பெண்களே! ரமளானுக்குத் தயாராகுங்கள்!
அலபகடம பின்த் ஏ.ஹமீத்
பார்த்தீர்களா; நேற்றுதான் வந்து போனது போலொரு உனர்வு, இத்தனை வேகமாக வந்து போகின்ற ரமளான்களை, ரஹ்மத் பொருந்திய இந்த மாதத்தை, நன்மைகளைப் பன்மடங்கு அதிகமாகப் பெறக் கூடிய, இலாபம் கொழிக்கப் போகும் இந்த ஸீசனை வீணே விட்டுவிட முடியாது.
ரமளான் வருமுன் அதன் எதிர்பார்ப்பு மனநிலையை உருவாக்கிக் கொள்வது நம்மை அமல்களின்பால் ஆர்வத்தைத் தூண்டி விடும்.
இத்தகைய மனநிலை மீதமுள்ள மாதங்களில் இருக்குமாறு தக்கவைத்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. இல்லையேல் ரமளானிடம் நாம் தோற்று விடுவோம். நமது வழமையான அன்றாட காரியங்களையும் சிறிது மாற்றமுறச் செய்து ஒரு சிறப்பொழுங்கிற்கு கொண்டு வருவோம்.
குடும்பத்தவரும் ரமளானும்
இஸ்லாமிய குடும்பம்
1. முழுக்குடும்பத்தினரும் அமர்ந்து (குடும்ப உஸ்ராவில்) திட்டமிடல் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டு பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவர் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்வோம்.
2. நோன்பு கால தர்பியா அட்டவணைகளை வயதுக்கேற்றவாரு தயாரித்துக் கொள்வோம்.
3. ஒரு வசதியுள்ள குடும்பம் தனது வருவாயின் அளவைப் பொருத்து சில புதிய முடிவுகளுக்கு இம்முறை வரலாம். நோன்பு வசதியில்லாத அன்றாட கூலிகளுக்கு (இவர்கள் நமது ஊரிலேயே வசிப்போராக அல்லது உறவினர்களாக இருக்கலாம்) சில குடும்பங்களுக்கு குறிப்பிட்ட மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் தானியங்களை கிடைக்கச் செய்தல். வெறுமனே இவ்வுதவியைச் செய்துவிட்டு தொடர்பின்றி இராது அவர்களை அமல்களின்பால் தூண்டி ஆர்வத்தை ஏற்படுத்தி, அந்த வீடுகளை அல்லாஹ்வை அதிகமதிகம் நியாபகப்படுத்தும் நன்றி செலுத்தும் வீடுகளாக மாற்றமுறச் செய்வோம்.
4. நாமும் முன்கூட்டியே தேவையான பொருட்களை வாங்குவோம். பிள்ளைகள் உட்பட யாவரும் அமர்ந்து ஒரு
5. டி.வி பார்க்கக் கூடாது என சட்டம் போட்டு பெரிய துணியால் டிவியை மூடிவைப்பதும்; ஷவ்வால் பிறையைக் கண்டதும் திரையை அகற்றுவதுமாய் இனியும் தோற்றுப் போக முடியாது. இதில் தாயும், தகப்பனும் கூடுதல் கவனம் எடுத்தல் வேண்டும். பெரியவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் பயனுள்ள ஆக்கப்பூர்வமான வேலைத் திட்டங்களைக் குடும்பத்திற்குள் அறிமுகப்படுத்த வேண்டும். கிடைத்துள்ள வாழ்க்கை காலத்தில் தங்களதும் தம் பிள்ளைகளதும் வாழ்வு அர்த்தமின்றிக் கழிய இனியும் பெற்றோர் இடமளிக்கலாகாது. உண்மையில் நாம் பிள்ளைகளை நேசிப்போமாயின் அவர்களுக்கு Quality Of Life ஐக் கொடுக்கவே முயற்சிப்போம்.
அயல் வீட்டாருடன் ரமளான்
1. ரமளானை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்த முதலில் துஆச் செய்து கொள்வோம். பெரியவர்கள்; அவ்வீட்டுப் பெரியவர்களுக்கும் நமது சிறியவர்கள்; அவீட்டுச் சிறியவர்களுக்குமாக துஆச் செய்கின்ற போது இரு குடும்பத்தினருக்குமிடையில் இறுக்கமான உறவும் அன்பும் வளர்ந்துவிடும்.
2. நமது வாயிற் கதவில் ரளானை வரவேற்கும் வகையில் ‘ரமளான் சுவரொட்டி’ ஒன்றைத் தொங்கவிடுவதன் மூலம் ரமளானுக்குத் தயாராகும் செய்தியை அயல் வீட்டாருக்கு எத்தி வைப்போம்.
3. ரமளான் பற்றிய சஞ்சிகைகள், துண்டு பிரசுரங்கள், ரமளான் சட்டதிட்டங்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை அவர்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள். ஓர் அமலைக் கற்றறிந்து செய்வது பெறுமதி கூடியது. ஃபர்ளான நோன்பின் மகத்துவம் பற்றிய அத்தனைத் தகவல்களையும் அவர்களுக்கு எத்திவைப்பதை உங்கள் வேலைத் திட்டங்களில் ஒன்றாகப் போட்டுக் கொள்ளுங்கள்.
4. சில இஃப்தார்களை அவர்களுடன் சேர்ந்து செய்யுங்கள். அல்லது அவர்களுக்குரிய இஃப்தார் உணவை சமைத்து அனுப்பி விடுங்கள். முன்கூட்டியே நீங்கள் அனுப்பும் செய்தியைச் சொல்லி விடுங்கள். இது அவர்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
5. முஸ்லிம் அயலவரை இஃதாருக்கு அழைக்கும் போது குறைந்தது ஒரு முஸ்லிம் அல்லாத அயல் குடும்பத்தாரையும் சேர்த்து அழையுங்கள். அவர்கள் ரமழான் பற்றிய விளக்கம் கேட்கவும் நீங்கள் விளக்கமளித்து உங்கள் தஃவாவைத் துவங்கவும் இது வழியாகும். அவர்களுக்கு விளங்கக் கூடிய பாஷையில் ரமழான் பற்றிய சஞ்சிகைகள், துண்டுபிரசுரங்கள், தொகுப்புக்களை அழகாகப் பொதி செய்து கொடுத்து விடுங்கள். கூடவே இது குர்ஆனிய மாதம். அந்தப் பொதியில் ஒரு குர்ஆன் மொழி பெயர்ப்பையும் வைத்து ‘இது ரமளான் பரிசு’ எனக் கொடுங்கள்.
இஸ்லாத்தின் தூதை மற்றவர்களுக்கு எத்திவைப்பதில் இன்னும் நாம் பின்னடைந்து சோம்பேறிகளாக இருப்பதை இனியும் அனுமதிக்க முடியுமா? ருசியாக கஞ்சி செய்து கோப்பை நிறைய அவர்களுக்கு கொடுக்க நம்மில் பலருக்கு மனமுண்டு. ஆனால்ஸ.. அல்லாஹ்வின் செய்தியை எத்திவைக்க மனதில் துணிசலில்லை. என் வீட்டுக்கருகில் குடியிருக்கும் இந்த மாற்றுமத அயலவனுக்கு ஏன் இன்னும் என்னால் இஸ்லாத்தின் செய்தியைச் சொல்ல முடியாதிருக்கிறது என சிறிது சிந்திப்போம்! காலடியில் உள்ள தஃவாவுக்கான வாசல்களை அடைத்துக் கொள்ளாதிருப்போம்!
6. அயல்வீட்டுப் பிள்ளைகளைத் தன்வீட்டுப் பிள்ளைகள் மூலமாக அழைத்து தனியாக, அவர்களை முக்கியத்துவப்படுத்தும் இஃப்தார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இதனை அப்பிஞ்சு உள்ளங்களின் ஆன்மீக அமர்வாக மாற்றுங்கள்.
7. உங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களுக்கு ஓர் இஃப்தாரை ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் மாற்றுமதத்தவராய் இருப்பின் மிக நல்லது. அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்க உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஓர் அறிஞனுக்கு இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பது அவன் சார்ந்த அத்தனை பேருக்கும் அச்செய்தி எத்திவைக்கப்பட வழிகோலும்.
8. ரமளான் பற்றிய ஏதாவதொரு தலைப்பில் Project ஒன்றைத் தயாரிக்க உங்கள் பிள்ளைகளைத் தூண்டுங்கள். எல்லாக் கோணங்களில் இருந்தும் ரமளானை அவர்கள் பார்வையில் பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள். இதற்கு அவர்களது ஆசிரியரின் துணையை நாடுங்கள்.
9. பொய் பேசாதே, சப்தம் போடாதே, சண்டை பிடிக்காதே….. என எதிர்மறையாய் நின்று போலீஸ்கார வேலை செய்வதை விட்டுவிட்டு, அவர்கள் உண்மை பேசி பண்பாடாய் நடக்கக் கூடியவாறு அறிவுரை சொல்லி அதற்கேற்ற சூழலையும் உருவாக்கி முஹாஸபா பட்டியல் ஒன்றை அவர்களுடன் கலந்தாலோசித்து தயாரித்து அதனைச் செயல்படுத்த வைய்யுங்கள். அதற்குரிய ஹஸனாத்தை அல்லாஹ் மறுமையில் அதிகரித்து தருவான் என ஆசையூட்டி உங்கள் சார்பிலும் சிறிய அன்பளிப்பை பெருநாளன்று தருவதாக வாக்களித்து நிறைவேற்றியும் விடுங்கள். இதுபோன்றவற்றை சிறிய வேலைத் திட்டமாக (Project ) ஆக்கி நமது சிறுசுகள் மூலமாகவே அவர்களின் வகுப்புத் தோழர்கள், அயல்வீட்டுச் சிறார்கள், உறவினர்களில் உள்ள சிறுசுகளுக்கு எத்திவைத்து செயல்படுத்த வையுங்கள்.
10. அல்லாஹுத் தஆலாவுக்கு அதிகமாக நன்றி செலுத்தவும், அதிகமதிகம் துஆ செய்யவும், தவக்கல் வைக்கவும் பிள்ளைகளைப் பழக்கி விடுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
சமையல்கட்டும் ரமளானும்
தனது குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் ஏன் அயல்வீட்டாருக்கும் திட்டங்கள் போட்டு வழிகாட்டும் சமையல்கட்டின் பிரதானி தாய். தன் பங்குக்கு கூடுதலாக நேரத்தை சமையலில் கழிக்க இயலாது. தாய்மார்களே, நீங்களும் அதிகமதிகம் ஸஜ்தாக்கள் செய்ய வேண்டி இருக்கிறது. திலாவத்திலும், தஃப்ஸீரிலும், ஸீராவிலும் உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அலட்சியமாய் இருந்துவிட்டு இறுதியில் கைசேதப்பட முடியாது.
எனவே, ரமளான் காலத்திலும், முழு நேரமும் சமையற்கட்டே கதி என்று கிடக்காமல், சமையலையும் ஓர் ஒழுங்கிற்கு கொண்டு வாருங்கள். சுருக்கமான நேரத்தில் சமையலை முடித்து விட்டு இபாதத்களில் ஈடுபடுங்கள்.
குளிர்சாதனப் பெட்டி, மின்சார சமையல் அடுப்புகள் வைத்திருப்பவர்கள் அவ்வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அத்தோடு, உணவுப் பழக்க வழக்கங்களிலும் நல்ல மாறுதல்களை இம்மாதத்தில் ஏற்படுத்தி விடுங்கள். எந்த நாளும் பொரியலும் வறுவலும் உண்ணக் கொடுக்காதீர்கள். அதிகப்படியான சீனிப் பதார்த்தம் எடுக்க விடாமலும் ஸஹர் உணவை அளவுக்கதிகமாக உண்ண விடாமலும் தடுத்துக் கொள்ள வேண்டும். இஃப்தாருக்கும் ஸஹருக்கும் இடையில் முடிந்தளவு கூடுதலாக தண்ணீரோ, பானங்களோ குடிக்க வைப்பது நம் வீட்டாரை மறுநாள் Fresh ஆக வைத்திருக்கும்.
பழங்கள், மரக்கறிகள், இறைச்சி, மீன், தானிய வகைகள், பால் பொருட்களை முறைப்படி தயாரித்து உண்ணச் செய்ய வேண்டும். இவை நம் வீட்டாரின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும்.
ஆமாம் உடலுக்குரிய போஷாக்கு போல நமது ஆன்மாவுக்கும் போஷாக்களிக்கக் கூடிய கடமை நமக்கிருக்கிருக்கிறது. நரக நெருப்பிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தாரையும், உறவுகளையும், அயலவரையும் பாதுகாப்பதற்கான ஆற்றலையும் திறமையையும் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான். இக்கருமத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி நல்லவற்றை உலகில் வாழச் செய்து தீயனவற்றை அகற்றும் பணியில் நமது பங்களிப்பையும் செய்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற அடியார்களாக ஆவோமாக!
ரமளான் அல்குர்ஆனின் மாதம்!
அதனை ஓதுவோம்! அதன்வழி நடப்போம்!
அதனை விளங்குவோம்! அதன்பால் உலகை அழைப்போம்!
– அல்ஹஸனாத் ரமளான் மாத சிறப்பிதழ்
source: http://www.iqrah.net/?p=367