குழந்தைகளும் சினிமாவும்!
“சினிமா குறித்து பல்கலைக்கலகங்களில் எப்போதாவது பேசப்படலாம். ஆனால் அதற்குரிய கல்வி அந்தஸ்து தரப்படவில்லை. அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகள் நிகழும் இடங்களில் இக்கலை ஏற்புடையதாய் இல்லை. நம் இளைய தலைமுறை ஏதாவது ஒரு கலையின் அழகியல் குறித்து நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது சினிமாதான். ஆனால் பள்ளிப் பாடத்தில் சினிமா பற்றி எதுவுமே கிடையாது.
ஆனால் சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. துரதிஸ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான். மக்களின் மனப்பாங்கை கருத்துக்களை சினிமா உருவாக்குகின்றது. சினிமா குறித்து ரசனை மக்களிடம் இல்லை. அது அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சினிமா பற்றிய ரசனை, அறிவு அவர்களுக்கு நகர்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா என்னும் மாபெரும் சக்தியின் முன்பாக அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.
சினிமா கடந்த ஐம்பது ஆண்டுகளில் முக்கியமான சக்திவாய்ந்த கலையாக உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது. ஆனால் பண்பாட்டின் அங்கமாய் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என் இனிய நண்பர்களே! இசை, இலக்கியம், ஓவியம் பற்றி ஒன்றுமே அறியாதவரை கற்றறிந்தவராக ஏற்றுக்கொள்வீர்களா? இரு பெரிய பட்டங்கள் பெற்ற உங்களுக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றறிந்த மேதையாக உங்களை எல்லோரும் கருதுகிறார்கள். அது தவறு.
1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் முதன் முதலில் ஒளிதரும் பிம்பங்களை திரையில் காண்பித்த போது பிறந்தது ஒரு கலை மட்டுமல்ல அப்போது மனித மூளையில் உணர்வதற்கும் புரிந்துகொண்வதற்கும் ஒரு புதிய அமைப்புத் தோன்றியது என்பதுதான் உண்மையாகும். அதன் மூலம் மானுட வளர்ச்சிக்கான புதிய பாதை போடப்பட்டது. நல்ல இசை உணர்வுக்கு அடிப்படைச் சூழ்நிலையும் இசை உணர்வுக்கான மூலமும் இசையறிவும் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் இசையும் காதுகளை அதை ரசிப்பதற்கேற்றவாறு வளப்படுத்துகிறது, மாற்றுகிறது என்ற காரல் மார்க்ஸின் அற்புதுமான கூற்று சினிமாவுக்கும் பொருந்தும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் சினிமாவின் வளர்ச்சி அதை நிரூபித்துள்ளது.”
இது சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் சினிமா பொன்விழாவை பாடசாலைகளில் பல்கலைக்கலகங்களில் கொண்டாட வேண்டுமென விரும்பிய Bela Balazs என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சினிமாக் கோட்பாட்டாளர் ஒரு வரலாற்றுப் பேராசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியாகும். வளரும் தலைமுறையினருக்கு சினிமாவை ஏன் கற்பிக்க வேண்டும் என்பதற்கு இது வலிமையான ஆதாரமாகும்.
ஏன் சினிமாவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு எப்படியாவது ஆங்கிலத்தைக் கற்பித்து விட வேண்டுமென்று படாதபாடுபடுகிறோம் அல்லவா? அது ஏன்? இன்றைய நிலையில் தாய் மொழிமட்டும் ஒரு குழந்தைக்குப் போதாது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தால் தான் குழந்தையால் இந்த யுகத்தின் சவாலை எதிர் கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம். தாய் மொழி என்பது அன்றாட வாழ்வில் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவுகின்றது.
ஆங்கிலம் அந்நிய மொழி என்றாலும் அது படித்தவர்களுக்கு இரண்டாம் தாய்மொழியாகி விட்டது. ஆங்கிலம் இன்றி குழந்தை உயர்கல்வியை தெடர முடியாது. அறிவு சார்ந்த பல துறைகளில் நிபுனத்துவம் பெற முடியாது. ஆங்கிலத்தில் தான் எல்லாத் துறைகள் சம்பந்தமான நூல்களும் கூடுதலாக வெளிவருகின்றன. ஊர், மாவட்டம், நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி செயற்படவும் ஆங்கிலம் அத்தியவசியமாகின்றது. அவ்வாறே கணிதமும் நமது அன்றாட வாழ்வுக்கு நடைமுறைக்கு தேவைப்படுகின்றது. கடைக்காரனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கணக்கிடுவதிலிருந்து பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிதம் எல்லாத் துறைகளிலும் தீர்க்கமாக நிறைந்திருக்கின்றது. அவ்வாரே விஞ்ஞானமும் நம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை விந்தைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.
ஆனால் பண்பாடு (Culture) குறித்து குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கப்போகிறோமா? அவ்வாறு கற்பிப்பதற்கு என்ன வழிமுறைகளை செய்கின்றோம். உணவு, உடை, வாழ்வு முறை, பழக்கவழக்கங்கள் புறக்காரணிகளால் இவற்றில் ஏற்படும் தாக்கங்கள், மாற்றங்கள் குறித்த ஆய்வுதான் பண்பாடு ஆகும். பண்பாடு குறித்து ஒருவர் பயிலும் போது அதில் வரலாறு, அரசியல், நாடகம், இசை, சினமா, தொழிநுட்பம் எனப் பல விடயங்களை அறியமுடிகின்றது. குழந்தைகளுக்கு சினிமாவா? அப்படியென்றால், பிஞ்சு உள்ளத்தில் மோசமான காட்சிகள் எல்லாம் பதிவாகிவிடுமே என்று நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
நான் சினிமா பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்வது சினிமா என்ற கலையின் தோற்றம் வளர்ச்சி, அது உருவாக்கிய மாபெரும் கலைஞர்கள், 21ம் நூற்றாண்டின் அதிவேக தொழிநுட்ப வளர்ச்சியில் சினிமா எடுத்துள்ள பரிமானங்கள், டெலிவிஷன் செயற்கைக் கோள்கள் என்பவற்றின் வரலாற்றையும் அவற்றைக் காண்டுபிடித்த விஞ்ஞானிகள் அவற்றின் உபயோகம் போன்ற பல விஷயங்கள் குழந்தைகளின் வயது நிலைகளுக்கேற்ப விளக்கலாம்.
சினிமா எல்லோருடைய வாழ்வையும் விதிவலக்கின்றி ஆக்கிரமித்துள்ளது. சினிமா பார்த்தால் சீரழிந்து போவீர்கள் என்ற கோஷமெல்லாம் சீக்கிறமே படிந்து போய்விட்டன. சினிமா, வெறும் மகிழ்விப்புக் கலை மட்டுமல்ல. ஒரு பண்பாட்டு பதிவுகையாகவும் ஆவணமாகவும் கொள்ளத்தக்கனவாக ஒரு நூற்றாண்டையும் தாண்டி வளர்ந்து செல்கின்றது. வேறு எந்தக் கலையாலும் சாதிக்க முடியாத அளவுக்கு மக்களின் வாழ்வை ஆட்கொண்டு விட்டது.
ஆனால் பொதுவாக தொழில் நுட்பத்தை (முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த சினிமாவை), விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை நாம் தீமைகளின் பட்டியலிலே சேர்ந்து வந்திருக்கின்றோம். இந்த எதிர் மறைப் பார்வை எம்மைப் பின்னோக்கித் தள்ளுவதில் தான் வெற்றி கண்டுள்ளதே தவிர எம்மை அதன் பாதிப்பிலிருந்து விடுவிக்கவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. எதிரிகளின் செயற்படுத்தும் அந்தக் கமராவை நாம் செயற்படுத்தாமல் அந்தக் கலையை மாற்றியமைக்க முடியாது.
ரஷ்ய புரட்சியாளரான லெனின் தனது தீர்க்க தரிசனப் பார்வை “எல்லாக் கலைகளையும் விட சினிமா என்பது மிகவும் முக்கித்துவம் வாய்ந்த கலையாகும்” என்றார். அவர் கூறிய அந்த நூற்றாண்டு கடந்து இன்னும் சினிமா மற்றொல்லாக் கலைகளையும் விட விஞ்சியதாகவே இருப்பது சினிமா சக்தியை உணர்ந்தால் போதுமா? நமது புறத்தை வென்றெடுக்க அரசியல் சினிமா தீங்காகப்படுமானால் அகத்தை வென்றெடுக்க குழந்தை சினிமா தேவையாகும்.
குழந்தைகள் மனித உடலைத் தான்டிய சக்தியுடன் சாகசத்தில் ஈடுபடுவதையே குழந்தைகள் சினிமா என்று கருதுவதும் தவறு. குழந்தைகள் குறித்த திரைப்படங்கள் குழந்தைகள் பார்க்கும் படி எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. பல திரைப் படங்கள் குழந்தைகளுக்கு அபாயகரமானதாகவும் அழிவுகளுமானதாகவும் இருக்கும் கரணிகளாக பெற்றோர்களையே சித்தரிக்கின்றன, பெற்றோர்கள் தர்மம், வன்முறை நீக்கம் செய்து கொள்ளாதவரை உண்மையான சமூகத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது.
ஒரு சினிமா ஆய்வாளர் கூறுகின்றார். ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது. அவர்கள் அடைய வேண்டிய புரிதலை அறிவுரைப்பதற்கானது. திரையில் பல்வேறு அகலப்படல்களோடு மூச்சுத்தினறத் தவித்துக் கொண்டிருக்கும் அதே சிறுவர்கள் தான் நிஜத்தில் அவர்களின் இல்லங்களில் வசிக்கும் சாகசம் செய்யத் தெரியாத சிறுவர்கள் என்பதை உணரச் செய்வது அந்தச் சிறுவர்கள் நிகழ் பொம்மைகளைப் பார்க்காமல் சகமனிதனால் பாவிக்கச் சொல்லிக் கற்றுத் தருவது. இத்தனை படிநிலைகளைக் கடந்திருந்தால் தான் குழந்தை சினிமா என்பது சிறுவரை சென்றடையும் சாத்தியம் பெறும் அதுவரை பெரியவர்களுக்கு மட்டுமேயான காட்சிப் பாட நூல்தான் அது.
தனிமனித மாற்றமே சமுகமாற்றத்தின் விதை என்பதை அல் குர்ஆனும், சுன்னாவும், வலியுறுத்துகின்றன.
– ஏ.பி.எம். இத்ரீஸ்
source: http://idrees.lk/?p=710