பெண்களுக்கு பிடித்த மலர்களில் மல்லிகைக்குத்தான் முதலிடம். அதுவும் நம் மதுரை மல்லிக்கு உலகெங்கும் மவுசுதான். இந்தியாவின் மலர் ஏற்றுமதியில் மல்லிகை பூ இரண்டாம் இடத்தில் உள்ளது.
மல்லிகையின் நறுமணத்தில் மயங்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்கும் தலையில் சூடுவதற்கும் மட்டுமின்றி மாபெரும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மல்லிகைப் பூவை பெண்கள் சூடுவதால் அவர்களுக்கு அழகோடு பல மருத்துவப் பயன்களையும் கொடுக்கிறது.
மல்லியில் பலவகையுண்டு. சாதிமல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி. இவற்றின் தோற்றம் மாறுபட்டாலும் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.
சாதாரணமாக மல்லிகையை மல்லி, புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என்று பல பெயர்களில் அழைக்கின்றர்.
இதன் இலை, பூ, மொட்டு, வேர் அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.
குடற் புழுக்கள்
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும். இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும்.
இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.
வாய்ப்புண் வயிற்றுப்புண் நீங்க
வயிற்றில் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
சத்தான உணவின்மை, நேரங்கடந்த உணவு, நீண்ட பட்டினி, அதிக வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியுற்று உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்து கின்றது. இவர்கள் மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
கண்ணில் சதை வளர்ச்சி
கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.
பெண்களுக்கு
மாதவிலக்கின் போது சிலருக்கு அடிவயிற்றில் பயங்கரமான வலி ஏற்படும். மேலும் அதிக உதிரப் போக்கு காரணமாக உருவாகும் சோர்வு நீங்க மல்லிகைப் பூவை நன்கு நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தி வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
பிரசவத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும். அதனால் சுரந்த பால் மார்பில் கட்டிக்கொண்டு அதிக வலியை உண்டாக்கும். இவர்கள் மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் வலி குறைந்து பால் சுரப்பது நிற்கும்.
மேலும் சிலருக்கு மார்பகத்தில் நீர் கட்டிகள் தோன்றி வலியை ஏற்படுத்தும். இதற்கும் மல்லிகையை அரைத்து பற்று போட்டால் வலி நீங்கி கட்டி குணமாகும்.
உடல் தேற
மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.
மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். மேலும் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.
புண்கள் ஆற
மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.
மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.
மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேநீர் போல தயாரித்து தினமும் குடித்து வந்தால் எலும்புருக்கி நோய், நுரையீரல் புற்று நோய்களின் பாதிப்புகள் குறையும் என கண்டறிந்துள்ளனர்.
மல்லிகைப் பூவை நன்றாக கசச்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வந்தால் தலைவலி உடனே குணமாகும்.
மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கர்ப்பப் பைக்கு வலுவூட்டி,பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து சுகப் பிரசவத்திற்கு உதவுகிறது.
மேலும் மன அழுத்தம், ஆண்மையின்மை, அஜீரணம், குறைந்த செரிமான சக்தி போன்றவற்றை குணமாக்கும்.
பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள் கட்டிகள் நீங்குவதற்கு மல்லிகை எண்ணெயைப் பயன்படுத்தலாம். நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமாகும்.
மல்லிகை கஷாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும்.
மல்லிகைப் பூவிலிருந்து நல்ல மணமுள்ள வாசனை திரவியம் தயாரிக்கின்றனர். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.
மல்லிகையின் வேரை காயவைத்து பொடி செய்து அதனுடன் வசம்புத்தூளைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.