நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான்!
நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும். அதற்கு என்ன செய்யலாம்?
1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.
2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.
3. காலையில் மறக்காமல் ஃபஜர் தொழுகை தொழுகுங்கள். உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். அன்றைய நாள் முழுக்க உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.
4. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.
5. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!
6. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.
7. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.
8. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.
9. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.
11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.
12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்…
13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.
14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.
15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.
16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.
17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.
18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.
19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.