Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மண்ணறை விசாரணை!

Posted on August 3, 2011 by admin

 

  மண்ணறை விசாரணை!  

மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது.

மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!

மறுமையின் முன்னோட்டமாக – மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம்.

ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு!

மரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.

 இறைவசனங்கள்: 

நமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).

இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).

அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).

திண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது (அல்குர்ஆன் 83:7).

திண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).

 நபிமொழிகள்: 

அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், தமது தலையை உயர்த்தி, “அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:

“இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், ‘தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக’ என்பார்.

அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.

பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், ‘இந்தத் தூய உயிர் யாருடையது?’ என்று கேட்பர். அதற்கு அவர்கள், ‘இன்னாரின் மகன் இன்னார்’ என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.

அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், ‘என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்’ என்று கூறுவான்.

பின்னர் அவரது உயிர் (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், ‘உம்முடைய இறைவன் யார்?’ என்று கேட்பர். அதற்கு, ‘என் இறைவன் அல்லாஹ்’ என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, ‘உமது மார்க்கம் எது?’ என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ‘எனது மார்க்கம் இஸ்லாம்’ என்று அவர் கூறுவார்.

பிறகு ‘உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?’ என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ‘அவர் அல்லாஹ்வின் தூதர்’ என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் ‘அது எப்படி உமக்குத் தெரியும்?’ என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், ‘நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்’ என்று கூறுவார்.

உடனே வானிலிருந்து, ‘என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்’ என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, ‘உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்’ என்பார்.

அப்போது அவர், அந்த அழகானவரிடம் ‘நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே’ என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், ‘நான்தான் நீர் செய்த நற்செயல்கள்’ என்பார். உடனே அவர் ‘என் இறைவா! யுக முடிவு (நாளை இப்போதே) ஏற்படுத்துவாயாக; நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்’ என்று கூறுவார்.

(ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். ‘மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு’ என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.

உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது ஒரு பிணத்தின் மேற்பரப்பிலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், ‘இந்த மாசடைந்த உயிர் யாருடையது?’ என்று கேட்பர். அதற்கு அவர்கள், ‘இன்னார் மகன் இன்னாருடையது’ என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது”

இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்” எனும் (அல்குர்ஆன் 7:40) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

“பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்’ என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்” இவ்வாறு கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘… அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார்” (அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

“பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், ‘உன்னுடைய இறைவன் யார்?’ என்று கேட்பர். அதற்கு அவர் ‘அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!’ என்று கூறுவார். அவ்விருவரும், ‘உனது மார்க்கம் எது?’ என்று கேட்பர். அவர், ‘அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!’ என்பார். அடுத்து ‘உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இன்னார் யார்?’ என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், ‘அந்தோ! எனக்கொன்றுமே தெரியாதே!’ என்று பதிலளிப்பார்.

அப்போது வானத்திலிருந்து, ‘என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள்; அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்’ என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, ‘உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றைச் சொல்கிறேன் கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்’ என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமானவரிடம் ‘நீர் யார்? உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!’ என்று கேட்பார் அதற்கவர், ‘நான்தான் நீ செய்த தீய செயல்கள்’ என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், ‘என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே’ என்று கதறுவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கினார்கள் – அறிவிப்பவர் பராவு பின் ஆஸிஃப் (ரலி) (நூல்கள் – அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).

ஷஹாதத் எனும் கலிமா என்பது வெறும் வாயால் மொழிவது மட்டுமல்ல. தேடுதல் அடிப்படையில் ஏக இறைவனை நெஞ்சாறயேற்று ஓரிறைக் கொள்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதாகும்! இம்மை வாழ்வில் மனிதன் எதில் உறுதியாக இருந்து, கொள்கையளவில் தாம் உறுதி செய்தவற்றை சிந்தனையில் பதிவுசெய்து, இவ்வுலக வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறாரோ அதுவே மரணத்திற்குப் பின்னர் நிகழும் ஆன்ம வாழ்வில் வெளிப்படும்.

உலக வாழ்க்கையில் அகமொன்று வைத்து, புறமொன்றுப் பேசி சமர்த்தியமாகத் தப்பித்து விடுவதுபோல், மனிதன் மரணித்த பின்னர் மண்ணறை விசாரணையில் அவனது எந்தக் கெட்டிக்காரத்தனமும் எடுபடாது!

இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்பட்டோரை இம்மை, மறுமை ஈருலகத்திலும் உறுதியான வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ் நிலைபெறச் செய்கிறான். ஒருவர் இம்மையில் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதுவே மண்ணறை விசாரணையிலும் வெளிப்படும்.

திருக்குர்ஆன் 14:27வது வசனத்தின் கருத்து என்பது கப்ரு விசாரணையைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுவதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கியுள்ளார்கள்:

“ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்’ என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் ‘(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்’ எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1369, 4699, முஸ்லிம் 5508, 5509, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஃபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.

“உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரைக்கும் இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1379, 3240, 6515. முஸ்லிம் 5500, 5501, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).

“ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ எனக் கேட்பர். அதற்கவன், ‘அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)

நாடு, மொழி, இனம், நிறம், சாதி, மதம், கொள்கை, சிந்தனை எனப் பலவற்றிலும் வேறுபட்டு வாழும் மனித இனம் “மரணம் என்பது எந்த உயிருக்கும் தவிர்க்க முடியாதது; வந்தே தீருவது” என்பதில் மட்டும் ஒத்த கருத்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, “மரணத்தை அடுத்து மண்ணறை வாழ்க்கை; இறைவனின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் நிரந்தர வாழ்க்கை” என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. தவிர்க்கவே முடியாத, எந்த நேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டிய மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ள நாம், அதில் எந்த அளவு உறுதியாய் இருக்கிறோம்? சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம்? எனும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த ஆக்கம் உந்துகோலாக அமையட்டுமாக!

சரியான பதில்களைக் கூறி மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்!

source: http://www.satyamargam.com/1736

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb