அபூ ஃபௌஸிமா, இலங்கை
[ ஏற்கனவே வலைதளங்களைப் பாவிக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இன்று மகத்தான சேவைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். தஃவாப்பணியில் ஈடுபட்டுள்ள எத்தனையோ இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வேலையை இன்று சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிலரது இம்முயற்சிக்கான பலன் அல்லாஹ்வின் பக்கமிருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அல்லாஹ் மனித இனத்திற்காகப் பூர்த்தியாக்கிய இஸ்லாம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் போய்ச் சேரக் கூடிய விதமாக இந்த வலைதளத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்றால் மிகையாகாது.
கவலைப்படவேண்டிய ஒரு விஷயம், இன்று அறிஞர்கள் சிலர் இத்தகைய வலைதளங்களையும் ஹராம் என்று ஃபத்வா கொடுப்பதுதான். புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை ஜீரணிக்க முடியாத சிலர் அவற்றை ஹராம் என்று சொல்லி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் எல்லா இடத்துக்கும் எல்லா நேரத்திற்கும் பொருத்தமானது என்பதை ஏனோ இந்தச் சிலர் எண்ணிப்பார்க்கிறார்கள் இல்லை.
இஸ்லாம் மார்க்கம் எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்று சொல்வதாகத்தான் அது அமையும் என்பதை ஏனோ இவர்கள் சிந்தனைக்கு எட்டுவதில்லை! இஸ்லாம் அப்படிக் குறுகிய வட்டத்திற்குள் அடங்குவதல்ல. அதுதான் மனித சமுதாயத்திற்கு எல்லாத் தேவைகளுக்கும் வழிகாட்டி. சிந்திப்பவர்களுக்கு அங்கே பதில் இருக்கிறது. சிந்தனையோட்டம் இல்லாத கிளிப்பிள்ளைகளுக்கு நம்மால் ஆவது ஒன்றுமில்லை.]
1923ம் ஆண்டு முதல் வானொலி நிலையம் அதன் ஒலிபரப்பை ஆரம்பித்த போது ஊடகவியலாளர்கள் சிலர் அதை ஒரு பிரமை என்றெண்ணி அலட்சியமாகப் பரிகாசம் செய்தார்கள். ஆனால் அது மிகக் குறுகிய காலத்திற்குள் துளிர்விட்டு இன்று வியப்பின் விளிம்பிற்கே நம்மை கொண்டு செல்லும் அளவிற்கு வளர்ந்து பூத்துக் குலுங்கி நிற்கிறது. வானொலிக் கருவிகளாக, பதிவு நாடாக்களாக, சினிமா, தொலைக்காட்சி, ராடார், கணணிகள் என்று வளர்ந்து இன்று ஒலி, ஒளி வலைதளங்கள் (ஐவெநசநெவ) என்று பரிணமித்திருப்பதைப் பார்க்கிறோம்.
நேரடி ஒலி, ஒளிபரப்புகள் மூலம் இன்று உலகின் ஒரு கோடியில் நடக்கும் நல்ல பல நிகழ்ச்சிகளையும், அனர்த்தங்களையும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே காணக் கூடியதாக உலகம் சுருண்டு கையடக்கத்திற்குள் வந்துவிட்ட விந்தையைப் பார்க்கிறோம்.
புதிய தொழில் நுட்ப விஞ்ஞானத்தை மறுப்பவர்கள், ஒதுக்குபவர்கள் ஊடகத்துறையில், அறிவியல்துறையில் தோல்வியாளர்கள் தான். அறிவுப்பூர்வமான ஆராய்ச்சிகள் மூலம் அனைத்துக்கும் பகுத்தறிவின் தாக்கத்தை மேம்படுத்தும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அதன் போதனைகளின்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு வலைதளம் என்பது அல்லாஹ் வழங்கியுள்ள ஓர் அறிவியல் அருட்கொடை என்றால் அது மிகையல்ல. அதை அழகான முறையிலே பயன்படுத்தினால் வலைதளம் மூலம் கோடிக்கணக்கான வீடுகளுக்கு செய்திகளை ஒரு விரலசைவின் மூலம் அனுப்பலாம், பெறலாம்.
தஃவாப்பணியில் ஈடுபட்டுள்ள எத்தனையோ இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வேலையை இன்று சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாளாந்தம் அறிஞர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் இப்படி இன்னோரன்ன தராதரங்களில் உள்ளவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலரது இம்முயற்சிக்கான பலன் அல்லாஹ்வின் பக்கமிருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அல்லாஹ் மனித இனத்திற்காகப் பூர்த்தியாக்கிய இஸ்லாம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் போய்ச் சேரக் கூடிய விதமாக இந்த வலைதளத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்றால் மிகையாகாது.
கவலைப்படவேண்டிய ஒரு விஷயம், இன்று அறிஞர்கள் சிலர் இத்தகைய வலைதளங்களையும் ஹராம் என்று ஃபத்வா கொடுப்பதுதான். புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை ஜீரணிக்க முடியாத சிலர் அவற்றை ஹராம் என்று சொல்லி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் எல்லா இடத்துக்கும் எல்லா நேரத்திற்கும் பொருத்தமானது என்பதை ஏனோ இந்தச் சிலர் எண்ணிப்பார்க்கிறார்கள் இல்லை.
ஒரு அறிஞரிடம் புகைப்படம் எடுத்தல் பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் கொடுத்த பதில் சிந்திக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையாகும்.
அவர் என்னதான் அப்படிச் சொல்லிவிட்டார்! இந்தக் கேள்வி மிகவும் பழையது என்று குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்து சொல்கிறார், முஸ்லிம்களை முஸ்லிமல்லாதவர்கள் முந்தி விட்டார்கள், இப்போது அவர்களுடைய செயற்கைக் கிரகங்கள் வானவீதியில் நீந்துகின்றன, அவற்றின் மூலம் இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு நகரத்தின் குறுக்குப்பாதையொன்றின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு வாசிக்கப்படும் பத்திரிகைச் செய்திகளைக்கூட அவர்களால் இக்கோள்களின் உதவி கொண்டு வாசிக்கலாம், அணிந்திருக்கும் சட்டையிலுள்ள பொத்தான்களை எண்;ணலாம், அதன் நிறத்தை, ஏன், அளவைக்கூடச் சொல்லலாம், இப்படி அவர்கள் உளவு பார்க்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள்! நாம், முஸ்லிம்கள், ஆச்சரியப்படுகின்றோம்! படிப்பினை பெறுகிறோமா என்றால் அதுதான் இல்லை.
ஆகா! இது யஹூதி, நஸாராக்களின் கண்டுபிடிப்புத்தானே, ஆகவே இவற்றைப் பாவிப்பது ஹராம்! ஃபத்வாக் கொடுக்க நான் முந்தி நீ முந்தியென்று முண்டியடித்துக் கொண்டு அறிஞர்கள்!
வலைதளங்கள் இன்று ஒரு வரப்பிரசாதம் என்று ஏன் குறிப்பிட்டேன் என்பதை இப்போதும் விளங்கிக் கொள்ள முடியாவிட்டால் அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பவே முடியாது! அவர்கள் தூங்கவில்லை, அவர்கள் தூங்குவது போல நடிக்கிறார்கள்!
‘குல்” “‘கூறுவீராக!” என்ற சொல் மட்டுமே அல்-குர்ஆனில் 527 முறைகள் பாவிக்கப்பட்டுள்ளது என்றால் நல்ல முறையிலே விவாதிப்பதையும் கருத்துப்பரிமாற்றத்தையும் அல்லாஹ் எவ்வளவுக்கு வலியுறுத்தியிருக்கின்றான் என்பதைச் சிந்திப்பவர் உணர்வர்.
ஏற்கனவே வலைதளங்களைப் பாவிக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இன்று மகத்தான சேவைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். மேற்கத்திய ஊடகங்களால் செய்யப்படும் பொய்ப்பிரசாரங்கள், முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைத்தூண்டுதல்கள் சம்பந்தப்பட்ட செய்திகளைப் பற்றிய உண்மை நிலைகளை வலைதளங்கள் மூலமாக சுட்டிக்காட்டிக்கொண்டும் கற்றவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட விசமப் பிரசாரங்களை கோடிட்டுக் காட்டியும் வருகிறார்கள். அறிஞர்கள் சிலர் சொல்லுவது போல வலைதளம் பாவிப்பது ஹராம் என்றால் எப்படிப்பட்ட ஒரு மிக உன்னதமான செய்திச் சாதனத்தை நாம் இழந்துவிட வேண்டி வரும்!
சிறிது பின்சென்று பார்ப்போமானால் மேற்கத்திய நாடுகளில், ஏன் சில ஆசிய நாடுகளில் கூட இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த விதமே தனி. ‘முஹம்மதியனிஸம்” என்றுதான் பத்திரிகைகளில் எழுதினார்கள். நமது கற்றறிந்த நல்லறிஞர்கள், அக்காலக் கட்டத்தில் தமக்கிருந்த செல்வாக்குகளை சில சமயங்களில் உபயோகித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாமாக ஒரு மதத்தைக் கொண்டு வரவில்லை, அல்லாஹ்தான் அவரைத் தனது தூதராகத் தெரிந்தெடுத்து அவர் மூலமாக ‘இஸ்லாம்’ எனும் மார்க்கத்தை மனிதகுலத்துக்கு பூரணமாக்கப் பட்ட மதமாகப் பொருந்திக் கொண்டான் என்று எழுதினார்கள்.
ஏறக்குறைய 1980களில்தான் ‘முஹம்மதியனிஸம்” என்ற சொல்லாட்சி விடுபட்டு இன்று அனைத்து மேற்கத்திய ஊடகவியலாளர்களும் மேற்குலக மக்களும் ‘இஸ்லாம்” என்ற பதத்தையும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்று நம்பியவர்களை “முஸ்லிம்கள் என்றும் குறிப்பிடத் தொடங்கினார்கள்.
பெரும் கருணையாளனான அல்லாஹ் அந்தக் கல்விமான்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு அவர்களின் மண்ணறை வாழ்வில் அமைதியையும் மறுமையில் நல்லடியார்களுக்கான மேன்மையான சுவர்க்கத்தையும் கொடுத்தருள்வானாக.
இவ்வலைதளங்கள் மூலம் நாம் இஸ்லாத்தைப் பற்றிப் பேசும் போது சரியானதைப் பேச, விவாதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதன் பிழை விடுபவன். சுட்டிக்காட்டப்படும்போது பெருந்தன்மையுடன் அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒரு பிழையான கருத்துத் தெரிவிக்கப்பட்டால் அக்கருத்துக்கான காரணிகளை விளக்க வேண்டும். பிழையைச் சரி செய்து கொள்ள வேண்டும்.
ஓர் ஆய்வில் உள்ள விடயத்தில் ஆய்வாளர் ஆய்வின் முடிவுக்கு முன்னால் குறித்துக் காட்டும் கருத்தைக் கூட சரமாரியாக விமர்சிக்கும் ஒரு கூட்டம் நம்மில் இல்லாமல் இல்லை. கடைசியாக ஆய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பே அந்த ஆய்வாளரை நிராகரிப்பாளர் என்று பத்வாக் கொடுக்கும் அறிஞர்களும் நம்மிடையே இருப்பதைப் பார்க்கிறோம்.
எனவே, அல்லாஹ்வின் படைப்பில் சிரேஷ்டமான மனிதன் அவனுக்கே விசேடமாகக் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவைக் கொண்டு கண்டுப்பிடிக்கப்படும் புதுப்புது தொழில் நுட்பங்களை எல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் ஹராம் என்று சொல்லி ஒதுக்கிக் கொண்டே போகிறார்கள். இஸ்லாம் மார்க்கம் எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்று சொல்வதாகத்தான் அது அமையும் என்பதை ஏனோ இவர்கள் சிந்தனைக்கு எட்டுவதில்லை!
இஸ்லாம் அப்படிக் குறுகிய வட்டத்திற்குள் அடங்குவதல்ல. அதுதான் மனித சமுதாயத்திற்கு எல்லாத் தேவைகளுக்கும் வழிகாட்டி. சிந்திப்பவர்களுக்கு அங்கே பதில் இருக்கிறது. சிந்தனையோட்டம் இல்லாத கிளிப்பிள்ளைகளுக்கு நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அல்லாஹ்தான் அவர்களுக்கு நல்லறிவைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, அல்லாஹ்வின் அருள்களை (நிஃமத்) மனிதன் அனுபவித்து அல்லாஹ்வுடைய சக்தியை உணர நம்மனைவருக்கும் அந்த அனைத்தையும் நுண்ணியமாக, துல்லியமாக அறிந்த அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
(குறிப்பு:- தன்னால் இயன்றவரை இதுதான் இஸ்லாம் வலைதளம் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் குறைகளை சுட்டிக் காட்டுவதுடன் அதன் பணி நீடிக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்).
source: www.tamilmuslim.com