மேலும் தாமே சுயாதிகாரம் பெற்றிருப்பதாகக் கூறிக்கொண்டு மனம்போன போக்கில் வாழ்வதும், மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருப்பதும் எத்தகைய தவறான செயல் எனத் தக்க ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டது. அந்த ஆதாரங்கள் உள்ளத்தை ஈர்ப்பனவாயும், சிந்தனையைக் கிளர்வனவாயும் இருந்தன. மேலும் அவர்களுடைய ஒவ்வோர் ஐயப்பாடும் அகற்றப்பட்டது.
அவர்களுடைய ஒவ்வோர் ஆட்சேபத்துக்கும் அறிவார்ந்த விளக்கம் தரப்பட்டது. தாங்களே சிக்கிக் கொண்ட அல்லது அவர்கள் பிறரைக் சிக்க வைக்க முயன்ற குழப்பங்கள் அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன. இவ்வாறு அஞ்ஞானகால மரபுகள் அறிவு சார்ந்த உலகில் நிலைகொள்ள முடியாதவாறு அம்மக்கள் முன்னே எடுத்து விளக்கப்பட்டன.
இத்துடன் அவர்களுக்கு இறைகோபம், இறுதித் தீர்ப்புநாளின் பயங்கரங்கள், நரக வேதனைகள் ஆகியவை பற்றியும் அச்சுறுத்தப்பட்டன. இன்னும் அவர்களின் தீய பண்புகள், தவறான வாழ்க்கை முறை, அஞ்ஞானப் பழக்க வழக்கங்கள், சத்தியத்தை எதிர்க்கும் போக்கு முஃமின்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமை ஆகியவை பற்றியும் அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.
இறைவனின் திருப்திக்கு இசைவான, தூய்மையான நாகரிகங்கள் ஆதிகாலத்திலிருந்தே எந்த ஒழுக்க, சமூக அடிப்படைகளில் தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கின்றனவோ அந்த அடிப்படைகள் அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்டன. இந்த இரண்டாம் கட்டம் தன்னுள் பல்வேறு படித்தரங்களைக் கொண்டதாயிருந்தது.
இதன் ஒவ்வொரு படித்தரத்திலும் இந்த இயக்கத்தின் அழைப்பு விரிவாகிக்கொண்டே போயிற்று. அதற்காக மிகவும் கடினமாகப் பாடுபட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. மேலும் அதற்கேற்ப இடையூறுகளும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் கடுமையாகிக்கொண்டே போயின.
பல்வேறு கோட்பாடுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை மேற்கொண்டிருந்த மக்களுடன் தொடர்புகள் ஏற்பட்டன. இதற்கேற்பவே அல்லாஹுதஆலா தன்னுடைய அறிவுரைகளை அருளினான். எனவேதான் இக்கட்டத்தில் அருளப்பட்ட வாக்கியங்களில் பல்வேறுபட்ட கருத்துகளும், விஷயங்களும் சர்ச்சை செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் வாக்கியங்களுக்கும் அவற்றிற்கு இடையே காணப்படும் மாறுபட்ட தோரணைக்கும், அமைப்புக்கும் இதுவே காரணமாகும். இந்த இயக்கத்தின் முதல் பதின்மூன்றாண்டுகளில் மக்கமாநகரில் அருளப்பட்ட வசனங்களின் பின்னணி இதுவேயாகும். மதீனாவில் அருளப்பட்ட வசனங்களின் பின்னணி மக்கமாநகரில் பதின்மூன்றாண்டுக் காலமாகப் பற்பல இடைறுகளுக்கிடையில் இயங்கிக் கொண்டிருந்த இந்த இஸ்லாமிய இயக்கத்துக்கு மதீனா மாநகரம் ஒரு புதிய தலைமையகமாக அமைந்தவிட்டது.
இந்த இயக்கத்தின் அழைப்பை ஏற்று, அரபு நாட்டின் பல பகுதிகளில் பரவிக் கிடந்தவர்கள் அனைவரையும் ஒன்று திரட்ட மதீனா மாநகரம் மிகப் பொருத்தமான கேந்திரமாய்த் திகழ்ந்தது. எனவேதான் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், இஸ்லாத்தைப் பின்பற்றிய பெரும்பாலோரும் ஹிஜ்ரத் செய்து (தம் ஊர், உற்றார், உடைமைகள் அனைத்தையும் துறந்து) மதீனா வந்தடைந்தார்கள். இவ்வாறாக இந்த இயக்கம் மூன்றாம் கட்டத்தில் அடியெடுத்து வைத்தது. இந்தக் கட்டத்தில் சூழ்நிலைகள் முற்றிலும் மாறிவிட்டன. இந்த அழைப்பை ஏற்றுச் செயற்பட்ட “உம்மத்தே முஸ்லிமா’ எனப்படும் குழு அதிகாரப்பூர்வமான ஓர் ஆட்சியை நிறுவுவதில் வெற்றி கண்டுவிட்டது. அஞ்ஞான மரபுகளின் காவலர்களோடு ஆயுதந்தாங்கிய போராட்டம் தொடங்கிற்று.
முற்கால நபிமார்களின் “உம்மத்து’கள் (அவர்களைப் பின்பற்றிய குழுவினர்) ஆன அன்றைய யூத, கிறிஸ்தவ சமுதாயங்களைச் சமாளிக்க வேண்டியதாயிற்று. இந்த அழைப்பை ஏற்று நின்ற “உம்மத்தே முஸ்லிமா’ எனும் குழுவிலும் நயவஞ்சகர்கள் நுழைந்து விட்டனர். உள்ளிருந்து கொண்டு அவர்கள் செய்து வந்த சூழ்ச்சிகளுக்கும், சதிகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. இத்தகைய இடையூறுகளுக்கு மத்தியில் இந்த இயக்கம் தொடர்ந்து பத்தாண்டுகள் போரிட்டுக் கொண்டிருந்தது. இறுதியில் அரபு நாடு முழு வதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்து விட்டது. அத்துடன் உலகம் முழுமைக்கும் இஸ்லாமிய அழைப்பினை விடுப்பதற்கும் மனித இனத்தைச் சீர்திருத்துவதற்கும் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டைகள் அகன்று அவற்றுக்கான வசதி வாய்ப்புகள் இவ்வியக்கத்திற்குக் கிட்டின.
இந்தக் கட்டத்திலும் பல்வேறு படித்தரங்கள் இருந்தன. ஒவ்வொரு படித்தரத்திலும் இந்த இயக்கத்துக்குத் தனிப்பட்ட சில சிறப்புத் தேவைகள் இருந்தன. இத்தேவைகளுக்கேற்ப அல்லாஹுதஆலா அவ்வப்பொழுது தன் திருவுரைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளினான். இத்திருவுரைகளில் சிலசமயம் தீப்பொறி பறக்கும் பேச்சின் தோரணை இருந்தது. சில சமயம் முடிமன்னனின் பிரகடனங்கள், ஆணைகள் ஆகியவற்றின் சொல்வண்ணமும், கம்பீரமும் தொனித்தது. சில சமயம் ஓர் ஆசிரியர், பயிற்றுவோர் ஆகியோரின் பேச்சுத் தரமும் நயமும் காட்சியளித்தன. சில சமயம் ஒரு சீர்திருத்தவாதியின் ஆக்ககரமான சாயல் தென்பட்டது. இயக்கம் எப்படி இயக்கப்பட வேண்டும், அரசு எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், பண்பாடும் தூய்மையும் கொண்ட சமூகம் எப்படி உருவாக்கப்பட வேண்டும், வாழ்வின் பல்வேறு துறைகள், எந்தவித முறைகள் நியதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பன போன்ற விஷயங்களெல்லாம் தெளிவாக அறிவுறுத்தப்பட்டன. மேலும் நயவஞ்சகர்களுடனும், இஸ்லாமிய அரசின் பாதுகாப்புக்கு உட்பட்ட திம்மி (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அதே சமயம் இஸ்லாத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்டவர்)களுடனும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதும் விவரிக்கப்பட்டது.
வேதம் வழங்கப்பட்டவர்களுடன் (அஹ்லுல் கிதாப்) எத்தகைய தொடர்புகள் வைத்துக் கொள்ள வேண்டும், தம்மை எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருக்கும் பகைவர்களுடனும், தம்முடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நேச நாடுகள், சமுதாயங்கள் ஆகியவற்றுடனும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் இவ்வுரைகளில் விளக்கம் தரப்பட்டுள்ளன. இஸ்லாமிய அழைப்பை ஏற்று அதன் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டு கட்டுப்பாட்டுடன் இயங்கும் இந்தக் குழு, பிரபஞ்சத்தைப் படைத்தாளும் இறைவனுடைய பிரதிநிதித்துவம், தன் மீது சுமத்தும் கடமைகளை ஆற்ற தன்னை எவ்வாறு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அறிவுரைகளும் அவற்றில் இடம் பெற்றுள்ளன. இப்பேருரைகளில் ஒருபுறம் முஸ்லிம்களுக்கு அறிவுரையும், பயிற்சியும் தரப்படுகின்றன; அவர்களுடைய பலவீனங்கள் பற்றி எச்சரிக்கை செய்யப்படுகின்றது; இறைவனின் பாதையில் தங்கள் உயிரையும், உடைமைகளையும் அர்ப்பணிக்க அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். வெற்றியிலும் தோல்வியிலும், துன்பத்திலும் இன்பத்திலும், வளத்திலும் வறுமையிலும், அமைதியிலும் அச்சத்திலும் இவ்வாறான ஒவ்வொரு நிலையிலும் அதற்கேற்ற ஒழுங்கியல் பாடம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் அவர்களின் வழி நின்று இந்த அழைப்பு, சீர்திருத்தம் ஆகிய பணிகளைச் செம்மையாக நிறைவேற்ற முஸ்லிம்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. மறுபுறம் ஈமானை விட்டு அப்பால் நின்றோர், அஹ்லுல் கிதாப் எனப்படும் முன் வேதங்களைப் பெற்றிருந்தோரின் வழித்தோன்றல்கள், நயவஞ்சகர்கள், இந்த அழைப்பை மறுப்போர், இணைவைப்போர் ஆகிய அனைவர்க்கும் அவர்களுடைய பல்வேறுபட்ட நிலைகளுக்கேற்ப உண்மைகளை உணர்த்தவும், கனிவாக இந்த அழைப்பைச் சமர்ப்பிக்கவும் முயற்சி செய்யப்பட்டது. அவர்களின் நிலையைக் கடுமையாக விமர்சித்து நல்லுரை வழங்கவும், இறைவனின் தண்டனை குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தவும் கடந்தகால நிகழ்ச்சிகள், வரலாறு ஆகியவற்றைக் கொண்டு பாடம் புகட்டவும் முயற்சி செய்யப்பட்டது. அவர்கள் தம்முடைய தவறான போக்குகளில் உழன்று கொண்டிருப்பதற்கு ஒரு காரணமும் கூறமுடியாத அளவுக்கு இந்த இயக்கம் இவ்வாறான சான்றுகளையும், ஆதாரங்களையும் நிறைவாக அளித்துவிட்டது. இதுதான் மதீனா மாநகரத்தில் அருளப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களின் பின்னணியாகும்.
ஓர் இயக்கத்திற்குரிய வேத நூல் ஓர் இயக்கத்தின் அழைப்புக்காகத் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்பது மேற்சொன்ன விளக்கங்களிலிருந்து புலனாகும். அந்த இயக்கமும், அதன் அழைப்பும் தொடங்கி நிறைவு பெற இருபத்து மூன்றாண்டுகள் பிடித்தன. இந்தக் காலகட்டத்தில் இந்த இயக்கம் எந்தெந்தச் சூழ்நிலைகளில் வளர்ந்ததோ அவற்றின் பலதரப்பட்ட தேவைகளுக்கேற்பத் திருக்குர்ஆனின் பல்வேறு பகுதிகள் அருளப்பட்டன என்பதையும் மேற்குறிப்பிட்ட விவாதத்திலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். எனவே டாக்டரேட் பட்டம் வாங்குவதற்கு எழுதப்படும் ஒரு கட்டுரையில் இருக்கும் அமைப்பையும் தொடர்பையும் இத்திருமறையில் காணமுடியாது என்பது வெளிப்படை. இன்னும் இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கேற்ப அருளப்பட்ட குர்ஆனின் சிறிய பெரிய பகுதிகள் நூல் வடிவிலோ கட்டுரை வடிவிலோ கொடுக்கப்படவில்லை. மாறாக, உரைகளின் வடிவிலேயே அவை அருளப்பட்டன.
மேலும் அந்த வடிவிலேதான் அவை பரப்பப்பட்டன. எனவேதான் அவற்றில் ஒரு கட்டுரையின் பாணி இருக்கவில்லை. மாறாக, ஓர் உரையின் தோரணையே அவற்றில் தென்பட்டது. எனவே இந்த உரைகள் ஒரு பேராசிரியர் நிகழ்த்தும் சொற்பொழிவு போல் இல்லாமல் சீர்திருத்த அழைப்பு விடுப்போரின் பேருரைகளாய் இருந்தன; ஒரு சீர்திருத்த அழைப்பை விடுப்பவருக்கோ தம்முடைய உரைகளின் மூலம் மக்களின் உள்ளங்களையும், சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் வயப்படுத்தவேண்டியிருக்கிறது; விதவிதமான மனப்பாங்குடையவர்களைத் திருப்தியுறச் செய்ய வேண்டியுள்ளது. தம் இயக்கமும், பிரச்சாரமும் நடைமுறையில் செயல்படும்போது எண்ணற்ற மாறுபட்ட கட்டங்களையும், சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாத்தியமான எல்லா அம்சங்களைக் கொண்டும் தம்முடைய கருத்துகளை உள்ளங்களில் பதியவைத்து, பொதுமக்களின் சிந்தனைகளையும், கருத்துகளையும் மாற்றியமைத்து மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப வேண்டியதாகவுமிருக்கிறது; எதிர்ப்புகளின் வலிமையைத் தகர்த்தெறிய வேண்டியிருக்கிறது.
தோழர்களைச் சீர்திருத்தி அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டியதாயிருக்கிறது; தம் அழைப்பை நிராகரிப்போரை அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய வேண்டியதாயும் இருக்கிறது. எதிர்ப்பாளர்களின் வாதங்களை முறியடித்து, மக்களின் மீது அவர்களுக்குள்ள செல்வாக்கைப் பறிக்க வேண்டியிருக்கிறது. சுருங்கக்கூறின், நன்னெறியின்பால் அழைப்பு விடுக்கும் முன்னணியாளர், ஒரு பேரியக்கத்தின் தலைவர் ஆற்ற வேண்டிய பணிகள் ஒவ்வொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் அல்லாஹுதஆலா தன் தூதருக்கு அருளிய பேருரைகள் ஓர் அழைப்புப் பணிக்கு ஏற்ற தோரணையிலேயே அமைந்திருந்தன. எனவே ஒரு கல்லூரிப் பேராசிரியர் நிகழ்த்தும் சொற்பொழிவின் நடையை அதில் எதிர்பார்ப்பது சரியல்ல. திருக்குர்ஆனில் ஒரே மாதிரியான விஷயங்கள் பலமுறை ஏன் திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருக்கின்றன என்பதும் மேற்கூறிய வற்றிலிருந்து நன்கு புலனாகும். ஓர் இயக்கம் செயல் ரீதியாக இயங்கிக் கொண்டிருக்கும் போது பல கட்டங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்திலிருக்கும் போது அடுத்த கட்டத்தின் பிரச்னைகள் பற்றிச் சர்ச்சைகள் எழுப்பாமல், அந்த முதல் கட்டத்தின் பிரச்னைகள் பற்றியே பேசப்பட வேண்டுமென்று அத்தகைய இயக்கத்தின் சூழ்நிலைகள் இயல்பாகவே வேண்டுகின்றன. எனவே இந்த முதல் கட்டம் சில மாதங்கள் வரை இருந்தாலும் சரி, பல ஆண்டுகள் நீடித்தாலும் சரி, அதற்குரிய விஷயங்களைத்தான் மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது. ஆனால் ஒரே வகையான செய்திகளை ஒரே பாணியில் ஒரே விதமான சொற்றொடர்களில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தால் உள்ளங்கள் சலிப்புற்றுச் சோர்வடைந்துவிடும்.
இத்தகைய நிலையைத் தவிர்க்கவும், மிக இனிமையான முறையில் இயக்க அழைப்பை உள்ளங்களில் பதிய வைக்கவும், இயக்க அழைப்பின் இந்த முதல் கட்டத்தை உரமுடையதாகச் செய்யவும் பல தடவைகளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பேச்சை ஒவ்வொரு தடவையும் புதிய நடையில், புதிய கோணத்தில், புதிய மெருகுடன் கூறவேண்டியிருக்கிறது. இன்னும் இந்த அழைப்பின் அடிப்படைகள் எந்த நிலையிலும், எவ்வேளையிலும் பார்வையிலிருந்து மறையாதிருக்கும் பொருட்டு இயக்கத்தின் ஆரம்பக்காலம் முதல் இறுதிக்கட்டம் வரை அதனுடைய கோட்பாடுகள், கருத்தோட்டங்கள், விதிமுறைகள் ஆகியவை பற்றி அடிக்கடி எடுத்துரைத்துக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது. ஆகவேதான் இஸ்லாமிய இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்அருளப்பட்ட குர்ஆன் அத்தியாயங்களில் பொதுவாகவே ஒரே விதமான கருத்துகள் இருந்த போதிலும் சொற்கள், விளக்கும் முறை ஆகியவை விதவிதமாக மாறி மாறி வருகின்றன. ஆனால் ஏகத்துவம், அல்லாஹ்வின் குணநலன்கள், மறுமை, மறுமையில் மக்கள் விசாரிக்கப்படுதல், நற்கூலி, தண்டனை பெறுதல், ரிஸாலத் (இறைத்தூதுத்துவம்) இறைவேதங்கள் மீது நம்பிக்கை, இறையச்சம், பொறுமை, தவக்குல் (இறைவனை முற்றிலும் சார்ந்திருத்தல்) ஆகியவை பற்றியும் இன்னும் இவை போன்ற அடிப்படைக் கருத்துகளும் திருக்குர்ஆன் முழுவதிலும்திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.
இயக்கத்தின் எந்த ஒரு கட்டத்திலும் இந்த அடிப்படைகள் குறித்து அசட்டையாகவோ கவனக்குறைவாகவோ இருத்தலாகாது. எனவேதான் பல்வேறு கட்டங்களுக்குரிய விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும்போது இந்த அடிப்படைகள் அடிக்கடி நினைவூட்டப்படுகின்றன. இவ்வாறில்லாமல் இந்த அடிப்படைக் கருத்தோட்டங்கள் சிறிது பலவீனப்பட்டாலுங்கூட இஸ்லாத்தின் இந்த இயக்கம் உயிரோட்டத்துடனும், துடிதுடிப்புடனும் ஓர் அடிகூட முன் எடுத்து வைக்க முடியாது. தொகுப்பு முறை குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அதே வரிசையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை ஏன் தொகுக்கவில்லை எனும் கேள்விக்கும் மேற்கூறிய விளக்கத்தைச் சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைத்துவிடும். இருபத்து மூன்றாண்டுகள் இந்த அழைப்பின் தொடக்கத்திலிருந்து அதன் நிறைவு வரை அதன் வளர்ச்சிக்கேற்பத் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்பது முன்னர் கூறியவற்றிலிருந்து உங்களுக்கு விளங்கியிருக்கும். இயக்க வளர்ச்சிக்கு இசைவான வரிசையில் அருளப்பட்ட குர்ஆனின் பகுதிகளை அந்த இயக்கம் நிறைவு பெற்ற பின்னும் அதே வரிசைக்கிரமத்தில் அமைப்பது பொருத்தமாயிராது என்பது வெளிப்படை. அழைப்பு நிறைவு பெற்ற பின்னர் உருவான புதிய சூழ்நிலைக்குப் பொருத்தமாய் ஒரு நிரந்தரத் தொகுப்பு முறைதான் இப்போது தேவைப்பட்டது. ஏனென்றால் தொடக்கத்தில் திருக்குர்ஆன் யாரை நோக்கி உரை நிகழ்த்தியதோ அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். எனவே அந்நேரத்தில் அடிப்படையிலிருந்து அவர்களுக்குரிய அறிவுரைகள் துவங்கின. ஆனால் இந்த அழைப்பு நிறைவு பெற்றதும் அதே மக்கள் அதை ஏற்றுச் செயற்படுத்தும் ஒரு குழுவாக (உம்மத்தாக) அமைந்துவிட்டனர்.
நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொள்கை ரீதியிலும், செயல்ரீதியிலும் எந்தப் பொறுப்பினை முழுமைப்படுத்தி அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்களோ அதனைத் தொடர்ச்சியாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் கடமை அம்மக்கள் மீது சார்ந்திருந்தது. எனவே, தம்முடைய கடமைகள், வாழ்க்கை நியதிகள் ஆகியவை பற்றியும் முந்திய நபிமார்களைப் பின்பற்றியவர்களுக்கு மத்தியில் தோன்றிய பிணிகள், பூசல்கள் ஆகியவை பற்றியும் இக்குழுவினர் நன்கு தெரிந்து கொள்வது முதன்மையும், முக்கியத்துவமும் பெற்றதாகி விட்டது. இவற்றை அறிந்துகொண்ட பின், உலக மக்களுக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்து அதன் வழியில் அனைவரையும் நடத்திச் செல்லும் பொறுப்பு அவர்களைச் சார்ந்திருந்தது. ஆகவே குர்ஆன் அருளப்பட்ட வரிசை முறை இப்போது பொருந்தாது என்பது வெளிப்படை! திருக்குர்ஆன் எத்தகைய நூல் என்பதை ஒருவர் நன்கறிந்து கொண்டால், ஒரே விஷயத்தைப் பற்றிப் பேசும் பல பேருரைகளையும் ஒரே இடத்தில் திரட்டி வைப்பது இதன் தன்மைக்கு ஒவ்வாது என்பது அவருக்குத் தானே புலனாகிவிடும்.
இஸ்லாத்தைப்பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து ஏற்படுவதைத் தவிர்க்கவும், அதனுடைய ஒருங்கிணைந்த முழுமையான காட்சியைத் தன் வாசகர்கள் முன் வைக்கும் பொருட்டும், மதீனாவில் அருளப்பட்டவற்றை மக்காவில் அருள் செய்யப்பட்ட அறிவுரைகளுக்கிடையேயும், மக்காவில்தரப்பட்ட அறிவுரைகளை மதீனாவில் அருளப்பட்டவற்றுக்கு மத்தியிலேயும், ஆரம்பகாலத்திருவசனங்கள், இறுதிக்கட்டத்தின் அறிவுரைகளோடு திரும்பத் திரும்ப வரும் வகையிலும் திருமறையைத் தொகுக்கும் முறையே இசைவாயிருந்தது. இன்னும் திருக்குர்ஆனை அதனை அருளப்பட்ட வரிசைக் கிரமத்திலேயே தொகுத்திருந்தால், அது பிற்கால மக்களுக்கு எளிதில் புரியக்கூடியதாய் இருந்திருக்காது. குர்ஆன் அருளப்பட்ட வரலாற்றின் முழு விவரத்தையும், அதன் பல்வேறு பகுதிகள் இறங்கிய காலத்தில் நிலவியிருந்த சூழ்நிலைகளையும், பின்னணியையும், அது அருளப்பட்ட மாண்பினையும் மிகவும் விவரமாக எழுதி குர்ஆனுடன் இணைத்திருந்தால்தான் மேற்சொன்ன வரிசை பிற்கால மக்களுக்கு எளிதில் புரியக்கூடியதாயிருக்கும். மேலும் அத்தகைய ஏற்பாடு குர்ஆனின் பிற்சேர்க்கையாகவும் இருந்திருக்கும். ஆனால் இதுவோ தன் வாக்கை ஒரு பாதுகாப்பான தொகுப்பாக அமைக்க வேண்டும் எனும் அல்லாஹ்வின்
நோக்கத்திற்கு முற்றிலும் முரணாக இருந்திருக்கும். வேறு எந்தச் சொல்லின் கலப்பினாலும், இணைப்பினாலும் தன் தூய்மையைஇழக்காத வகையில் அதன் முழுப் பொலிவுடன் அமைந்த தொகுப்பாக குர்ஆன் இருக்க வேண்டுமென்பதும் அதனைக் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், நகரவாசிகள், கிராமவாசிகள் ஆகிய அனைவரும் சுவைத்துப்படிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதும் மேலும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரும் படித்து இறைவன் தம்மிடம் எதை வேண்டுகிறான் ; எதை வேண்டவில்லை என்று தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் தான் அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. எனவே இறைவாக்குடன் ஒரு நெடிய வரலாற்றையும் எழுதி வைத்து, அதனைத் “திலாவத்’ செய்வதும் ஓதுவதும் கடமையாக்கப்பட்டுவிட்டால் மேலே கூறிய முக்கிய நோக்கம் தவறிவிடும் என்பது வெளிப்படை!
குர்ஆனின் வரிசை அமைப்பைப் பற்றி ஆட்சேபணை செய்வோர் உண்மையில் இத்திருமறையின் இலக்கையும், நோக்கையும், உள்ளக்கிடக்கையையும் உணராதவர் ஆவர். அதுமட்டுமல்ல, அவர்கள் இத்திருவேதம் வரலாற்றையும், தத்துவத்தையும் கற்கும் மாணவர்களுக்காகவே அருளப்பட்டது எனும் தவறான எண்ணங்களில் உழல்வோரேயாவர். அருளியவனே தொகுத்தவன் திருக்குர்ஆனின் தொகுப்பு குறித்து மேலும் ஒரு விஷயத்தை வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, அதனுடைய இந்த அமைப்பு பிற்கால மக்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல; மாறாக இறைவனின் வழிகாட்டுதலுக்கேற்ப நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த அமைப்பில் தொகுக்கச் செய்தார்கள்.
இதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட முறையாவது:
குர்ஆனில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனடியாக காதிப் (எழுதுபவர்) ஒருவரை அழைத்து, அதனை முழுக்க முழுக்கச் சரியாக எழுதும்படிச் செய்து அதை ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்துக்கு முந்தியும், ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்துக்குப் பிந்தியும் இடம்பெறச் செய்யுமாறு கூறுவார்கள். இதுபோலவே முழு அத்தியாயமும் அருளப்படாமல், ஒரு பகுதியே அருளப்பட்டால் குறிப்பிட்ட எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் அது அமைய வேண்டும் என்பதையும் கூறி விடுவார்கள். பின்னர், அதே வரிசையிலேயே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையிலும், இதர நேரங்களிலும் குர்ஆனை ஓதி வந்தார்கள். மேலும் அதே வரிசைப்படியே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களும் அதனை மனனம் செய்து வந்தனர்.
எனவே குர்ஆனின் இறுதிப் பகுதி, என்றைக்கு அருளப்பட்டு நிறைவு பெற்றதோ அக்கணமே குர்ஆனுடைய (இன்றைய) அமைப்பின் தொகுப்புப் பணியும் நிறைவு பெற்றுவிட்டது என்பது ஆதாரப்பூர்வமான வரலாற்று உண்மையாகும். ஆகவே தான், குர்ஆனை அருளிய இறைவனே அதன்தொகுப்பாளனாவான்; மேலும் எந்த நபியவர்களின் புனித உள்ளத்தில் அது இறக்கி வைக்கப்பட்டதோ அவர்களுடைய புனிதக் கரங்களாலேயே அதைத் தொகுக்கவும் செய்தான். அதில் எவரும் தலையிட உரிமையும் தகுதியும் பெற்றிருக்கவில்லை. முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஒப்பற்ற மறை ஆரம்பத்திலிருந்தே தொழுகை* முஸ்லிம்கள் மீது கடமையாகிவிட்டதாலும், குர்ஆனை ஓதுவது தொழுகையின் ஒரு பகுதி.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்