டாக்டர் ஜாகிர் நாயக்
o இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்?.
o திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது – பொட்டு வைப்பது – தாலி அணிந்து கொள்வது போன்று, திருமணமான இஸ்லாமிய பெண்கள் – நெற்றியில் பொட்டு வைப்பதோ – தாலி அணிந்து கொள்வதோ இல்லையே. ஏன்?
o முஸ்லிம்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, இந்தியாவில் வாழ்ந்து மறைந்த அக்பர் பேரரசரின் பெயரை எதற்காக சொல்கிறீர்கள்?.
கேள்வி எண்: 4. இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்?.
பதில்: 1. மனித உடலில் உள்ள ஆக்கக்கூறுகள் மண்ணிலும் இருக்கின்றது. மனித உடலில் காணப்படும் தனிமப் பொருட்கள் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ மண்ணிலும் இருக்கின்றது. ஆகவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது அறிவியல் ரீதியாக மிகச் சிறந்ததாகும். அவ்வாறு செய்வதால் இறந்து போன உடல் மிக எளிதாக மட்கிப் போய், மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.
2. சுற்றுப்புறச்சூழல் மாசுபடுத்தப் படுவதில்லை. இறந்த உடலை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட காற்று, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பதால், சுற்றுப்புறச் சூழல் மாசு படுத்தப் படுவதில்லை.
3. சுற்றியுள்ள நிலம் வளம் பெறுகிறது: இறந்து போன உடலை எரிப்பதற்கென ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பூமியின் பசுமைத் தன்மை குறைந்து வருகிறது. அத்துடன் மேற்படி செயல் சுற்றுப் புறச் சூழலுக்கு தீங்காக அமைவதுடன், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இயற்கைச் சூழலும் பாதிப்படைகிறது. ஆனால் இறந்து போன உடல் மண்ணில் புதைக்கப்படுவதால், ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படுவதுடன், புதைக்கப்படும் இடத்தை சுற்றியுள்ள நிலமும் வளம் மிக்கதாக மாறி சுற்றுப் புறச் சூழலையும் மேம்படுத்துகிறது.
4. மிகக் சிக்கனமானது: இறந்து போன உடலை எரிப்பதற்கு, குவிண்டால் கணக்கில் விறகுகள் வீணாக்கப்படுகின்றது. இந்தியாவில் இறந்து போன உடலை எரிப்பதற்கு மாத்திரம் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்படுகிறது. ஆனால் இறந்து போன உடலை, மண்ணில் புதைக்க மிகக் குறைந்த செலவுதான் ஆகும். எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது, மிகச் சிக்கனமானது.
5. இறந்து போன உடல்களை புதைப்பதற்காக மீண்டும், மீண்டும் ஒரே நிலத்தை பயன்படுத்தலாம். இறந்து போன உடலை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விறகுகளை, மீண்டும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இறந்து போன உடலை எரிக்கும்போது விறகுகள் சாம்பலாகி விடும். ஆனால் இறந்து போன உடலை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலத்தையே – மீண்டும் சில வருடங்கள் கழித்து வேறொரு உடலை புதைக்க பயன்படுத்த முடியும். ஏனெனில் புதைக்கப்பட்ட மனித உடல் மக்கி, மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.
கேள்வி எண்: 5. திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது – பொட்டு வைப்பது – தாலி அணிந்து கொள்வது போன்று, திருமணமான இஸ்லாமிய பெண்கள் – நெற்றியில் பொட்டு வைப்பதோ – தாலி அணிந்து கொள்வதோ இல்லையே. ஏன்?
பதில்: 1. பொட்டு (“பிந்தி”) அல்லது திலகம் (“திக்கா”) “பிந்தி” என்கிற ஹிந்தி வார்த்தை புள்ளி என்று பொருள் தரக்கூடிய (“பிந்து”) என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. வழக்கமாக இந்த வட்ட வடிவ பொட்டு குங்குமப் பொடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஒளிமிக்க குங்குமத்தை இந்து மதத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள்.
10 மேற்படி “பிந்தி” இந்துக்கள் பெண்கடவுளாக எண்ணி வழிபடும் பார்வதியின் அடையாளமாக – இந்துக்களால் கருதப்படுகிறது. மேற்படி பொட்டு பெண்களின் சக்தியாகவும், அந்த சக்தி மணமான பெண்களையும், அவர்களது கணவர்களையும் பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது. மேற்படி பொட்டு திருமணமாக பெண்களுக்கு அடையாளமாக கருதப்படுவது இந்துக்களின் கலாச்சாரமாகும். இதனை நெற்றித் திலகம் என்றும் அழைக்கின்றனர்.
2. பொட்டு அல்லது திலகம் அணிவது நாகரீகமாகி வருகிறது. இன்றைய கால கட்டத்தில் பொட்டு அல்லது திலகம் அணிவது நாகரீமாகி வருவதுடன், திருமணம் ஆகாத பெண்களும் பொட்டு அணிவது வழக்கத்திலிருக்கிறது. அதன் வட்ட வடிவ அமைப்பு உட்பட இப்போது பல வடிவங்களாக – உதாரணத்திற்கு நட்சத்திர வடிவிலும், இதய வடிவிலும் – உள்ளது. அதன் வர்ணமும் சிவப்பு நிறம் தவிர, நீல நிறத்திலும், பச்சை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் உள்ளது. குங்குமம் என்கிற பொடி வடிவம் தவிர, பல வடிவங்களிலும் கிடைக்கிறது. உதாரணத்திற்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர் வடிவிலும், பிளாஸ்டிக் ஸ்டிக்கர் மற்றும் கண்ணாடியும் இணைந்த கலவையாகவும் கிடைக்கிறது.
3. மாங்கல்யம் அல்லது தாலி. மாங்கல்யம் அல்லது தாலி என்பது நல்லெண்ணத்தோடு அணியப்படும் ஒரு அணிகலன் ஆகும். திருமணம் ஆகிவிட்டது என்பதன் அடையாளச் சின்னமாக பெரும்பாலான இந்து பெண்கள் தங்கள் கழுத்தில் அணியக் கூடிய ஆபரணம் மாங்கல்யம் ஆகும். இரட்டைவட கருப்பு நிற பாசி மாலையும், அதன் நடுவில் தொங்கும் தங்கத்தால் ஆன பதக்கமும் இதன் வடிவமைப்பாகும். மாங்கல்யத்தில் இருக்கும் கருப்பு நிற பாசிகள் தீமையிலிருந்து தங்களை பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையில் மாங்கல்யம் அணியப்படுகிறது. தவிர தங்களது கணவரையும், தங்களது திருமணத்தையும் மேற்படி மாங்கல்யம் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையிலும் அணியப்படுகிறது. தென்னிந்தியாவில் மாங்கல்யத்தை – தாலி – என்று அழைக்கின்றனர். மேற்படி தாலி – ஒரு தங்கத்தால் ஆன பதக்கம், மஞ்சள் நிற நூல் சரடிலோ அல்லது தங்கச் சரடிலோ இணைக்கப்பட்டிருக்கும்.
இந்து மதத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் தாலியை அல்லது மாங்கல்யத்தை ஒருபோதும் தங்களது கழுதிலிருந்து கழற்றுவதில்லை. கணவரை இழந்த பெண்கள் விதவையாகும்போது மட்டுமே மேற்படி தாலி அல்லது மாங்கல்யம் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும்.
4. அல்லாஹ்வே அனைவரையும் பாதுகாப்பவன்: படைத்த அல்லாஹ்வே, மனிதர்களை பாதுகாக்கவும் போதுமானவன். நம்மை தீமையிலிருந்து பாதுகாக்க சிவப்பு நிற குங்குமமோ அல்லது கருப்பு நிற பாசிகளோ தேவையில்லை. அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்-ஆம் -ன் 14வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“(நபியே!, நீர் கூறுவீராக!) வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலான எடுத்துக் கொள்வேனா?.” (அல்குர்ஆன் 6:14) தவிர மேற்படி கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் பிற அத்தியாயங்களிலும் உள்ளது: குறிப்பாக அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் மூன்று ஸுரத்துல் ஆல-இம்ரானின் 150வது வசனமும், அத்தியாயம் இருபத்தி இரண்டு ஸுரத்துல் ஹஜ்ஜின் 78வது வசனமும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றன:
‘அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.”
தாலி அணிவதும், பொட்டு வைப்பதும் நம்மைப் படைத்து பரிபாலித்து, பாதுகாக்கும் அல்லாஹ் மீது நம்பிக்கை இல்லை என்பதையே உணர்த்துகிறது.
5. இஸ்லாமிய ஆடை முறைகளுக்கு எதிரானது: தாலி அணிவதும், பொட்டு வைப்பதும் இந்துப் பெண்களுக்கு உரிய அடையாளம். இஸ்லாமிய ஆடைமுறை – மாற்று மதத்தவர்கள் சில முக்கியத்துவம் கருதி அணிகின்ற எந்த முத்திரையையும், அல்லது எந்த அடையாளத்தையும் – இஸ்லாமியர்கள் அணிவதை ஒருபோதும் அனுமதிப்பது இல்லை.
6. திருமணம் ஆன பெண்களாக இருந்தாலும், திருமணம் ஆகாத பெண்களாக இருந்தாலும் – பெண்கள் கேலி செய்யப்படுவதை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. திருமணம் ஆன பெண்கள் தாலி அணிவதால் திருமண ஆன பெண் என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்வதற்கு ஏதுவாக இருப்பதோடு, அவர்கள் கிண்டலும், கேலியும் செய்யப்படுவதிலிருந்து தவிர்க்கப்படுவார்கள் என்று தாலி அணிவதின் பயனைப் பற்றி சொல்லும் போது எனது இந்து நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பெண்களும் – அவர்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் சரி, அல்லது அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லது அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, எந்த ஒரு பெண்ணும் கேலி செய்யப்படுவதையோ அல்லது கிண்டல் செய்யப்படுவதையோ இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
கேள்வி எண்: 6. முஸ்லிம்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, இந்தியாவில் வாழ்ந்து மறைந்த அக்பர் பேரரசரின் பெயரை எதற்காக சொல்கிறீர்கள்?.
பதில்: 1. இஸ்லாமியர்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, அக்பர் பேரரசரின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்கிற தவறான கருத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை நான் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டேன். நான் உரையாற்றத் துவங்குவதற்கு முன், முஸ்லிமல்லாத அமைச்சர் ஒருவர், இந்தியாவை முன்னேற்றியதில் இஸ்லாமியர்களின் பங்கு பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றும்போது – இந்தியாவை ஆண்ட மன்னர்களில் சிறந்தவர் அக்பர் பேரரசர். ஆகவேதான் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, அக்பர் பேரரசரின் பெயரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை உச்சரிக்கிறார்கள் என்றும், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டார். நான் உரையாற்றும்போது மேற்படி அமைச்சர் கொண்டிருந்த கருத்து, தவறு என்பதை விளக்கினேன்.
2. தொழுகைக்காக அழைக்கும்போது உச்சரிக்கப்படுகிற “அக்பர்” என்கிற வார்த்தைக்கும் – இந்தியாவை ஆண்ட மன்னர் அக்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொழுகைக்காக மக்களை அழைக்கும்போது உச்சரிக்கப்படுகிற ‘அக்பர்” என்கிற வார்த்தைக்கும் – இந்தியாவை ஆண்ட மன்னர் அக்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘அக்பர்” என்கிற அரபி வார்த்தை, மன்னர் அக்பர் இவ்வுலகில் பிறக்கும் முன்பிருந்தே, பல நூற்றான்டுகளாக இஸ்லாமியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
3. ‘அக்பர்” என்கிற அரபி வார்த்தைக்கு ‘மிகப் பெரிய” என்று பொருள். ‘அக்பர்” என்கிற அரபி வார்த்தைக்கு ‘மிகப்பெரிய” என்று பொருளாகும். தொழுகைக்காக மக்களை அழைக்கும்பொழுது உச்சரிக்கப்படுகின்ற ‘அல்லாஹுஅக்பர்” என்கிற வார்த்தைக்கு அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பொருள். எவருக்கும் அல்லது எதற்கும் இணையில்லாத மிகப் பெரியவனாகிய அல்லாஹ்வைத் தொழுவதற்கு வாருங்கள் என்று மக்களை அழைப்பதற்கு மேற்படி வார்த்தைகள் பயன் படுத்தப்படுகிறது.
தமிழாக்கம்: அபூ இஸாரா
source: http://www.readislam.net/portal/archives/2651
இன்ஷா அல்லாஹ் தொடரும்.