திருமணம், காதல், டீனேஜ் பருவம் – ஒரு நேர்காணல் (3)
ஏபிஎம் இத்ரீஸ்
[ கதைகளில், நாவல்களில்தான் குடும்பவாழ்க்கையை, பிரச்சினைகளைப் படிக்கலாம். எந்தவொரு தம்பதியும் ஏதாவதொரு விஷயத்தில் முரண்பட்டுத்தான் இருப்பர். ஆலிமுடைய வீட்டிலும் அது இருக்கும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீடுகூட இதற்கு விதிவிலக்கல்ல. உலகிலேயே மிகச்சிறந்த நிறுவனம் குடும்பம்தான். அது பலராலும் போற்றப்படுகிறது. அல்குர்ஆனே அதற்கு சான்று. சூரத்துல் ரஹீமை ஓதிப்பார்த்தால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுப்பிரச்சினை தெரியவரும்.
எல்லா நிறுவனத்துக்கும் ஒரு முதல்வர் இருப்பார். கணவன் குடும்ப நிறுவனத்தின் தலைவர். எனவே அவரது கருத்து முதன்மையாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை. வீட்டில் நடக்கும் அன்றாட விஷயங்களில் எல்லாம் அவரது கருத்து, தலையீடு இருக்கக்கூடாது. இது பெண்ணின் உரிமை. அவர் உள்நாட்டு அமைச்சர் மாதிரி. பிரதம மந்திரியைப் போல மேற்பார்வை செய்வதுதான் கணவனின் பணி.
பெண்கள் வெளியே போக கிளம்பிவிட்டால் நண்பர்களின் நெருங்கிய உறவினர்களின் வீடாக இருந்தாலும் மணப்பெண்ணைப் போல அலங்கரித்துக் கொண்டு செல்வதுண்டு. மிகச்சிறந்த உடுப்பைத்தான் அணிந்து மனம்பூசிச் செல்வர். ஆனால் கணவன் வரும்போது சமயலறை உடுப்புடனும், முகத்தில் கரியுடன் முன்னுக்கு வந்து நிற்பர்.
அடுத்தவர்கள் மீது காட்டுகின்ற கரிசனையை விட சொந்தங்கள் மீது கரிசனை, அன்பு, பரிவு அதிகமாக இருக்க வேண்டும். நல்ல முறையில் கணவன் மனைவியினர் அலங்கரித்து இருக்கவும் நல்ல வார்த்தைகளை உபயோகிக்கவுமே இஸ்லாம் சொல்கிறது.]
ஆரம்பத்தில் திருமணம் முடித்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள். திருமணத்தை ஒரு தலைவலியாக உணர்கிறார்கள். படித்த இளைஞர்களிடையே இப்புரிதல் அதிகமாகக் காணப்படுகின்றது. இது பற்றிய உங்களது கருத்தென்ன?
சில தினங்களுக்கு முன் நெருங்கிய நண்பர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அவர் படித்துப் பட்டம் பெற்றவர். நல்ல உடல்வாகு, நற்குணமுள்ளவர். 30 வயதிருக்கும் ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. நான் அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கேட்டேன். அதற்கவர் சொன்னார் “என்னுடைய நண்பர்கள் சிலர் திருமணம் முடித்துவிட்டு பெரும் துன்பப் படுகிறார்கள். திருமணம் முடிக்காமல் இருந்திருக்கக்கூடாதா என்று கூட யோசிக்கிறார்கள். இந்தக் காலத்தில் திருணம் முடிப்பது பெருந்தலைவலி. நான் காசுகொடுத்து தலைவலியை வாங்க விரும்பவில்லை.”
அதற்கு நான் சொன்னது இதுதான், “உங்களுடைய பத்து நண்பர்களின் கருத்து மக்களின் கருத்தாகிவிடுமா? அவர்கள் திருமணம் முடித்துக் கஷ்டப்படுகிறார்கள் என்றால் திருமணம் முடித்த எல்லா நண்பர்களும் கஷ்டப்படுகிறார்கள் என்றா நினைக்கிறீர்? திருமணத்தை கஷ்டமாகவும், தலைவலியாகவும் உணர்கின்றவர்களிடம் ஏன் இதைக் கேட்டீர், என்னிடம் கேட்டிருக்கலாம் தானே?! இந்த விஷயத்தில் அவர்களைவிட எனக்கு அனுபவமிருக்கிறது.
‘ஐந்து குடும்பப் பிரச்சினைகளில் கலந்து கொண்டவன் நிச்சயம் அந்த விஷயத்தில் நிபுணனாக இருப்பான்’. நான் முப்பதுக்கும் மேற்பட்ட கணவன் மனைவி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் என்னை ஈடுபடுத்தியிருக்கிறேன். அதேவேளை உளவியல், சமூகவியல் துறையிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். நான் இத்தொழிலிருந்து ஓய்வு பெற்றால் குடும்ப கற்கை நெறிகளுக்கான நிறுவனமொன்றை ஆரம்பிப்பேன். அதில் இருந்து கொண்டு குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பேன். இதில் எனக்கு புலமை இருக்கிறது” என்று கூறினேன்.
அதற்கு அந்த நண்பர், திருமணம் முடித்த நிறைய்பேர் தொடர்ந்து பிரச்சினைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து உங்களுக்கு புலப்படவில்லையா? என்றார்.
நான் சொன்னேன், முரண்பாடு என்பதன் கருத்தை வரையறுக்க விரும்புகிறேன். எந்தவொரு விஷயத்திலும் கணவன் மனைவிகளுக்கிடையில் கருத்து முரண்பாடே இல்லாத ஒரு திருமண வாழ்வை நீங்கள் விரும்பினால், ஆயுள் முழுவதும் ரோமியோ ஜுலியட் போல், கைஸ்(மஜ்னு) லைலா போல் தேனும் பாலுமாக இருக்க வேண்டுமென விரும்பினால் அது நடக்காது. காதல் அவர்களில் வெற்று வார்த்தைகளைத்தானே பரிமாறப்படுகின்றன. ”ஐ லவ் யூ” அவன் கூற, ”ஐ லவ் யூ” என்று அவளும் கூறுகிறாள். கருத்துப் புரியாத இச்சொற்கள் திரும்பத் திரும்ப உதிர்க்கப்படுகின்றன. பின் இவ்வார்த்தைகள் சலிப்புக்குரியவையாக மாறிவிடுகின்றன.
எனவே வாழ்நாள் பூராவும் ”ஐ லவ் யூ” என்று சொல்லிக் கொண்டிக்கலாமா? உதாரணமாக கைஸ்(மஜ்னு) லைலாவை முடித்து காதல் வார்த்தையுடனேயே திரிந்திருந்தால் இரண்டாவது மாதத்திலேயே முரண்பாடு வந்திருக்கும். மூன்றாவது மாதத்தில் பிரச்சினை உருவாகி வருட முடியில் நீதிமன்றத்தில் நின்றிருப்பார்கள்.
கதைகளில், நாவல்களில்தான் குடும்பவாழ்க்கையை, பிரச்சினைகளைப் படிக்கலாம். எந்தவொரு தம்பதியும் ஏதாவதொரு விஷயத்தில் முரண்பட்டுத்தான் இருப்பர். ஆலிமுடைய வீட்டிலும் அது இருக்கும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீடுகூட இதற்கு விதிவிலக்கல்ல. உலகிலேயே மிகச்சிறந்த நிறுவனம் குடும்பம்தான். அது பலராலும் போற்றப்படுகிறது. அல்குர்ஆனே அதற்கு சான்று. சூரத்துல் ரஹீமை ஓதிப்பார்த்தால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுப்பிரச்சினை தெரியவரும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களும் தமது மனைவிமாருடன் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு. ஒரு மனிதர் தன் மனைவியைப் பற்றி முறையிடுவதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வருகிறார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கதவை தட்டுகிறார். உள்ளே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி சத்தமாக ஏசுவது கேட்கிறது. உடனே அம்மனிதர் திரும்பிவிடுகிறார். கதவைத் தட்டியவர் போவதைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவரைக் கூப்பிட்டு வந்த விடயம் என்ன என்று கேட்டார். ‘அமீருல் முஃமினீன் அவர்களே என் மனைவி பற்றி முறையிட உங்களிடம் வந்தேன். எனது நிலைதான் உங்களுக்கும் என்று அறிந்த போது திரும்பிவிட்டேன்’ என்றார். அதைக்கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு சிரித்தார்கள். அது அவளுக்குள்ள உரிமை. அவர்கள் கதைப்பதற்கு, ஏசுவதற்கு உரிமை இருக்கிறது என்று கூறினார்கள்.
அல்லாஹ் இருவரையும் ஒரே உருவத்தில் படைக்கவில்லை. ஒன்று போல் தோன்றினாலும் ஆழமாக நோக்கினால் நுண்ணிய வேறுபாடுகள் தென்படும். அவ்வாறே இருவரை ஒரே இயல்பிலும் படைக்கவில்லை. கணவன் மனைவியோ, நண்பர்கள் இருவரோ முரண்படக்கூடாது என்று விரும்பினால் இருவரில் ஒருவர் அடுத்தவரிடம் ஒத்துச் செல்ல வேண்டும். அடுத்தவரின் கருத்தைப் பின்பற்றுவதற்கு தனது கருத்தோடு முரண்பட வேண்டும். ஒவ்வொருவரும் தனது கருத்துதான் சரியென்று வாதிட்டால் உடன்படவே முடியாது. ஒருவர் வீதியின் அந்தப் பக்கமும் மற்றவர் வீதியின் இந்தப் பக்கமும் நின்று கொண்டு கைகுலுக்க விரும்பினால் அது ஒருபோதும் முடியாது. ஒருவர் அடுத்தவரை நோக்கி நடக்க வேண்டும். அல்லது இருவரும் நேராக நடந்து சென்று வாகனமில்லாத வீதியின் நடுப்பகுதிக்கு வரவேண்டும்.
எல்லா நிறுவனத்துக்கும் ஒரு முதல்வர் இருப்பார். கணவன் குடும்ப நிறுவனத்தின் தலைவர். எனவே அவரது கருத்து முதன்மையாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை. வீட்டில் நடக்கும் அன்றாட விஷயங்களில் எல்லாம் அவரது கருத்து, தலையீடு இருக்கக்கூடாது. இது பெண்ணின் உரிமை. அவர் உள்நாட்டு அமைச்சர் மாதிரி. பிரதம மந்திரியைப் போல மேற்பார்வை செய்வதுதான் கணவனின் பணி. உதாரணமாக வீடு அழுக்காக இருந்தால், ஒழுங்கின்றி இருந்தால் அல்லது சமைக்க தாமதம் என்றால் அதை உணர்த்தலாம். அல்லது நாமும் கூடவே உதவலாம். பெரும்பாலான ஆண்கள் சுத்தத்தைப் பற்றிக் கவனிப்பதில், வீட்டை ஒழுங்கு படுத்துவதில், சமைப்பதில் மனைவியுடன் பங்கெடுப்பதுமில்லை. தனது கருத்துக்களுடன் மனைவி ஒத்துவர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும்.
பெண்களில் சிலர் சுத்தம் என்ற நோய் அதிகரித்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டின் சில இடங்களை யாரும் பயன்படுத்த விடமாட்டார்கள். அல்லது பொருட்களை தொடவிடமாட்டார்கள். சமயோசித மனைவி, தன் கணவனுக்கு எது பிடிக்கும் என்பதை அவதானத்துடன் செய்வாள். எனவே கணவன் மனைவியின் இந்தப் போக்கை அங்கீகரிக்க வேண்டும். அதாவது அதிகாரத்தால் கோபமுறவும் கூடாது. ஏவல், விலக்கல் தவிர வேறு எதுவும் தெரியாத கைசர் மன்னரைப் போலவும் மாறிவிடக்கூடாது. மக்களுடன் மட்டும் அன்பு செலுத்தக் கூடாது. சிலர் பிறருடன் நல்ல முறையில் நடந்து கொண்டு குடும்பத்துடன் மோசமாக நடந்து கொள்வர்.
எனது ஊரில் ஒரு பிரபலமான மனிதர் இருந்தார். நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் எல்லோரையும் சிரிக்கவைத்துவிடும் திறமைசாலி. ஆனால் அவர் வீட்டில் சிரித்ததை நான் கண்டதில்லை. வீட்டில் யாருடனும் பேசமாட்டார். சிரிப்பதுகூட இல்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்தால் ஏற்கனவே இருக்கும் கலகலப்பும் போய்விடும். அவர் வீட்டிலிருக்கும் போது யாரையும் பேசவும் அனுமதிப்பதில்லை.
என்னுடைய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் சுற்றுழாவுக்குப் போனால் சமைக்கின்ற, நண்பர்களுக்குப் பணிவிடை செய்கின்ற வேலைகளை எடுத்துக் கொள்வார். யாருடைய தேவையாக இருந்தாலும் மிகவும் விருப்பத்துடன் அவரே செய்து கொடுப்பார். ஆனால் அவரது வீட்டில் படுசோம்பேறியாக இருந்தார். குடும்பத்துக்கு அதிக சுமையைக் கொடுப்பவராக இருந்தார். ஒரு கிளாஸ் தண்ணீரை அவரது கைகொண்டு எடுத்துக் குடிக்கமாட்டார். தனது உடுப்பை அணிவதற்குக் கூட மற்றவரின் உதவி தேவைப்படும்.
அதுபோல்தான் வேறொரு நண்பர், தனது சகபாடிகளுடன் தாராளமாக செலவு செய்வார். அவர்களுக்கு அன்பளிப்புக்களைக் கொடுப்பார். அவர்களைச் செலவு செய்ய விடமாட்டார். இவர் வீட்டில் மிகப்பெரும் உலோபியாக நடந்து கொள்வார். அத்தியவசியத் தேவைகளுக்குக் கூட மிகவும் இறுக்கமாக நடந்து கொள்வார்.
பெண்களைப் பொருத்தவரை வீட்டில் விருந்தினர் வந்திருக்கும் போது அவர்களின் வாயிலிருந்து மோசமான வார்த்தை எதுவும் வெளிவராது. எப்போதும் ஒரு புன்னகைதான் அவர்கள் முகத்தில் இருக்கும். என்ன அன்பு, என்ன உபசரிப்பு என்று வீட்டுக்கு வந்த விருந்தினர் வாயார புகழந்து கொண்டு செல்வர். அவர்கள் சென்றதும் கணவன் வீட்டுக்குள் வந்தால் முகம் கடுகடுப்பாக மாறிவிடும். தோடம்பழத்தை தேலோடு விழுங்கிய கிழவியின் முகம்போல சில பெண்களின் முகம் கணவனைக் கண்டவுடன் மாறிவிடும்.
அதேபோல பெண்கள் வெளியே போக கிளம்பிவிட்டால் நண்பர்களின் நெருங்கிய உறவினர்களின் வீடாக இருந்தாலும் மணப்பெண்ணைப் போல அலங்கரித்துக் கொண்டு செல்வதுண்டு. மிகச்சிறந்த உடுப்பைத்தான் அணிந்து மனம்பூசிச் செல்வர். ஆனால் கணவன் வரும்போது சமயலறை உடுப்புடனும், முகத்தில் கரியுடன் முன்னுக்கு வந்து நிற்பர்.
அடுத்தவர்கள் மீது காட்டுகின்ற கரிசனையை விட சொந்தங்கள் மீது கரிசனை, அன்பு, பரிவு அதிகமாக இருக்க வேண்டும். நல்ல முறையில் கணவன் மனைவியினர் அலங்கரித்து இருக்கவும் நல்ல வார்த்தைகளை உபயோகிக்கவுமே இஸ்லாம் சொல்கிறது.
அடுத்தவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதற்கும் உறவினர்களுடன் மோசமாக நடந்து கொள்வதற்கும் காரணமென்ன?
ஒவ்வொரு மனிதனுக்கும் அடுத்தவருக்கு மத்தியில் வெளிப்படுத்த முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன. இது நாம் மற்றவரோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதைப் பொருத்து வித்தியாசப்படுகிறது.
ஒரு அரேபிய பழமொழி இருக்கிறது. உன் நண்பனை நோக்கி உன் முகத்தை நெருக்கமாகக் கொண்டு போனால் அவனால் உன்னைப் பார்க்க முடியாது. மாறாக உன் மூக்கு இருக்குமிடம் அவனுக்கு மலைகள் போலத்தெரியும். அதன் ஆரம்பத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் இருப்பதாகத் தெரியும். அவ்வாறே இரண்டு சமாந்தரக் கோடுகளைக் கீறிவிட்டு தள்ளி நின்று பார்த்தால் ஒன்றையொன்று உரசிச்செல்வது போல் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அவற்றுக்கிடையில் இடைவெளி இருப்பது தெரியும். இவ்வாறுதான் மக்களும். பிரயாணம் ஒன்றில் என்னுடைய நெருங்கிய நண்பருடன் ஒரு இரவு தங்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. அன்று எனக்கு உண்பது, குடிப்பது, உறங்குவது போன்ற விஷயங்களில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாழ்வில் வேறெந்த நாளும் ஏற்பட்டது கிடையாது.
பொறுப்பு விஷயத்தில் தீவிரமாக செயற்படுவதும் அதிக நட்பை நீக்கிவிடும். கணவன் மனைவி இருவரும் தத்தமது விஷயங்களில் உத்தியோக பூர்வமாக நடந்து கொள்வதும் நல்லதல்ல. பொறுப்பு இல்லாமல் பொதுவாக இயங்குவதும் நல்லதல்ல. ஒவ்வொன்றுக்கும் அடுத்தவரே அதற்கு காரணம் என்று தப்பித்துக் கொள்ளும் நிலை அங்கு உருவாகிவிடுகிறது.
(முற்றும்)
(- இலங்கை வானொலி நேர்காணலின் எழுத்து வடிவம் ஆகும்.)
source: http://idrees.lk/?p=1018 ( جَزَاكَ اللَّهُ خَيْرًا )