[ பிளஸ்பிரின், கால்பால், மெலிடன்ஸ், இஃபிமால், குரோசின் இவை அனைத்தும் பாராசிட்டமால் என்ற ஒரே மருந்துதான். பாராசிட்டமால் என்பது அதில் உள்ள வேதிப்பொருளின் மருத்துவ விஞ்ஞானப் பெயர். மற்றவை அனைத்தும் வர்த்தகப் பெயர்கள்.
சட்டப்படி மூல மருத்துவப் பெயர்களை ஒவ்வொரு மருந்திலும் கட்டாயமாக அச்சிட வேண்டும் இதையும் கம்பெனிகள் செய்கின்றன. ஆனால் மிகமிகச் சிறிய எழுத்தில் அவை அச்சிடப்பட்டு இருக்கும்.
டாக்டர்கள் வர்த்தகப் பெயரை மட்டும் தான் எழுதிக் கொடுக்கின்றனர். எனவே, டாக்டர் கொடுப்பது என்ன மருந்து என்பதை அறிந்து கொள்ளமுடிவதில்லை; ஏற்கெனவே நாம் சாப்பிட்ட மருந்துதானா இது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, இந்த மருந்தைச் சாப்பிட்டால் நமக்கு ஒத்துக் கொள்ளுமா அல்லது ஒவ்வாமை ஏற்படுமா என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.]
தேவையற்ற மருந்துகளை அரசாங்கம் தடை செய்யலாமே!
தடை செய்யப்பட்ட, தேவையற்ற மருந்துகளை அரசாங்கம் ஏன் அனுமதிக்கின்றது?
தடை செய்யப்பட்ட, தேவையற்ற மருந்துகளை ஏன் மருந்து கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன?
லாபமே குறிக்கோள் என்பதில் கம்பெனிகள் தெளிவாக இருப்பது தான் காரணம்.
மற்ற அனைத்துத் தொழில்களையும் விட மருந்து தயாரிப்புத் தொழில் அதிக லாபம் தரக்கூடியது. அதாவது ஆயுத உற்பத்தித் தொழிலுக்கும் சிகரெட் தயாரிப்புத் தொழிலுக்கும் அடுத்து 3வது இடத்தில் இந்த மருந்து தயாரிப்புத் தொழில் இருக்கிறது. பொருளாதார மந்தம் இருக்கின்ற இந்தக் காலத்தில் கூட பல புதிய கம்பெனிகள் உருவாகிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கின்றன. அவசியமானது என்ற பட்டியலில் வரும் மருந்துகளில் லாபம் குறைவு. அவசியமற்ற மருந்துகளில் நோயாளிகளிடமிருந்து எவ்வளவு பறிக்க முடியுமோ அதைப் பொறுத்தது லாபம். ஆனால், இதற்கு மருத்துவர்கள் அந்த மருந்தை எழுதிக் கொடுக்க வேண்டும்.
அரசாங்கம் ஏன் இந்த மருந்துகளை அனுமதிக்கின்றது?
அரசுக்கு இரு நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்குச் சார்பாக அரசின் முடிவுகள் இருக்கின்றன. மருந்து உற்பத்தித் தொழிலில் ஏராளமான பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் பணபலம் பயங்கரமானது. இவற்றில் பல கம்பெனிகளின் ஆண்டு வரவுசெலவு நமது தேசத்தின் பட்ஜெட் போல் பெரியது.
அதோடு மருந்து உற்பத்தித் தொழில் மிகப்பெரிய இந்தியக் கம்பெனிகளும் இருக்கின்றன. இந்தக் கம்பெனிகள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியையும் தமது செல்வாக்கையும் தங்களுக்கு ஆதரவான கொள்கையை உருவாக்குவதற்காகச் செலவிடுகின்றன. ஒரு புறத்தில் கம்பெனிகளின் இந்த அசுரபலம் என்றால் மறுபக்கத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்களின் குரல், குறிப்பாக, மருந்துக் கொள்கை போன்ற பிரச்சனைகளில் பலவீனமாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த மருந்துக் கொள்கை பற்றிய விபரம் தெரிவதில்லை.
நடுத்தர வர்க்கம் குறிப்பாக, அரசியல் அடிப்படையில் அணி திரண்டு இருப்பவர்களுக்கு இது தெரியும். ஆனால், மருத்துவத் தொழில்மீது இருக்கக்கூடிய மரியாதை மற்றும் நவீன விஞ்ஞானத்தோடு தொடர்புடைய ஒன்றை எதிர்ப்பதா என்ற எண்ணம் ஆகிய காரணங்களால் இவர்கள் ஏதும் செய்யாமல் இருக்கின்றனர்.
சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அவை சக்தியற்ற, தாக்கத்தை ஏற்படுத்தாத, அமைப்பு ரீதியாக வலு இல்லாததாகவும் உள்ளன. சுகாதாரத் துறையில் செயலாற்றும் சில அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவியல் இயக்கங்களும் இப்பிரச்னையைக் கையில் எடுக்கின்றன. இவர்களின் உறுதியான அறிவியல் ரீதியான நிலைப்பாடும் பல நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் தலையீடும்தான் பல்வேறு சூழலில் ஆபத்தான மருந்துகளைப் புழக்கத்திலிருந்து தடை செய்தது. உண்மையில் உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் ஆபத்தான மருந்துகளை இக்குழுக்களால் தடை செய்ய முடிந்துள்ளது.
மருந்துத் தொழில்துறையை ஊக்குவிப்பது ரசாயன மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கியப் பொறுப்பு. ஆனால் மருந்துத் தொழில்துறை தொடர்பான பிரச்னையையும் இந்த அமைச்சகம்தான் பார்த்துக் கொள்கிறது. சுகாதார அமைச்சகத்தின் பங்கு இதில் மிக மிகக் குறைவாக உள்ளது. மருந்து உற்பத்தித் தொழில் துறையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துவதிலும் வளர்ப்பதிலும் தான் இத்துறை குறியாக இருக்கிறது. அதையே இலக்காகவும் கொண்டுள்ளனர். எனவே, அவசியமான மருந்துகள் எவை, அவசியமற்ற மருந்துகள் எவை, தேவையானவை எவை என்பதை இத்துறை வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது.
இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு டாக்டர்கள் ஏன் எழுதிக் கொடுக்கிறார்கள்?
இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் ஓர் அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருந்து என்பது ஒரு பண்டம் (ஒரு பொருள்) சந்தையிலிருக்கிற இதர பண்டங்களிலிருந்து அது மாறுபட்டது. நாம் ஒரு பேனாவோ, சட்டையோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ வாங்குவதற்குச் சென்றால், எதை வாங்க வேண்டும் என்பதை, மற்ற கம்பெனி பொருள்களின் தரம் மற்றும் விலையோடு ஒப்பிட்டுப் பார்த்து சிறந்ததை வாங்க முடியும். ஆனால், நீங்கள் மருந்து வாங்கச் சென்றால், எந்த மருந்தை வாங்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. எதை வாங்க வேண்டும் என்பதை டாக்டர்தான் உங்களுக்காகத் தீர்மானிப்பார். அந்த மருந்தை எதற்குக் கொடுக்கிறார், எந்த மருந்து சிறந்தது, அதைச் சாப்பிட்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும், எழுதிக் கொடுத்த மருந்துக்கு மாற்றாக விலை குறைந்த மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைக் கூட உங்களால் தீர்மானிக்க முடியாது; தெரிந்து கொள்ளவும் இயலாது. இந்த முடிவுகள் அனைத்தும் எடுப்பதற்கு நீங்கள் டாக்டர்கள் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டும்.
மருந்துக் கம்பெனிகள் தங்களது மருந்துகளை விற்பனை செய்வதற்கு எடுக்கின்ற பிரதான முயற்சி என்னவென்றால், தனது கம்பெனியின் மருந்தை டாக்டர்களை எழுத வைப்பதுதான், மருத்துவத் தொழிலின் கட்டமைப்பை இந்த வேலையைச் செய்வதற்கு அக்கம்பெனிகள் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைச் செயல்படுத்துவதற்குக் கையாளும் சில உத்திகளைக் கீழே காண்போம்.
o ஒவ்வொரு மருந்துக் கம்பெனியும், தமது மருந்து விற்பனைப் பிரதிநிதி மூலம் தொடர்ச்சியாக டாக்டரைச் சந்திக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை இவர்கள் டாக்டரைச் சந்தித்து கம்பெனியின் பெயர்களுடன் மருந்துகளை அறிமுகப்படுத்தி, இலவசமாக சில மருந்துகளையும், பரிசுப்பொருட்களையும் கொடுத்துச் செல்லுவார்கள்.
o இதற்கு அடுத்தபடியாக, இந்தக் கம்பெனிகள் டாக்டர்களின் கூட்டங்களை நடத்தி மருந்துகளைப் பிரபலப்படுத்தி அவற்றின் விற்பனையைப் பெருக்க நடவடிக்கை எடுக்கின்றன. கம்பெனிகளின் மருந்துகளை எழுதுவதற்காக டாக்டர்களுக்குப் பரிசுகளையும், சிறப்புச் சலுகைகளையும் அவை கொடுக்கின்றன.
o மருந்து எழுதுகிற சீட்டுகள், மருத்துவமனைகளில் ஒட்டுகிற சுவரொட்டிகள் இதர பரிசுப்பொருட்களில் தங்கள் கம்பெனியின் பெயர்களை அச்சடித்து டாக்டர்களிடம் கொடுப்பதன் மூலம் தங்கள் கம்பெனியின் பெயர்களைத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வகை பிரசாரம் அக்கம்பெனியின் பெயரை டாக்டர்களின் மனதில் ஆழப்பதிய வைக்கிறது. கடைசியில் அந்த மருந்தின் வர்த்தகப் பெயரை மட்டுமே டாக்டர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.
o அக்கம்பெனிகள் அளிக்கும் தகவல்கள் மூலம் தான் மருந்துகளைப் பற்றி டாக்டர்கள் தெரிந்து கொள்கின்றனர். இவர்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் மருந்துகளைப் பற்றிப் படித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நவீன கால மருந்துகளை டாக்டர்கள் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள், நவீன முன்னேற்றத்துக்கு ஏற்ப மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் டாக்டர்களின் தற்போதைய அறிவை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஏற்பாடு இல்லை. டாக்டர்கள் சிறப்பு முயற்சி எடுத்து, கூட்டங்களில் கலந்து கொண்டோ, புத்தகங்களை வாங்கிப் படித்தோ தெரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி முயற்சி மேற்கொள்ளாத டாக்டர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் தான் புதிய மருந்துகளை பற்றித் தெரிந்து கொள்கின்றனர். வளர்ந்த நாடுகளில் டாக்டர்களுக்கென கட்டாய தொடர்கல்விமுறை உள்ளது. ஆனால் இந்தியாவில் அவ்வகை ஏற்பாடுகள் இல்லை.
o என்ன நோய்க்கு என்ன மருந்தைக் கொடுக்கலாம் என்று விவரங்கள், அக்கம்பெனிகள் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், அவற்றால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்ற விவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகிய தகவல்கள் அடங்கிய புத்தகத்தை மாதம் தோறும் அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த நாடுகளின் அரசுகள் வெளியிடுகின்றன. இந்தப் புத்தகங்களில் மருந்துக் கம்பெனிகளின் விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை. இந்த முறைக்கு தேசிய மருந்து விதிமுறைகள் என்று பெயர். இந்தியாவில் மருந்துக் கம்பெனிகளே தயாரித்து வெளியிடுகின்ற புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. தாம் தயாரிக்கும் மருந்துகளின் விற்பனையைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்ட விளம்பரங்களும் அத்தகைய புத்தகங்களை மருந்துக் கம்பெனிகள் வெளியிடுகின்றன. மருந்துகளைப் பற்றிய வர்த்தக நோக்கம் இல்லாத நம்பகமான உடனடி தகவல்கள் இந்தியாவில் டாக்கடர்களுக்குக் கிடைப்பது இல்லை.
மற்றொரு முக்கியக் காரணம் வியாதி. அதைக் குணப்படுத்துவது சுகாதாரம் ஆகியவை தொடர்பான தற்போதைய பழக்கவழக்கங்கள் ஆகும். டாக்டரைப் பார்த்து ஏன் இந்த மருந்தை எழுதிக் கொடுத்தீர்கள்? என்று கேட்டால் நோயாளிகள் கேட்டார்கள் அதனால் எழுதிக் கொடுத்தோம் என்கிறார்கள். தொழிலை நடத்துவதில் டாக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு இடையிலான போட்டி மேலும் கடுமையாகிறது. தங்களிடம் வருகிற நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கவில்லை என்றால், வேறு டாக்டரிடம் அவர்கள் சென்று விடுவார்கள் என பயப்படுகின்றனர்; அதனால் ஊசிகளைப் போட்டு இந்த மருந்துகளை எழுதுகின்றனர். ஊசிகள், மாத்திரைகளின் சக்தியைப் பார்த்து பரவசமடைந்த டாக்டர்களே இந்தப் பழக்கவழக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கலாம்.
ஆனால், எப்படியோ டாக்டர்கள் தொடங்கி விட்டு விட்ட பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் ஊசி போடுதல், மாத்திரை வழங்கல் என்ற வட்டத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டு விட்டனர். நோயாளிகளிடம் நோயின் தன்மைகள் அதற்கு எவ்வகையான சிகிச்சை தேவை என்பதை விளக்கிக் கூறினால் நோயாளிகள் அச்சிகிச்சை முறைகளைச் செய்து பார்க்க ஒப்புக் கொள்வார்கள். இதனைச் செய்தால் நோயாளிகள் மருந்துகளை நாட வேண்டிய அவசியம் குறையும். பெரும்பாலும் டாக்டர் நோயாளிகளிடம் இது சிறு கோளாறு தான்; தானே சரியாகிவிடும் என்றோ, அல்லது இது என்ன நோய் என எனக்குத் தெரியவில்லை என்றோ அல்லது இது என்ன நோய் என்று தெரிகிறது; ஆனால் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றோதான் கூற வேண்டியிருக்கும்.
ஆனால் டாக்டர்கள் என்றால் அவர் ஏதோ மந்திரவாதி. மாயம் செய்யக்கூடியவர் என்ற கருத்தே நிலவுகிறது. எனவே நோயாளி வந்தவுடன் டாக்டர் அவரது கையைப் பிடித்து நாடி பார்க்க வேண்டும். நாக்கை நீட்டச் சொல்லி, கண்களை இழுத்துப் பார்க்க வேண்டும். ஸ்டெத்தாஸ்கோப்பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துப் பார்ப்பதுடன் மேலும் சோதனைகளை உடனே நடத்த வேண்டுமென்ற கருத்தும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதோடு அந்த நோய் என்ன என்பதை அவர் எப்போதும் கண்டுபிடித்து விடுவார். அதை குணமாக்கிட மருந்துகளையும் அவர் அறிந்திருப்பார் என்கிற அளவுக்கு டாக்டர்களைப் பற்றி மாயையான கருத்து ஏற்பட்டு விட்டது. அறிவியலையே மந்திரவாதம் போலச் சித்திரிக்கத் தொடங்கி விட்டனர். டாக்டருக்கு அது அற்புத சுகமளிக்கும் சக்தியைக் கொடுத்திருப்பதாக நினைக்கத் தொடங்கி விட்டனர்.
ஆனால் உண்மை என்னவெனில், விஞ்ஞானம் இன்னும் பலவற்றிற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. வினோதம் என்னவென்றால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக டாக்டர்கள் தங்களது மாயத் தோற்றத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டியது தமது கடமை என நம்புகின்றனர். டானிக்குகள் அவசியமற்ற மருந்துகளை எழுதிக் கொடுப்பதை நியாயம் என்று கருதினர். பெரும்பாலான நேரங்களில், நோயாளிக்கு வந்துள்ள நோய்க்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும் கூட அல்லது, தானாகவே அந்தக் கோளாறு சரியாகிவிடும் என அவர்கள் கருதினாலும் கூட அல்லது முக்கியமாக, அது என்ன நோய் என்பதை தெரிந்திருப்பதோடு, அதற்கு மருந்து ஏதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்தாலும் கூட, தேவை இல்லாமல் பல மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். அது தவறானது என்ற உணர்வே டாக்டர்களுக்கு பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.
உதாரணத்திற்கு, மஞ்சள் காமாலையை எடுத்துக் கொள்வோம். மஞ்சள் காமாலை வந்து விட்டால் போதும். நோயாளி பெரும் கவலையில் மூழ்கிவிடுவார். அதில் நியாயம் இருக்கிறது. அதை உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும். கல்லீரல் சுரக்கும் பித்த நீர் இரைப்பைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏற்படும் அடைப்பினால் சில நேரங்களில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதுண்டு. டாக்டர் இதை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவார். இருந்தாலும் மஞ்சள் காமாலை அதிகமாக ஏற்படுவது கிருமிகளால்தான். இதைக் குணப்படுத்த, பயனுள்ள ஒரு சிகிச்சை முறையை இன்னும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும் ஓய்வெடுப்பதன் மூலமும், சிலவகை மருந்துகளைத் தவிர்ப்பதன் மூலமும் சாதாரண வகைப்பட்ட மஞ்சள் காமாலை தானாகவே குணமாகிவிட வாய்ப்புண்டு. சில நேரத்தில் நோய் கடுமையாகி விடும். அதையும் தடுக்க முடியாது. அது மருத்துவ விஞ்ஞானத்தினால் கணிக்க முடியாததும் கூட.
மஞ்சள் காமாலையில் இரு வகைகள் உள்ளன என்பதை தற்போது மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது ஒரு சாதனை ஆகும். அவற்றில் கல்லீரலில் இருந்து பித்த நீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுவதால் வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி விட முடியும். உண்மை இப்படியிருக்க, தானாகவே குணமாகக்கூடிய இன்னொரு வகை மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மருந்துகளைக் கொடுப்பதன் அவசியம் என்ன? அவர்களுக்கு வந்துள்ள நோய் என்ன? இந்த நோய் தானாகவே குணமாகிவிடும். அல்லது குணமாக விடுங்கள் என்று ஏன் நோயாளிகளிடம் சொல்லக்கூடாது? இப்படிச் சொன்னால் நோயாளிக்கு நிறைய பணம் மிச்சமாகாதா? எனினும், மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்காமல் இருப்பதை நோயாளிகளும் சரி, டாக்டர்களும் சரி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இதை நோயாளிகளிடம் விளக்கினால், நோயாளிகள் தங்களை நம்பமாட்டார்கள் என டாக்டர்கள் கருதுகின்றனர். அதோடு நோயாளியிடம் விளக்கிக் கூற டாக்டர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. அந்தச் சிந்தனையும் வருவதில்லை. பரவலாகக் காணப்படும் இச்சாதாரண நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை டாக்டர் வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் நோயாளி. ஆயுர்வேத மருத்துவ முறையிலும் நாட்டு மருந்துகள் மூலமும் மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறும்போது, நவீன அறிவியல் இந்நோய்க்கு மருந்தை நிச்சயம் கண்டுபிடித்திருக்கும் என நோயாளி நம்புகிறார்.
இதற்கு டாக்டர்கள் மருந்து கொடுக்கவில்லையென்றால் டாக்டரிடம் தான் ஏதோ கோளாறு என்றோ, அல்லது ஆங்கில மருத்துவ முறையில் தான் ஏதோ கோளாறு என்றோ நோயாளி நினைக்கத் தொடங்கி விடுகிறார். நோயாளிகளிடம் காணப்படும் இந்தப் பழக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் மேலும் ஊக்குவிப்பதன் மூலமும் மருந்துக் கம்பெனிகள் தமது வியாபாரத்தைப் பெருமளவு பெருக்கி அதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. தானாகவே குணமாகக் கூடிய மஞ்சள் காமாலைக்குக் கூட மருந்தை உற்பத்தி செய்து கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர்.
ஏன் மக்கள் இந்த மருந்துகளை உட்கொள்கின்றனர்?
நாம் ஏற்கெனவே 2 முக்கியக் காரணங்களை விவாதித்துள்ளோம். முதலாவதாக மருந்து என்பது ஒரு பண்டம். மற்ற பண்டங்களிலிருந்து மாறுபட்டது. இங்கு எந்த வகை மருந்துகளை வாங்க வேண்டும் என்பதை நோயாளியாகிய நுகர்வோர் தீர்மானிப்பது இல்லை; டாக்டர் தான் தீர்மானிக்கிறார். தேவையற்ற இத்தனை மருந்துகளையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை ஒரு நோயாளிக்கு டாக்டர் ஏற்படுத்த முடியாது என்பது தெளிவு. அப்படியானால், நோயாளிக்கு இந்த விருப்பம் எப்படி உருவாக்கப்படுகிறது.
பலவித உடல்நலக் கோளாறுகள் நோயாளிக்கு ஏற்படக்கூடும் என்பது முதல் விஷயம். அந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் அதற்கு மருந்துகள் அவசியம் தேவை என்பதையும் மறுக்க முடியாது. பிரச்னை என்னவென்றால் தமக்குத் தேவையான மருந்துகள் எவை, தேவையற்ற மருந்துகள் எவை என்பதை வேறுபடுத்திப் பார்க்க நோயாளிக்குத் தெரியாது. இதற்குக் காரணம் நோயாளிக்கு மருந்தைப் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காததுதான்.
டாக்டர்களோ, என்ன நோய் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் கொடுக்கப்படுகிற மருந்துகளைப் பற்றியும் நோயாளிக்கு விளக்குவதில்லை. நோயாளிகளும் இதைப்பற்றி டாக்டர்களிடம் கேட்பதில்லை. மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஒரு மருந்தை எதற்குப் பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பக்கவிளைவுகள் என்ன என்பது பற்றியும் எந்தத் தகவலும் பெரும்பாலும் மருந்துகளுடன் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, மேற்படி விவரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. மருந்துகளின் பெயர்களை தமிழிலோ, அந்தந்த மாநில மொழிகளிலோ எழுதப்படுவதில்லை. மருந்துகளின் பெயர்களை பல மொழிகளில் அச்சிடுவது கம்பெனிக்கு கஷ்டமான காரியம் என நீங்கள் நினைத்து விடக்ககூடாது.
நீங்கள் ஒரு குலோப் ஜாமூன் மாவு பாக்கெட் வாங்கிப் பாருங்கள். அந்தப் பாக்கெட்டில் கூட அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி 15 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகையைவிட தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாகும்.
ஆனால், தமிழகத்தில் விற்பனையாகும் மருந்துகளில் அவற்றின் பெயர்கள் தமிழில் எழுதப்படுவதில்லை. எனவே, தமிழில் மருந்துப் பெயர்களை அச்சிட முடியாது என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவரின் சீட்டுகளைத் தமிழில்தான் எழுத வேண்டும். மருந்துப் பெயர்களையும் தமிழில் தான் எழுத வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் டாக்டர்கள் சங்கம் இம்முயற்சியை எதிர்த்தது. நோயாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியக்கூடாது என டாக்டர்கள் வாதிட்டனர். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதா?
மருந்துகளைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதிருப்பது மற்றொரு முக்கியக் காரணம். அவை பெரும்பாலும் வர்த்தகப் பெயர்களில் விற்கப்படுவதாகும். ஒவ்வொரு மருந்துக்கும் 2 பெயர்கள் உண்டு. ஒன்று மருத்துவ விஞ்ஞானத்தால் வழங்கப்பட்ட மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயர். (இது வேதிப் பொருளின் பெயர்) மற்றொன்று வர்த்தகப் பெயர். இது மருந்தைத் தயாரிக்கும் கம்பெனி சூட்டிக் கொண்ட பெயர். வேதிப் பொருளால் தயாரிக்கப்படும் மருந்தை ஒவ்வொரு கம்பெனியும் வெவ்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்கின்றன. இப்படி ஒரே வகை மருந்துக்கு நூற்றுக்கணக்கான வர்த்தகப் பெயர்கள் உள்ளன.
பிளஸ்பிரின், கால்பால், மெலிடன்ஸ், இஃபிமால், குரோசின் இவை அனைத்தும் பாராசிட்டமால் என்ற ஒரே மருந்துதான். பாராசிட்டமால் என்பது அதில் உள்ள வேதிப்பொருளின் மருத்துவ விஞ்ஞானப் பெயர். மற்றவை அனைத்தும் வர்த்தகப் பெயர்கள். சட்டப்படி மூல மருத்துவப் பெயர்களை ஒவ்வொரு மருந்திலும் கட்டாயமாக அச்சிட வேண்டும் இதையும் கம்பெனிகள் செய்கின்றன. ஆனால் மிகமிகச் சிறிய எழுத்தில் அவை அச்சிடப்பட்டு இருக்கும். டாக்டர்கள் வர்த்தகப் பெயரை மட்டும் தான் எழுதிக் கொடுக்கின்றனர். எனவே, டாக்டர் கொடுப்பது என்ன மருந்து என்பதை அறிந்து கொள்ளமுடிவதில்லை; ஏற்கெனவே நாம் சாப்பிட்ட மருந்துதானா இது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, இந்த மருந்தைச் சாப்பிட்டால் நமக்கு ஒத்துக் கொள்ளுமா அல்லது ஒவ்வாமை ஏற்படுமா என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
ஒரு டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் என்ன மருந்தை அவர் எழுதியிருக்கிறார் என்பதை மற்றொரு டாக்டரால் கூட படித்துப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் இருநூறு, முந்நூறு மருந்துப் (வர்த்தப்பெயர்) பெயர்களுக்கு மேல் யாராலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் பல்வேறு மருந்துகள் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பெயர்களில் சந்தையில் விற்கப்படுகின்றன.
ஒரு மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயரை அதாவது மருத்துவ அறிவியல் பெயரை மட்டுமே மருந்து அட்டை மீது எழுத வேண்டும் என சட்டம் இயற்றினால் அவற்றின் எண்ணிக்கை சுமார் 300 தான் வரும். எனவே, அம்மருந்துகளின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதும் எளிது. அதோடு ஒவ்வொரு நோயாளியும் தான் உட்கொள்ளும் மருந்து என்ன என்பதையும் நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும்.
மருத்துவ அறிவியல் பெயர்களை மட்டும் அச்சிட்டால் போதும், வர்த்தகப் பெயர்கள் கூடாது என்பதை எதிர்க்கும் கம்பெனிகளும் டாக்டர்களும் அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். மருத்துவ அறிவியல் பெயரை (வேதிப் பொருளின்) மட்டும் வைத்தால், தரக்குறைவான மருந்துகளை உற்பத்தி செய்யும் சிறிய கம்பெனிகளும், ஓரளவு தரமான மருந்துகளைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களைப் போல தமது மட்டமான மருந்துகளை விற்றுவிடமுடியும் என்று வாதிடுகின்றனர்.
இது சொத்தையான வாதமாகும். மருந்துகளின் அறிவியல் (வேதிப் பொருளின்) பெயருக்குக் கீழே அவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகளின் பெயர் கட்டாயமாக இடம் பெற்றாக வேண்டும். ஒரு மருந்தின் எந்தக் கம்பெனியின் தயாரிப்பு வேண்டும் என்று டாக்டர்களும் நோயாளிகளும் விரும்புகிறார்களோ, அந்தக் கம்பெனியின் பெயரைப் பார்த்து மருந்துகளை வாங்க முடியும். பெரிய கம்பெனியோ, சிறிய கம்பெனியோ எல்லாவற்றின் தயாரிப்பிலும்தான் தரக் குறைவான மருந்து பிரச்னை இருக்கிறது. மருந்துப் பரிசோதனை முறையையும் தரக்கட்டுப்பாட்டை பலப்படுத்துவதும் தான் தரக்குறைவான மருந்துப் பிரச்னைக்குத் தீர்வாகும்.
நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருப்பதற்கு உடல் நலம் பற்றிய கருத்தும் பழக்க வழக்கங்களும் கூட மற்றொரு முக்கியக் காரணமாகும். நல்ல உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், தூய்மையான சுற்றுச்சூழல், தகுதிக்கேற்ற வேலை, போதுமான வருமானம் மற்றும் பிற காரணங்களைப் பொறுத்ததே உடல் நலமாகும். சுகாதாரத் துறையின் மிக முக்கிய கடமை, நோய்கள் வராமல் தடுப்பதாகும். தாய் சேய் நலத்தைக் காப்பது தான் அடுத்த முக்கியப் பணி; ஏனென்றால் எளிதில் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவர்கள் அவர்கள். இதையும் மீறி நோய்கள் மக்களைத் தாக்கும் போது தான் டாக்டருக்கும் மருந்துகளுக்கும் அங்கு வேலை. அப்போதும் கூட ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளிலும் பெரும்பாலானவை வீரியம் குறைவான சாதாரண மருந்துகள் தான். அவற்றை துணை மருத்துவ ஊழியர்கள் (சுகாதார ஊழியர்கள்), மருந்தாளர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்களே கூட கொடுத்து விட முடியும். அவர்களால் சிகிச்சை அளிக்க முடியாத நோயாக இருந்தால் மட்டுமே பெரிய மருத்துவமனைகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டும்.
மருந்து மாத்திரைகளைக் கொடுப்பதன் மூலமும், நோய்க்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமும் நமது ஆரோக்கியமான வாழ்க்கையை டாக்டரால் தான் உத்தரவாதப்படுத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். நமது சமூக அமைப்பும், அதிலிருந்து கிடைத்த அறிவும் தான் இதற்குக் காரணம். ஒரு நோய்க்கு உண்மையில் மருந்து தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் எல்லாவித நோய்களுக்கும் மருந்து எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்துவதற்குக் காரணமும் இதுதான். மருந்து உற்பத்தித் தொழிலின் வியாபாரத்தைப் பெருக்க இந்த மனோபாவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
-தி. சுந்தரராமன்
நன்றி: ஹெல்த் டைம்