அமைதி மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், சமாதானத்தை விரும்பும் மார்க்கம். உடனே நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். இஸ்லாம் உலகெங்கும் பரப்பப்பட்டதே வாள் முனையில் தான் என்று சொல்லப்படும் போது அது எப்படி அமைதியான மார்க்கமாக இருக்கும்..? சமாதானத்தை விரும்பும் மார்க்கமாக இருக்கும்..?
இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளில் ஒன்றுபட விரும்பாதவர்களால் பரப்பப்பட்ட செய்தி இது.
இஸ்லாம் என்ற வார்த்தை “சலாம்” என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது. அரபி மொழியில் சலாம் என்றால் அமைதி, சமாதானம் என்று பொருள். அது மட்டுமல்ல, அதற்கு அடிபணிதல், அர்ப்பணித்தல் என்ற பொருளும் உண்டு. அதாவது இஸ்லாம் என்பது கடவுள் என்ற மகா சக்திக்கு அடிபணியும், அற்பணிப்பவர்கள் பின்பற்றும் சன்மார்க்கம் என்பது பொருள்.
மனித சமூகத்தில் அமைதி என்பது தானாக கிடைக்காது. சில நேரங்களில் அதற்காக சில வழிகளில் அடக்குமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது. இந்த உலகில் எந்த மனிதனும் அமைதியை தானாக சிந்தித்து செயல்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையோர் மனித சமுதாயத்தில் அடுத்தவர்களுக்கு பல வகைகளில் தொந்தரவையும், கஷ்டத்தையும் உண்டாக்குபவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடக்கி அமைதியை கொண்டு வர அடக்குமுறையை கையாள வேண்டியிருக்கிறது. அப்போது தான் தேசத்தில் அமைதியை, சமாதானத்தை தவழ விட முடிகிறது. அந்த அடிப்படையில் தான் நாம் காவல்துறையும், நீதித்துறையும் பெற்றுள்ளோம். சமாதானத்தை போதிக்கும் இஸ்லாம், அதே நேரத்தில் சமாதானத்திற்கு எதிராக ஊறு விளைவிப்பவர்களை அடக்க வேண்டும் என்று சொல்கிறது. அந்த வகையில் சமாதானத்தை, அமைதியை நிலை நாட்ட மட்டுமே அடக்குமுறை என்பது இஸ்லாத்தில் கையாளப்படுகிறது.
De Lacy O Leary என்ற வரலாற்று ஆசிரியர் தன்னுடைய “Islam at the cross road” புத்தகத்தின் 8-வது பக்கத்தில் என்ன சொல்கிறார் தெரியுமா..? “History makes it clear however, that the legend of fanatical Muslims sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fantastically absurd myth that historians have ever repeated.”
முஸ்லீம்கள் ஸ்பெயினை 800 வருஷங்கள் ஆண்டார்கள். ஸ்பெயினில் உள்ள முஸ்லீம்கள் ஒரு போதும் வாளின் முனையில் மற்றவர்களை மதமாற்ற ஒரு போதும் முயற்சித்ததில்லை. ஆனால் அதன் பிறகு ஸ்பெயினுக்கு வந்த கிறிஸ்துவர்கள் அங்குள்ள முஸ்லிம்களை அழிப்பதிலேய தன் நோக்கமாக கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு முன் அழைக்கும் பாங்கு என்ற வணக்க அழைப்பை வெளிப்படையாக செய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன.
1400 வருடங்களாக அரபு தேசத்தின் பிரபுக்களாக முஸ்லீம்கள் இருந்தார்கள். சில காலம் அரபு தேசம் பிரிட்டிஷாராலும், ஃப்ரெஞ்சுக்காரர்களாலும் ஆளப்பட்டாலும் நீண்ட நெடுங்காலம் ஆளப்பட்டது முஸ்லீம்களால் மட்டுமே. அந்த அரபு தேசத்தில் இப்போது இருக்கும் 14 மில்லியன் மக்கள் யார் தெரியுமா..? கிறிஸ்துவர்கள் அதாவது முந்தைய கிறிஸ்துவர்களின் வாரிசு வந்தவர்கள். அந்த நேரத்தில் வாளை பயன்படுத்தி இஸ்லாத்தை பரப்பியிருந்தால் அந்த 14 மில்லியன் மக்களில் ஒருவர் கூட கிறிஸ்தவராக இருந்திருக்க மாட்டார்கள்.
உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாடு இந்தோனேஷியா. மலேஷியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். மிக வேகமாக இஸ்லாம் பரவி வரும் ஒரு நாடு தென்னாப்பிரிக்கா. நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். எந்த இஸ்லாமிய படை இந்த நாடுகளுக்கு சென்று வாள்முனையில் இஸ்லாத்தை பரப்பியது..??
அவ்வளவு ஏன் வெளிநாடுகளைப்பற்றி பேச வேண்டும். நம் நாட்டிற்கே வருவோம். இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் முஸ்லீம்கள். அவர்கள் அப்போது நினைத்திருந்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முஸ்லிம் அல்லாதவரையும் மிரட்டி, அடிபணியவைத்து முஸ்லீமாக மாற்றியிருக்க முடியும். அப்படி செய்யவில்லை. அதனால் தான் நம் நாட்டில் இப்போது 80% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள். இஸ்லாம் வாள் முனையில் தன் மார்க்கத்தை பரப்பவில்லை என்பதற்கு இந்த 80% மக்களைத்தவிர வேறு யார் சாட்சியாக இருக்க முடியும்..??
இஸ்லாத்தின் இந்த அபரித வளர்ச்சிக்கு காரணம் கொலை வெறி பிடித்த வாளல்ல, அது கொண்ட கொள்கை தான்..!! இஸ்லாத்தின் உயரிய கொள்கை உங்களிடம், என்னிடம், அரேபியர்களிடம் என்று யாரிடமிருந்தும் கற்க வேண்டிய அவசியமில்லை. அதன் ஆதாரமாக விளங்கும் புனித அல்குர்ஆனிலிருந்து கற்க வேண்டும். இஸ்லாத்தின் கொள்கைகளை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எடுத்துச்சொல்வது பற்றி அல்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா..?
உங்களுடைய இறைவனின் கருணையை கொண்டு அனைவரையும் வரவேற்று அழைத்து அழகான முறையில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதற்கான தர்க்கங்களில் மிகவும் சிறப்பான, கனிவான முறையில் ஈடுபடுங்கள் என்று சொல்கிறது.
1984- வெளிவந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் “அல்மனாக்”-ல் 1934 முதல் 1984 வரையிலான அரை நூற்றாண்டில் பெரும்பான்மையான மதங்களின் வளர்ச்சிபற்றிய ஒரு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது. அதில் 235% அளவில் இஸ்லாம் அசுர வளர்ச்சி பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்துவ மதம் அதில் 47% வளர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அரை நூற்றாண்டு கால கட்டத்தில் எந்த போர் நடைபெற்று, எந்த முஸ்லீம்களால் இத்தனை மில்லியன் கணக்கானோர் முஸ்லீம்களாக மாற்றப்பட்டனர்..? உங்களுக்கு தெரியுமா..? ஒரு நேரத்தில் இஸ்லாம், முஸ்லீம் என்றால் எதிரியைப் போல் கண்ட அமெரிக்காவில், ஐரோப்பிய தேசத்தில் இஸ்லாம் மிக வேகமாக வளரும் சமயங்களில் முதலாவதாக இருக்கிறது. அங்கு இதற்கு காரணமாக யார் வாளை பயன்படுத்தினார்கள்..?
டாக்டர் ஜோசஃப் ஆதம் பியர்சன் சொன்னார்; “நியூக்ளியர் அணு ஆயுதம் அரபுக்களின் கைகளுக்கு வந்து உலகை அவர்கள் ஆளும் நிலைக்கு வந்து விடுமோ என்று பயப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை அறியவில்லை. அதை விட சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் முன்பே இஸ்லாம் என்ற பெயரில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்த அன்றே கிடைத்துவிட்டது.”