[ பருவ வயதை வரையறுப்பது எப்படி? இது உடற்கூற்றோடு சம்பந்தப்பட்ட விஷயம். போஷிப்பு, பண்பாடு தரத்துக்கேற்ப வேறுபடும். சூழலும் பருவ வயதைத் தீர்மானிக்கின்றது. இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதனை வெளிக்காட்டும் ஆதாரம் இல்லாவிட்டாலும் 18 வயது ஆணுக்கும் பெண்ணுக்கு 17 வயதென்றும் நிர்ணயித்துள்ளார்கள். வேறு சிலர் ஆண் 16 என்றும் பெண் 14 வயது என்றும் கருதுகின்றனர்.
மௌலானா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய ஷரீஆ எந்நோக்கத்தினை அல்லது தேவைப்பாட்டினை கருத்திற்கொள்கிறது என்பதை அறிந்து அதற்கு முரணில்லாமல் அதை அடையும் பொருட்டு குறித்த பிரச்சினைக்கு கால, இட, சந்தர்ப்பத்திற்கேற்ப சட்டத்தை உருவாக்குவதையே இஸ்லாமிய ஷரீஆ விரும்புகின்றது.]
இஸ்லாத்தில் திருமணத்துக்கான வயது என்ன? அதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாட்டை சற்று விளக்க முடியுமா?
திருமணம் ஒரு ஒப்பந்தம் என்ற வகையில் ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற இருவரும் பூரண தகுதி கொண்டவராக இருத்தல் வேண்டும். தகுதியற்றவராக இருப்பின் அவ்வுடன்படிக்கை செல்லுபடியாகாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. உதாரணமாக ஒப்பந்தத்தில் ஈடுபடுபவர் புத்திசுவாதீனம் அற்றவராக, நன்மை தீமைகளில் தெளிவற்றவராக அதனைப் பகுத்தறியக்கூடிய வயதை அடையாதவராக இருத்தல் என்பதைக் கூறமுடியும்.
இஸ்லாமிய ஷரிஆவைப் பொறுத்தவரையில் திருமணம் முடிப்பதற்கான வயது இன்னதுதான் என்று வரையறை செய்யப்படவில்லை. மாறாக திருமணம் நிலையானதாகவும் அதன் நோக்கம் நிறைவேற்றத் தக்கதாகவும் குறித்த ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து, பருவ வயதை அடைந்த ஒரு ஆண் சுயமாகத் திருமணம் முடிக்க முடியும் என்றும் அவ்வாறே ஒரு பெண் பொறுப்பாளரினால் திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவாள் என்பதும் ஏகோபித்த முடிவாகும்.
நன்மை தீமைகளைப் பிரித்தறியும் வயதை அடைந்த பருவ வயதை அடையாத சிறுமிகளைப் பொறுப்பாளர் திருமணம் செய்துவைக்க முடியும் என்பது நான்கு மத்ஹபுகளினதும் இன்னும் பல சட்டறிஞர்களினதும் கருத்தாகும். இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நடந்த சில சம்பவங்களை அதாரமாகக் காட்டுகின்றனர். உதாரணமாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை பருவ வயதை அடைய முன்னர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
உமாமா பின்து ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பருவமடையும் முன்னர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனமுடித்துவைத்தார்கள். பருவமடைந்ததும் விருப்பமில்லாவிட்டால் ஒப்பந்தத்தினை முறித்துக் கொள்ளும் உரிமையையும் கொடுத்தார்கள்.
பருவமடையாத பெண்களை தந்தையோ, பாட்டனோ மட்டுமே வலியாக நின்று முடித்துவைக்க முடியும் என்பதே பெரும்பாலான சட்ட அறிஞர்களின் கருத்து. ஷாஃபி மத்ஹபில் தந்தை அல்லது பாட்டன் பருவமடைந்த பின் மணமுடித்து வைப்பதயே சிறந்தது எனக்கருதுகின்றது. இமாம் அபூ ஹனீஃபா அவ்ஸாபி போன்றோர் அனைத்து வலிகாரர்களுக்கும் பருவமடையாத பெண்ணை திருமணம் முடித்து வைக்க முடியும் எனக் கருதுகின்றனர். எனினும் அவள் பருவமடைந்ததும் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமையும் அவளுக்கிருக்கிறது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதற்கு அவர்கள் ஏற்கனவே உமாமா பற்றி வந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
சவூதி அரேபியா, சூடான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் தனியார் சட்டங்களில் பருவமடைந்தவர்களின் திருமணங்களை அனுமதிப்பதைப் போல் பருவமடையாதவர்களின் திருமணங்களையும் வலிகாரரின் அனுமதியுடன் நிறைவேற்றுவர் என்று பதியப்பட்டுள்ளது.
ஆனால் இப்னு ஷிப்ருமா, உஸ்மான் அல்பத்தி, அபூபக்கர் அல் அஸ்ம் போன்றோர் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் இத்திருமண ஒப்பந்தம் செல்லுபடியற்றது என்று கருதுகின்றனர். “அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டால் வாழ்கைக்கு ஆதாரமாக கொடுத்துள்ள செல்வத்தை அவர்களின் கையில் ஒப்படைக்க வேண்டாம். ஆனால், அவர்களுக்கு உணவு, உடை வழங்குவதோடு நல்ல முறையில் பேசுங்கள்” என்ற அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர். சிரியாவின் தனியார் சட்டத்திலும் இக்கருத்தை ஆதரித்துள்ளது.
இக்கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. பால்ய காலத்தில் நன்மை தீமை பற்றிய தெளிவு இருக்காது. பருவமடைந்ததும் இத்திருமணம் நிலைக்காது.
2. பருவ வயதை வரையறுப்பது எப்படி? இது உடற்கூற்றோடு சம்பந்தப்பட்ட விஷயம். போஷிப்பு, பண்பாடு தரத்துக்கேற்ப வேறுபடும். சூழலும் பருவ வயதைத் தீர்மானிக்கின்றது. இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதனை வெளிக்காட்டும் ஆதாரம் இல்லாவிட்டாலும் 18 வயது ஆணுக்கும் பெண்ணுக்கு 17 வயதென்றும் நிர்ணயித்துள்ளார்கள். வேறு சிலர் ஆண் 16 என்றும் பெண் 14 வயது என்றும் கருதுகின்றனர்.
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் வயது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது? அதுபோல் பிற முஸ்லிம் நாடுகளின் தனியார் சட்டங்களில் இது பற்றி என்ன கூறப்படுகின்றது?
இலங்கையில் முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ 18 வயதை அடைந்திருத்தல் வேண்டும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் வயது வரையறை இல்லை. மாறாக 23வது விதியின் படி 12 வயதை அடையாத சிறுமியின் திருமணம் காழி அனுமதித்தால் ஏற்றுக் கொள்ளலாம்.
எனவே இலங்கையில் பருவமடைந்த ஆண் திருமணப் பாதுகாவலர் இன்றி திருமணம் செய்யலாம். பருவம் உடல் ரீதியான தயார்நிலை. இதனை இன்ன வயதுதான் என்று வரையறுக்க முடியாது. உடலமைப்பைப் பொறுத்து ஆணுக்கு ஆண் வேறுபடும்.
இலங்கை சீதோஷ்னப்படி ஆண் 12-15 பருவமடைகிறான். 1995 வரை இலங்கைப் பொதுச்சட்டத்தில் ஆணின் வயது 21 ஆகும். பின்னர் 18 வயதாகக் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியார் சட்டத்தில் ஆண் 18 பெண் 16 ஆகும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆணும் பெண்ணும் முடிக்க முடியாது. காழி அனுமதித்தாலும் முடியாது. முஸ்லிம் சட்ட ஆய்வுக்கழகம், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி போன்ற அமைப்புக்கள் 16 வயது ஆணுக்கும் 14 வயது பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.
பால்யகாலத் திருமணம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
இது இரண்டு வகையில் நிகழ்கின்றன.
1. திருமணம் முடிப்பதற்கான அடிப்படைத் தகுதியைப் பெறாத பிள்ளை.
2. அடிப்படைத் தகுதி இருந்தும் திருமணத்தின் மூலம் எதிர்பார்க்கின்ற இலக்குகளை எய்த முடியாது.
மௌலானா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய ஷரீஆ எந்நோக்கத்தினை அல்லது தேவைப்பாட்டினை கருத்திற்கொள்கிறது என்பதை அறிந்து அதற்கு முரணில்லாமல் அதை அடையும் பொருட்டு குறித்த பிரச்சினைக்கு கால, இட, சந்தர்ப்பத்திற்கேற்ப சட்டத்தை உருவாக்குவதையே இஸ்லாமிய ஷரீஆ விரும்புகின்றது.
சிறுவயதில் திருமணம் புரியும் போது குறித்த நபர் போதிய கல்வியையும் அறிவையும் பெற்றிருக்க சாத்தியமில்லை. அறிவோ, அனுபவமோ அற்ற நிலையில் திருமணம் புரிந்தால் தம்பதிகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படும். சிறுவதில் கருத்தரிக்கும் போது தாய், சேய் மரணம், ஆரோக்கியப் பிறச்சினைகள் இருக்கின்றன. அதேபோல் குழந்தை வளர்ப்பு குறித்தும் தெரிந்திருக்காது.
(- இலங்கை வானொலி நேர்காணலின் எழுத்து வடிவம் ஆகும்.)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.