பசியும், தானமும்
[ ஒரு சமயம் தொழும் விதம் (சரியான/தவறான முறைகள்) குறித்து என் தந்தையிடம் விவாதித்த உறவினரிடம், தந்தை கூறியது, “ஹரத்தில் (மக்காவில் உள்ள கஃபா வளாகம்) வந்து பாருங்கள்.
எத்தனையெத்தனை நாட்டினர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் தக்பீர் சொல்வதே (கைகளை நெஞ்சில் கட்டி தொழுகையை ஆரம்பிப்பது) ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவர் நெஞ்சின்மேல் வைப்பார்; ஒருவர் வயிற்றில் வைப்பார்; ஒருவர் கழுத்துக்குக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட இடத்தில் வைப்பார். எப்படித் தொழுதாலும், வல்ல இறைவனை மனதாரத் தொழுகிறோமா என்பதுதான் முக்கியம்.” இது மெத்தப்படித்த நமதூர் ஆலிம்களுக்கு எப்போதுதான் புரியப்போகிறதோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
அமீரகம் வந்து இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் கலந்து கொண்ட போதும், மக்கா சென்று வந்த போதும் எனக்கும் அதை உணரும் வாய்ப்புகள் கிடைத்தன. இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் பலதரப்பட்ட மக்களைக் காணும்பொழுதில் நாம் நம்மைக் குறித்துக் கொண்டிருக்கும் செருக்கு உதிர்ந்து விடும் என்பதே உண்மை.
பலவித உடல் உபாதைகளைக் கொண்டிருந்தாலும் தவறாமல் தொழுகைக்கு வந்துவிடுபவர்கள், நடக்கவே முடியாத வயோதிகமாக இருந்தாலும் நமக்கு முன்பே வந்து நிற்பவர்கள், “அதிகம் அறிந்த” என்னைவிட பயபக்தியுடன் தொழும் சிறுவயதினர் என்று என்னை வெட்கப்படவைக்கும் தருணங்கள் அதிகம். கூட்டுத் தொழுகையின் பலன்கள் இவை.]
நோன்பு காலமான புனித ரமலான் மாதம் இப்பத்தான் ஆரம்பித்தது போல இருந்தது; இதோ இன்னும் 2,3 நாள்ல முடியப் போகுது. நோன்பு மட்டுமல்ல இம்மாதத்தின் சிறப்பு, இரவு நேர ‘தராவீஹ்’ என்ற தொழுகையும்தான்.
நோன்பு திறந்ததும், வேலைகளை வேகமாக முடித்துவிட்டு, தராவீஹ் தொழுகையைப் பள்ளியில் கூட்டாகத் தொழுவதற்காக, நேரத்தில் இணைந்து கொள்ளவேண்டி விரைந்துச் செல்வதும் ஒரு சுகம். கூட்டுத் தொழுகையில் என்னைக் கவர்ந்தது, தொழுகைக்கு நிற்கும் அனைவரும் ஒத்திசைந்து, ராணுவ ஒழுங்கோடு, தொழுகையை முன்னின்று நடத்துபவரைப் பின்பற்றி ஒரே நேரத்தில் குனிந்து நிமிர்ந்து இறைவனைத் தொழுவது!
மக்காவில் நடக்கும் கூட்டுத் தொழுகைகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது, எந்நாட்டினராயிருந்தாலும், வரிசையில் எறும்புபோல ஒழுங்குடன் நிற்பதும், இமாமின் குரலைப் பின்பற்றி, ஒரு சீராகக் கைகட்டி, குனிந்து நிமிர்ந்து, அமர்ந்து பிரார்த்தனை செய்யும் அழகு மெய்சிலிர்க்க வைக்கும். கூடி நிற்பவர்கள் அனைவரும் வெவ்வேறு நாட்டினர்; வெவ்வேறு கலாச்சாரங்கள்; வெவ்வேறு பழக்க வழக்கங்கள். எனினும், அவர்களை இணைப்பது ஒரே இறைவன். இதுதான் “வேற்றுமையில் ஒற்றுமை”யோ? ஹஜ் காலத்தைவிட, ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து தினங்களில்தான் மக்காவில் அதிகக் கூட்டம் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது.
ஒரு சமயம் தொழும் விதம் (சரியான/தவறான முறைகள்) குறித்து என் தந்தையிடம் விவாதித்த உறவினரிடம், தந்தை கூறியது, “ஹரத்தில் (மக்காவில் உள்ள கஃபா வளாகம்) வந்து பாருங்கள். எத்தனையெத்தனை நாட்டினர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் தக்பீர் சொல்வதே (கைகளை நெஞ்சில் கட்டி தொழுகையை ஆரம்பிப்பது) ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவர் நெஞ்சின்மேல் வைப்பார்; ஒருவர் வயிற்றில் வைப்பார்; ஒருவர் கழுத்துக்குக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட இடத்தில் வைப்பார். எப்படித் தொழுதாலும், வல்ல இறைவனை மனதாரத் தொழுகிறோமா என்பதுதான் முக்கியம்.”
அமீரகம் வந்து இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் கலந்து கொண்ட போதும், மக்கா சென்று வந்த போதும் எனக்கும் அதை உணரும் வாய்ப்புகள் கிடைத்தன. இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் பலதரப்பட்ட மக்களைக் காணும்பொழுதில் நாம் நம்மைக் குறித்துக் கொண்டிருக்கும் செருக்கு உதிர்ந்து விடும் என்பதே உண்மை; பலவித உடல் உபாதைகளைக் கொண்டிருந்தாலும் தவறாமல் தொழுகைக்கு வந்துவிடுபவர்கள், நடக்கவே முடியாத வயோதிகமாக இருந்தாலும் நமக்கு முன்பே வந்து நிற்பவர்கள், “அதிகம் அறிந்த” என்னைவிட பயபக்தியுடன் தொழும் சிறுவயதினர் என்று என்னை வெட்கப்படவைக்கும் தருணங்கள் அதிகம். கூட்டுத் தொழுகையின் பலன்கள் இவை.
நோன்பு காலங்களில் அமீரகத்தில் இருப்பதே தற்போது என் விருப்பமாக இருக்கிறது. பல காரணங்கள்: நோன்பு காலங்களில் நாடு முழுவதுமே அதற்குரிய எண்ணங்களோடு காணப்படுவது, வீட்டு அருகாமையிலேயே அதிக வழிபாட்டுத் தலங்கள் (பள்ளிவாசல்கள்), வேலை/பள்ளி நேரம் குறைப்பது – இவ்வருடம் பள்ளியின் கோடை விடுமுறை நோன்பினால் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு வசதிகள் இருப்பதால் இருக்கலாம். எனினும், இச்சலுகைகள் எதுவுமல்லாத இந்தியாவிலும் நான் பல வருடங்கள் இருந்தபோது, இறையருளால் நோன்புகால சிறப்பு வணக்கங்களில் குறைபடாமல் ஈடுபட முடிந்தது. மனமிருந்தால் மார்க்கம்!!
மேலும் நோன்பு காலங்களில் நான் இங்கு மிகவும் வியப்பது, ஈகை!! இந்நாட்டின் பள்ளிவாசல்கள் எல்லாவற்றிலுமே இலவசமாக இஃப்தார் உணவு வழங்கப் படுகிறது; பல தனியார்களின் வீடுகளிலும் தினமும் மாலை நேரம் உணவு வழங்கப் படுகிறது. இந்த ஈகை, நிறைய பேச்சிலர்களுக்கும், Skilled labourersகளுக்கும் உதவியாக இருக்கிறது. சில நாட்களில் என்னைப் போன்ற குடும்பத்தினர்களுக்கும்கூட!! முன்பெல்லாம் பள்ளிகளில் தரும் உணவை அங்கேயே உண்ணும்படி தட்டுகளில் விளம்பி வைத்திருப்பார்கள்; ஆனால் அம்முறையில் உணவு அதிகம் வீணாகியதால், சென்ற வருடத்திலிருந்து, மிஞ்சியதை வீட்டிற்கு எடுத்துவர வசதியாக ஃபாயில் பாக்கெட்டுகளில் உணவைத் தருகிறார்கள்.
ரமலான் மாதத்தின் இன்னுமிரு சிறப்புகள் “ஸகாத்” மற்றும் “ஃபித்ரா” வழங்குவது. அதாவது நம் அன்றாடத் தேவைக்குப் போக, சேமிப்பாக நம்மிடம் இருக்கும் சொத்து/நகைகளின் அளவுகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட தொகையைக் கணக்கிட்டு, தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது “ஸகாத்”. நோன்பினால் உணரவைக்கப்படும் பசியின் தாக்கம், நம்மைத் தாராளமாகவே ஈகையளிக்க வைக்கும். இதுவும் வல்லோனின் கணக்கு!!
பெருநாள் தினத்தன்று, யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில், ஒன்று அல்லது சில குடும்பங்களுக்கு அரிசி/கோதுமை வழங்குவது “ஃபித்ரா”.
மொத்தத்தில், நமது உறுதியை, மனவலிமையை, நம் எண்ணங்களை, நம்மை (வசதியில் குறைந்த) மற்றவர்களோடு ஒப்பிட்டு நம் நிலையை நமக்கு உணர்த்தி, நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ள உதவுவது இந்த நோன்பு காலம்!!
source: http://hussainamma.blogspot.com