குர்ஆன் ஆங்காங்கே “யாபனீ ஆதம்” என்று மனித குலம் அனைத்தையும் நோக்கி விளிக்கிறது. என்றாலும் அது அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்த அரபு மக்களை நோக்கியே அது பெரும்பாலும் பேசுகிறது. அது விவாதிக்கும் பல விஷயங்கள் அரபு மக்களின் இயல்பு, சுற்றுச் சார்புகள், வரலாறு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டவையாய் இருக்கின்றன எனும் உணர்வே அதனைப் படிப்பவருக்கு ஏற்படுகிறது.
அதனைப்பார்த்ததும், “மனிதகுலம் அனைத்துக்கும் வழிகாட்டியாக அருளப்பட்ட இவ்வேதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும் பற்றிய தன்மை மட்டும் இவ்வளவு அதிகமாக சர்ச்சை செய்யப்படுவானேன்!’ என்று அவர் எண்ணத் தொடங்குகிறார்.
இவ்விஷயத்தைப் பற்றிய உண்மையை நன்கு உணராதவர், “இது அக்கால அரபு மக்களைச் சீர்திருத்துவதற்காகவே அருளப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று மனிதகுலம் முழுமைக்கும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வழியினைக்காட்டும் ஒரு வேத நூல் என்று வலிந்து வாதாடப்படுகிறது’ எனும் ஐயப்பாடுகளுக்கு ஆளாகிவிடுகிறார்.
ஏதாவதொரு ஆட்சேபணையைக் கிளப்ப வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒருவர் இதைக் கூறவில்லை யென்றால், விஷயத்தைப் புரிந்து கொள்ளும் நோக்கத்துடன்தான் அவர் இந்த ஆட்சேபணையை எழுப்பியிருக்கிறார் என்றால், யாவற்றுக்கும் முன்பாக அவர் குர்ஆன் போதிக்கும் கோட்பாடுகள், கருத்தோட்டங்கள், ஒழுக்க விதிமுறைகள், செயல்முறைகளுக்கான நியதிகள் ஆகிய அனைத்தையும் ஆய்ந்து பார்த்து அவற்றில் ஏதாவதொன்று அரபு மக்களுக்கு மட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் உரியது எனக் கூறமுடியுமானால் அதனைக் கோடிட்டுக் காண்பிக்கட்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த மக்களை நோக்கி, இறைவனுடன் இணைவைக்கும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்களுடைய அஞ்ஞான மரபுகளைப் பற்றியும் கண்டித்து, அவர்களுடைய சூழ்நிலைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்துத் தன்னுடைய ஏகத்துவக் கோட்பாட்டைக் குர்ஆன் நிரூபிக்கிறது, நிலை நாட்டுகிறது என்ற ஒரே காரணம், அதனுடைய அழைப்பும், அறிவுரையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும், இடத்துக்கும்தான் உரியவை என்று தீர்மானிப்பதற்குப் போதுமானதாகாது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இணைவைத்தல் (ஷிர்க்) பற்றிக் கண்டித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறதோ அது அன்றைய அரபு முஷ்ரிக்கு (இணைவைப்பவர்)களின் ஷிர்க்கைப்போல இன்றைய உலகின் எல்லாவிதமான ஷிர்க் இணைவைத்தல்களுக்கும் பொருத்தமானதாய் இருக்கிறதா இல்லையா, குர்ஆன் தரும் அதே ஆதாரங்கள் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு காலத்திலுமுள்ள முஷ்ரிக்குகளின் சிந்தனையைச் சீர்த்திருத்த எண்ணங்களைச் சரிப்படுத்தப் பயன்படக்கூடியவையா இல்லையா, தவ்ஹீது (ஏகத்துவத்து)க்குத் திருக்குர்ஆன் தரும் சான்றுகள், ஏறத்தாழ அதே நிலையில், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வோரிடத்திலும் தவ்ஹீதின் ஆதாரங்களாய் விளங்கக்கூடியவையா இல்லையா என்பதாகும். உண்மையில் அவை ஒவ்வொரு காலத்துக்கும் பொருத்தமானவையாய் இருக்கின்றன என்றுதான் எவரும் கூறுவர். அப்படியாயின் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்துக்கு முதன் முதலில் போதிக்கப்பட்டது என்பதற்காக உலகளாவிய ஒரு நெறியை அனைத்துலகுக்கும் பயன் தரும் தத்துவ இயலை ஒரு காலத்துக்கும், ஓர் இடத்துக்கும் மட்டுமே உரியது எனக் கூற எந்தக் காரணமும் இல்லை! உலகில் எந்தக்கொள்கையும், எந்த வாழ்வியலும், சமயச் சிந்தனை எதுவும், நடைமுறைச் சான்றுகள் இல்லாது குறிப்பிட்ட ஒரு நிலையோடு தொடர்பு படுத்தப்படாது வெறும் வெற்றுரு தத்துவமாக போதிக்கப்பட்டதில்லை. அப்படி முழுக்க முழுக்க வெறும்
தத்துவமாகவே எதனையும் போதிப்பது சாத்தியமில்லாததாகும். ஒருவேளை அது இயலுமென்றாலும் அவ்விதம் போதிக்கப்படும் தத்துவம் மனிதர்களின் வாழ்க்கையில் எவ்வித உணர்ச்சியையும் எழுப்பாது; நடைமுறை உருவமும் பெறாது. அது வரையப்படும் காகிதத்தோடேயே நின்றுவிடும். மேலும் சிந்தனை, ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றில் உலகளாவிய ஒரு புரட்சியைத் தோற்றுவித்துப்பரவச் செய்வதற்காக, எடுத்த எடுப்பிலேயே அதனைச் சர்வதேச அழைப்பாக ஆக்குவது அவசியமில்லை. ஏன், நடைமுறைக்கு அது இசைவானதாயுமிராது; பயனுடையதாயுமிராது. உலகளாவிய ஒரு புரட்சி இயக்கத்தைப் பரப்புவதற்கு முறையான வழி எந்தக் கருத்தோட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனுடைய வாழ்க்கை அமைப்பை நிர்மாணிக்க அந்த இயக்கம் விரும்புகிறதோ அவற்றை யாவற்றுக்கும் முன்பாக, முதலில் இந்த அழைப்பு விடுக்கும் நாட்டில் முழு வலிமையுடனும், ஆற்றலுடனும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பிறகு இந்த அழைப்பை ஏற்று இயக்கத்தில் சேருபவர்களின் மொழி, இயல்பு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு அந்த இயக்கத்தின் அடிப்படை விஷயங்களை அவர்களின் உள்ளங்களில் பதியவைக்க வேண்டும். பிறகு தம் நாட்டிலேயே இந்தக் கொள்கைகளை நடைமுறைக்குக் கொணர்ந்து, இதன்படி வெற்றிகரமான வாழ்க்கை முறையை நடத்திக் காண்பித்து உலகுக்கு ஒரு முன்மாதிரியாக அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுது தான் பிறநாட்டினர் இதன் மீது கவனம் செலுத்துவார்கள்.
பிறநாட்டிலுள்ள நல்லறிவாளர்கள் இந்த வாழ்க்கை அமைப்பைப் பற்றிப் புரிந்து கொள்ளத் தாமாகவே முன்வருவார்கள். மேலும், தத்தமது நாட்டில் அதனை நிலைநாட்ட முயல்வார்கள். எனவே சிந்தனை செயல் பற்றிய ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை அமைப்பு ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டினரின் முன்னர்தான் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அதன் உண்மையை வலியுறுத்திக்கூற அந்த நாட்டின் சூழ்நிலையிலிருந்தும், மரபுகளிலிருந்துமே ஆதாரம் தரப்பட்டது. மேலும், அந்தக் குறிப்பிட்ட நாட்டு மக்களுக்கு இந்தக் கோட்பாட்டின் உண்மையினை, இந்த வாழ்க்கை அமைப்பின் மாண்பினை உணர்த்துவதிலேயே சகல சக்திகளும் பயன்படுத்தப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டி அந்த வாழ்க்கை அமைப்பு, அந்தக் கோட்பாடு அந்த நாட்டுக்கு மட்டும்தான் உரியது என்று கூறுவது சரியாகாது.
ஒரு நாட்டினருக்கு மட்டுமே உரிய ஓர் அமைப்புக்கும், ஓர் உலகளாவிய அமைப்புக்கும் இடையே பிரித்தறிவிக்கும் தன்மைகள் எவையெனில், ஒரு நாட்டுக்கும் மட்டும் உரிய அமைப்பு அந்த நாட்டினருடைய மேம்பாட்டிலேயே அக்கறை கொள்கிறது; அல்லது அந்தக் குறிப்பிட்ட நாட்டினரின் உரிமைகளைப் பாதுகாக்கவே இசைவாக இருக்கிறது; அல்லது பிறநாட்டினரை ஈர்க்க முடியாத சில கொள்கைகளையும், அடிப்படைகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது. இதற்கு மாறாக, ஓர் உலகளாவிய அமைப்பு மக்கள் அனைவருக்கும் சமமான அந்தஸ்தும் உரிமைகளும் வழங்க இசைவாக இருக்கிறது. மேலும் அதனுடைய கொள்கைகளிலும், விதிமுறைகளிலும் உலகமனைத்தையும் தன்பால் கவர்ந்திழுக்கும் தன்மை இருக்கிறது. இதுபோலவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பொருந்தக்கூடிய வாழ்க்கையமைப்பு சில கால மாறுதல்களுக்கும் கால ஓட்டங்களுக்கும் பிறகு பின்பற்றுவதற்குத் தகுதியற்றதாய் ஆகிவிடும் கொள்கைகளைத் தன் அடிப்படையாய்க் கொண்டிருக்கிறது. இதற்கு மாறாக, ஒரு நிரந்தரமான வாழ்க்கையமைப்பின் கொள்கைகள் மாறிவரும் சூழ்நிலைகள் அனைத்திற்கும் உகந்த தீர்வுகளை அளிக்கும் விதத்தில் எந்தக் காலத்திற்கும் பொருத்த முடையனவாகவே திகழ்கின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் குர்ஆன் அருளும் கொள்கைகள், அது எடுத்துரைக்கும் வாழ்க்கை அமைப்பு ஆகியவை உண்மையில் உலகளாவியனவாயும், எக்காலத்துக்கும் பொருத்தமுடையனவாயும் இருக்கின்றன என்பது புலனாகும். இதில் ஐயங்கொள்ளச் சிறிதும் இடமில்லை.
திருக்குர்ஆனும், திருத்தூதரும்
திருக்குர்ஆன் வாழ்க்கைத்துறைகள் அனைத்துக்கும் வழி காட்டும் விரிவான நீதி நூல் என்று பொதுவாகவே கூறப்படுகிறது. ஆனால் ஒருவர் இதைப் படிக்கும்போது சமூகவியல், ஒழுக்கவியல், அரசியல், பொருளியல் போன்ற அனைத்து வாழ்க்கைத்துறைகள் பற்றிய விரிவான கட்டளைகளும் விதிமுறைகளும் அவருக்குத் தென்படுவதில்லை. திருக்குர்ஆன் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறும் கட்டாயக் கடமை (ஃபர்ளு)களான தொழுகை, ஜகாத் போன்றவை பற்றிக்கூட விரிவான விதிகளையும், விலக்குகளையும் அது தரவில்லை என்பதை அவர் காண்கிறார். அப்படியாயின் என்ன பொருளில் தான் இது ஒரு விரிவான வழிகாட்டியாக அமைந்திருக்கிறது என்பது பற்றி அவர் உள்ளத்தில் சந்தேகம் எழுகிறது.
திருமறையை மட்டும் இறைவன் வழங்கவில்லை, அத்தோடு இவ்வுலகுக்கு ஒரு தூதரையும் அவன் அனுப்பினான் எனும் அடிப்படை உண்மை வாசகரின் சிந்தனையிலிருந்து மறைந்திருப்பதால் அவர் மேற்சொன்ன குழப்பங்களுக்கு ஆளாகிறார். இங்கு ஒரு சான்றினைப் பார்ப்போம் ; ஒரு கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நமக்கு ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டு, அதன்படி நாமே அக்கட்டடத்தை கட்டிக் கொள்ள வேண்டும் என்றால் கட்டடத்திற்குரிய சின்னஞ்சிறு விஷயங்களும் அந்தப் “பிளானில்’ இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பிளானுடனும் கட்டடத்தை நிர்மாணிப்பதற்குரிய குறிப்புகளுடனும் ஒரு பொறியாளர் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு, அவர் அக்கட்டடத்தை நிர்மாணித்த பின்னர் அவரையும், அவர் நிர்மாணித்துள்ள கட்டடத்தையும் புறக்கணித்து விட்டு, அந்த வரைபடத்திலேயே கட்டடத்திற்குரிய ஒவ்வொரு சிறு தகவலையும் தேட முற்படுவதும், அதில் அந்த விவரங்கள் கிடைக்கவில்லையே என்று குறை கூறுவதும் அறிவுடைமையாகாது!
திருக்குர்ஆன் சட்டவிதிகளின் பிரிவுகளையும் துணைச்சட்டங்களையும் விவரிக்கும் ஒரு நூலன்று; மாறாக அது மூலாதார அடிப்படை விதிகளுடன் கோட்பாடுகளையும் வழங்கும் ஒரு நூலாகும்.
இஸ்லாமிய வாழ்க்கை அமைப்பின் அடிப்படைகளை அறிவார்ந்த ரீதியில் தெளிவாக்கி, அதனுடைய ஒழுக்க அடிப்படைகளை எடுத்துரைத்து, அதற்காக இதயங்களைக் சுவர்ந்திழுக்கும் வகையில் அறிவார்ந்த ஆதாரங்கள் அனைத்தையும் தந்து, அந்த அடிப்படைகளை நன்றாக உறுதிப்படுத்தி விடுவதே குர்ஆனின் தலையாய பணியாகும். எனவே அது மனிதனுக்கு வழிகாட்டுகிறது என்பதன் பொருள், இஸ்லாமிய வாழ்க்கை முறையைச் செயல்படுத்துவதற்காக வாழ்வின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அம்சம் குறித்தும் விரிவான சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் வகுத்துத் தருகிறது என்பதல்ல. மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு துறை குறித்தும் அதற்குள்ள எல்லைகளையும் வரம்புகளையும் நிர்ணயித்து, இறைவனின் விருப்பத்துக்கு இசைவாக அத்துறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்று அறிவிக்கக்கூடிய கைகாட்டிகளை ஆங்காங்கே அது ஊன்றி வைக்கிறது. இந்த அறிவுரைகளுக்கும், வழிகாட்டுதலுக்கும் இசைவாக இஸ்லாமிய வாழ்க்கைமுறையைச் செயற்படுத்திக் காட்டும் பொறுப்பும் பணியும் இறைத்தூதரைச் சார்ந்திருந்தது. திருக்குர்ஆன் அருளிய நியதிகளுக்கு ஏற்ப உருவாகும் தனிமனிதனுடைய ஒழுக்கம் சார்ந்த வாழ்வு, சமூக அமைப்பு, நீதிமிக்க அரசு ஆகியவற்றின் நடைமுறை முன்மாதிரியாகத் திகழவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதராக அனுப்பப்பட்டார்கள்.
நலம்பயக்கும் கருத்து வேற்றுமை
குர்ஆனை ஆய்ந்து பார்ப்பவர்களுக்குப் பொதுவாகவே மற்றொரு சந்தேகமும் எழுவதுண்டு. அதாவது, இறை வேதம் வந்த பிறகும் வேற்றுமையிலும், பிரிவிலும் வீழ்ந்து தீனை பின்னப்படுத்துவோரை மிகக் கடுமையாகத் திருமறை கண்டிக்கிறது. ஆனால், திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு விளக்கமும் விரிவுரையும் தருவதில் பிற்காலத்தோரிடையே மட்டுமல்ல,
இமாம்களிடையேயும், தாபியீன்களிடையேயும், ஏன் ஸஹாபாக்களான நாயகத் தோழர்களிடையேயும் கூட வேற்றுமை காணப்படுகிறது. கட்டளைகளைப் போதிக்கும் ஓர் ஆயத் (வசனம்) கூட முத்தஃபக் அலைஹி இதுபற்றி அறிஞர்கள் ஒன்றுபட்ட விரிவுரை வழங்கியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு வேற்றுமை காணப்படுகிறது. அப்படியானால், திருக்குர்ஆனுக்கு வேறுபட்ட விளக்கங்கள் கொடுப்போரெல்லாம் கண்டனத்துக்கு உரியோராவார்களா? இல்லையென்றால், திருக்குர்ஆன் எந்த விதமான வேற்றுமையை வெறுக்கிறது? எத்தகைய பிரிவினையைத் தடுக்கிறது?
இது மிகவும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்னையாகும். ஆனால் அத்தகைய விரிவான விவாதத்துக்கு இங்கு வாய்ப்பில்லை. தீனின் அடிப்படையில் ஒருங்கிணைந்து, இஸ்லாமிய இயக்க அமைப்பில் ஒன்றுபட்டிருந்து, அதனுடைய சட்டதிட்டங்களை மனத்தூய்மையுடனும் வாய்மையுடனும் ஆராய முற்படும்போது விரிவுரைகளிலும் விளக்கங்களிலும் ஏற்படும் நலம் பயக்கும் கருத்து வேற்றுமைகளை குர்ஆன் வெறுக்கவில்லை; தடை செய்யவில்லை. மன இச்சைகள், சுயநலன்கள் ஆகியவற்றின் காரணமாகத் தலைதூக்கி, குறுகிய நோக்குடன் ஆராய முற்பட்டு, இதனால் பல பிரிவுகளையும் தோன்றச் செய்து, அவற்றிடையே மோதல்களை விளைவிக்கக்கூடிய கருத்து வேற்றுமைகளைத்தான் குர்ஆன் கடுமையாக வெறுக்கிறது என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக் காண்பித்தால் போதுமானது.
மேற்சொன்ன இருவகை வேற்றுமைகளையும் அடிப்படையைக் கொண்டு கவனித்தாலும் ஒரே மாதிரியானவையல்ல. ஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டு நோக்கினாலும் அவை ஒரே வகையானவை அல்ல! எனவே அவை இரண்டையும் ஒரே மாதிரியாக வகைப்படுத்திப் பேசுவது பொருத்தமற்றதாகும். முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நேர்மையான கருத்து வேற்றுமை முன்னேற்றத்திற்கே உயிர் போன்றது; வாழ்வியலுக்கு ஆத்மா போன்றது. அறிவும், சிந்திக்கும் திறனும் படைத்தோரைக்கொண்ட எந்த ஒரு சமூகத்திலும் அது இயற்கையாகவே காணப்படும். அவ்வாறு அது காணப்படுவதே சமூகம் உயிர்த் துடிப்புடன் இருக்கிறது என்பதற்கோர் அறிகுறியாகும். இத்தகைய கருத்து வேற்றுமையில்லாத சமூகம் சிந்திக்கும் மனிதர்களைக் கொண்டதாக இல்லாமல் மரக்கட்டைகளைக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். இரண்டாவது வகையான கருத்து வேற்றுமை எந்தச் சமுதாயத்தில் தலை தூக்குகிறதோ அந்தச் சமுதாயத்தை அது அழிக்காமல் விடுவதில்லை என்பதை உலகறியும். அது தலைதூக்குவது சமூக ஆரோக்கியத்துக்கு அடையாளமல்ல; நலிவுக்கே அது அறிகுறியாகும்! விரும்பத்தக்க விளைவுகளை அச்சமூகத்தில் அது ஒருபோதும் தோற்றுவிக்காது. இந்த இருவிதமான கருத்து வேற்றுமைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கீழ்க்காணும் வகையில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
ஒன்று:
நலம் பயக்கும் கருத்து வேற்றுமை தோன்றுமிடத்து இறைவனையும் அவனுடைய திருத்தூதரையும் ஏற்று பின்பற்றி ஒழுகுவதில் சமூகத்திலுள்ள அனைவரும் ஒருமனப்பட்டு ஒற்றுமையாக இருப்பார்கள். திருக்குர்ஆனும் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையான சுன்னத்துமே எல்லாச் சட்டதிட்டங்களையும் இயற்றுவதற்குரிய மூலாதாரங்கள் என்று முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்படும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் இருவரிடையே ஏதாவது மஸ்அலா பிரச்னை பற்றி கருத்து வேற்றுமை ஏற்படலாம் அல்லது இரு காஜிகளிடையே நீதிபதிகளிடையே ஏதேனும் ஒரு வழக்கு பற்றிய தீர்ப்பில் கருத்து வேற்றுமை தோன்றலாம். இவர்களில் எவரும் தங்கள் கருத்து மட்டும்தான் இஸ்லாத்தைச் சார்ந்தது என்று கூறவோ, மாறுபட்ட கருத்துக் கூறுபவர் “தீனை’ விட்டு விலகியவர் என்று கருதவோ கூடாது. மாறாக இருதரப்பாரும் தங்களுடைய ஆதாரங்களையும், சான்றுகளையும் முன் வைத்துத் தங்களால் இயன்றவரை உண்மை எதுவென்று கண்டறியப் பணிபுரிய வேண்டும். முடிவைச் சமுதாயத்தின் பொதுக் கருத்துக்கோ, நீதிமன்றப்பிரச்னையாக இருந்தால் உயர்நீதி மன்றத்திடமோ விட்டு விட வேண்டும். இங்கு இரண்டில் எது உகந்ததோ அது ஏற்றுக்கொள்ளப்படும்; அல்லது இரண்டு கருத்துகளும் அனுமதிக்கத் தக்க ஜாயிஸ்தாம் என்று உறுதிப்படுத்தப்படும்.
இரண்டு:
தீனின் அடிப்படைகளிலேயே கருத்து வேற்றுமை கொள்ளுதல். சான்றாக எவரேனும் ஓர் ஆலிமோ, ஸூஃபியோ, முஃப்தியோ, சட்ட நிபுணரோ, தலைவரோ ஒரு பிரச்னையில் தீர்வு காணும்போது இறைவனும், அவனுடைய தூதரும் “தீனின்’ அடிப்படையெனக் கருதாத ஓர் அம்சத்தைத் தேர்ந்தெடுத்துத்கொண்டு பின்னர் அதனை வலிந்து “தீனின்’ அடிப்படையே அதுதான் என்று கட்டாயப்படுத்துவதும், இன்னும் அந்தக் கருத்திலிருந்து மாற்றமான கருத்துக் கொண்டோரை “தீனிலி’ருந்தும் சமூகத்திலிருந்தும் அப்பாற்பட்டவர் என்று கருதுவதும், பிறகு தம் கருத்தை ஏற்றுக்கொண்டோரை ஒரு கட்சியாக அமைத்து, இவர்கள்தாம் “உம்மத்தே முஸ்லிமா’ என்றும், மற்றவர்களெல்லாம் நரகத்துக்குச் செல்பவர்களே என்றும், எனவே “”முஸ்லிமாக இருந்தால் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிடு; இல்லையென்றால் முஸ்லிமே இல்லை!” என்று கூறுவதும்தான் இரண்டாவது வகையான கருத்து வேற்றுமையாகும். இந்த இரண்டாவது வகையான கருத்து வேற்றுமையைத்தான் திருக்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது.
முதலாவது வகையான நலம் பயக்கும் கருத்து வேற்றுமைகள் எழுந்த நிகழ்வுகள் பல, நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையிலேயே நிகழ்ந்திருக்கின்றன. அத்தகைய கருத்து வேற்றுமைகளை நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்தார்கள் என்பது மட்டுமல்ல, அவற்றைப் போற்றியும் இருக்கிறார்கள். ஏனென்றால் சிந்தனை, ஆராய்ச்சி, உண்மையைக் கண்டுபிடிக்கும் ஆர்வம், ஆழ்ந்த நோக்கு, மார்க்க ஞானம் ஆகியவை சமுதாயத்தில் இடம் பெற்றிருப்பதற்கு இது ஓர் அறிகுறியாக இருந்தது. தீனிலும் அதன் சட்ட திட்டங்களிலும் அறிவார்ந்த மக்களுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பதாலும், இத்தகையோர் தங்கள் வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதில் தீனின் வரம்புகளைக் கடந்து செல்வதில்லை; மாறாக அதன் அடிப்படைகளுக்கு உட்பட்டுப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறார்கள் என்ற காரணத்தினாலும் இந்தச் செயல் போற்றுதற்குரியது எனக் கருதப்பட்டது. சமுதாயம் அடிப்படைக் கடமைகளில் ஒன்றுபட்டு, தனது தனித்தன்மையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் சமுதாயத்தின் அறிஞர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் சரியான வரம்புகளுக்கு உட்பட்டு ஆராய்ச்சி செய்யும் சுதந்திரத்தை வழங்கி முன்னேற்றத்தின் வாயிலை என்றென்றும் திறந்து வைக்க வேண்டும் என்கிற பொன்னான நியதியை இந்தச் சமுதாயம் கடைப்பிடிக்கிறது என்பதைத்தான், நலம் பயக்கும் கருத்து வேற்றுமைக்கான இந்த அனுமதி சுட்டிக் காண்பிக்கிறது.
“”என்னிடம் உள்ளது இதுவே, முழுமையான ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே நான் முழுமையாக நம்பியுள்ளேன். மேலும் அவனையே நான் சார்ந்து நிற்கிறேன்.”
– அபுல் அஃலா
For download in PDF formate please Click: http://www.islamkalvi.com/portal/?p=5180