Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனதை ஓர்மைப்படுத்த சிலை வணக்கம் அவசியமா?

Posted on July 26, 2011 by admin

டாக்டர் ஜாகிர் நாயக்

(நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை)  

o இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை என்பதை இந்து பண்டிதர்களும் இந்து அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதன் வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஓர்மைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் பக்குவம் வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை. சரியா?

தண்ணீர் பல மொழிகளிலும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் வாட்டர் என்றும் – ஹிந்தியில் பாணி என்றும் – மலையாளத்தில் வெள்ளம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோலத்தான் கடவுளும் அல்லாஹ் என்றும் இயேசு என்றும் ராம் என்றும் அழைக்கப்படுகின்றனர். எனவே கடவுள்கள் அனைவரும் ஒன்றுதானே?.

o இந்து மதம் உலகில் தோன்றிய மதங்கள் எல்லாவற்றையும் விட பழமையான மதம். எனவே இந்து மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும். இல்லையா?

 

கேள்வி 1 :  இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை என்பதை இந்து பண்டிதர்களும் இந்து அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதன் வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் பக்குவம் வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை. சரியா?

பதில் :  மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்: மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்களே! மனிதன் கடவுளை வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் நிலை வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை என்பது சரியானது எனில், மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள்தான். ஏனெனில் இஸ்லாமியர்களாகிய நாங்கள் அல்லாஹ்வை வணங்கும்போது, மனதை ஒருமைப்படுத்த எங்களுக்கு சிலை எதுவும் தேவையில்லை என்பதை நான் உங்களுக்கு இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1. இடி இடிப்பது ஏன்? என்று குழந்தைகள் கேட்கிறது..!

ஒரு முறை இஸ்லாமிய ஆய்வு மையத்தில், நான் ஒரு இந்து சாமியாருடன் பேசிக் கொண்டிருந்தேன். “இடி இடிப்பது ஏன்?” என்று குழந்தைகள் கேட்டால், – “சொர்க்கத்தில் பாட்டியம்மா மாவு இடிக்கிறார்கள்,” என்று நாங்கள் சொல்வோம் என்றார். ஏனெனில் இடி போன்ற விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வயது அவர்களுக்கு இல்லை என்ற காரணத்தையும் சொன்னார். அதுபோலவே – கடவுளை வணங்கத் துவங்கும் ஆரம்ப கட்டத்தில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது என்றும் சொன்னார்.

இஸ்லாமிய மார்க்கம் பொய் சொல்வதை விரும்புவதில்லை. அது பொய் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் – பொய் சொல்வதை இஸ்லாமிய மார்க்கம் விரும்புவதில்லை. அதுபோல ஒரு தவறான செய்தியை நான் எனது குழந்தைக்கு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஏனெனில் குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்குச் சென்று – மின்னல் அடிக்கும்போது உருவாகும் அதீத வெப்பக் காற்றின் அதிர்வுதான் இடியின் சப்தம் என்று அறிவார்கள் எனில், ஆசிரியர் பொய் சொல்வதாக எண்ணிக் கொள்ளும். பின்னர் ஆசிரியர் சொன்னதுதான் உண்மை என்று அறிந்த பிறகு, தனது தந்தையை ஒரு பொய்யராக கருதும். குழந்தைகள் தங்கள் அறிவுக்கு எட்டாத சில விஷயங்களை புரிந்து கொள்ளமாட்டர்கள் என்று கருதுவீர்களேயானால், குழந்தைகளுக்குத் தவறான தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, குழந்தைகள் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில், எளிதான முறையில் பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு, உங்களது குழந்தை கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை எனில், உங்களுக்குத் தெரியாது என்று பதிலளிக்க கூடிய தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இன்றைய காலத்து குழந்தைகள் நீங்கள் சொல்லும் பதிலில் திருப்தி அடைந்து விடுவதில்லை. தெரியவில்லை என்கிற பதிலை எனது மகனிடம் சொன்னால், “அப்பா..! நீங்க ஏன் தெரிஞ்சிக்கக் கூடாது?.,” என்று அவன் அப்போதே திருப்பிகேட்டு விடுகிறான். மேற்படி கேள்வி உங்களை உடனடியாக அறிந்து கொள்ள வைப்பதுடன், நீங்கள் அறிந்ததை உங்கள் குழந்தைக்கும் அறிய வைக்கக் கூடிய வாய்ப்பையும் உருவாக்குகிறது.

2. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குத்தான் மனதை ஒருமைப்படுத்த சிலை தேவைப்படுகிறது -(இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பது முதலாம் வகுப்பிலும் அதேதான். இறுதி வகுப்பிலும் அதே நிலைதான்.)

ஆரம்ப நிலையில் கடவுளை வணங்க ஆரம்பிப்பவர்களுக்குத்தான் சிலை என்ற ஒன்று தேவைப்படுகிறதேத் தவிர, அதற்கு பிந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு கடவுளை வணங்க சிலை எல்லாம் தேவையில்லை – என்று சில பண்டிதர்கள் என்னை நம்ப வைக்க முயற்சித்திருக்கிறார்கள். இவ்வேளையில் நாம் ஒரு முக்கியமான உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும், அதன் அடிப்படையில் உறுதியாக இருந்தால்தான் – பின்வரும் காலங்களில், குறிப்பிட்ட அந்த விஷயத்தில் சிறந்தவராக விளங்க முடியும்.

இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதை ஆரம்ப பாடசாலையில் கற்றுக் கொள்ளும் மாணவன், பள்ளி இறுதி வகுப்பு சென்றாலும், அல்லது கணிதவியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றாலும், இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும் இல்லாதவனாகத்தான் இருப்பான். இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்து என்றோ அல்லது ஆறு என்றோ மாறுவதற்குரிய வாய்ப்பே இல்லை. பின்னர் அல்ஜிப்ரா, திரிகோணமெட்ரி, லோகோரிதம் – என்று கணிதவியலின் பல பிரிவுகளை கற்றுக் கொண்டாலும், இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும் இல்லாதவனாகத்தான் இருப்பான். ஆக ஆரம்ப பாடசாலையிலேயே ஆசிரியரிடமிருந்து தவறாக கற்றுக் கொள்ளும் மாணவன், எதிர்காலத்தில் எப்படி சிறந்த விற்பன்னராக விளங்க முடியும்?.

இந்து வேதங்களின் அடிப்படை கொள்கைகள் கடவுளின் தன்மையை பற்றிச் சொல்லும்பொழுது, கடவுளுக்கு எந்தவித உருவமுமில்லை என்று சொல்கிறது. எனினும் – இது பற்றிய உண்மையை அறிந்துள்ள இந்து அறிஞர்கள் – மக்களால் பின்பற்றப்படும் தவறான இந்த வழக்கத்தை ஏன் தடுக்க முனைவதில்லை?.

நீங்கள் ஆரம்பபாடசாலையில் படிக்கும் உங்களது பிள்ளைக்கு இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்று சொல்லித் தருவீர்களா?. அல்லது இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்து என்றோ அல்லது ஆறு என்றோ சொல்லித் தந்துவிட்டு, பின்னர் உங்கள் பிள்ளை பள்ளி இறுதி வகுப்பு முடித்த பிறகு இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்தோ அல்லது ஆறோ அல்ல. இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்குதான் என்கிற உண்மையைச் சொல்லித் தருவீர்களா?. இது போன்று யாரும் செய்யவே மாட்டோம். மாறாக உங்களது பிள்ளை தவறான பதிலளித்தால் அதனைத் திருத்தி, சரியான பதிலைச் சொல்லித் தருவோம். அவ்வாறான தவறுகளை திருத்தவில்லை என்றால், நீங்கள் உங்களது பிள்ளையின் எதிர்காலத்தை வீணடிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

 

கேள்வி எண்: 2.  தண்ணீர் பல மொழிகளிலும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் வாட்டர் என்றும் – ஹிந்தியில் பாணி என்றும் – மலையாளத்தில் வெள்ளம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோலத்தான் கடவுளும் அல்லாஹ் என்றும் இயேசு என்றும் ராம் என்றும் அழைக்கப்படுகின்றனர். எனவே கடவுள்கள் அனைவரும் ஒன்றுதானே?.

பதில் :  1. மிகவும் அழகிய பெயர்களுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே..! அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் ஸ{ரத்துல் பனீ இஸ்ராயீலின் 110வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது:

“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்: அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்: எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.” (அல்குர்ஆன் 17:110)

நீங்கள் அல்லாஹ்வை எந்தப் பெயரிலும் அழையுங்கள். ஆனால் நீங்கள் அழைக்கக் கூடிய பெயர், அழகிய பெயராக இருக்க வேண்டும். நீங்கள் அழைக்கக் கூடிய பெயர், மனதில் எந்த உருவத்தையும் பிரதிபலிக்கக் கூடாது. நீங்கள் அழைக்கும் பெயர், அல்லாஹ்வுக்கு மட்டும் பொருந்தக் கூடிய குணநலன்களை கொண்டதாக இருக்க வேண்டும்.

2. தண்ணீரை பல மொழிகளிலும், பல பெயர்களைக் கொண்டு அழைக்கலாம். ஆனால் தண்ணீர் அல்லாத ஒன்றை தண்ணீர் என்று எந்த மொழியிலும் அழைக்க முடியாது.

தண்ணீரை பல மொழிகளிலும் பல பெயர்களைக் கொண்டு அழைக்கலாம். உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் “வாட்டர் என்றும், தமிழில் தண்ணீர் என்றும், ஹிந்தியில் பாணி என்றும், அரபியில் மோயா என்றும், சமஸ்கிருதத்தில் அபாஹ் என்றும், சுத்தமான ஹிந்தியில் ஜல் என்றும், குஜராத்திய மொழியில் ஜல் அல்லது பாணி என்றும், மராத்திய மொழியில் பந்தி என்றும், கன்னட மொழியில் நீர் என்றும், தெலுங்கு மொழியில் நீரு என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் தண்ணீரை பல மொழிகளில், பல பெயர்களில் அழைக்கலாம்.

தினமும் காலையில் ஒரு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும் என அவரது நண்பர் அவரிடம் அறிவுறுத்தியதாக, என்னிடம் ஒருவர் சொல்வதாக வைத்துக் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவரால் அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. ஏனெனில் அவர் அந்த தண்ணீரைக் குடித்தால் அவருக்கு வாந்தி வருவதாகவும் தெரிவிக்கிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றி விசாரித்ததில், அந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும், துர்நாற்றம் அடிப்பதாகவும் தெரிவிக்கிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர் தண்ணீர் என்று எண்ணிக்கொண்டது, தண்ணீர் அல்ல, சிறுநீர் என்பது. ஆக தண்ணீரைத்தான் தண்ணீர் என்று சொல்ல முடியுமேத் தவிர, தண்ணீர் அல்லாத மற்றவைகளை தண்ணீர் என்று சொல்ல முடியாது.

உதாரணங்களை, உண்மைகளாக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு அறிவிலி கூட, தண்ணீருக்கும் – சிறுநீருக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்தவனாகத்தான் இருப்பான். சிறு நீரை, தண்ணீர் என்று அழைப்பவன் ஒரு மடையனாகத்தான் இருப்பான். அதுபோலத்தான் கடவுளின் சரியான தன்மைகளை அறிந்த ஒருவன், போலியான கடவுளரை மக்கள் வணங்குவதை காணும்போது, உண்மையான கடவுளுக்கும், போலியான கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கிறார்களே என இயல்பாகவே வியந்து போகிறான்.

3. தங்கத்தின் தரத்தை – பல மொழிகளில் பல பெயர்களால் அழைக்கப்படும் அதன் பெயர்களை வைத்து மதிப்பிடுவதில்லை. மாறாக தங்கத்தின் தரத்தை, உரைகல்லில் உரைத்துப் பார்த்துதான் மதிப்பிட வேண்டும்.

தண்ணீர் பல மொழிகளில், பல பெயர்களால் அழைக்கப்படுவது போல், தங்கத்தையும் பல மொழிகளில் பல பெயர்களில் அழைக்கலாம். உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் கோல்ட் என்றும், ஹிந்தியில் சோனா என்றும், அரபியில் தகப் என்றும் தங்கத்தை பல மொழிகளில் பல பெயர்களில் அழைக்கிறோம். இருப்பினும் யாராவது ஒருவர் தன்னிடம் உள்ள தங்கத்தை, உங்களிடம் விற்பனை செய்ய விரும்பினால், உடனே அவர் கொண்டு வந்துள்ள தங்கம் 24 கேரட்தான் என்று நீங்கள் நம்பி வாங்கி விடுவதில்லை. அதன் சரியான தரத்தை அறிய பொற்கொல்லரை தேடித்தான் செல்வீர்கள். பொற்கொல்லரும் தங்கத்தை உரை கல்லில் உரைத்து பார்த்து, அது தங்கம்தானா?. இல்லையா என்று அதன் தரத்தை உங்களிடம் தெரிவித்த பின்புதான் தங்கத்தை வாங்குவீர்கள். இல்லையா?. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல..” என்கிற பழமொழிக்கு ஏற்ப, மின்னும் மஞ்சள் உலோகத்தை எல்லாம், நாம் ஒருபோதும் தங்கம் என்று நம்பி வாங்கி விடுவதில்லை.

4. இறைத்தன்மையின் உரைகல் – ஸுரத்துல் இஃக்லாஸ்.

மின்னும் மஞ்சள் உலோகத்தை எல்லாம், நாம் ஒருபோதும் தங்கம் என்று நம்பி வாங்கி விடுவதில்லை. அதுபோல, எந்த தனி ஒருவர் கடவுள் என்று தன்னை அழைத்துக் கொண்டாலும், இறைத்தன்மை என்னும் உரை கல்லில் உரசிப் பார்க்காமல், அவரை நாம் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான இறைத்தன்மையின் உரைகல் அருள்மறை குர்ஆனின் 112வது அத்தியாயம் ஸுரத்துல் இஃக்லாஸ். அருள்மறை குர்ஆனின் 112வது அத்தியாயம் ஸுரத்துல் இஃக்லாஸ் கீழ்கண்டவாறு கூறுகிறது:

“(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் – அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (அவன்) எவரையும் பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.”(அல்குர்ஆன் – 112: 1-4)

5. எவரேனும் – மேற்குறிப்பிட்டபடி இறைத்தன்மைக்கு உரியவர் என்று தன்னை நிரூபித்தால் கடவுள் என்று அழைக்கலாம்:

எவராவது ஒருவர் தன்னை கடவுள் என்ற அறிவித்துக் கொள்கிறார் எனில், மேலே உள்ள நான்கு வரிகளில் குறிப்பிடப்பட்ட இறைத்தன்மைக்கு உரியவர் என்று தன்னை நிரூபித்துக் காட்டுவார்எனில், அவர் கடவுள் என்று அழைக்கப்படுவதற்கும், கடவுள் என்று வழிபடப்படுவதற்கும் தகுதியானவர் ஆவார்.

எவனாவது ஒரு பைத்தியக்காரன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடவுள் என்று அழைப்பான் (அவ்வாறு அழைக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) எனில் மேலே உள்ள நான்கு வரிகளில் குறிப்பிடப்பட்ட இறைத்தன்மைக்கு உரிய உரை கல்லில் உரைத்து பார்ப்போம்.

(1) “குல்ஹு வல்லாஹு அஹது” அல்லாஹ் – அவன் ஒருவனே.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் மாத்திரமா இறைத்தூதர்? இல்லை. அவர்களுக்கு முன்பு எண்ணற்ற இறைத்தூதர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

(2) “அல்லாஹு ஸமத்” அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேவையுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் பல துன்பங்களுக்கு உள்ளானார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் அல்லாஹ்வின் வலிமை மிக்க இறைத்தூதராக இருந்தாலும், அவர்கள் தமது 63 ஆம் வயதில் மரணமடைந்தார்கள். மதீனாவில் அடக்கமும் செய்யப்பட்டார்கள்.

(3) “லம்யளிது வலம் யுவ்லது” (அவன்) எவரையும் பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் பிறந்தார்கள் என்பதும் அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ், அவர்களின் தாயாரின் பெயர் ஆமினா என்பதும் நாம் அனைவரும் நன்றாக அறிந்த விஷயம். மேலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா என்ற மகளும், இபுறாகிம் ரளியல்லாஹு அன்ஹு என்கிற மகனும் இருந்தார்கள் என்பதும் நாம் அனைவரும் நன்றாக அறிந்த விஷயம்.

(4) “வலம்யகுல்லஹு – குஃபுவன் அஹது” – அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

உலகில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது மறாத அன்பு செலுத்தி, அவர்களை உயர்வாக மதித்து, அவர்கள் காட்டித்தந்த ஒவ்வொரு செயலையும் பின்பற்றி நடந்தாலும், ஒரு இஸ்லாமியன் கூட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை – இறைவன் – என்று ஏற்றுக் கொள்ள மாட்டான். இஸ்லாமியர்கள் அடிப்படை கொள்கையே “லாயிலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரஸ{லுல்லாஹ் – அதாவது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.” என்பதாகும். இஸ்லாமியர்கள் அனைவரும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது மாறாத அன்பு செலுத்தி, அவர்களை உயர்வாக மதித்து, அவர்கள் காட்டித்தந்த ஒவ்வொரு செயலையும் பின்பற்றி நடந்தாலும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும், அல்லாஹ்வின் தூதரும்தான், அல்லாஹ் அல்ல, என்பதை இஸ்லாமியர்களுக்கு உணர்த்த வேண்டி, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளையும், இந்த அடிப்படை கொள்கை பிரார்த்தனைக்காக அழைக்கப்படும்பொழுது, பிரார்த்தனை கூடங்களில் முழங்கப்படுகிறது.

6. நீங்கள் வணங்கும் தெய்வங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்: இறைத்தன்மைக்கு உண்டான உரை கல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இப்போது நாங்கள் உங்களுக்கு விளக்கி விட்டோம். இனிமேல் இந்த உரை கல்லை கொண்டு நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை உறுதி கொள்வது உங்களது வேலை.

 

கேள்வி எண்: 3.  இந்து மதம் உலகில் தோன்றிய மதங்கள் எல்லாவற்றையும் விட பழமையான மதம். எனவே இந்து மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும். இல்லையா?

பதில் :  1. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் பழமையானது. இந்து மதம் உலகில் உள்ள மதங்களில் எல்லாம் பழமையான மதம் என்பது தவறான வாதம். இஸ்லாமிய மார்க்கம்தான் உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் முதலாவதாக தோன்றியதும், பழமையானதும் ஆகும். இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மார்க்கம்தான் என்றும், அதனை தோற்றுவித்தது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என்றும் தவறான கருத்தினை மக்கள் கொண்டுள்ளனர். இஸ்லாமிய மார்க்கம் உலகம் தோன்றிய நாள் முதலாய் இருக்கிறது. ஆதி மனிதன் இப்பூமியில் காலடி பதித்த நாள் முதலாய் இஸ்லாமிய மார்க்கம் இவ்வுலகில் தோன்றிய மார்க்கமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை தோற்றவித்தது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ல. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வல்லோன் அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஆவார்கள்.

2. பழமையான மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு மதம் பழமையானது என்பதால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த மதமாகவும், மிகவும் தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோல் சரியானது அல்ல. இந்த அளவுகோல் எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு சுத்தமான குவளையில் தற்போது நிரப்பப்பட்டிருக்கும்

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விட, மூன்று மாதங்களுக்கு முன்னால் பிடிக்கப்பட்டு, (வீட்டில், குளிர்சாதன பெட்டிக்கு வெளியில்) திறந்து வைக்கப்பட்ட தண்ணீர்தான் சுத்தமானது என்று ஒருவர் சொல்வதை போன்று இருக்கிறது.

3. அதுபோல புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

அதுபோல ஒரு மதம் புதிதாக தோன்றியது என்கிற காரணத்தால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த மதமாகவும், மிகவும் தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோலும் சரியானது அல்ல. மூன்று மாதங்களுக்கு முன்னால் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், தற்போது பிடிக்கப்பட்ட கடல் தண்ணீரை விட சுத்தமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

4. ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால் அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ செய்யப்பட்டிருக்கக் கூடாது.

ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால் அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ செய்யப்பட்டிருக்கக் கூடாது. இறையுணர்வின் பிறப்பிடம், மற்றும் இறைக் கட்டளைகள் இறைவனிடமிருந்து வந்ததாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு உலகில் இருக்கும் வேதங்களில் அருள்மறை குர்ஆன் மாத்திரம்தான் அது அருளப்பட்ட விதத்திலேயே (மனித கரங்களால் எந்தவித மாறுதல்களும் செய்யப்படாமல்) பாதுகாக்கப் பட்டிருக்கிறது. மற்ற மதங்களின் வேதங்கள் யாவும், கூட்டப்பட்டும், குறைக்கப்பட்டும், இடைச்செருகல்கள் செருகப்பட்டும்தான் இருக்கிறது.

அருள்மறை குர்ஆனை மனனம் செய்த லட்சக்கணக்கான உலமாக்களின் மனப்பாட வடிவில் – அருள் மறை குர்ஆன் – அது அருளப்பட்ட வடிவில் – இன்றும் பாதுகாக்கப்பட்டு உள்ளது. அத்தோடு, நபித்தோழர் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள், தற்போது தாஷ்கன்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் உள்ள கொப்தாகி (KOPTAKI) அருங்காட்சியகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிகளோடு, நம்மிடம் உள்ள அருள்மறை குர்ஆனை ஒப்பிட்டு பார்த்தால், ஒரு சிறிய மாற்றத்தையும் காணவே முடியாது. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்: நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலானகவும் இருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 9:15)

5. பழமையான மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது பழமையான மதம் என்கிற அளவுகோல் சரியானது அல்ல. 1998 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டொயோட்டோ காரைவிட 19ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட கார்தான் சிறந்த கார், ஏனென்றால் அது பழைய கார் என ஒரு மனிதன் சொல்வது போன்றுதான் இதுவும். ஒரு சிறிய சாவியைக் கொண்டு காரை இயங்க வைக்கும் புதிய முறையை விட, ஒரு பெரிய இரும்பு கம்பியால் திருகி காரை இயங்க வைக்கும் பழைய முறை சிறந்தது என வாதிடுபவரை நாம் ஒரு முட்டாள் என்றுதான் கருதுவோம்.

6. அதுபோல புதிதாக தோன்றிய மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

அதுபோல ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது புதிதாக தோன்றிய மதம் என்கிற அளவுகோலும் சரியானது அல்ல. 1999 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 CC மாருதிகார், 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 5000 CC மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 SEL காரை விட சிறந்தது என்று சொல்வது போன்றுதான் இதுவும். இரண்டு வாகனங்களில் சிறந்தது எது என்று மதிப்பிட வெண்டுமெனில், வாகனங்களை பற்றிய முழு விபரங்களையும் அறிய வேண்டும். உதாரணத்திற்கு – வாகனங்களின் ஓடும் திறன், வாகனங்களின் பாதுகாப்புத் தன்மை, வாகனத்தில் உள்ள இயந்திரம் இயங்கும் திறன், அவைகள் செல்லும் வேகம், அவைகளில் உள்ள வசதி போன்ற வாகனங்களின் அனைத்து விபரங்களையும் ஒப்பிட வேண்டும்.

அவ்வாறு ஒப்பிட்டு பார்த்தால், 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 CC மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 SEL கார், 1999 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 CC மாருதிகாரை விட பன்மடங்கு சிறந்தது என்பது தெரிய வரும். 7. மனித குலத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் மதமே, சிறந்த மதமாகும். இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளுக்கு ஒரு மதம் தரும் நிரந்தர தீர்வுகள்தான், அந்த மதம் சிறந்த மதமாக கருதப்படக் கூடியதற்கு காரணமாக அமைய வேண்டும். எல்லா காலங்களிலும் பின் பற்றக் கூடிய அளவிற்கு, அந்த மதம் உண்மையான மதமாக இருக்க வேண்டும். இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளான மது மற்றும் போதைப் பொருள்கள், அதிக சதவீத்தில் உள்ள பெண்கள், கொடுந்தொல்லைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இனவெறி, சாதிப்பிரச்னை போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது இஸ்லாமிய மார்க்கம் ஒன்றே.

இஸ்லாமிய மார்க்கம் உண்மையான மார்க்கம் ஆகும். அதன் சட்டங்களும், தீர்வுகளும், எல்லா காலத்திற்கும் ஏற்புடையது. இன்று உலகில் உள்ள வேதங்களில் இஸ்லாமிய மார்க்கத்தின் வேதமான அருள்மறை குர்ஆன்தான் இன்றுவரை அதன் தூய்மையையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கப்பட்ட வேதமாக உள்ளது. அருள்மறை குர்ஆனின் நம்பகத்தன்மையும், தூய்மையும் அருள்மறை குர்ஆன் இறை வேதம்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. அத்துடன் எல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம் என்பதையும் நிரூபிக்கிறது.

உதாரணத்திற்கு – அருள்மறை குர்ஆன் – அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த அற்புதங்களுக்கு சவாலாக அமைந்தது. அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த கவிதை, எழுத்தாற்றல் போன்ற இலக்கியங்களுக்கும் சவலாக விளங்கியது. இன்றைய காலகட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கும் அருள்மறை குர்ஆன் ஓர் சவலாக அமைந்துள்ளது. அத்தோடு இஸ்லாமிய மார்க்கம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. இறைவனால் மனித சமுதாயத்திற்கு தரப்பபட்ட மார்க்கம்தான் இஸ்லாமிய மார்க்கம். இஸ்லாமிய மார்க்கம் மாத்திரம்தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய மார்க்கமும் ஆகும்.

தமிழாக்கம்: அபூ இஸாரா

source: http://www.readislam.net/portal/archives/2651

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

98 − = 93

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb