியிருந்தனர். அவர்கள் ஈடுபட்ட தொழில்கள் பரஸ்பரம் அனுசரணையானதாக இருந்ததே தவிர உயர்வு, தாழ்வோ அன்றி கூடிக் குறைந்த முக்கியத்துவமோ கற்பிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் இவர்கள் மத்தியில் இருந்து குழுப்புணர்ச்சி முறையானது இத்தகைய ஒரு குழுக்கட்டுமானத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவியது.
ஆயினும் மனித வரலாறு இத்துடன் நின்று போய் விடவில்லை. மனிதனது புதிய தேவைகளும் புதிய கண்டுபிடிப்புக்களும் அவனை வேட்டையாடி, காய்கனி புசித்து வாழ்ந்து நிலையிலிருந்து மிருகங்களை வளர்த்து உயிர்வாழ்ந்த நாடோடி வாழ்க்கை நிலைக்கு மாற்றி இறுதியில் நிரந்தரமாக ஒரு இடத்தில் குடியேறி வாழும் நிலைக்கு இட்டுச் சென்றது. பயிர்ச்செய்கை முக்கிய ஜீவனோபாயமாயிற்று. நிலம் சொத்துக்களில் ஒன்றாகியது. நிலத்தை பண்படுத்தி பயிர்செய்ய மனிதவளம் தேவையாயிற்று.
சொத்துக்களை சுவீகரித்துக் கொள்ளவும் அன்றி அடைந்த சொத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் மனித குழுக்களுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது உடல் வலிமையும் ஆயுத வலிமையும் மிக்க குழு மற்றதை வென்று உடமையைத் தனதாக்கிக்கொண்டது. தோற்றுப் போன குழுவின் உயிர்தப்பிய மனிதர்கள் வென்ற குழுவின் அடிமைகளாயினர். எனவே ஒரு குழுவின் நிச்சயத்தன்மை என்பது அதன் வலிமையில் சொத்துக்களைச் சேர்த்து பராமரிக்கின்ற, எதிரிகளை வெல்லுகின்ற வலிமையில் பெரிதும் தங்கியிருக்கலாயிற்று. குழுக்களில் ஆண்கள் உடல் வலிமை மிக்கோராகவும், எதிரிகளுடன் போராடிப் பழக்கப்பட்டவர்களாகவும் ஆயுத பாவனையில் தேர்ச்சிமிக்கவர்களாகவும் இருந்தமையால் புதிய சமூக அமைப்பில் குழுவின் நீடிப்பினை நிலைநிறுத்தும் பணி அவர்களையே சார்ந்தது. இங்கு குழுவின் மையம் பெண்ணைவிட்டு அகன்று ஆணைச் சூழ்ந்து கொள்வதைக் காண்கின்றோம்.
மனிதன் நிரந்தர குடியேற்ற நிலைக்கு முன்னேறியதைத் தொடர்ந்து மக்கள் தொகைப்பெருக்கமும் சொத்துக்களின் பெருக்கமும் ஏற்பட்டன. இவற்றைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் அதிகார அமைப்புக்களும் தேவைப்பட்டன. மேலும் இவற்றை அடைய குழு அங்கத்தவரிடையே, அதாவது ஆண்களிடையே போட்டி ஏற்பட்டு பலவான் குழுத்தலைமையையும் சொத்துக்களையும் தனதாக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இது இதுவரை காலமும் இருந்து வந்த குழுப்பிணைப்பில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. நிலம் மிருகங்கள் அடிமைகள் முதலிய இன்னோரன்ன அம்சங்கள் பொதுச் சொத்தாக கருதப்பட்டநிலை மாறி மனிதனிதர்களின் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டன.
உடல் வலிமையும் ஆயுதங்களைக் கையாளும் ஆற்றலும் இவற்றைப் பெற்றுத்தரும் அடிப்படைக் காரணிகளாகியபோதும் சொத்துக்களின் பெருக்கம் காலகதியில் வேறு பல அதிகாரங்களையும் ஒருவருக்கு அளித்தது. மனித உறவுகளில் அடிப்படையாகக் கொண்டு சொத்துள்ளவன், சொத்தற்றவன் என்றும் ஆண்டான் அடிமை என்றும் புதிய உறவுகள் பிறந்தன. மனிதர்கள் பரஸ்பரம் தங்கியிருந்த நிலைபோய் பலர் ஒருசிலரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதன் பிரதிபலிப்பு பெண்களைப் பொறுத்த வரை எவ்வாறு அமைந்ததெனப் பார்ப்போம்.
மனித குழுக்கள் தமது குழுநீடிப்பிற்காகவும் குழுப் பாதுகாப்பிற்காகவும் பெண்களில் தங்கியிருந்த நிலை மாறி தற்போது பெண் தன் பாதுகாப்பிற்காகவும், ஜீவனோபாயத்திற்காகவும் ஆணில் தங்கியிருக்க வேண்டியவளானாள். முன்னையது இயற்கையின் விளைவாக இருக்க பின்னையது மனிதரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகியது. ஆண் தன் சொத்துக்களைத் தன் சொந்த வாரிசுக்கு கையளிக்க வேண்டி, குழுப் புணர்ச்சியில் பெண்ணுக்கிருந்த சுதந்திரத்தை மறுத்ததுடன், தனது உரிமையை மட்டும் அவர்களில் நிலைநிறுத்திக்கொண்டான். பெண்ணானவன், சமூகத்திற்கு வாரிசை வழங்கிய கடமையிலிருந்து மாறி தனி மனிதனது வாரிசைப் பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு உடையவளானாள். அவளுக்கும் சமூகத்திற்கும் இருந்த நேரடித் தொடர்பும், பங்களிப்பும் குறுக்கப்பட்டு அல்லது முடக்கப்பட்டு ஆணைச் சார்ந்தவளாக அவனது நலம் பேணுபவளாக எல்லைப்படுத்தப்பட்டாள். இங்கு பெண்மை என்பது தாய்மையின் சின்னமாக இருந்த நிலைமாறி போகத்தின் சின்னமாக்கப்பட்டது.
சுருங்கக்கூறின் ஆண் ஆதிக்கமும் ஆண்வழிச் சமூகத் தொடர்ச்சியும் பெண்ணை ஆணின் அடைக்கலப் பொருளாக்கியது. ஆண் ஆதிக்கம் நிலைபெறவே சமூகத்தில் சகல அம்சங்களும் அதாவது வாழ்க்கை முறைகள், தொழிற்பகுப்புக்கள், அதிகார அமைப்பு, ஆட்சிமுறை, பொருளாதார முறை, சொத்துரிமைகள், சட்டங்கள் முதலியன ஆணை முதன்மையாகக் கொண்டே தோற்றம் பெற்றன. இதன் சாராம்சத்தை சமூகத்தின் மேல் கட்டுமானங்களாகிய நம்பிக்கைகள், விழுமியங்கள், நெறிமுறை போன்றவை அப்படியே உள்வாங்கிக்கொண்டன. இவை காலம் காலமாக வலியுறுத்தப்பட்டுப் பேணிப் பாதுகாக்கப்பட்டும் வந்ததன் விளைவாக சமூக கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துபட்டுப் போனமை ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.
இவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ஆணும் பெண்ணும் வார்த்தெடுக்கப்பட்டார்கள். ஆண் முதன்மையானவனாக, ஆளும் குணம் உள்ளவனாக, சமூகநலன் பேணுபவனாக, ரட்சிப்பவனாக, போற்றப்பட வேண்டியவனாக, சுகங்களை அநுபவிக்க வேண்டியவனாக சித்திரிக்கப்பட, பெண்ணோ ஆணில் தங்கியிருக்க வேண்டியவளாக, அவனது பாதுகாப்பில் இருக்க வேண்டியவளாக, அவனது சுகம் பேணுபவளாகவும், சிசுரூஷைகள் செய்ய வேண்டியவளாகவும் வடிக்கப்பட்டாள். மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டை செவ்வனே நடைமுறைப்படுத்திக்கொள்ளும் வகையில் அவரவர் குணாதிசயங்களும் ஆற்றுப்படுத்தப்பட்டன.
ஆண் வீரம் உறுதி ஆகிய குணங்களைக் கொண்டவனாகவும், பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய குணாதிசயங்களைக் கொண்டவளாகவும் விளங்கக் கற்பிக்கப்பட்டனர். இவற்றின் வார்படங்களாக நாளாந்த சமூகமயமாக்கற் செயல் முறைகள் மட்டுமல்ல, மதங்கள், இலக்கியங்கள், சமூக நெறிமுறைகள் மற்றும் சகல சமூக நிறுவனங்களும் தொழிற்படலாயின.
இன்றைய நிதர்சனம் என்ன?
உலகில் எதுவும் ஸ்தம்பிக்கப்பட்டு போவதில்லை. எவையும் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பன. இருப்பினும் இம்மாற்றத்தின் வேகத்திலும், போக்கிலும் தான் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதன்படி மானுட சமூகமானது பல்கிப் பெருகியதுடன் மட்டுமன்றி அதன் சகல அம்சங்களும் ஆழ்ந்து, அகன்று, விரிந்து பரந்த இன்றைய நிலையினை அடைந்துள்ளன. இச்செயல் முறையினூடே பழையன கழிதலும் புதியன புகுதலும் ஈடேறிக்கொண்டு வந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்விதிமுறைக்கு ஆண் பெண் சமூக நிலைப்பாடுகள் விலக்க இல்லை இல்லையாயினும் இவ்விடயம் குறித்த மாற்றங்கள் எத்தகைய போக்கையும், வேகத்தையும் பிரதிபலித்து வந்துள்ளன என்பதினை நோக்க வேண்டியது அவசியமானதொன்றாகும்.
இன்று ஆண் பெண் தொழில் பிரிவில் பாரிய மாற்றங்களைக் காண்கின்றோம். பொருளாதார உற்பத்தியானது குடும்ப மட்டத்திலாயினும், சமூக மட்டத்திலாயினும் ஆண் பெண் இருபாலரது பங்களிப்பையும் வேண்டி நிற்கின்றது. இங்கு பெண்கள் பொருளீட்டலில் ஈடுபடுவது ஆண்களுக்கு கௌரவக் குறைச்சலாகப் போய்விடவில்லை. மாறாக, கல்யாணச் சந்தையில், சம்பாதிக்கும் பெண்ணுக்கு முதலிடம் கொடுக்கப்படுவதும் அல்லது திருமணத்தின் பின் மனைவியை வேலை செய்ய அனுப்புவதும் சகஜமாகி வருவதுடன் இவை நவீன வாழ்க்கைச் செலவை முகம் கொள்வதற்கான நிர்ப்பந்தங்கள் என்றும் சமாதானம் செய்துகொள்ளப்படுகின்றன. அடுத்ததாக பாதுகாப்பு என்பது ஆணையும் பெண்ணையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசு எனும் சமூக நிறுவனத்தின் பொறுப்பாகவுள்ள ஆணின் ஆதிக்க உரிமை பலவீனப்பட்டுப் போயுள்ளது.
இவ்வாறு ஆண் பெண் நிலைப்பாடு குறித்து அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்பட்டும் கூட இவற்றின் நேரடியான பிரதிபலிப்பினை இவைகள் சார்ந்த விழுமியங்களில் காணமுடியாதிருப்பது துர்ப்பாக்கியமே. இதிலும் ஆண் சம்பந்தப்பட்ட விழுமியங்களில் பழக்கவழக்கங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், பெண்கள் விடயத்திலும் பெரிதும் இறுகிப் போய்விடுவதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக எமது சமூகத்தில் “வேட்டி” காற்சட்டையாகவும் குடுமி “குறப்” ஆகவும் மாற்றம் பெறுவதை அத்தியாவசியமாக கொண்டுள்ள சமூகம், சீலை வேற்று உருவம் எடுக்கும்போது கலாச்சாரம் சீரழிவாக கவிபாடிச் சாடுவது விந்தையானதே!.
மேலும் மனித ஏற்றத்தாழ்வுகளை, வர்க்க பேதங்களை மனித வரலாற்றின் சாபக்கேடுகளாக எண்ணிக் களைந்து விட்டு புதிய சமூக பரிமாணத்தை நோக்கிப் புரட்சிக் கொடி நாட்டவோகூட ஆண்பெண் சமத்துவம் என்ற விடயம் வரும்போது அடங்கிப்போய் விடுவதும், சில சந்தர்ப்பங்களில் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கின்ற ஆசாரபூதிகளாகி விடுவதும் நடைமுறை காட்டிய, காட்டி வருகின்ற உண்மைகள். இது மட்டுமன்றி, சத்துக்களையும் அசத்துக்களையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் புத்திஜீவிகள் கூட பெண் நிலைப்பாடு பற்றிய கணிப்பில் பெரும்பாலும் புறம்தள்ளிப் போய்விடுகின்றமையைக் காண்கின்றோம்.
எனவே மனித வாழ்க்கையில் குறிப்பாக மனித விழுமியங்களில் மாற்றங்கள் என்பது பெண்ணைப் பொறுத்தவரையில் பாரபட்சமாகவே நடந்தேறி வந்துள்ளது. இன்றும் கூட, அதாவது ஒரு ஆண் ஆதிக்க சமூகத்தின் ஆணிவேராக இருந்திருக்கக்கூடிய அம்சங்கள் தூர்ந்துவிட்ட நிலையிலும் கூட அவை கொண்டிருந்த விழுமியங்களை விழுதுகளாக வேரூன்ற வைத்துக் கொள்வதன் மூலம் ஆணாதிக்க விருட்சம் இன்றும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வருவதைக் காணலாம். இத்தகைய வேர்களுக்கு நீர் வார்ப்பனவாக விளங்குவன பல. இவற்றுள் மிகவும் எளிமையானதும் ஆனால் வலிமை பொருந்தியதுமான ஒரு சாதனமாகக் கருதப்படக் கூடியது முதுமொழிகள் எனக் கூறப்படும் சமூகக் கூற்றுக்களாகும்.
சமூகக் கூற்றுக்களும் அவற்றின் தாக்கங்களும்
சமூக விழுமியங்களையும் நெறிமுறைகளைம் வெளிப்படுத்துகின்ற, வற்புறுத்துகின்ற சாதனங்களுள் மிகமிகச் சாதாரணமானதும் நாளாந்த வாழ்க்கைச் சம்பவங்கள் முதற் கொண்டு, பெரும் இலக்கியச் சொற்பொழிவுகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் சமயப் பிரசாரங்கள், நீதி நெறி அறிவுறுத்தல்கள் முதலிய சகல துறைகளிலும் இலகுவாகக் கையாளக்கூடியதாக இருப்பதை சமூகக் கூற்றுக்களாகும். இவை பாமரர், பண்டிதர் வரை பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை மட்டுமல்ல ஒருவர் தனது கருத்தை அறுதியிட்டுக் கூறும் வகையில் கையாளப்படக்கூடியன.
சமூகக் கூற்றுக்கள் என்பவை, ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூறவோ அன்றி எடுத்துக்காட்டாகக் கொள்ளவோ, தொன்று தொட்டு வழங்கப்படுகின்ற சொற்பிரயோகங்கள் ஆகும். இவை யாரால் உருவாக்கப்பட்டன? எப்போது உருவாக்கப்பட்டன? எனக் குறிப்பிட்டுக் கூறமுடியாதவை. இருப்பினும் சமூகத்தில் விடயங்களை தீர்மானித்துக் கொள்ளவோ அன்றி ஊர்ஜிதம் செய்துகொள்ளவோ அல்லது அறிவுறுத்தவோ ஒரு அதிகார பூர்வமான மேற்கோளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்”, “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”, “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” முதலிய கூற்றுக்களைக் கூறலாம். சமூகக் கூற்றுகள் இவ்வாறு மானுடத்துக்குத் தேவையான நீதியினை நெறிமுறையினை, உண்மையினை வலியுறுத்துவனவாக இருக்கும் அதேவேளையில் கருத்துக்களை மக்கள் மத்தியில் பதிய வைப்பதிலும் குணநலன்களை வளர்த்தெடுப்பதிலும் கூட, சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடியனவாக இருக்கின்றன.
இன்று, ஆண்பெண் உறவுமுறைகள், குணாதிசயங்கள், சிறப்பு இயல்புகள் முதலியனவற்றைக் குறிக்கும் எத்தனையோ வகையான கூற்றுக்கள் சமூகத்தில் புழக்கத்தில் இருப்பதைக் காண்கின்றோம். இவை யாவும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது மிகச் சாதாரணமானதாகத் தோற்றமளிப்பினும் அவற்றைப் பயன்படுத்துகின்ற சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து வலிமை மிக்கவையாக தாக்கம் மிக்கவையாக ஆகிவிடுகின்றன என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. ஆக்கபூர்வமான சிந்தனைகள் செயல்கள் என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய கூற்றுக்களின் பிரயோகங்கள் வரவேற்கத்தக்கவையே. ஆனால் அழிவுசார்ந்த கூற்றுக்கள் மறக்கப்பட வேண்டியவை. ஆனால் இவை ஒரு ஆண் ஆதிக்க சமூக விழுமியங்களைக் கட்டுக்காத்துக் கொள்வதற்காக மிகவும் இலாபகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆண்பெண் குணாதிசயங்கள் சம்பந்தப்பட்ட சமூகக் கூற்றுக்களை எடுத்துக் கொள்வோமாயின் இவை ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து அதன் குணச்சித்திரப் பண்புகளையும், உலக கண்ணோட்டத்தையும் நிர்ணயிக்கின்றவையாகி விடுவதைக் கூறும் சந்தர்ப்பங்கள் எத்தனையெத்தனையோ அன்றாம வாழ்வில் நடந்தேறுகின்றன.
– கௌரி பழனியப்பன்
நூல்: கட்டவிழும் முடிச்சுக்கள்
நூல் முழுவதும் வாசிக்க சொடுக்கவும்: http://noolaham.net/project/04/375/375.pdf