M U S T R E A D
பரக்கத்தின் பெயரால்….
‘நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா? என்று அவர் கேட்டார்.’ (அல்குர்ஆன் 26:72,73)
முஸ்லிம் சமுதாயம் பிற மத கலாசாரங்களில் இருந்து முற்றுமுழுதாக பிரதி பண்ணிய அம்சங்களில் ஒன்றுதான் கண்ட கண்ட விடயங்களையெல்லாம் கடவுள் தன்மை பொருந்தியதாக நம்புவது. அதாவது; ஏதேனும் ஆக்கல், அழித்தல் செயற்பாடுகளுக்கும், தாம் மதிக்கும் படைப்பினங்களுக்கும் தொடர்பிருப்பதாக நம்புவதே அதன் உண்மை நிலையாகும்.
இதனால் தான் பிற சமய மக்கள் கோயில், குளங்கள், மதப்புரோகிதர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஏன் தேவாலய வளாகத்தினுள் காணப்படக் கூடிய உயிருள்ள, உயிரற்ற பொருட்களைக் கூட தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வதைப் பார்க்கின்றோம்.
இதனையே நம் சமுதாயத்து மக்கள் வித்தியாசமான வழிவகைகளில் கலப்பற்ற இணை வைப்பை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த குழந்தையை ஒரு சில நிமிடங்களாவது வலியுல்லாஹ்(?)வின் மண்ணறையில் கிடத்தி எடுக்கின்றனர். அக்குறுகிய நேரத்திற்குள் வலியுல்லாஹ்வின் மண்ணறை மண்ணிலிருந்து படுகின்ற சக்திகளால் கண்ணூறு, பேய், பிசாசு போன்றவற்றின் தீங்குகளிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என நம்புகின்றனர்.
இவ்வாறு ‘அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்முகத்தைக் கண்கள் தேடுதே’ என்று பாடி வந்த கவிஞன் ‘புஷ்பங்களின் மகரந்தமாம் மதீனப் பூமியில் நான் உருள வேண்டும். புரள வேண்டும் போலிருக்குதே’ என்று கூறுவதன் மூலம் மதீனத்து மண்ணுக்கு பரக்கத்து தரும் சக்தியிருப்பது போன்று சித்தரிக்கின்றார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு தப்லீக் ஜமாஅத்தில் சென்று வந்தவர்கள் ஒரு கதை கூறுவார்கள். அங்கு அடங்கப்பட்டுள்ள ஒரு அவ்லியாவின் கப்றிலுள்ள மண் துணிக்கைகள் எல்லாம் கமகமவென்று மணக்கத் துவங்கியதால் (?!) ஸியாரத்திற்கு வரும் மக்கள் பிடிபிடியாக அள்ளிச் சென்றதால் வெளியிடத்திலிருந்து மண் கொண்டு வந்து நிரப்ப வேண்டிய நிலை எற்பட்டதாம்.
பெரிய ஆலிம் கைபட்ட யாசீன் கிதாப், துஆக்களின் தொகுப்பு, ஸலவாத் மாலை போன்றவற்றை இன்னும் அதே நிலையில் பேணிவருதையிட்டு பூரிப்படைபவர்கள் பலர். தரீக்காவின் ஷைகு கொடுத்த தஸ்பீஹ் மணியை(?) முத்தமிட்டு, முத்தமிட்டு வைத்திருக்கும் முரீதுகள் பலர். வாப்பா நாயகத்தின் உமிழ் நீரை ஆடை முழுவதும் தடவிக் கொள்ளும் அறிவிலிகள் பலர். கந்தூரி, ஹிஸ்பு தமாம் போன்ற நிகழ்வுகளில் கிடைக்கும் நார்ஸாக்கள், இனிப்புக்கள் அனைவரது வாயிலும் பட வேண்டும் என ஆசிக்கும் ஆர்வலர்கள்ஸ இவர்கள்தான் இந்த வலையில் சிக்கிய மனிதர்கள்.
முதலில் இத்தகைய கல், மண், செடி, கொடிகளுக்கு எதாவது சக்திகள் இருக்கின்றதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதோ நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தனது சமுதாய மக்கள் வணங்கும் ஒவ்வொன்றையும் கடவுள் தன்மை அற்றவை என்பதை இப்படிக் கூறுகின்றார்கள். ‘நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா? என்று அவர் கேட்டார்.’ (அல்குர்ஆன் 26:72,73)
தவாப் செய்யும் போது ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டுக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிவழி எனக் குறிப்பிடுகின்றார்கள். அந்தக் கல்லைப் பற்றி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: ‘உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ கல்தான். உன்னால் எந்த நன்மையோ, தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன். அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன் எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அஸ்லம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புஹாரி-1605)
மேற்படி கூற்றைக் கவனித்துப் பார்த்தால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டதற்காகவே முத்தமிடுகின்றோமே தவிர அக்கல்லுக்கு ஏதாவது சக்தி உண்டு என்று நம்பினால் அதுவே ஷிர்க்கின் முதற்படியாகும்.
முன்சென்ற மக்களின் நெறிதவறிய நடைமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகையில், ‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்த்தவர் களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டோம். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘வேறு யாரை?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புஹாரி 7320)
இவ்வாறு ஒரு பொருளை மகத்துவமாக கருதுவது கலப்பற்ற இணைவைப்பு என்பதை பின்வரும் சம்பவம் மிகத் தெளிவாக விளக்குவதைப் பார்க்கலாம். ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹுனைன் போருக்காக மக்காவிலிருந்து நாங்கள் வெளியேறிச் சென்றோம். அவ்வேளை நாங்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருந்தோம்.
ஓர் மரத்தை நாம் கடந்து சென்ற போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி இறைநிராகரிப்பாளர்களுக்கு ‘தாத்து அன்வாத்’ இருப்பதைப் போன்று எமக்கும் ஒரு தாத்து அன்வாத்தை ஏற்படுத்தித் தாருங்கள் என நான் கேட்டேன். நிராகரிப்பாளர்கள் அந்த மரத்தடியில் தங்களது ஆயுதங்களை கொழுகி வைப்பவர்களாகவும், அதனைச் சூழ தரித்திருப்பவர்களாகவும் இருந்தார்கள். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு கடவுள்கள் இருப்பதைப் போன்று எங்களுக்கும் கடவுள்களை ஏற்படுத்தி தாருங்கள் என மூஸா நபியை நோக்கி பனூ இஸ்ரவேலர்கள் கூறியது போன்றுதான் இது உள்ளது. நீங்கள் உங்களது முன்சென்ற மக்களின் நடைமுறைகளைப் பின்பற்றிக் கொண்டேயிருப்பீர்கள் என்று நபிகளர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூவாகித் அல்லைதி ரளியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி-2157, அஹ்மத்-21326)
சாதாரணமாக ஏனையோருக்கு ஒப்பாக ஆயுதத்தை மரத்தில் கொழுகி வைத்து பரக்கத் பெறலாம் என நினைப்பதையே, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாயம் தெய்வங்கள் ஆக்கித்தருமாறு கேட்டதற்கு நிகராக அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்றால், நம் சமுதாய மக்களின் மனங்களில் எத்தனை நூறு தெய்வங்கள் முஹ்யித்தீன் என்ற பெயரிலும், அஜ்மீர் அரசர் என்ற பெயரிலும் நாகூர் பாதுஷா என்ற பெயரிலும் இடம் பிடித்துள்ளன. ‘மழை நின்றாலும் தூரல் ஓய்ந்த பாடில்லை’ என்பது போன்று தௌஹீத் மணம் கமழும் ஊர்களிலும் பல புதிய வடிவங்களில் இந்நிலை காணப்படுகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ‘அல்லாஹும்ம பாரிக்’ (அளவை நிறுவைகளில் பரக்கத் செய்வாயாக!) (நூற்கள்: ஸஹீஹ் முஸ்லிம்-2660,2129) என்று துஆவை கற்றுக் கொடுத்தார்களே தவிர எதையும் முத்தமிடுவதோ நெஞ்சில் அணைப்பதோ அல்லது பீங்கான்களில் அல் குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிப்பதோ ஹஜ்ஜுக்காக சென்றவர்களது வீட்டில் ஸூரா அல் கஸஸின் 68 வது வசனத்தை எழுதி ஒட்டுவதோ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த நெறிமுறையல்ல.
காலில் விழுவதனை கண்டித்த, தான் வரும் போது எழுந்து நிற்பதை வெறுத்த நபிகளாரின் பெயரைப் பயன்படுத்தியே மக்களின் பொருளாதாரங்களை சூறையாடும் ஆசாமிகள் இதுபோன்ற புனிதம்(?) பொருந்திய பொருட்களை அறிமுகம் செய்வதிலும் தமது கழிவுகளில் பிறர் பரக்கத் பெற தூண்டுவதிலும் இன்பம் காண்கின்றனர். இத்தகைய மாற்றுமத கலாசாரங்களிலிருந்து அழ்ழாஹ் எம்மை காத்தருள்வானாக!
-மௌலவி SLM நஷ்மல் (பலாஹி)