அறிவுப் பெட்டகம் அல்-குர்ஆனை பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?
டாக்டர் எ.பீ. முஹம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
‘நிலம் வெளுக்க நீர் உண்டு மக்கள் மனம் வெளுக்க குர் ஆன் வேதமுண்டு’ என்று நானிலம் போற்றும் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அறிவூற்றினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சந்தததியர் கல்வி கேள்வியில் பின்தங்கியிருக்கலாமா?
‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்று பகன்ற கோமான் நபி பொன்மொழியினை புறக்கணித்து கண்ணிருந்தும் மூடர்களாக ஆகலாமா?
‘கல்வி நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சொர்க்கத்தினை நோக்கி வீறு நடைபோடும் அடிச்சுவடு” என்ற வாக்கினை புறக்கணிக்கலாமா?
500 ஆண்டுகள் ‘ஆண்ட சமுதாயம’; என்று பீற்றத் தெரிந்த நாம் மற்றவர்களுக்கு முன் மாதிரி ஆக திகழ வேண்டாமா?
என்பன போன்ற கேள்விகளை நான் மட்டும் கேட்க வில்லை. மாறாக இந்தியாவில் ஹைதராபாத் நகரிலுள்ள உருது பல்கலைக் கழகத்தின் சமூக புறக்கணிப்புகள் பற்றி பாடம் நடத்தும் இயக்குனர் மேன்மைமிகு கன்சன் இலையா என்பவரும் கேட்கிறார் என்றால் அது நியாயம் தானே!.
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ், “எந்த சமுதாயம் ஏன், எதற்கு, எப்படி, எதனால், யார், எப்போது’ என்ற கேள்விகள் கேட்கவில்லையோ அந்த சமுதாயம் பின் தங்கி தான் இருக்கும்” என்றார்.
ஒரு காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணி வேராக இருந்த முஹம்மது அலி ஜின்னா, முஹம்மது அலி, சவுக்கத் அலி, அலிஹார் பல்கலைக் கழகத்தினை நிறுவிய சர் செய்யத் அஹமது கான் போன்றோர் அறிவுசார் முஸ்லிம்களாக கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் கேள்விப்படாத சில முஸ்லிம் அறிஞர்களும் இருந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு பிரிட்டிஷ் கலெக்கெட்டராக இருந்த ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வழக்கில் தீர்ப்புச் சொன்ன ஐந்து நீதிபதிகளில் ஒரு நீதிபதி அப்துல் ரஹீம் ஆகுமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
பிரிட்டிஷ் ஆஷ் துரைதான் வா.உ.சி அவர்கள் சுயாட்சி கப்பலினை தூத்துக்குடி கடலில் செலுத்திய போது தடுத்து நிறுத்தி அட்டூழியம் செய்தவர். அவர் தன் மனைவியுடன் சென்ற போது மணியாச்சி ரயில் நிலையத்தில் தியாகி வாஞ்சி நாத அய்யரால் கொலை செய்யப் பட்பவர். அந்த வழக்கில் சுப்ரமணி பாரதி ஆகியோர் குற்றஞ் சாட்பப்பட்டனர். அந்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் மூவர் ஆங்கிலேயர். ஒருவர் பி.ஆர். சுந்தர ஐயர் மற்றமொருவர் தான் நீதிபதி அப்துல் ரஹீம் அவர்கள். அந்த வழக்கில் ஆங்கிலேய நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தாலும், இன்னொரு நீதிபதியான பி.ஆர். சுந்தர ஐயர் குற்றவாளிகளின் குற்றத்தில் சந்தேகம் எழுப்பினாலும், அவர்களை நிரபராதி என்று தைரியமாக சொல்லவில்லை.
ஆனால் நீதிபதி அப்துர் ரஹீம் மட்டும் தைரியமாக அந்த குற்றவாளிகள் நிரபராதிகள் என்றும், நாட்டுக்காக போராடும் வீரர்கள் என்றும் மறுப்பு தீர்ப்பினை தைரியமாக வழங்கினார். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால் அப்படி கல்வி, கேள்வியல் சிறந்து விளங்கி ‘எப்படியிருந்த நாம் இன்று பின் தங்கி இருப்பதிற்கு’ காரணம் என்ன என்ற அறிய வேண்டும் என்பதிற்குத் தான் மேற்கொண்ட எடுத்துக் காட்டுதல் ஆகும்.
இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஆரம்ப காலத்தில் மாறிய முஸ்லிம்கள் இந்திய சாதீய சமுதாயத்தில் அடித்தளத்திலிருந்த மக்களும், தலித்துகள் தான் என்று சொல்லப்படுகிறது. இந்து தலித்துகளுக்கு அரசியல் சாசனத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஏழை முஸ்லிம்களுக்கு அவ்வாறு எந்த உறுதியும் செய்யப்படவில்லை.. அதனால் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் போது, அப்படி முஸ்லிம்கள் படித்திருந்தாலும் வேலை உத்திரவாதமில்லை. தலித்துகள், பழங்குடியினர், மற்ற பிற்பட்ட ஜாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க முன்னுரிமை கொடுக்கின்றனர்.
ஆனால் கிராமப்புற ஏழை முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகள் குர்ஆன் ஓத மட்டும் முன்னுரிமை கொடுக்கின்றனர். 3.8.2011 சகர் நேர தொலைக் காட்சியில் பேசிய வளைகுடா வாழ் என்ஜினீயர் ஒருவர் சொல்லும் போது, ‘அவரிடம் வேலை பார்க்கும் ஒரு பிளம்பர் அவரிடம் தன் மகன் தமிழ்நாட்டில் எட்டாவது படிப்பதாகவும் ஏதாவது பிளம்பர் வேலை போட்டுக் கொடுத்தால் போதும் அவனை வளைகுடாவிற்கு அழைத்துக் கொள்வேன்’ என்ற கொன்னாராம். அவருக்கு புத்திமதி சொல்லி அவர் மகனை மேல் படிப்பு தொடர்ந்து படிக்க வையுங்கள் என்று கூறியதாகவும் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்தார். இது எதனைக் காட்டுகிறது என்றால் பிள்ளைகள் படித்தாலும் வேலை கிடைக்குமா என்ற உண்மையான பயம் முஸ்லிம்கள் மனதில் இருப்பதினைக் காட்டவில்லையா?
அமெரிக்கா இரட்டைக் கோபுர இடிப்பிற்குப் பின்னரும் மும்பை தீவிரவாத தாக்குதல் பின்னரும் முஸ்லிம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பதிலும், முஸ்லிம்களுக்கு வீடு கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று பல்வேறு மக்களும் சொல்லியுள்ளார்கள் என்றால், சாதாரண முஸ்லிம்கள் என்ன பாடுபடுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
ஹிந்து ஜெயின் வியாபாரிகள் தங்கள் குழந்தைகளை எப்படியும் மேல் படிப்பிற்கு அனுப்பி அதன் மூலம் தங்கள் வியாபாரத்திற்கு உதவியாக அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம் வியாபாரிகள் கூட தங்கள் குழந்தைகளை மேல் படிப்பிற்கு அனுப்புவதில்லையே அது ஏன்?
2001 கணக்கெடுப்பின் படி கல்வியறிவு பெற்ற முஸ்லிம்கள் 60 விழுக்காடுகள் ஆகும். ஆனால் கல்வி கற்ற ஹிந்துக்கள் 75.5 சதவீதமாகும், கிருத்துவர்கள் எண்ணிக்கையோ 90.3 சதவீதமாகும். நம்மைப்போன்ற மைனாரிட்டி சமூகம் என்ற கூறிக் கொள்ளும் சீக்கியர்கள் கல்வியறிவில் 70.4 விழுக்காடும், புத்தர்கள் 73 விழுக்காடும், ஜெயின்கள் 95 சதவீதமாகமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
கிருத்துவர்களும், ஜெயின் மக்களும் தங்கள் மக்களுக்கு தரமான உயர்கல்வியினை தன்னலமற்ற கல்வி நிலையங்களை அமைத்து அவர்கள் மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் தன்வந்தர்கள் வசதி வாய்ப்பிலிருந்தும் கல்வி நிலையங்களை அமைத்து நாலு காசு பண்ணும் கல்வி நிலையங்களாக மைனாரிட்டி கல்வி நிலையங்கள் என்ற தோரணையில் அமைத்து ஏழை முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். சில முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை லகர டொனேசன் பெற்றல்லவா நியமிக்கிறார்கள். எங்கே சொல்வது இந்த வேதனையை!
பின் எங்கே முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறி சமுதாயத்திலும் முன்னேற முடியும்?
நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை ‘ஒரு புனித அறிக்கை இல்லை’ என்று சமீபத்தில் சென்னை வந்த முஸ்லிம் மத்திய அமைச்சர் சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த அறிக்கை புனித அறிக்கையோ இல்லையோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த அறிக்கையால் இந்தியாவில் முஸ்லிம்கள் எந்தளவிற்கு கல்வி, வேலை, சமூக அமைப்பில்; பின்தங்கி ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பது உலகிற்கு எடுத்துக்காட்டிய வால் நட்சத்திரமாக தெரியவில்லையா?
அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 12 மாநிலங்களில் 15 சதவீதம் பேர்கள் முஸ்லிம்கள். ஆனால் அரசு வேலையில் அவர்கள் பெற்ற வாய்ப்போ 5.7 விழுக்காடுதான். போலீஸ், நிர்வாகம், வெளிநாடுகளிலுள்ள தூதரக அலுவலகங்களில் அவர்களுக்குள்ள வாய்ப்பு 1..6 விழுக்காடிலிருந்து 3.4 விழுக்காடு தான் என்றும், நீதித்துறையிலும், ராணுவத்திலும் மிக, மிகக் குறைந்த அளவே பணியாற்றுகிறார்கள் என்றும் சொல்லியுள்ளது. அது மட்டுமா உளவுத்துறையான ஐ.பி, ரா, என்.எஸ்.ஜி போன்ற அமைப்புகளில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பே இல்லை என்றே சொல்லலாம்.
இந்தத் தருணத்தில் ஒரு உதாரணத்தினை மட்டும் உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கின்றேன். 1981ஆம் ஆண்டு நான் வண்ணாரப்பேட்டை ஏ.சியாக பணியாற்றியபோது டி.ஜி.பியாக டி.டி.பி. அப்துல்லா அவர்கள் பணியாற்றினார்கள். நான் அவரிடம் ஒரு மனுவினைக் கொடுத்து மாநில எஸ்.பி.சி.ஐ.டியில்(உளவுத்துறை) பணியாற்ற விருப்பம் தெரிவித்தேன். அவரும் அந்த மனுவினை பரிந்துரை செய்ய அப்போதிருந்த உளவுத்துறை தலைவரிடம் தொலைபேசியில் கருத்துக் கேட்டார்.
அதற்கு அந்த உளவுத்துறை தலைவர் ‘முஸ்லிம்களை எஸ்.பி.சி.ஐ,டியில் போடுவதில்லை’ என்ற மறுத்து விட்டார். அதன் பின்பு டி.ஜி.பி அவர்கள் என்னை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி;யாக பணியமர்த்தினார். இது எதனைக் காட்டுகிறது என்றால் ஒரு மாநில டி.ஜி.பியாக உள்ள ஒரு முஸ்லிம் அதிகாரியாலேயே ஒரு மாநில உளவுத்துறையில் ஒரு முஸ்லிம் டி.எஸ்.பிக்கு பதவி பெற முடியவில்லை என்றால் இந்திய அளவில் அவர்கள் பங்கு எப்படியிருக்கும் என்று உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
சரி இஸ்லாமியர் பங்களிப்பு அரசு உயர் பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பீ.எஸ், ஐ.எப்.எஸ் மற்றும் மத்திய பதவிகளின் நிலை என்ன என்பதினை ஆல் இண்டியா மில்லி கவுன்சில் அப்போதிருந்த பிரதமரிடம் 1998 ஆம் ஆண்டு அளித்தது. அதில் 3883 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 116 தான், 1433 ஐ.பீ.எஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 45 தான், 2159 ஐ.எப்.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 57 பேர்கள் தான். ஆகவே முஸ்லிம்கள் உயர் பதவிகளில் வெறும் 3 விழுக்காடுகளுக்குள் தான் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் நலனுக்காக கோபால் சிங் கமிட்டி, மிஸ்ரா கமிட்டி மற்றும் சச்சார் கமிட்டி போன்றவைகள் அமைத்தும் இன்னும் அந்த கமிட்டிகளின் பரிந்துரைகள் காற்றுப்பட்டு இருகிய சிமிட்டிகளாகவே பயனற்று உள்ளன. ஆனால் முஸ்லிம்கள் வாழ்க்கைத்தரம் மட்டும் மாறவே இல்லை. நாம் விரும்பும் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் முஸ்லிம்கள் தங்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும்.
உயர் கல்விக்காக அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதனை பெற்று நாமும் நம் சமுதாய மக்களுக்கு உயர் கல்வியினை வழங்க வேண்டும். 27 விழுக்காடு ஒ.பி.சி ஒதுக்கிட்டில் முஸ்லிம்களுக்கென்று தனி ஒதுக்கீடு பெற முயற்சி செய்ய வேண்டும். தற்போது உச்ச நீதி மன்றத்தில் ஒபிசி 27 சதவீத ஒதுக்கீடு பற்றிய வழக்கில் இணைத்துக் கொண்டு புள்ளி விபரங்களை அளித்து முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு பெற முயல வேண்டும்.
அலிகார் முஸ்லிம் பலைக்கழகத்தினை முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டுமென்ற 144 வருடத்திற்கு முன்பு சர் செய்யத் அஹமது கான் 1867ஆம் ஆண்டு நிறுவினார். அந்த பல்கலைக் கழகம் அலிகாரை விட்டு எந்த இடத்திலும் கல்வி நிலையங்கள் அமைக்கவில்லை. ஆனால் கேரள மலப்புரம் முஸ்லிம்கள் முயற்சியல் சச்சார் கமிட்டியில் உள்ள பின்தங்கிய முஸ்லிம் மாவட்டங்களை கல்வியில் முன்னேற்றும் திட்டத்தில் மாநில-மத்திய அரசு இணைந்த ஐந்து தொலை தொடர்பு கல்வி நிலையங்களை சமீபத்தில் பெரிந்தல்மன்னாவைச் சார்ந்த செலமாலா என்ற இடத்தில் அமைத்து வருகின்றனர். அதற்கு கேரள புதிய உம்மன் சாண்டி காங்கிரஸ் அரசு 335 ஏக்கர் அரசு நிலத்தினை கொடுத்து ரூபாய் 75 கோடி திட்டத்தில் கல்வி நிலையங்கள் தயார் ஆகிக்கொண்டுள்ளன என்பதினை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.கே அப்துல் அஜீஸ் சமீபத்தில் கேரளாவில் தெரிவித்துள்ளார். அது மட்டுமா முஸ்லிம்களை முன்னேற்ற ரூபாய் 1100 கோடி ‘விசன் பிளான்’ என்ற திட்டமும் இருப்பதாக சொல்லியுள்ளார்.
இதனை நான் எதற்காக இங்கே குறிப்பிடுகிறேனென்றால் நமது முஸ்லிம் சமுதாய இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழ் நாட்டிலும் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்துடன் இணைந்து தமிழ் நாட்டிலுள்ள பெரிய முஸ்லிம் ஊர்களை தேர்ந்தெடுத்து அந்த ஊர்களிலும் அது போன்ற கல்லூரிகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம். அதற்கு உறுதுணையாக தமிழக அரசின் உதவியையும் மத்திய அரசின் உதவியையும் நாடலாம்.
சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை போன்ற நகரங்களில் சமுதாய இயக்கங்கள் அங்குள்ள முஸ்லிம் கல்வி நிலையங்களை நாடி மத்திய-மாநில அரசு உயர் பதவிகளுக்கான கோச்சிங்(பயிற்சி) வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம்.
மேற்குறிப்பிட்ட நகரங்களில் வேலை சேவை மையங்கள் அமைத்து அயல் நாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள முஸ்லிம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வேலையாட்களை தேர்வு செய்யலாம்.
முஸ்லிம் மக்களுக்கு செய்யும் ஒவ்வொரு சேவையும் வல்ல இறைவனுக்கு நோன்பு நேரத்தில் செய்யும் சேவையாக எண்ணி முஸ்லிம் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ஈடுபட்டால் நிச்சயமாக நாம் மற்றவரகளுக்கு சலைத்தவர்கள் அல்ல என்பதினை நிலை நிறுத்தலாம். அப்படி செய்யார்களா சமூக அமைப்புகள் என்று பொறுத்திருந்து பார்க்கலாமா சகோதர, சகோதரிகளே!
-எ.பீ. முஹம்மது அலி,