Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருக்குர்ஆனை அணுகும் முறை (2)

Posted on July 6, 2011 by admin

 மையக் கருத்தும் இலக்கும்: 

திருக்குர்ஆனின் இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின், அது விவாதிக்கும் பொருள் (subject) என்ன, அதன் மையக் கருத்து என்ன, அதன் குறிக்கோள் என்னவென்பதைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள முடியும். அது விவாதிக்கும் பொருள் (subject) மனிதனைப் பற்றிய தாயிருக்கிறது. எனவேதான் மனிதனின் வெற்றியும் நற்பேறும்,

அவனுடைய வீழ்ச்சியும் இழப்பும் எந்த அம்சங்களில் அமைந்துள்ளன என்பதை அது விரிவாக ஆராய்கிறது. இதன் மையக் கருத்து இதுதான்: இறைவன், பிரபஞ்சத்தின் அமைப்பு முறை, இவற்றில் மனிதனுடைய நிலை, அவனுடைய இந்த உலக வாழ்வு ஆகியவை பற்றி தன் புலனுணர்விற்கு உட்பட்டவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மனிதன் ஏற்படுத்திக்கொண்ட கோட்பாடுகள், அல்லது தன் கற்பனைகளுக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்ட தத்துவங்கள், அல்லது மன இச்சைகளுக்கு அடிமைப்பட்டு வகுத்துக்கொண்ட கருத்தோட்டங்கள் ஆகியன யாவுமே அடிப்படையில் தவறானவையாய் இருக்கின்றன.

மேலும் அவற்றுக்கு இசைவாக மனிதன் மேற்கொள்ளும் வாழ்வின் போக்கு ஒவ்வொன்றும் முற்றிலும் தவறானதாகவே இருக்கிறது; விரும்பத்தகாத விளைவுகளை உண்டுபண்ணக்கூடியதாகவும், அழிவைத் தரக்கூடியதாயுமிருக்கிறது. இவற்றுக்கு மாறாக மனிதனைத் தன்னுடைய பிரதிநிதியாக (கலீஃபாவாக) நியமிக்கும் போது இறைவன் அவனுடைய நிலை பற்றி அவனுக்கு அறிவித்தவையே முற்றிலும் உண்மையானவையாகும். அந்த உண்மையின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது நான் முந்தைய பக்கங்களில் “வாழ்வின் சீரிய நேரியபோக்கு” என்று விவாதித்துள்ள வாழ்க்கை ஒன்று மட்டுமே மனிதனுக்குரிய நேரிய வாழ்க்கை அமைப்பாகும். அதை மேற்கொண்டால்தான் அவனுடைய இறுதி முடிவு வெற்றியுடையதாயும், நற்பேறு கொண்ட தாயுமிருக்கும் எனப் புலனாகின்றது.

இதன் குறிக்கோள் என்னவெனில், மனிதனை இந்த நேர்வழியின்பால் அழைப்பதும், எந்த வழிகாட்டுதலை மனிதன் தன்விழிப்பின்மையினாலும், அசட்டுத்தனத்தாலும், இழந்து விட்டானோ அல்லது தன் குறும்புத்தனத்தால் அலங்கோலப்படுத்திவிட்டானோ அந்த வழி காட்டுதலை மீண்டும் அவனுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதும்தான். இந்த மூன்று அடிப்படைகளையும் கருத்தில் கொண்டு குர்ஆனைப் படித்தால் இத்திருவேதம் தன் உள்ளடக்கம், தன் மையக் கருத்து, தன் குறிக்கோள் ஆகியவற்றிலிருந்து ஒரு நூலிழைகூட மாறிச் செல்லவில்லையென்பது புலனாகும். ஒரு மணியாரத்தில் சிறிதும் பெரிதுமான பல நிற மணிகள் கோர்க்கப்பட்டிருப்பது போல், ஆரம்பம் முதல் இறுதிவரை இந்தத் திருமறையில் சர்ச்சை செய்யப்பட்டுள்ள பல்வேறு கருத்துகள் அதன் மையக்கருத்துடன் இணைந்திருக்கின்றன என்பது தெளிவாகும். வானம், பூமி ஆகியவற்றின் அமைப்பு, மனிதனைப் படைத்தல், பிரபஞ்சத்தின் சான்றுகள், சென்றுபோன சமுதாயங்களின் வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகியவை பற்றியெல்லாம் இத்திருமறை பேசுகிறது. பல்வேறு சமுதாயங்களின் கோட்பாடுகள்,

ஒழுக்கவியல், பழக்க வழக்கங்கள், செயல்முறைகள் பற்றியெல்லாம் அது விமர்சிக்கிறது. புலனுணர்விற்கு அப்பாற்பட்ட விஷயங்கள், பிரச்னைகள் ஆகியவற்றுக்கு விளக்கங்கள் தருகிறது. இன்னும் பல பொருள்கள் பற்றியும் விவரிக்கிறது. ஆனால் இயற்கைப் பாடம் கற்பிப்பதோ வரலாறு, தத்துவம் ஆகிய கலைகளில் தேர்ச்சி பெறச் செய்வதோ இதர கலைகளில் எது ஒன்றைப் பற்றியும் கற்றுத் தருவதோ இத்திருவேதத்தின் நோக்கமன்று. மாறாக வாழ்வின் உண்மைகளைப்பற்றி மனிதன் ஏற்படுத்திக்கொண்டுள்ள தவறான எண்ணங்களைப் போக்கி அவனுடைய உள்ளத்தில் அடிப்படை உண்மைகளை வேரூன்றச் செய்வதுதான் அதன் நோக்கமாகும்.

உண்மைக்கு மாறான வாழ்க்கைப் போக்குகளின் தவற்றையும் அதனால் இறுதியில் ஏற்படும் இழப்பையும் தெளிவாக எடுத்துரைத்து, உண்மைகளுக்கு இயைந்த இறுதியில் வெற்றியையும் நற்பேற்றையும் அளிக்கக்கூடிய வாழ்க்கை முறைகளை மேற்கொள்ளும்படி அழைப்புப் கொடுப்பதே அதன் தலையாய நோக்கமாகும். இதனாலேயே தன் இலக்கையும் நோக்கையும் தெளிவாக்க எந்த அளவுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிய விவரம் தேவைப்படுகிறதோ அந்த அளவுக்குத்தான் அதனை அது குறிப்பிடுகிறது. தேவையான அளவுக்கு இந்த விவரங்களைக் குறிப்பிட்டபின் தன் நோக்கத்துக்கு தொடர்பில்லாதவற்றின் விவரங்களையும், விளக்கங்களையும் தருவதை நிறுத்தி விட்டுத் தன்னுடைய நோக்கம், மையக்கருத்து ஆகியவற்றின் பால் திரும்பி விடுகிறது. எனவே அதனுடைய விளக்கங்கள் முழுவதும் ஒருமித்தனவாய் இந்த “அழைப்பை” மையமாகக் கொண்டு வட்டமிட்டுச்செல்கின்றன.

குர்ஆன் அருளப்பட்ட சூழ்நிலையும் வாக்கியங்களின் பின்னணியும் குர்ஆன் அருளப்பட்ட சூழ்நிலையையும் மேற்சொல்லப்பட்ட அதன் தன்மைகளையும் நன்கு அறிந்து கொள்ளாவிட்டால் அதனுடைய பாணியையும், அதன் தொகுப்புமுறையையும் இன்னும் அதில் விவாதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட பிரச்னைகளையும், கருத்துகளையும் நன்றாகவும் தெளிவாகவும் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இஸ்லாமிய இயக்கத்தின் ஆரம்பக்கட்டத்தில் மக்களை ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெறியின்பால் அழைக்க அல்லாஹுதஆலாவினால் முழுமையாக எழுதப்பட்டு, ஒரே நேரத்தில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நூலன்று இது. மேலும் இது சாதாரணமாக இயற்றப்படும் நூல்களைப் போல ஓர் அடிப்படைக் கருத்து அல்லது கட்டுரைத் தலைப்பு ஒன்றை வைத்துக் கொண்டு விவாதிக்கும் நூலுமன்று. எனவே தான் சாதாரண நூலில் காணப்படும் தொகுப்பு முறையையோ, வாசகத்தின் அமைப்பையோ நாம் இதில் காண முடியாது.

உண்மையில் இதன் தன்மை என்னவென்றால் இதனை அல்லாஹுதஆலா அரபு நாட்டின் ஒரு நகரான மக்காவில் தன் நல்லடியார் ஒருவரைத் தூதுத்துவப் பணி செய்யத் தேர்ந்தெடுத்து. “”உம் நகரில் உம் குலத்தார்க்கு (குறைஷிகளுக்கு) இந்த அழைப்பை விடுப்பதின் மூலம், இப்பணியைத் தொடங்கு வீராக!” என்று கட்டளையிட்டான். இப்பணிக்காகத் தொடக்கத்தில் என்ன அறிவுரைகள் தேவையோ, அவை மட்டுமேதான் கொடுக்கப்பட்டன. அவற்றில் கீழ்க்காணும் மூன்று விஷயங்கள் முதன்மையாக வலியுறுத்தப்பட்டன.

ஒன்று : நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மகத்தான பணியைச் செம்மையாக நிறைவேற்ற எவ்வாறு தம்மைத் தாமே தயார் செய்து கொள்ள வேண்டுமென்றும், எந்த முறையில் இப்பணியை ஆற்றவேண்டுமென்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இரண்டு : மனித வாழ்வின் உண்மைகள் பற்றிய அடிப்படையான விஷயங்கள் தரப்பட்டன. அன்றைய சூழ்நிலையில் மக்கள், மனித வாழ்வின் அடிப்படைகளைப்பற்றி ஏற்படுத்திக்கொண்டிருந்த தவறான கருத்துகளையும் அவற்றின் காரணமாக அவர்கள் மேற்கொண்டிருந்த வாழ்வின் தவறான நடைமுறைகளையும் சுருக்கமாக எடுத்துரைத்து அவற்றை அகற்ற வேண்டியதற்கான அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.

மூன்று : வாழ்வின் நேரிய, சீரிய ஒழுங்கு முறையின் பால் அழைப்பும், இறைவனின் வழிகாட்டுதலுக்கொப்ப அமையக்கூடியதும் மனிதனுக்கு நிறைவுடைய, செழுமைமிக்க வாழ்வைத் தரக்கூடியதுமான ஒழுக்கவியலின் அடிப்படைகள் பற்றிய விவரங்களும் அருளப்பட்டன. இஸ்லாமிய இயக்கத்தின் முதற்கட்டம்

இந்தத் தொடக்க கால அறிவுரைகள் சுருக்கமான சிறுசிறு வாக்கியங்கள் கொண்டவையாய் இருந்தன. அதன் மொழி மிகவும் இனிமையுடையதாயும், கவர்ச்சியுடையதாயும், இலக்கிய நயம் கொண்டதாயும், சக்தி வாய்ந்ததாயும் இருந்தது. மேலும் எந்தச் சமுதாயத்தை நோக்கி அழைப்பு விடுக்கப் பட்டதோ அதனுடைய இலக்கியச் சுவைக்கு ஏற்ப உன்னதமான நடையில் அமைந்திருந்தது. கேட்போரின் உள்ளங்களில் பசுமரத் தாணிபோல் பதிந்து விடும் அளவுக்கு அதன் இலக்கிய நயமும், வீச்சும் சக்தி வாய்ந்தவையாயிருந்தன. அதனைச் செவியுறுவோர், தாமாகவே அதன்பால் ஈர்க்கப்படுமளவுக்கு அதன் நடை இனிமை வாய்ந்ததாய் இருந்தது. அதனைக் கேட்போர் தாங்களாகவே அதன் வாக்கியங்களைத் திரும்பத் திரும்ப உச்சரித்து பரவசமடையும் அளவுக்கு அதன் இலக்கியப் பேரழகு அமைந்திருந்தது.

இந்த அறிவுரைகள் எங்கு அருளப்பட்டனவோ, அப்பகுதியின் வாசனையே அதில் அதிகமாக வீசியது. உலகளாவிய பேருண்மைகளைப்பற்றி அவை அறிவுறுத்துகின்றன என்றாலும் அவற்றுக்கு வேண்டிய சான்றுகள், நிரூபணங்கள், உவமைகள் எல்லாம் அம்மக்களைச் சுற்றி நெருங்கியிருந்த அவர்கள் நன்கு அறிந்திருந்த சூழ்நிலையிலிருந்தே எடுக்கப்பட்டவையாய் இருந்தன. அந்த மக்களிடம் இந்த அறிவுரைகளின் பயனும் விளைவும் சரிவர ஆழமாக வேரூன்ற வேண்டும் என்ற நோக்குடன் இந்தப் பேருண்மைகளை எடுத்துரைக்கும்போது அவர்களுடைய வரலாறு, அவர்களுடைய மரபுகள், அன்றாடம் அவர்கள் அனுபவித்து வந்த விஷயங்கள், அவர்களுடைய சமயக்கோட்பாடு, ஒழுக்கவியல், அவர்களுடைய கூட்டுவாழ்வில் ஏற்பட்டிருந்த தீமைகள் ஆகியவை மட்டுமே விவாதிக்கப்பட்டிருந்தன.

இஸ்லாமிய இயக்க அழைப்பின் இந்த ஆரம்பக் கட்டம் ஏறத்தாழ நான்கைந்து ஆண்டுகள் வரையில் நீடித்தது. இந்தக் கட்டத்தில் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புப்பணியால் மூன்றுவித விளைவுகள் தோன்றின.

(அ) ஸாலிஹான நேர்மையுள்ளம் படைத்த சிலர் இந்த அழைப்பை ஏற்று அதன் அடிப்படையில் ஒரு குழு (உம்மத்தே முஸ்லிமா) வாகச் செயலாற்றத் தயாராதல்.

(ஆ)குறைஷி மக்களில் பெரும்பாலோர் அறியாமையினால், அல்லது தமது சுயநலத்தால், அல்லது தங்கள் மூதாதையர்களின் வழிமுறைகளில் கொண்டிருந்த பற்றின் காரணத்தால் இந்த அழைப்பை எதிர்க்கத் தலைப்படல்.

(இ)இந்த இயக்க அழைப்பின் குரல், மக்காவைத் தாண்டியும், குறைஷிகளுடைய எல்லையைத் தாண்டியும் பல்வேறு பகுதிகளில் எட்ட ஆரம்பித்தல். மக்காவில் அருளப்பட்ட வசனங்களின் பின்னணி இங்கிருந்து இந்த அழைப்பின் இயக்கத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கலாயிற்று. இக்கட்டத்தில் இஸ்லாமிய இயக்கத்துக்கும் அஞ்ஞான மரபுக்கும் இடையில் கடும் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் தொடர்ந்து ஒன்பதாண்டு காலம் நீடித்தது. குறைஷிகள் மட்டுமல்ல; அஞ்ஞானத்தைக் கட்டிக்காக்க உறுதி பூண்டெழுந்த, அரபு நாட்டிலுள்ள அனைவருமே பலாத்காரமாக இந்த இயக்கத்தை நசுக்கிவிடக் கங்கணம் கட்டினர்! இதை ஒழிப்பதற்கு எல்லா வகையான கருவிகளையும் அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

பொய்ப் பிரச்சாரம், குற்றச்சாட்டுகள், ஐயப்பாடுகளைக் கிளப்புதல், ஆட்சேபணைகள் ஆகிய அனைத்தையும் அவிழ்த்து விட்டனர். சாதாரண பாமரமக்களின் உள்ளங்களில் விதவிதமான சந்தேகங்களை விதைத்தனர். மேலும் இந்த இயக்கத்துடன் அந்தப் பாமர மக்கள் தொடர்பு கொள்ளாமலிருக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மெற்கொள்ளத் தொடங்கினர். அந்த மக்களை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சைக் கேட்காதவாறு தடுக்க முயன்றனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரைப் பயங்கரமாக மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தினர். அவர்களை வாழ விடாமல் செய்வதற்காக அவர்களுடைய பொருளாதார, சமுதாய வாழ்வைச் சீர்குலைத்து நசுக்க முயன்றனர். அவர்கள் எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தினார்களென்றால் அந்த முஸ்லிம்கள் இரு தடவை தங்கள் வீடுவாசல்களை விட்டு வெளியேறி அபிஸீனியாவில் சென்று குடியேறும் அளவுக்குக் கொடுமைப் படுத்தப்பட்டனர். இறுதியாக இந்த அழைப்பை ஏற்றவர்கள் மக்காவை நிரந்தரமாகத் துறந்து மதீனாவில் குடியேறும் கட்டாய நிலைக்கு ஆளாயினர். ஆனால் இடையூறுகளுக்கும் கொடுமைகளுக்கும் இடையேயும் இந்த இயக்கம் விரிவாகப் பரவிக்கொண்டே போயிற்று.

அன்று மக்கா நகரில் இந்த இயக்க வளர்ச்சியினால் பாதிக்கப்படாத எந்த ஒரு வீடும் இருக்க வில்லை; ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் யாரேனும் ஒருவர் இந்த அழைப்பை ஏற்று இதை மேலோங்கச் செய்திடப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலைமை இஸ்லாத்தை எதிர்த்து வந்தவர்களின் பகைமையை இன்னும் கடுமையாக்கிவிட்டது. தம்முடைய சகோதரர்கள், தம் புதல்வர்கள், புதல்விகள், உறவினர்கள் ஆகியோர் இந்த அழைப்பை ஏற்று அதற்காக உயிர்த் தியாகம் செய்ய முன்வந்ததையும் தம் இதயக் கண்மணிகள் இந்த இலட்சியத்திற்காகத் தம்மையே எதிர்த்துப் போராடத் தலைப்பட்டதையும் கண்டு அவர்களுடைய ஆத்திரம் மேலும் பொங்கி எழுந்தது.

இஸ்லாத்துக்கு எதிராக அவர்கள் செய்து வந்த சொல்லொணாக்கொடுமைகளுக்கும் இதுவும் ஒரு காரணமாய் இருந்தது. அஞ்ஞான வாழ்க்கை முறையை விட்டு இந்த இயக்கத்தில் தங்களைப் பிணைத்துக்கொண்டோர் அனைவரும் ஏற்கனவே தம் சமுதாயத்தில் சிறப்புடையோராகவே திகழ்ந்து வந்தனர். இந்த இயக்கத் தொடர்பு அவர்களுடைய சிறந்த பண்புகளுக்கு மேலும் மெருகூட்டி அவர்களை மிகவும் நேர்மையுடையோராகவும், நல்வழிப்பட்டோராகவும், உன்னதப் பண்புடையோராகவும் மாற்றியமைத்து விட்டது. எத்தகைய மக்களை இந்த இயக்கம் தன்பால் ஈர்த்து விடுகிறது, அவர்களை எத்தகைய மேம்பாடு உடையவர்களாய் மாற்றுகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டுவந்த உலகம், இந்த இயக்கம் எத்துணை வலிமை பெற்றது; மேம்பாடுடையது என்பதும் சிந்திக்கப்பட்டது. இந்த அம்சமும் இந்த இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நீண்ட கடுமையான போராட்டக் காலத்தில், அல்லாஹுதஆலா சந்தர்ப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்பத் தன் தூதருக்கு வீறுகொண்டெழச் செய்யும் நல்லுரைகளை அருளினான். அவற்றில் தங்குதடையின்றிச் செல்லும் நீரோட்டத்தின் விறுவிறுப்பும், சீறிப்பாயும் வெள்ளத்தின் வேகமும், வலிமையும், ஆர்த்தெழும் நெருப்பின் பாதிப்பும் ஆற்றலும் பொதிந்திருந்தன. ஒரு புறம் இந்த அறிவுரைகள் மூலம் ஈமான் கொண்டோருக்கு அடிப்படைக் கடமைகள் விளக்கப்பட்டன. அவர்களுக்கு மத்தியில் இயக்கக் கட்டுப்பாட்டு உணர்வு தோற்றுவிக்கப்பட்டது; இறையச்சம் (தக்வா), பண்பாட்டுச் சிறப்பு, வாழ்வின் தூய்மை ஆகியவை பற்றிய அறிவுரைகள் அருளப்பட்டன. சத்திய தீனின் அழைப்புக்கான வழிவகைகள் எடுத்துக் காண்பிக்கப்பட்டன.

வெற்றியின் வாக்குறுதிகளும், சுவர்க்க வாழ்வின் நற்செய்திகளும் கொண்டு அவர்களுக்கு ஊக்கமூட்டப்பட்டது. பொறுமையுடனும், உறுதியுடனும், பேரார்வத்துடனும் இறைவழியில் பாடுபடுவதற்கு உற்சாகமூட்டப்பட்டது. இலட்சியத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் தியாகத்தன்மைகள் அவர்களுக்குப் புகட்டப்பட்டன. இதன் காரணமாக அவர்கள் எந்தத் துன்பங்களையும் சகித்துக் கொள்ளவும், தம்மை நோக்கிவரும் எல்லாவித எதிர்ப்புப் புயல்களோடு மோதவும் தயாராயிருந்தனர். மறுபுறம் இந்த இயக்கத்தை எதிர்த்தோர்க்கும், சத்தியத்திலிருந்து முகம் திருப்பிக் கொண்டிருந்தவர்களுக்கும், இறை நெறியைப் புறக்கணித்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தோர்க்கும் இந்த உரைகளில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அவர்கள் அறிந்திருந்த சமுதாயங்களின் வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தம் பயணங்களின்போது அவர்கள் கடந்த சென்று கொண்டிருந்த பாழடைந்த நகரங்களின் வரலாற்றைக் கூறி, அவற்றிலிருந்து படிப்பினை பெறும்படி அறிவுறுத்தப்பட்டனர். இரவும் பகலும் வானங்களிலும் பூமியிலும் அவர்கள் கண்முன் தோன்றிக் கொண்டிருந்த இயற்கைக் காட்சிகளிலிருந்து ஏகத்துவம், மறுமை ஆகியவை பற்றிய தெளிவான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டன. இணைவைத்தல், மறுமையை மறுத்தல் ஆகியன மிகத் தவறானவை என்று எடுத்துரைக்கப்பட்டன.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

66 − = 65

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb