o பணவீக்கத்தின் காரணமாக கடன் கொடுத்தவர் பாதிக்கப்படாமல் இருக்க வழி என்ன?
o எதுவரை தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது?
o ஐவேளை தொழுகை நடத்தப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்துவது கூடுமா?
o மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..?
o பெண்களை பின் பற்றி ஆண்கள் தொழலாமா..?
o ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..?
o ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..?
o பணவீக்கத்தின் காரணமாக கடன் கொடுத்தவர் பாதிக்கப்படாமல் இருக்க வழி என்ன?
கேள்வி 01: உதாரணமாக ஒருவரிடம் ரூ10000 (பத்தாயிரம்) கடனாக 2 வருடத்திற்கு முன்னர் கொடுத்திருக்கின்றோம். அவர் இரண்டு வருடம் கழித்து அதே ரூ.10000 திருப்பிக் கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு வருடங்களில் பண மதிப்பு பணவீக்கத்தின் காரணமாக இப்பொழுது குறைந்து இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் கடன் கொடுத்தவர் பாதிக்கப் படுகின்றார் அல்லவா. இந்த மாதிரி சூழ்நிலையில் பணவீக்கத்திற்கு தக்கவாறு கடன் கொடுத்தவர் பணம் பெறலாமா.. இவ்வாறு வசூலிப்பதால் இந்த பணம் வட்டி ஆகிவிடுமா..
பதில்: அழுத்தமான கேள்வி கேட்டுள்ளீர்கள். பணத்திற்கென்று உலகில் தனியாக எந்த மதிப்பும் கிடையாது. இந்திய கவர்மண்ட் நினைத்தால் இப்போது புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் அனைத்தையுமே செல்லாது என்று அறிவித்து விட முடியும். அப்படி அறிவித்து விட்டால் இன்றைக்கு லாக்கரில், பீரோவில் வைத்து பாதுகாக்கும் இந்த நோட்டு முழுவதும் அடுப்பெறிக்கவும், குப்பை கூடைக்கும் தான் செல்லும். எவராலும் ‘செல்லாது” என்று அறிவிக்க முடியாதவை தங்கம் தான். அதனால் கடன் மற்றும் கொடுக்கல் வாங்கலை தங்கத்தின் மதிப்பீட்டில் எழுதிக் கொள்வதுதான் நல்லது.
உதாரணமாக ஒருவருக்கு பத்தாயிரம் கடன் கொடுக்க வேண்டியுள்ளது. பல மாதங்கள் அல்லது வருடங்கள் சென்ற பிறகு தான் அதை திரும்ப பெற முடியும். அப்போது பண வீக்கத்தின் காரணத்தால் மதிப்பு குறைந்திருக்கும் என்று முன் கூட்டியே தெளிவாக தெரிவதால் பத்தாயிரத்துக்குறிய தங்கத்தை சுமார் 20 கிராம் அவரிடம் கொடுத்து ‘நான் திரும்ப பெறும் போது 20 கிராம் தங்கத்தைத் தான் நீ கொடுக்க வேண்டும்” என்ற ஒப்பந்தத்தில் கடன் கொடுக்கலாம். அல்லது ‘இன்றைய நிலவரப்படி 10 ஆயிரத்துக்கு 20 கிராம் தங்கம் கிடைக்கிறது. நான் திரும்ப கடனை பெறும்போது 20 கிராம் தங்கத்தின் மதிப்பீட்டில் தான் பணத்தை கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துக் கொண்டு கடன் கொடுக்கலாம்.
கடன் கொடுக்கும் போது 20 கிராம் 10 ஆயிரம் மதிப்பை பெறுகிறது. கடனை திரும்ப பெறும் போது அதே 20 கிராம் 12 ஆயிரம் வரை உயர்ந்திருந்தால் – தங்கத்தின் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் – அதை நாம் பெறலாம். மேலதிகமாக வரும் 2 ஆயிரம் வட்டியாக ஆகாது. ஏனெனில் நாம் கடன் கொடுக்கும் போதே தங்கத்தின் நிலவரத்தைதான் ஒப்பந்தமாக்கியுள்ளோம்.
தங்கத்தின் மதிப்பை நாம் கடனுக்கு ஒப்பந்தமாக்கும் போது இன்னொரு முக்கிய விஷயத்தை மறந்து விடக் கூடாது. அதாவது கடனை திரும்ப பெறும் வேளையில் ஒரு வேளை தங்கத்தின் மதிப்பு குறைந்திருந்தால் – கொடுத்த அசலை விட குறைந்திருந்தாலும் சரி – அப்போதும் தங்கத்தின் மதிப்பில் தான் கடனை திரும்ப பெற வேண்டும். ஏனெனில் ஒப்பந்தம் அதுதான். இப்போது கடன் கொடுத்தவர் பாதிப்புக்குள்ளானால் – பெரும்பாலும் தங்கத்தின் மதிப்பு அசலை விட குறைய வாய்ப்பில்லை, ஒரு வேலை அப்படி நடந்தால் – இறைவன் புறத்திலிருந்து வரும் சோதனையாகத்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ‘தங்கத்தின் மதிப்பு குறைந்துள்ளதால் நிலவரத்தை பார்த்து பிறகு வாங்கிக் கொள்கிறேன்” என்றெல்லாம் ஒப்பந்தத்திற்கு முரணாக நடந்துக் கொள்ளக் கூடாது. வாக்குறுதியை பாதுகாப்பது முஸ்லிமின் கடமை என்பதை இது போன்ற சந்தர்பங்களில் மிக அதிகமாக நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
டாலர், மற்றும் டாலருக்கு நிகராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய நாணயமான யூரோ வின் மதிப்பீட்டிலும் (யூரோ நாணயம் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தையில் டாலரின் மதிப்பை எட்டியுள்ளது. இது இன்னும் உயர்ந்தால் டாலரின் மதிப்புக் கூட சரியலாம்) கடனை எழுதிக் கொள்ளலாம். ஆனால் இந்திய மக்களிடத்தில் இவை அவ்வளவாக புழக்கத்தில் இல்லை என்பதால் தங்கத்தின் மதிப்பீடுதான் இலகுவாகத் தெரிகிறது.
ஈமான் கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட தவனையின் மீது உங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் செய்துக் கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் (எழுதக் கூடாது) என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ் அவனுக்கு கற்றுக் கொடுத்த முறைப்படி எழுதட்டும். யார் கடனை திரும்ப கொடுக்க வேண்டியுள்ளதோ அவனே பத்திர வாசகங்களை சொல்லட்டும். (அல் குர்ஆன் 2:182)
இந்த வசனத்திலிருந்து கடன் கொடுப்பவர் எழுத மறுக்கக் கூடாது என்பதையும், பத்திர வாசகங்களை கடன் பெறுபவரே சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் கற்றுத் தருகிறான். பத்திரம் எழுதட்டும் என்பதிலிருந்தே எழுதுவதற்கு முன் அது பற்றி இருவரும் கலந்துப் பேசிக் கொள்ளலாம் என்பது தெளிவாக தெரிகிறது.
எனவே தங்கத்தின் மதிப்பீட்டில் கடன் கொடுத்து திரும்ப பெறும் போது பெறும் தொகை தங்கத்தின் மதிப்பீட்டின் படி கொடுத்ததை விட அதிகமாக இருந்தால் அது வட்டியில் அடங்காது.
தங்கத்தின் மதிப்பை கருத்தில் கொள்ளாமல் பணத்தின் மதிப்பீட்டில் மட்டும் கடன் கொடுக்கப்பட்டிருந்தால் திரும்ப பெறும் போது பண வீக்கத்தை காரணம் காட்டி மேலதிகமாக பெற முடியாது. பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால் அது வட்டியாகி விடும்.
ஒருவரிடம் 10 ஆயிரம் கடன் கொடுக்கும் அதே வேளையில் பேங்கில் 10 ஆயிரத்தை வைப்பு நிதியாக போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். கடன் காரரிடமிருந்து கடனை திரும்ப பெறும் போது வைப்பு நிதியையும் எடுப்போம். இப்போது கடன் தொகையின் மதிப்பு தான் குறைந்திருக்கிறது. வைப்பு நிதியின் மதிப்பு குறையவில்லை என்று நாம் கூற மாட்டோம். இரண்டும் பணமாகவே இருப்பதால் இரண்டின் மதிப்பும் குறைந்துதான் போயிருக்கும். பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது என்று கடனாளியிடமிருந்து அதிகத் தொகையைப் பெற்றால் வைப்பு நிதியின் மதிப்பு குறைந்துள்ளதால் இங்கும் அதிகத் தொகை பெற வேண்டி வரும். தெளிவாக சொன்னால் வட்டியை ஹலாலாக்கும் சூழ்நிலை உருவாகும்.
பணம் கொடுத்து அதிகப்படியான பணத்தை பெறுவது வட்டி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. பணம் கொடுத்து அதிகப் பணத்தை பெறுவதற்கு பண வீக்கத்தையெல்லாம் காரணம் காட்ட முடியாது. அப்படி காரணம் காட்டினால் பெருவாரியான வட்டியை தடுக்க முடியாமலே போய்விடும்.
எனவே கொடுக்கல் வாங்கலோ, கடனோ அவற்றை தங்கத்தின் மதிப்பில் கணக்கிட்டு கொள்வதுதான் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.
o எதுவரை தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது?
கேள்வி. 02.: தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்பது எந்த இடத்தை குறிக்கிறது. ஸஜ்தா செய்யும் இடம் வரையிலா.. அல்லது அவருக்கு முன்னால் உள்ள பகுதி அனைத்துமா..?
பதில்: உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷெய்த்தானாவார் என்பது நபிமொழி. (அபூஸயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 509)
தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது நாட்கள் நின்றுக் கொண்டிருப்பது அவருக்கு நல்லதாக தோன்றும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (ஜுஹைம் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 510)
இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்து தொழுபவருக்கு குறுக்கே எந்தப் பகுதியிலும் செல்லக் கூடாது என்று சிலர் விளங்கிக் கொண்டு பள்ளியில் தடுமாறி நிற்பதை காண்கிறோம். முதல் ஹதீஸின் வாசகத்தையும் இது பற்றி வந்துள்ள இதர ஹதீஸ்களையும் பார்த்தால் குறுக்கே செல்லக் கூடாத பகுதி எது என்று தெளிவாகி விடும்.
முதல் ஹதீஸில் ‘தொழுபவர் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது” என்ற வாசகம் வந்துள்ளது. இதிலிருந்து தடுப்பு வைக்கப்பட்டிருந்தால் அந்த தடுப்பிற்கு உள்ளேதான் செல்லக் கூடாது என்பதை விளங்கலாம். அவர் தொழுவதற்கு முன்னாலுள்ள எந்த பகுதியிலும் செல்லக் கூடாது என்பது சட்டமானால் தடுப்பு வைத்துக் கொள்ளட்டும் என்பது அர்த்தமில்லாமல் போய்விடும். தடுப்பு வைக்காமல் தொழும் போது எந்த பகுதியிலும் கடந்து செல்லலாம் என்பதையும் இந்த செய்தியிலிருந்து புரியலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு முன்னால் தடுப்பு வைக்காமல் தொழுததில்லை. தடுப்பு வதை;துக் கொள்வதில் மிக கவனமாக இருந்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் ஒட்டகத்தை குறுக்கே தடுப்பாக நிறுத்தி அதை நோக்கி தொழுவார்கள் என்றும் ஒட்டகம் மிரண்டு நகர்ந்தால் அதன் மீதுள்ள சேனத்தை தடுப்பாக்கிக் கொள்வார்கள் என்றும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 507)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கைத்தடியை தடுப்பாக வைத்து பத்ஹா என்ற இடத்தில் தொழுதார்கள் என்று அபூ ஜுஹைஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 501)
பள்ளியில் உள்ள தூண்களை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம் (நூல்: புகாரி 502) கிடைக்கிறது.
சுவரை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம், ஈட்டியை நட்டி அதை தடுப்பாக்கி தொழுத விபரம் கிடைக்கின்றன (புகாரி 495,496,498,499)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைத்தடியை தடுப்பாக்கி பத்ஹாவில் தொழுதார்கள். அதற்கு முன் பெண்கள் நடந்து செல்லுவார்கள், கழுதைகள் கூட நடந்து செல்லும் என்று அபூ ஜூஹ்பா ரளியல்லாஹு அன்ஹு, அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 495, 499)
தொழும் திடலுக்கு வந்து ஈட்டியை முன்னால் நட்டி வைத்து பெருநாள் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழவைத்துள்ளார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 494)
இந்த ஹதீஸ்களிலிருந்து தடுப்பு வைப்பதன் அவசியத்தை உணரலாம். பள்ளிகளில் தடுப்பு இல்லாமல் தொழும் போது குறுக்கே செல்பவருடன் சண்டையிடுவது ஹதீஸுக்கு மாற்றமாகும்.
தடுப்பையும் கூட நாம் நினைத்த இடத்தில் வைத்துக் கொண்டு பிறருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது.
முதல் ஹதீஸில் தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தடுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லையில் தான் தடுப்பு வைக்க வேண்டும் என்பதை விளங்கலாம். நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லை கையை நீட்டி தடுக்கும் எல்லைதான். தெளிவாக சொல்லப் போனால் நாம் ‘ஸஜ்தா’ செய்யும் இடம்தான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழும் (அதாவது ஸஜ்தா செய்யும்) இடத்திற்கும் சுவற்றிற்கும் இடையே ஒரு ஆடு நடந்து செல்லும் இடமிருக்கும் என்று ஸஃது பின் ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 496)
பள்ளிகள் இல்லாமல் மற்ற இடங்களில் தொழ நேர்ந்தால் ஸஜ்தா செய்யும் இடத்திற்கு சற்று அருகில் தடுப்பு வைத்துக் கொண்டுதான் தொழ வேண்டும்.
உங்களில் ஒருவர் தமக்கு முன்னால் எதையாவது தடுப்பு வைத்துக் கொண்டு தொழட்டும். அதற்கப்பால் நடந்து செல்பவர் பற்றி அவர் பொருட்படுத்த வேண்டாம் என்பது நபிமொழி (அறிவிப்பாளர்: தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 334)
எனவே குறுக்கே செல்லக் கூடாது என்பது ஸஜ்தா செய்யும் இடத்திற்குள் செல்வதைதான் குறிக்கிறதே தவிர அதற்கப்பால் செல்வதையல்ல.
இதுவும் கூட முன்னால் தடுப்பு இருக்கும் பொது தான் பொருந்தும். தடுப்பு இல்லாமல் இருக்கும் போது எவராவது இந்த எல்லையை கடந்து சென்றால் செல்பவர் மீது குற்றமில்லை.
கேள்வி 03.:
ஐவேளை தொழுகை நடத்தப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்துவது கூடுமா?
: ஜும்ஆத் தொழுகை மட்டும் தொழுவதற்கென ஜமாஅத்தினர் ஓரிடத்தைத் தேர்வுசெய்து, அந்த இடத்தைக் குறிப்பிட்டு இன்ன இடத்தில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்படும் என்று மக்களுக்கு அறிவித்து, அங்குத் தொடர்ந்து ஜும்ஆத் தொழுகையை மட்டும் நடத்திக்கொள்ளலாம். இதற்கு மார்க்க ரீதியாகத் தடையேதும் இல்லை.
ஈமான் கொண்டோரே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் நல்லறிவுடையோராக இருப்பின் இதுவே உங்களுக்கு நன்மை பயப்பதாகும் (அல்குர்ஆன் 62:9).
“வெள்ளிக்கிழமை நாளில் ஜும்ஆத் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவுகூர தொழுமிடத்துக்குச் செல்லுங்கள்!” என இறைவசனம் உத்தரவிடுகின்றது.
ஜும்ஆத் தொழுகை நடத்தப்படும் இடம் பள்ளிவாசல் அல்லது கல்விக்கூடம், மண்டபம், திடல் போன்ற இடமாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட இடத்தில் ஜும்ஆத் தொழுகைக்கான அழைப்பை அறிவித்து, தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தி, உரைக்குப்பின் இமாமைப் பின்பற்றிக் கூட்டாக இரண்டு ரக்அத்கள் தொழுதிட வேண்டும். இதுவே ஜும்ஆத் தொழுகைக்கான நிபந்தனையாகும்.
“எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தாம் இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்கள்: புகாரி 335, 438 முஸ்லிம் 810, நஸயீ, அஹ்மத், தாரிமீ).
”எனக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இதில் இஸ்லாம் தடைசெய்துள்ள பிற மதத்தினர் வழிபடும் தெய்வங்களின் நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லாதிருப்பின் பள்ளிக்கூடத்தில் வாரத்துக்கு ஒருமுறை ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துவதைத் தவறென்று கூறமுடியாது! அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
கேள்வி 04:
மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..?
பதில்: ஹஜ்-உம்ராவிற்கு தவிர மற்ற அமல்களுக்கு நிய்யத் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை. நிய்யத் என்றால் என்னவென்று விளங்காததால்தான் நாம் நியத்தை வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.எனவே முதலில் அதை விளங்குவோம்.
‘இன்னமல் அஃமாலு பின்னிய்யத்”| என்பது நபிமொழி. (புகாரி)
எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்-என்பது இதன் பொருள். நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் நம் எண்ணத்தில் உதிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் நாம் தண்ணீர் குடிப்போம் இதுதான் நிய்யத் ‘நான் இப்போது தண்ணீர் குடிக்கப்போகிறேன்” என்று யாரும் வாயால் சொல்லி விட்டு தண்ணீர் குடிப்பதில்லை.
குடிப்பது-நடப்பது-தூங்குவது-பார்ப்பது-என்று நமது ஒவ்வொரு செயலும் நிய்யத் அடிப்படையிலேயே அமைகின்றன. வணக்க வழிபாடுகளுக்கான நிய்யத்தின் நிலையும் இதுதான்.
தொழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் ஒளுசெய்ய முடியும் தொழுகைக்கு தயாராக முடியும். இப்படி தயாரான பிறகு மீண்டும் நிய்யத் செய்கிறேன் என்பது அறிவுக்குப் பொருந்தாத மார்க்கத்தில் இல்லாத காரியமாகும். நிய்யத் செய்கிறேன் என்று அரபியிலோ தமிழிலோ சில வார்த்தைகளை கூறுவது நபி வழிக்கு மாற்றமான கட்டாயம் விட்டுத் தொலைக்க வேண்டிய செயலாகும்.
மன திருப்திக்காக செய்யலாமா..? என்பதுதான் ஷைத்தானுக்கு இடம் கொடுக்கும் வாதமாகும். தெளிவான ஒரு காரியத்திற்கு எதிராக மன ஊசலாட்டங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
நோன்பை பொருத்தவரை பஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட வேண்டும் என்று ஹதீஸ் வந்துள்ளது(திர்மிதி) எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் அமல் அவ்வளவுதான்.
கேள்வி 05.: பெண்களை பின் பற்றி ஆண்கள் தொழலாமா..? கூடாது என்றால் தெளிவான விளக்கம் தாருங்கள். ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..?
பதில்: பெண்களை பின் பற்றி ஆண்கள் தொழுத ஒரு சம்பவமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடக்கவில்லை. ஆண்களை பின் தொடர்ந்து ஏராளமான தொழுகைகளை பெண்கள் தொழுதுள்ளார்கள். இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது. பெண்களை பின்பற்றி ஆண்கள் தொழலாம் என்றால் அப்படி ஏதாவது ஒரு சம்பவம் இறைத்தூதர் காலத்தில் நடந்திருக்கும். அப்படி நடக்கவில்லை என்பதிலிருந்து அதை மார்க்கம் விரும்பவில்லை என்பதை விளங்கலாம்.
கேள்வி 06.:
ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..?
பதில்: ஒளுவிற்கு பிறகு மனைவியை தொட்டாலோ முத்தமிட்டாலோ ஒளு போகாது ஏனெனில் தொழுகையின் போது நபி அவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலி அவர்களை தொட்ட விபரமும் அதே போல் ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் கணவர் நபி அவர்களை தொட்ட விபரமும் புகாரி உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..?
கேள்வி 07: ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..? இரவு நேரத்தில் குளிப்பதற்கு கஷ்டப்படுவதால் பலர் மனைவியுடன் சேருவதில்லை. குளிக்க வேண்டும் – குளிக்கத் தேவையில்லை என்று இரு கருத்து நிலவுகிறது. எனவே இது சம்பந்தமான தெளிவு வேண்டும்.
பதில்: மனைவியுடன் சேர்ந்தோ அல்லது தூக்கத்தில் விந்து வெளிபட்டாலோ குளிப்பு கடமையாகிறது. இந்த குளிப்புக்கடமை என்ற சட்டம் தொழுகைக்குறியதாகும். நோன்பிற்கோ இதர நல்ல காரியங்களுக்கோ குளிப்புக் கடமையானவர் குளிக்கவேண்டும் என்று இஸ்லாம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு தயாரானால் ..(ஒளு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இறைவன் இங்கு விளக்குகிறான்… அதை தொடர்ந்து..) நீங்கள் குளிப்புக் கடமையானவராக இருந்தால் குளித்து சுத்தமாகிக் கொள்ளுங்கள்..என்கிறான்” (பார்க்க, குர்ஆன்: 5,6)
எனவே ரமளானில் மனைவியுடன் கூடி குளிப்புக் கடமையானால் அவரோ அவர் மனைவியோ ஸஹருக்கு முன் குளிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
‘இறை நம்பிக்கையாளர்களே! நோன்பின் இரவுகளில் உங்கள் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது…. எனவே (விரும்பினால்) நீங்கள் அவர்களோடு உறவுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதை தேடிக் கொள்ளுங்கள்….. இன்னும் பஜ்ர் வரை உண்ணுங்கள் பருகுங்கள்……” (குர்ஆன்: 2:187)
இந்த வசனத்தில் உறவு கொள்வது-உண்ணுவது-பருகுவது எல்லாம் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று அனுமதியளிக்கிறான் இறைவன். சிலர் சொல்வதுப் போல் உறவுக்குப் பின் குளித்து விட்டுதான் ஸஹர் செய்ய வேண்டும் என்பது சட்டம் என்றால் மூன்று காரியங்களும் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று இறைவன் கூறமாட்டான். இந்த வசனத்iதை ஆழமாக சிந்தித்தால் குளிப்புக் கடமையான நிலையிலேயே ஸஹர் செய்யலாம் நோன்பை தொடரலாம் என்பதை விளங்கலாம்.
ஸஹருக்கு அடுத்து பஜ்ர் தொழுகை இருப்பதால் – தொழுகைக்கு குளிப்பு அவசியம் என்பதால்- கட்டாயம் குளிக்க வேண்டும். இது தொழுகைக்கான குளிப்புத்தானே தவிர நோன்புக்குறியதல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்து நோன்பை தொடர்ந்துள்ளார்கள். இதற்குறிய ஆதாரம் புகாரி-முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.
source: http://www.tamilmuslim.com/QA/