தன்னை நல்லவர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பாத ஒரு சிறந்த ஆட்சித் தலைவர்
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முற்றுகை பற்றியும், அந்நேரத்தில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள், கிளர்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் போன்ற அனைத்தையும் கீழ்வரும் செய்தி விவரிக்கின்றது.
صحيح البخاري 3698 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا عُثْمَانُ هُوَ ابْنُ مَوْهَبٍ قَالَ جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ حَجَّ الْبَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا فَقَالَ مَنْ هَؤُلَاءِ الْقَوْمُ فَقَالُوا هَؤُلَاءِ قُرَيْشٌ قَالَ فَمَنْ الشَّيْخُ فِيهِمْ قَالُوا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ يَا ابْنَ عُمَرَ إِنِّي سَائِلُكَ عَنْ شَيْءٍ فَحَدِّثْنِي هَلْ تَعْلَمُ أَنَّ عُثْمَانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ وَلَمْ يَشْهَدْ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ قَالَ اللَّهُ أَكْبَرُ قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ أُبَيِّنْ لَكَ أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ وَغَفَرَ لَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ مَرِيضَةً فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ مَكَانَهُ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ الرِّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الْيُمْنَى هَذِهِ يَدُ عُثْمَانَ فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ فَقَالَ هَذِهِ لِعُثْمَانَ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ اذْهَبْ بِهَا الْآنَ مَعَكَ
எகிப்து வாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘இந்தக் கூட்டத்தார் யார்?’ என்று கேட்டதற்கு மக்கள், ‘இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, ‘இவர்களின் முதிர்ந்த அறிஞர் யார்’ என்று அவர் கேட்டதற்கு மக்கள், ‘அப்துல்லாஹ் இப்னு உமர்’ என்று பதில் அளித்தார்கள்.
உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, ‘இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘ஆம் அறிவேன்’ என்று பதில் அளித்தார்கள். அப்போது அவர் ‘உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார்.
அற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘ஆம் தெரியும்’ என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், ‘ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரில்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார்.
அப்போது இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் (ருகய்யா ரளியல்லாஹு அன்ஹா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.) பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம்
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) அப்படி இருந்திருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வலகக்ரத்தைச் சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்’ என்றார்கள். என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறிவிட்டு, (உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், ‘நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உத்மான் பின் வஹப், ஆதாரம்: புகாரி 3698)
இந்தக் குழப்பகாலங்களில் இப்னு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவேயிருந்தன. பிரச்சினைகள் எதிலும் தொடர்பற்றவராகவே அவர்கள் இருந்தர்கள். இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரிடம் வினவப்பட்ட போது அவர்களளித்த பதிலைக் கீழ்வரும் செய்தி விபரிக்கின்றது.
صحيح البخاري 4513 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَاهُ رَجُلَانِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالَا إِنَّ النَّاسَ صَنَعُوا وَأَنْتَ ابْنُ عُمَرَ وَصَاحِبُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ فَقَالَ يَمْنَعُنِي أَنَّ اللَّهَ حَرَّمَ دَمَ أَخِي فَقَالَا أَلَمْ يَقُلْ اللَّهُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ} فَقَالَ قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ وَكَانَ الدِّينُ لِلَّهِ وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِغَيْرِ اللَّه
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, ‘மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?’ என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது’ என்று கூறினார்கள்.
அதற்கு அவர்களிருவரும் ‘குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 02:193 வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘(ஆம்! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில்) குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்க உரித்தானதாக ஆனது. ஆனால், (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகிறீர்கள்!’ என்றார்கள். (அறிவிப்பவர்: நாபிஃ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆதாரம்: புகாரி 4513)
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்து போது இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு சென்றதும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘முகீரா இப்னு அஹ்னஸ் கூறுவது பற்றி நீர் என்ன சொல்கிறீர்’; என்றுஆலோசனை கேட்கிறார்கள். அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘நீங்கள் ஆட்சியை அவர்களுக்குக் கொடுத்து விட்டால் உங்களை உலகில் அவர்கள் வாழவிடுவார்கள் என்று நினைக்கிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இல்லை என்னைக் கொலை செய்வார்கள்’ என்றார்கள். மீண்டும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘ஆட்சியை நீங்கள்அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் உம்மைக் கொலை செய்வதைத் தவிர வேறெதையாயினும் அவர்களால் செய்ய முடியுமா?’ எனக் கேட்டார்கள்.
அதற்கு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். தொடர்ந்தும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘அவர்களுக்கு சொர்க்கமும், நரகமும் சொந்தமா?’ எனக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ;இல்லை’ என்றார்கள். அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நீங்கள் ஆட்சியை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தால் இஸ்லாத்தில் அது முதல் ஸுன்னாவாக மாறிவிடும். எனவே அல்லாஹ் உங்களுக்கு அணிவித்த இந்த ஆடையை அல்லாஹ்வை சந்திக்கும் வரை நீங்கள் கழட்ட வேண்டாம் அதுவே நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் உயிர் பிரியும் வரை இதே ஆலோசனையில் உறுதியாக இருந்தார்கள்.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்து போது சில நபித்தோழர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஹஜ்ஜுக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். அப்போது அந்த நபித்தோழர்கள் ‘நாம் ஹஜ்ஜுக்குச் சென்று வரும் போது ஆட்சி அவர்களுக்கு மாறிவிட்டால் நாம் என்ன செய்வது?’ என்று கேட்டார்கள் அதற்கவர்கள் ‘கூட்டமைப்போடு இருந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அந்நபித்தோழர்கள் ‘கூட்மைப்பு அவர்களுக்கு பைஅத் செய்திருந்தால் நாம் என்ன செய்வது?’ என்று கேட்டதும் உஸமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அவர்களோடு இருந்து கொள்ளுங்கள்’ என்றார்கள். அப்போது ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே வந்து ‘உஸ்மானே நான் உங்கள் கையிலிருக்கின்றேன் தாங்கள் சொன்னால் அவர்களோடு போர் செய்யவும் தயாராகவுள்ளேன் என்றார்கள். அப்போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘அல்லாஹ்வின் ஏவல் வரும் வரை திரும்பிச் சென்று வீட்டிலிருப்பீராக இரத்தம் ஓட்டுவதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை’ என்றார்கள்.
صحيح البخاري
2778-
(கலீஃபா) உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். ‘ரூமா’ என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென எனச் சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான், ஆதாரம்: புகாரி 2778)
வேறு சில அறிவிப்புக்களில் ‘எந்தப் பள்ளியை நான் விரிவுபடுத்த உதவினேனோ அப்பள்ளியில் என்னைத் தொழ விடாமல் இவர்கள் தடுக்கின்றார்கள்’, எந்தக்கிணற்றை வாங்க நான் உதவினேனோ அக்கிணற்றிலிருந்து எனக்குத் தண்ணீர் வருவதை இவர்கள் தடுக்கின்றார்கள்’ என்று உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக வந்துள்ளது.
இவற்றையெல்லாம் அவதானித்த சிலர் கலகக் காரர்களோடு இருக்காமல் சென்றுவிடுகின்றனர். என்றாலும் நபித்தோழர்களுக்குத் தெரியாமல் நயவஞ்கர்கள் ஒன்றிணைந்து உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தக் கூட்த்துடன் என்ன பேசினார்கள் என்பதைக் கீழ்வரும் செய்தி விவரிக்கின்றது.
‘நீங்கள் எதற்காக என்னைக் கொலை செய்யப் போகின்றீர்கள்?’ எனக் கேட்டு விட்டு ‘திருமணம் முடித்த பின் விபச்சாரம் செய்தவரும், வேண்டுமென்றே ஒரு முஃமினைக் கொலை செய்தவரும், இஸ்லாத்தை ஏற்று, பின்னர் மதம் மாறியவரும்தான் கொல்லப்பட வேண்டும். அறியாமைக் காலத்திலும் நான் விபச்சாரம் செய்யவில்லை. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் நான் விபச்சாரம் செய்யவில்லை. இஸ்லாத்தை ஏற்றபின்பும், ஏற்க முன்பும் நான் யாரையும் கொலை வுமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பின்பு நான் எப்போதும் மதம் மாறியதுமில்லை. (ஆகவே எதற்காக என்னைக் கொலை செய்யப் போகின்றீர்கள்!!!!) தான் கொல்லப்படத் தகுதியானவனல்ல என்பதை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படியெல்லாம் அவர்களிடம் முன்வைத்துள்ளார்கள்.
இவ்வளவும் நடந்த பின்பு கலகக்காரர்களில் ஒருவர் வீட்டின் பின் பக்கத்தால் ஏறி வீட்டுக்குள் நுழைந்து, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொலை செய்வதற்காக வருகிறார். இதைக்கண்ட உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது வாலையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு அவரை எதிர்க்கப் போகின்றார்கள. இதைக் கண்டு அதிந்து போன அந்நபர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ‘உஸ்மானே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதைக் கேட்ட உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை எதிர்க்காமல் அமர்ந்து விடுகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் பலர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து கலகக்காரர்களை எதிர்த்து யுத்தம் செய்ய அனுமதி கோறுகிறார்கள்.
அப்போதெல்லாம் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியது ‘அல்லாஹ் எனக்கு அணிவித்த ஆடையை அவனைச் சந்திக்கும் வரை நான் கலையமாட்டேன்’ என்பதைத்தான். இறுதியில் நயவஞ்சகர்களின் முயற்சியினால் வீட்டின் பின் பக்கத்தால் பலரும் உள்நுழைகின்றனர். அவர்களுல் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முஹம்மத் என்பவரும் அடங்குவர். இவர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தாடியைப் பிடிக்கின்றார். அப்போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நீ இவ்வாறு செய்வதை உன் தந்தை கண்டால் என்ன செய்வார் என்று உனக்குத் தெரியுமா? இவ்விடத்தில் அவரிருந்தால் இவ்வாறு செய்யமாட்டார்’ என்று கூறுகிறார்கள்.
இதைக் கேட்டதும் முஹம்மத் பின்வாங்கிவிடுகிறார். நயவஞ்சகர்களின் தூண்டலுக்கு இவ்வாறான நல்லவர்களும் இரையாகினர். அதன் பின்னால் வந்த சிலர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கழுத்தை கழுத்தை நசுக்கி வாளால் வெட்டுகிறார்கள். இவ்வளவு நடந் பின்பும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவ்வாறே மரணிக்கின்றார்கள். தான் கொல்லப்படும் போது ‘அவர்கள் விடயத்தில் அல்லாஹ் போதுமானவன்’ என்ற வசனத்தையே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திருப்பித்திருப்பி ஓதிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.அந்த இரத்தக் கரை படிந்த இல்குர்ஆன் பிரதி இன்றைக்கும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரத்தக் கரை படிந்த இக்குர்ஆன் பிரதியையும், பிடுங்கப்பட்ட உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவ்களின் தலை முடியையும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அனுப்பினார்கள். இதுதான் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கிளர்ந்தெழவைத்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்ட செய்தி கேள்விப்படவே நபித்தோழர்களனைவரும் கலங்கிப் போனார்கள். மிகப்பெரிய தவறொன்று நிகழ்ந்துவிட்டதாக உணர்ந்தார்கள். அப்போது ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘யாஅல்லாஹ் உஸ்மானின் கொலையிலிருந்து நான் நிரபராதி என்பதை நீ அறிவாய் அவர்கள் சரியாக அவரைக் கொலை செய்திருந்தாலும் பிழையாகக் கொலை செய்திருந்தாலும் அவர்களுக்கு நீயே பொறுப்பு’ என்று துஆச் செய்தார்கள். உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்ட செய்தி அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் கேள்விப்படுகின்றது. அப்போது அவர்கள் அழுதவர்களாக ‘யா அல்லாஹ் உஸ்மானின் கொலையிலிருந்து நான் நிரபராதி’ என்று கூறினார்கள்.
இவ்வாறு பல நபித்தோழர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர். பிற்காலத்தில் ஜமல் யுத்தத்தின் போது அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘யா அல்லாஹ் உஸ்மானின் கொலையிலிருந்து நான் நிரபராதி. அவர் கொல்லப்பட்ட போது எனது புத்தியே போய்விட்டது. என்னையே நான் வெறுத்தேன். அவ்வேளையில் இவர்கள் என்னிடம் பைஅத் செய்ய வந்தார்கள். ‘மலக்குகள் இவரைப் பார்த்து வெட்கப்படுகின்றார்கள்’ எனறு நபியவர்கள் கூறிய ஒருவரைக் கொலை செய்து விட்டு என்னிடம் இவர்கள் பைஅத் பெற முயற்சிப்பதைப் பார்த்து நான் வெட்கப்படுகின்றேன். என்னை இவர்கள் வற்புறுத்தினர் அதற்காக நான் ஏற்றுக்கொண்டேன் இப்போதும் பயந்தவனாகவே நான் உள்ளேன்’ என்று கண்ணீர் சிந்தியவராகக் கூறினார்கள்.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கொலையில் நபித்தோழர்களுக்குத் தொடர்பில்லை என்பதையே இதிலிருந்து நாம் விளங்கவேண்டியுள்ளது. தவறான சில செய்திகள் வந்ததற்காக உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விசாரிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் அவ்வாறு நடந்தார்களே தவிர அவரைக் கொல்ல வேண்டும் என்பதற்காகவல்ல.
வதந்திகளை தீர விசாரிக்காமல் அப்படியே நம்புவது பல நல்லவர்களை நாம் அவசரமாக இழக்கவே வழி வகுக்கும் என்பதே நான் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் பெற வேண்டிய படிப்பினையாகும். அதே நேரம் நான் தூய்மையானவன் என எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டு நம்மை தூயவனாகக் காட்டிக் கொள்ளக் கூடாது அதனால் நமது பதவிகளல்ல உயிரே போனாலும் சரி. என்பதும் இத்தலைவரின் வீர மரணம் தரும் மிகப்பெரும் படிப்பினையாகும்