பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும்
முனைவர் ஜி.பி. ஜெயந்தி
முதலில் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள்:
பெண் சுதந்திரம் என்றால் என்ன?
பெண்ணுக்கு எதற்காகச் சுதந்திரம் வேண்டும்?
எதற்கெல்லாம் பெண்ணுக்குச் சுதந்திரம் தேவை?
எப்பொழுதெல்லாம் தேவை?
எந்த அளவிற்குத் தேவை அதாவது அதன் எல்லை என்ன?
யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து சுதந்திரம் தேவை?
பெண் சுதந்திரம் என்கின்ற ஒரு சிந்தனை புதியது அல்ல. இது மிகவும் பழையது. பல இடங்களில் பல பேரால் அலசி ஆராயப் பட்டுள்ளது. இக்கேள்விக்கான விடைகளும் விளக்கங்களும் காலத்திற்குக் காலம் மாறுபடும். மனிதர்கள் கண்ணோட்டங்களில் மாறுபடும். புதுப்புது விதமான பாதிப்புகளும் நிகழ்வுகளும் இதற்கு ஓர் வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுக்கக்கூடும்.
நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது ஏற்பட்டதோ, அப்பொழுதே அடிமைத்தனம் என்ற சங்கிலியில் இருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம் நம்மில் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இது ஒரு நியாயமான எண்ணம் என்பதில் ஐயமே இல்லை என்பது ஒன்று கூடிய கரங்கள் அந்த நியாயப் போராட்டத்தில் அஹிம்சா வழியில் வெற்றி பெற்றது மூலம் பெறப்படுகின்றது.
மனித மனங்கள் எப்பொழுதும் முறை கேடான அடிமைத்தனம் என்ற களையினைக் களைவதையே விரும்புகின்றன என்பதும், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைக்காக நாம் நியாயமாகப் போராடுவதில் தவறில்லை என்பதும் நன்கு விளங்குகின்றது. தானாகவே கிடைக்கக்கூடிய ஒன்றிற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு போரிடுவதுமில்லை. இது மனித இயல்பு.
இதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மையானது – எப்பொழுது பெண் சுதந்திரம் என்ற கருத்து வெளிவரத் துவங்கி யதோ, அப்பொழுதே பெண் ஏதோ ஒரு இடத்தில் சிக்கியிருப்பதும், அதிலிருந்து அவள் விடுபடத் துடிப்பதும் புரிகின்றது. நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் காந்தியடிகள் காலத்திற்கு முன்னரே கூட தோன்றியிருக்க நியாயம் உள்ளது. ஆனால், இந்த உணர்வைத் தட்டி எழுப்ப நமக்கு ஒரு மகாத்மாவும் அவருடன் கரம் சேர்த்த மற்ற தலைவர்களும் தேவையானார்கள். அதுபோல, பெண்ணடிமை பல நூற்றாண்டுகளாத் தொடர்ந்து இருந்திருக்கலாம். அக்காலங்களில் பெண்கள் அதை அடிமைத்தனமாக நினைக்காமல் இருந்திருக்கலாம்.
ஆணும் தான் பெண்ணை அடிமையாக நடத்துவதாக எண்ணாமலே இருந்திருக்கலாம். பரஸ்பரம் இரு பாலரும் இதுதான் தம் எல்லை என்ற வரையறையோடு வாழ்ந்திருக்கலாம். மேலும், அந்தக் காலங்களில் பெண்களுக்குச் சுதந்திரம் என்ற ஒரு உணர்வு தேவை இருப்பதற்கே வாய்ப்பு இல்லாமல் இருந்ததும் மன்னர்கள் காலத்தில் அந்தப்புரங்கள் தேவையான வசதிகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. வேண்டும் என்ற தேவைக்கே இடமின்றி இருந்தன. சாதாரண மகளிருக்கும் இல்லறத்தை நல்லறமாக நினைத்து வீட்டோடு வாழ்ந்து வந்ததில் அவர்களுக்கும் எந்த மனச்சுணக்கமும் இருந்திருக்க முடியாது. கடந்த நூற்றாண்டு வரை மகளிர் நிலை ஏறக்குறைய இப்படியே இருந்தது. மொத்தத்தில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் அபரிமிதமாகவே இருந்ததைக் காணலாம்.
நாகரிகம் வளர வளர, பெண் வீட்டை விட்டு வெளியே காலடி வைக்கத் துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு, இந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி, இன்றைய காலக்கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. செயல்கள் வரவேற்கத்தக்க பல மாற்றங்களையும் தருவதைக் காண்கிறோம்.
கண்டிப்பாகப் பெண் சுதந்திரம் என்பது ஆண்பாலிடம் தான் சுதந்திரத்தை வேண்டுவது என்பது தெளிவாகின்றது. ஆண்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் தாமும் செய்யும் சுதந்திரம் வேண்டும் என்று எண்ணுவதாக இருக்கின்றது. இங்கு எந்த வகை ஆண்களிடம் சுதந்திரம் வேண்டும் என்பது முதலில் தெளிவாதல் வேண்டும். தன்னைப் பெற்றதந்தை, மணந்த கணவன், தான் பெற்றமகன், உடன் பிறந்த சகோதரன் என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல கட்டங்களில் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக என்று ஒரு பெண் பல விதமாக ஆண்பாலருடன் அவள் இணைந்து செல்லும் சூழ்நிலை அமைய வாய்ப்பு உள்ளது. இதனுடன், சமூகத்திலும் அவள் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆண்களுடன் சேர்ந்து செயல்படும் சூழல்கள் அமைகின்றன. அவளது சுயமான சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும், செயலாக்கத்திற்கும் இந்த ஆண்பாலரிடமிருந்து ஒரு தடை என்று வரும்பொழுதுதான் அவளது இயல்பான நிலைக்கு ஒரு முட்டுக்கட்டு ஏற்படுவதை உணர்கிறாள்.
பெண்ணுக்குச் சுதந்திரம் என்று சொல்லும் பொழுதே, அவள் முதலில் தன்னை ஓர் பணிக்கு – அது குடும்ப நிர்வாகமாக இருந்தாலும் – தகுதியாக்கிக் கொண்டு தான் அதற்காகப் போராடலாம் என்பது உண்மை. அவளது சிந்தனையும், குறிக்கோளும், திட்டங்களும் தெளிவாக இருத்தல் வேண்டும். இதற்கு நிகராக ஆண்களும் அதற்கு உறுதுணையாய் இருந்து அவள் காரியங்களில் கை கொடுக்க வேண்டும். சுதந்திரம் அளித்தல் என்பது அவர்களிடமிருந்து விலகுதல் என்பது அல்ல. இந்தச் சிந்தனையின் வெற்றிக்கு ஆண்களிடம்தான் அதிகமான எதிர்பார்ப்புகள், ஆதரவுகள் தேவைப் படுகின்றன – பெண் எண்ணங்களை மதித்தல், அடிப்படை யான இச்சிந்தனையை அங்கீகரித்தல், உடன் உதவுதல் – போன்றவை ஒரு ஆணிடம் இருந்தால் தான் பெண் சுதந்திரம் என்ற கருத்து வெற்றி பெறக்கூடும்.
ஒரு பேருந்துப் பயணம் நமக்கு வாழ்க்கையில் எத்தனை விஷயங்களைக் கற்றுத் தருகின்றது. ஒரு பெண் பேருந்தில் ஏறியதும், ஓர் ஆடவன் அருகில் மட்டும் ஓர் இருக்கை காலியாக இருந்தால், அப்பெண் எத்தனை முற்போக்கு சிந்தனை கொண்டவளாக இருந்தாலும் ஏன் உடனே அங்கே சென்று அமரத் தயங்குகிறாள்? அவள் சுதந்திரத்தை அந்த ஆடவனா பறித்துக் கொண்டான்? இதே நிகழ்ச்சி சில இடங்களில் வேறு விதமாக நிகழ்கிறது. அங்கே ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஓர் பாகுபாடு என்பது சாதாரணமாக நிகழ்வதில்லை. அப்பொழுது அந்தப் பெண் மிகவும் இயல்பாக அந்தக் காலி இடத்தில் சென்று அமர்கிறாள்.
திருமண விழாக்களில் பந்திகளில் பாருங்கள். ஓர் அந்நிய ஆடவன் அருகில் இடம் இருந்தாலும், ஓர் பெண் ஓர் இருக்கையாவது விட்டுத்தான் அமர்கிறாள். அவ்வாறு அடுத்த இருக்கையில் அமர்வது அவளுக்குச் சங்கடமா அல்லது அந்த ஆணுக்குச் சங்கடம் என்று அவள் நினைக் கிறாளா? இதுதான் நம் உள்ளே ஊறியுள்ள நமது பாரம்பரிய கலாச்சாரம். கேட்காமலே ஆண் சமூகத்திற்குச் செலுத்தும் ஓர் மரியாதை. யார் சொல்லியும் போராடியும் வரவில்லை இந்தப் பாரம்பரியம். அதுபோல் தான் வரவேண்டும் பெண் சுதந்திரம்.
அரசியலில் கூட முழுமையாகப் பெண் சுதந்திரம் பெறப்பட்டு, பெண் தலைமைகள் கூட வந்த பின்னர் இன்னும் பெண் சுதந்திரத்திற்குப் போராட அவசியமே இல்லை. பெற்றசுதந்திரம் ஆரோக்கியமான முறையில் பயன்பட வேண்டும்.
பெண் சுதந்திரத்தின் எல்லை நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் மாறுபடலாம். அதை நிர்ணயிக்க முடியாது. சுதந்திரம் கருத்தை வெளியிடுவதில் தேவைப்படலாம். அதற்கு உடன் உள்ள ஆண் அங்கீகாரம் தேவை. குழந்தை வளர்ப்பில் ஆண் என்றும் பெண் என்றும் பெரும்பாலும் பெற்றோர் பாகுபாடு காட்டாத பட்சத்தில், கல்வி அளிப்பதிலும் தற்போதைய காலத்தில் வேறுபாடு செய்யாத பட்சத்தில், இருபாலருக்கும், சிந்தித்துச் செயல்படும் பருவம் வந்ததும், அதை வெளிப் படுத்த, செயலாற்ற, இணையான சுதந்திரம் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் அச்சுதந்திரத்தை வெளிப்படுத்தலிலும் செயலாக்கத்திலும் வழி பிறழாது இருக்க நெறிப் படுத்தும் ஆலோசனை களும், அறிவுரைகளும் தேவைப்படுகின்றன. அதனைக் கண்டிப்பாக அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
ஊடகங்களிலும், பிரமிக்கத்த வகையில் பெண் சுதந்திரம் பரந்து பேசப்படுகின்றது; காணக் கிடக்கின்றது. ஆனால் அது கலாச்சாரக் கேட்டிற்கு வழி நடத்தாமல், சுணக்கமான வற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும். தமிழ் பேச்சினைத் தங்கள் மூச்சென்று நம்மைப் பிரம்மிக்க வைக்கும் பெண்களும், ராக மாளிகைகளில் அழகாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மங்கையரும், மக்கள் அரங்கங் களில் உண்மைகளையும் உயர் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் சிறுமியர் முதல் அனுபவம் பெற்ற முதிய மார் வரை இன்றைய நாளில் மங்கையர் உலகம் அடைந்துள்ள வளர்ச்சி நிச்சயம் இன்று இருந்தால் பாரதியைக் கூட அவன் கண்ட புதுமைப்பெண்ணாய் அசர வைக்கும். ஒருபுறம் இப்படி இருக்க, மறுபக்கம் ஏன் சீரழிக்கும் ஆட்டங்களும் தலை குனிய வைக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சிகளும்? விழித்துக் கொள்வோம். இதுவல்ல நாம் வேண்டும் பெண்சுதந்திரம்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண் சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். தவறில்லை. ஆனால், அதுவும் தன்னை இதுகாறும் காத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் மூலம் நிகழ்வதில் என்ன தவறு? அவர்கள் ஆலோசனையும், அறிவுரையும் இதுபோன்றமுக்கிய தீர்மானங்களில் அவளுக்கு நிச்சயம் தேவை.
உயர்கல்வி பெறுவதில் பெண் சுதந்திரம் தேவை. ஆனால், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற சில சிக்கல்கள் காரணமாக அவளது இலட்சியங்களிலும் கனவுகளிலும் தேக்கம் ஏற்படலாம். சுதந்திரம் என்றபெயரில் பெரியோரைக் கீழ்ப்படியாமையும் ஆதிக்கம் செய்யவும் கூடாது.
மாணவப் பருவத்தில் சுதந்திரம் என்ற பெயரில் சில பள்ளி, கல்லூரி மாணவிகள் போகும் பாதைகள் தற்காலங்களில் அச்சுறுத்து வதாய் உள்ளன. இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? அவர்களை யார் திருத்துவது? இது போன்ற வினாக்களுக்கு விடை அளிப்பது சமுதாயத்தின் தலையாய கடமை. இன்றைய பெரியோர்களும் சான்றோர்களும் கூட ஊடகங்கள் மூலம் பெண் குலத்திற்கே உண்டாகும் தலை குனிவான நிகழ்ச்சிகளைக் கண்டும் காணாமல் போவதற்குக் காரணம் என்ன?
அயல்நாடுகளில் வாழும் நம் மக்கள் பாரதக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சுவாசிக்க அவ்வப்பொழுது தேக்கி வைத்த கனவுகளுடன் தாயகம் வருகின்றனர். அவர்களே நம்மிடையே சீர் கெட்டு வரும் சில நிகழ்வுகளைக் கண்டு மனம் வருந்துவது நமக்குப் பெரும் தலைகுனிவே.
பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
வாழ்வின் வண்ணக் கனவுகளில் சிதறல்கள்
இல்லறம் என்ற வழித்தடம் பிசிறானது
கையில் ஓர் பெண் குழந்தை
எதிர்காலமே ஓர் கேள்விக்குறி!
கேள்விக்குறி ஆச்சரியக் குறியானது
ஆச்சரியக்குறி தொடர்குறியானது
தொடர்குறி முற்றுப்புள்ளியாகும் வரை
வாழ்வெனும் கடலில் எதிர் நீச்சலிட்டு
கரை சேர்வதே குறிக்கோளாய் அமைந்தது!
வாழ்வெனும் பாடம் கற்பிக்கும் செய்திகள் தான்
எத்தனை எத்தனை
புடம் போட்டு மாற்றி வரும் நிகழ்வுள்தான்
எத்தனை எத்தனை
அனுபவங்கள் வெளிப்படுத்தும் நியாயங்களையும்
நெறிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ள
அமைந்த வாய்ப்பிற்கு நன்றி!
மாதம் ஒருமுறைசந்திப்போம்
வெளிவரும் கருத்துக்களை வாதிடுவோம்
அது குறித்து வரும் எதிர்வாதங்களை அலசுவோம்
ஆக்கபூர்வ சிந்தனைக்கு பலம் சேர்ப்பதே
நோக்கமாகக் கொள்வோம்!
முதல் மாதச் சிந்தனையாகப் பெண் சுதந்திரம் இருக்கட்டும்
சுதந்திரமாக இருபாலரும் சிந்திப்போம்
அவரவர் அனுபவங்கள் பேசட்டும்
உள்ளத்து உணர்வுகள் வெளிப்படட்டும்
நன்றி: தன்னம்பிக்கை.நெட்