தீபா
குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வதுபோல நாம் தான், இணையத்தின் பயன்பாடு குறித்து நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்
குழந்தைகள் நடைபழகும் முன்னே, மழலையர் பள்ளி (Nursery / Montessori) போன்றவற்றில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் பழக்கம் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, இனிவரும் காலங்களில், இந்தப் பிள்ளைகள் வளர்ந்து வரும் வேளையில், படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் போட்டி இன்னும் அதிகமாகும் வாய்ப்புத்தான் காணமுடிகிறது.
இதே போக்கின் அடிப்படையில், பள்ளியில் ஆத்திச்சூடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே, பிள்ளைகளுக்குக் கணிணிப் பிரயோகம் பற்றியும் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
விளையாட்டுப்போல கற்றுக்கொள்ள ஆரம்பித்து, விரைவில் இந்தப் பிள்ளைகள் இணையத் தளங்களைப் பார்வையிடவும் தயாராகி விடுகிறார்கள்.
தானாகவே பாட்டி – தாத்தாவுக்கு அஞ்சல் அனுப்புவது எனத் தொடங்கி, விளையாட்டுத் தளங்களில் விளையாடுவது, அதன் மூலம் நண்பர்கள் அறிமுகம், அவர்களுடன் Instant Messenger இல் அரட்டை, என்று வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பெற்றோர்களிடம் “என் அந்தரங்க மடல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்று சொல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.
எவ்வளவு வேகத்தில் ஒரு பிள்ளை இத்தகைய தேர்ச்சி பெற்றுவிடுகிறது என்பது அதன் சாமர்த்தியத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், இதுவே இவர்களுக்கு இணையத்தில் இருக்கும் அபாயங்களையும் பாதுகாப்பு முறைகளையும் சொல்லிக் கொடுப்பதற்கான சரியான தருணம். வீடு விட்டு வெளியே செல்லும்போது பிள்ளைகளிடம் எப்படி நாம் “பத்திரமாக போப்பா, சாலையில் வாகனங்கள் பல வந்துகொண்டே இருக்கும், நீ தான் கவனமாகச் செல்லவேண்டும்” என்று புத்திமதி சொல்வதுபோல தான், இணையத்தில் சஞ்சரிப்பதற்கும், கோப்புகளைத் தரவிறக்கம் செய்வது குறித்தும் நாம் அவர்களுக்கு நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்.
பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் கையில் பிரம்போடு சொன்னால், அது சரிவராது. பிள்ளைகள் பொதுவாகவே துரு-துருவென்றுதான் இருப்பார்கள். இது அவர்களின் இயல்பு நிலை. நாம் கடுமையாகச் சொல்லும் விஷயங்களை அவர்கள் விளையாட்டென நினைத்து அலட்சியப்படுத்தி விடுவார்கள். அதையே நாம் விளையாட்டாய்ச் சொன்னால், நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுவார்கள். நாம் சொல்லும்படி அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் கேட்கும்படி நாம்தான் மாற்றிச் சொல்ல வேண்டும்.
விதிமுறைகளும் வரைமுறைகளும்:
5-15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்துவதுக்கு முன்னே சில விதிமுறைகளையும் வரைமுறைகளையும் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கவேண்டும்.
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கோ அரட்டைச் செய்திகளுக்கோ (Online Chat) எக்காரணம் கொண்டும் பதில் எழுதக் கூடாது. மௌனம் உத்தமம்.
நிஜப் பெயர், ஊர், நகரம், வீட்டு விலாசம், பிறந்த நாள், பெற்றொர்களின் பெயர், அலுவலகத்தின் பெயர், இதர குடும்பத்தினரின் விவரங்கள் போன்ற அந்தரங்கத் தகவல்களைக் கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. பிள்ளைக்குத் தெரிந்தவர்களேயானாலும், இணையத்தில் கேட்டால் சொல்லக்கூடாது. இது மட்டுமன்றி, அப்படிக் கேட்டவரின் விவரம் பெற்றோருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் Web Cam & Microphone ஐ பயன்படுத்தக்கூடாது. பார்த்துப் பேசும்பொழுது அந்தரங்கத் தகவல்களை அறியாமலேயே பிள்ளைகள் சொல்லிவிடுவார்கள்.
உங்களது இணைய உலாவி (Browsers, like Firefox , IE, chrome) இல் ஆபாசமான சொற்கள் அடங்கிய தளங்களுக்கு தடை விதிக்கச்செய்யவும்.
உங்களது மேற்பார்வை இல்லாமல் எந்தக் கோப்பையும் தரவிறக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள். நச்சு நிரல் பாதுகாப்பிற்காக மட்டுமன்றி, தகவல்களைத் திருடும் Phishing தளத்தில் இருந்தும் பாதுகாக்க இது மிக அவசியம்.
எல்லோருக்கும் பொது:
கணினியை உங்கள் வரவேற்பறையில் / குடும்பத்தினர் எல்லோரும் வந்து போகும் பொது இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை கணினியைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் பக்கத்திலேயே உட்கார வேண்டும் என்பது இல்லை, உங்கள் பார்வை இருந்தாலே போதுமானது. யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் இணையத்தில் இயங்க அனுமதிக்காதீர்கள்.
பேசுங்கள் – பழகுங்கள்:
உங்கள் பிள்ளை இணையத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துகொண்டு இருங்கள். “என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய்” போன்ற கேள்விகளைத் தவிர்த்து ” இதை நான் படித்தேன், நீ படித்தாயா?… உனக்கு வந்திருக்கும் நகைச்சுவைக் கடிதத்தை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புகிறாயா?” மாதிரியான பேச்சு இலகுவாக இருக்கும்.
நில் – கவனி – செல்:
சாலையைக் கடக்க பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போது நாம் பயன்படுத்தும் இந்தத் தாரக மந்திரம் இணயத்திற்கும் பொருந்தும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது இணையத்தில் இருக்கும் அபாயங்களைக் குறித்து குடும்பத்துடன் விவாதியுங்கள். எம்மாதிரியான தளங்கள் ஆபத்தானவை, ஏன் தனி நபர் விவரங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது, பெற்றோர்கள் அறிமுகப்படுத்தாத நபர்களிடம் Instant Messenger இல் பேசுவதோ தனி மடல் பரிமாற்றம் வைத்துக்கொள்வதோ கூடாது என்பதற்கான காரணம் போன்றவற்றை ஓர் ஆசிரியராக இல்லாமல், ஒரு நண்பனாக அலசுங்கள்.
சந்தேகங்கள் கேட்கப் பயப்படவேண்டாம்:
சில விஷயங்களைப் பெற்றொருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் பயப்படுவார்கள், சங்கோஜப்படுவார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் தவறாக நினைப்பீர்களோ, இம்மாதிரி சந்தேகங்கள் கேட்டால், உங்களிடமிருந்து திட்டு – தண்டனை வருமோ என்ற பயம் இப்படிப் பலகாரணங்கள். அதனால், எந்த மாதிரியான சந்தேகங்களையும் அரைகுறையாக தெரிந்துகொண்டு செயற்படுவதைவிட பெற்றொரிடத்தில் தைரியமாக கேட்கலாமென்று நீங்கள் தான் ஊக்கம் குடுக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் 5 – 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் அதிகமாக கணிணி / இணையம் பயன்படுத்தாதீர்கள்? அப்படி என்றால் இங்கே சொல்லியிருக்கும் முறைகளை உங்கள் வீட்டில் அமல்படுத்திப் பாருங்கள். உங்களுக்கும் பயம் விலகும், பிள்ளைகளுக்கும் உங்கள் மேல் மரியாதை உண்டாகும்.
நன்றி: ஈழநேசன்.காம்