o அவன் தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குப்படுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹ் (துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 60:24)
o அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள் இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே ( அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்). (அல்குர்ஆன்: 9:33)
o “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 17:88)
o (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (அல்குர்ஆன்: 22:67)
o “இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 16:38
o இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 3:4)
o விபச்சாரியும், விபச்சாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்: மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் (நம்பிக்கை கொண்டவர்களில்) ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்குர்ஆன்: 24:2)
o “நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”. (அல்குர்ஆன்: 39:7)
o விபச்சாரன், விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு யாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு (நம்பிக்கை கொண்டவர்களுக்கு) விலக்கப் பட்டிருக்கிறது. (அல்குர்ஆன்: 24:3)
o (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)
o நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:41)
o (நபியே) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்பந்திக்கப்பட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்து விட்டால் – (அவர் மீது குற்றமாகாது; ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 6:145)
o வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது. அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். (அல்குர்ஆன்:22:18)