பள்ளிவாசலில் பெண்கள்: மத்ஹப்பின் பார்வையில்!
அப்துர்ரஹ்மான் மன்பஈ
இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்களான அபூயூசுஃப், முஹம்மது ஆகியோரின் கூற்றுப்படி வாலிபப் பெண்கள் ஜமாஅத் தொழுகைக்கு வருவது பொதுவாக வெறுக்கத்தக்கதாகும். விரும்பத்தகாத ஏதும் நிகழ்ந்து விடுவது பற்றிய அச்சத்தையே அவர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.
அதே சமயம் முதிய பெண்மணி ஃபஜ்ர், மக்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளில் கலந்து கொள்வதை இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறைகாணவில்லை.
மாலிக்கி மத்ஹப் அறிஞர்கள் கூற்றுப்படி; ஆண்களின் இச்சைக்கு ஆளாகும் பருவத்தை தாண்டிய பெண்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவது ஆகுமானதே! அதே போல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வாலிபப் பெண் வருவதும் ஆகுமானதே! விரும்பத்தகாத பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படும் பெண்மணி பொதுவாக (எந்த வயதாக இருந்தாலும்) வரக் கூடாது.
ஷாஃபிஈ, ஹன்பலீ மத்ஹபு அறிஞர்கள் கூறுவதாவது: வாலிபப் பெண்ணாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழகும் நல்ல தோற்றமும் உள்ள பெண் ஆண்கள் தொழும் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது வெறுக்கத்தக்கதாகும். அவள் தனது வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும்.
மற்ற பெண்கள் நறுமணம் பூசாமல் கணவனின் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம். ஆயினும் அவள் வீட்டில் தொழுவதே சிறந்தது. (ஆதாரம்: அல்ஃபிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லத்துஹு (மத்ஹப் நூல்களை மேற்கோள்காட்டி) பாகம்: 2 பக்கம்: 321)
நாம் இதுவரை கண்ட மத்ஹபு அறிஞர்கள்களின் கூற்றுக்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுவதை மொத்தத்தில் தடை செய்யவில்லை. மாறாக தவறான பார்வைக்கு ஆளாகிற நிலையிலே ஆண்களின் கவனத்தை திருப்புகிற விதத்திலே வருவதைத் தான் வெறுத்தும் தடுத்தும் இருக்கிறது.
ஹதீஸ்களும் இந்தக் கருத்தை உள்ளடக்கித்தான் உள்ளன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பெண்கள் அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளுக்கு வருவதை தடை செய்யாதீர்கள் அவர்கள் மஸ்ஜிதுக்கு வரும்போது நறுமணம் பூசாதவர்களாக வரட்டும். (நூல்: தாரமீ 1326, இப்னு ஹிப்பான், முஸ்னத் அபீயஃலா)இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு நறுமணம் பூசாதவர்களாக வரவேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறார்கள். ஏனென்றால் நறுமணம் பூசி வருவது ஆண்களின் கவனத்தைத் திருப்பும்.
இதிலிருந்து ஆண்களின் கவனத்தை திருப்பும் எந்த நடவடிக்கையும் பள்ளிவாசலுக்கு வருகிற பெண்களிடத்திலே இருக்கக்கூடாது என்பது புலனாகிறது.
உங்களில் ஒரு பெண் பள்ளிவாசலுக்கு வந்தால் நறுமணம் தொட வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு கூறினார்கள் என ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : முஸ்லிம் 674)
பெண்கள் பள்ளிவாசலில் தொழும் ஒழுங்குகளில் பள்ளிக்கு வரும்போதும் வெளியேறும் போதும் ஆண்களுடன் கலக்கக்கூடாது என்பது முக்கியமான ஒன்றாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸலாம் கூறியவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபியவர்கள் எழாமல் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) அமர்ந்து கொண்டிருப்பார்கள் என்று உம்முஸலாமா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
தொழுது திரும்பும் ஆண்கள் பெண்களை அடைவதற்கு முன்பே அப் பெண்கள் சென்று விட வேண்டுமென்பதற்காகவே இப்படி நடந்ததாக நாம் கருதுகிறோம் (நூல்: புகாரி 793, ஷரஹுஸ் ஸுன்னா)
ஜமாஅத்தாக தொழுது கொண்டிருக்கும் போது இமாமுக்கு ஏதேனும் மறதி ஏற்பட்டால் அதை பின்னாலிருப்பவர்கள் தஸ்பீஹ் சொல்வது மூலம் சுட்டிக் காட்ட வேண்டும். இது ஆண்களுக்குத்தான். பெண்கள் சப்தத்தை உயர்த்தி கூறுவதையும் மார்க்கம் ஆதரிக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பந்தில் தஸ்பீஹ் ஆண்களுக்கு, கை தட்டுதல் பெண்களுக்கு என்ற நபி மொழிப்படி (புகாரி 1128) செயல்பட வேண்டும்.
ஆண்களின் பார்வையிலிருந்து பெண்கள் விலகியே இருக்க வேண்டும் பள்ளிவாசல்களில் கூடுதல் பேணுதலுடன் இருக்க வேண்டும்.
ஆண்களின் தொழுகை வரிசைகளில் மிகச் சிறந்தது முதல் வரிசையாகும் அவற்றில் மிக மோசமானது கடைசி வரிசையாகும். பெண்களின் தொழுகை வரிசைகளில் மிகச் சிறந்தது கடைசி வரிசையாகும் அவற்றில் மிகமோசமானது முதல் வரிசையாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (நூல்: முஸ்லிம் 664)