o மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம்
o வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.
o துறவறத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.
o திருமணம் உறவை வெறுத்து ஆண்மை நீக்கம் செய்துகொள்ளவும் அனுமதியில்லை.
o தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டும் – வழிகளை நாடக் கூடாது.
o ஆணுடன் ஆணோ, பெண்ணுடன் பெண்ணோ உறவு கொள்ளவும் தடை.
மன அமைதிக்கு மனைவி அவசியம்:
நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சித்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன” (அல்குர்ஆன் 30:21)
மனிதன் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறான்.
அவற்றிலிருந்து அவன் மன அமைதி பெறுவதற்கு அவனது துணைவி பேருதவியாக இருப்பாள் என்று திருக்குர்ஆன் கூறி திருமண உறவின் அவசியத்தை விளக்குகிறது. மேலும் “நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்ககூடிய நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை” (அல்குர்ஆன் 40:61)
பகலில் உழைக்கும் மனிதனுக்கு இரவு என்பது அமைதி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பகலில் உழைப்பவன் இரவில் உறங்கி எழும்போது அவன் அமைதி பெறுகிறான். இது போல் மனிதனுக்கு வாழ்க்கைத் துணைவி அமைந்துள்ளாள்.
இவ்வுலக வாழ்வில் திருமணம் மனிதனுக்கு அவசியம் என்பதால் இவ்வுலகில் மனிதர்களுக்கு நல்வழிகாட்ட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் உட்பட அனைவரும் திருமணம் செய்துள்ளார்கள்.
“உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)
திருமண உறவைத் தவிர்க்க முடியுமானால் முதலில் அதை நடைமுறைப்படுத்திக் காட்ட சாத்தியமானவர்கள் இறைத் தூதர்கள்தான். ஆனால் திருமண உறவு தவிர்க்க முடியாதது என்பதால் இறைத் தூதர்கள் அனைவருக்கும் மனைவி மக்களை அல்லாஹ் கொடுத்துள்ளான்.
வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்:
மஹர் கொடுத்துத் திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்குமாறு இறைவன் கட்டளை விடுவது திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றது.
“உங்களில் வாழ்க்கைத்துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்” (அல்குர்ஆன் 24:33)
“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5065, முஸ்லிம் 2710)
துறவறத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை:
திருமணம் என்ற உறவை முறித்து விட்டு, துறவறம் செல்லவும் இஸ்லாம் தடை விதித்துள்ளது. துறவறம் மூலம் இறையருளைப் பெற முடியும் என்ற கருத்தை இஸ்லாம் மறுக்கிறது.
“உஸ்மான் பின் மழ்ஊன்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளிக்கவில்லை” (அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீ வாக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி (5074), முஸ்லிம் (2715)
மேலும் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டு தான் இறையருளை அடைய முடியும் என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இறையருளை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக மூன்று நபர்கள், கூடுதலாக வணக்கம் புரிய முடிவு செய்தனர். அதில் ஒருவர், இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இரண்டாம் நபர், ஒருநாள் விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்றார். மூன்றாவது நபர், நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்; ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்றார்.
இந்தச் செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிய வந்தபோது, “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடிந்தும் உள்ளேன் ஆகவே என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். (நூல்கள்: புகாரி 5063, முஸ்லிம் 2714)
திருமணம் உறவை வெறுத்து ஆண்மை நீக்கம் செய்துகொள்ளவும் அனுமதியில்லை:
திருமணம் உறவை வெறுத்தோ அல்லது திருமணம் செய்து கொள்ள வசதி இல்லாததாலோ ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
“நான் ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாமா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அவ்வறு செய்ய வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5075, முஸ்லிம் 2720)
தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டுமே தவிர வேறு வழிகளை நாடக் கூடாது:
ஒரு ஆணோ, பெண்ணோ குறிப்பிட்ட வயதை அடையும் போது இயற்கையாக அவர்களிடம் ஆசை உணர்வு ஏற்படும்.
இந்நேரத்தில் அந்த உணர்வை முறையான திருமணத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர விபசாரம், சுய இன்பம், ஓரினச் சேர்க்கை போன்ற வழிகளில் தீர்த்துக் கொள்ளக் கூடாது.
அல்லாஹ்வும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
“விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: (17: 32)
“விபசாரம் செய்பவன், விபசாரம் செய்யும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5578, முஸ்லிம் 100)
திருமண வயதை அடைந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படும் போது, அல்லது திருமணம் முடிந்தவர்கள் மனைவியை விட்டுப் பலமாதங்கள் பிரிந்து இருக்கும் போது அல்லது இதுபோன்ற வேறு நிலைகளில் இருப்பவர்களும் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டுமே தவிர வேறு வழிகளை நாடக் கூடாது:
“தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்” (அல்குர்ஆன் 23: 5-7)
தம் மனைவி அல்லது அடிமைப் பெண்களைத் தவிர மற்ற வழிகளில் இன்பம் பெறுபவன் பழிக்கப்பட்டவன், வரம்பு மீறியவன் என்ற இவ்வசனம் சுய இன்பத்தைத் தடை செய்துள்ளது. நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் தான் உலகில் முதன் முதலாக ஒரினச் சேர்க்கை என்ற கெட்ட பழக்கம் உருவானது. இந்தப் பழக்கமும் இஸ்லாத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும்.
“லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) “உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராக வெட்கக்கேடான காரியத்தையா செய்கிaர்கள்?” என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். “நீங்கள் பெண்களை விட்டுவிட்டு, இச்சைக்காக ஆண்களிடம் செல்கின்aர்கள்! நீங்கள் வரம்புமீறிய கூட்டமாகவே இருக்கிaர்கள்” (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 7: 80,81)
ஆணுடன் ஆணோ, பெண்ணுடன் பெண்ணோ உறவு கொள்ளவும் தடை:
இதைப்போன்று தற்காலத்தில் ஏற்பட்டுள்ள லெஸ்பியன் உறவுகள் (பெண்களுடன் பெண்களே கொள்ளும் உறவு) இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த உறவு முறைகளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார்கள்:
“ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்கவேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம் 565, அஹமத் 11173)