[ இந்த உலகின் பாக்கியங்கள் (நிஃமத்துகள்) அனைத்தும் அல்லாஹ்விடத்தில் வெயில் நேரத்தில் மணலிலிருந்து மிண்ணும் அணுக்களைவிடவும் அற்பமானவையாய், சிறியவையாய் இருக்கின்றன. ஒரு கொசுவின் இறக்கை அளவாவது இந்த பாக்கியங்களை அல்லாஹ் மதித்திருந்தால் ஒரு முஸ்லிம்கூட ஏழையாய இருக்கமாட்டார். ஒரு காஃபிர்கூட இங்கே இன்பம் அனுபவித்து வாழ இச்சைப்படமாட்டான்.
மனிதனுக்கு (அல்லாஹ் குறித்துள்ள) அவன் தவணை மட்டும் (முன் கூட்டியே) தெரிந்திருக்மேயானால் அவன் வாழ்நாட்களே அவனுக்கு மிகவும் சங்கடமானவையாய் தோன்றும். தான் (இப்போது) சுவைக்கும் உல்லாசபோகங்கள் தனக்கு (மறுமையில்) உதவியளிக்க மாட்டாது என்பதை அவன் கண்டுகொள்வான். எனினும், அவனது தவணை மறைத்து வைக்கப்பட்டு ஆசாபாசங்கள் (மட்டும்) அவன்முன் விரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
உங்களுக்கு முந்திய காலம் ‘ஜாஹிலிய்யத்தான (வழி தவறிய) காலம்’ என்று ஏன் பெயரிடப்பட்டுள்ளது? அப்போது இருந்தவர்களின் செயல்(அமல்)கள் யாவும் சரியான அடிப்படையின்மீது அமைக்கப்படவில்லை. (அதனால்தான் அக்காலத்துக்கு ‘வழி தவறிய’ காலம் என்று பெயரிடப்பட்டது.) அவர்கள் அறியாமையிலேயே மூழ்கிக் கிடந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.]
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (14, 15, 16)
சொற்பொழிவு: 14
எல்லோருக்கும் ‘கப்ரு’ தான் நிச்சயமான வீடாகும். எனினும் அதை அதிகமாக நினைப்பவர்கள் நம்மில் வெகு சிலரே. அது குறித்து ஒரு சமயம் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவாகும் இது.
‘புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப்போற்றிப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகிறேன். மேலும், அவனிடம் பிழை பொறுக்க வேண்டுகிறேன். நம் நஃப்ஸ{களால் (மனோ இச்சைகளால்) விளையும் தீமைகளை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. அவ்வாறே அல்லாஹ் வழிதவறும்படி விதித்து விட்டவர்களை யாராலும் நேர்வழியில் செலுத்திடவும் முடியாது. மேலும் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்.
‘அல்லாஹ் அவருக்குச் சன்மார்க்கத்தைத் தந்து நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சிரிக்கை செய்பவராகவும், கியாமத்துக்குச் சமீப காலத்தில் அனுப்பியுள்ளான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் பணிந்தவர்கள் நிச்சயம் நேர்வழி பெற்று விட்டவர்களாவார். அவர்களுக்குப் பணியாமல் மாறு செய்தவர்கள் நிச்சயம் வழி தவறியவர்களாவர்.’
‘நிச்சயமாக எல்லா இன்பங்களையும் வேரோடு பிடுங்கித் தகர்த்தெறியும் மரணத்தை மட்டும் நீங்கள் உண்மையாக சிந்தித்தீர்களானால் இன்று உங்களை மகிழ்ச்சியில் மூழ்கியிருப்பவர்களாக உங்களை நான் பார்க்க நேரிடாது. ஆகவே மரணத்தைப் பற்றிய நினைப்பை உங்கள் சிந்தனையில் அதிகமாக இறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ‘நான் (உங்கள் மக்களை விட்டும் உங்களைப் பிரித்துவிடும்) தூரத்திலுள்ள தனித்த வீடாவேன். நான் (உங்களை மண்ணோடு மண்ணாக்கும்) மண் வீடாவேன். நான் (விஷ) ஜந்துக்கள் நிறைந்த வீடாவேன்’ என்று ஒவ்வொரு நாளும் கப்ரிலிருந்து சப்தம் வந்து கொண்டே இருக்கிறது.
அல்லாஹ்வின் நல்லடியார் (முஃமின்) ஒருவர் அந்த கப்ரில் (மண்ணறையில்) அடைக்கப்பட்டதும், ‘வாருங்கள் உங்களுக்கு சுப சோபனம் உண்டாகட்டும். என் முதுகில் நடந்து திரிபவர்களில் நீங்களே எனக்கு மிகவும் உவப்பானவர். ஆகவே, இன்று நீங்கள் என்னைச் சந்திக்கிறீர்கள். நான் உங்களுக்குச் செய்யும் வரவேற்பைப் பாருங்கள்!’ என்று அந்த கப்ரு கூறும். பிறகு அந்த கப்ரு அந்த முஃமினின் பார்வைக்கு எட்டிய தூரம் வரை அவருக்கு விஸ்தீரணமாக்கப்படும். மேலும், அவருக்காகச் சுவர்க்கத்தின் ஒரு வாயிலும் திறந்து விடப்படும்.
காஃபிரான, தீய நடத்தை புரிந்த ஒருவன் கப்ரில் அடக்கப்பட்டதும், கப்ரு கர்ஜித்து அவனைப்பற்றி, ‘உனக்கு (இங்கே) சுகமோ, விஸ்தீரணமான இடமோ கிடைக்காது. என் முதுகில் நடந்து திரிந்தவர்களில் நீயே எனக்கு மிகவும் வெறுப்பளித்தவன். இன்று நீ என் பிடியில் அகப்பட்டுள்ளாய். (இப்போது) நீ என் வரவேற்பை அறிந்துகொள்வாய்’ என்று கூறி அவனைச் சுருட்டி நெருக்கும். (அதன் வேகத்தால்) அவனுடைய எலும்புகள் நொறுங்கி ஒன்றோடொன்று இணைந்துவிடும். (இவ்விதம் கூறும்போது நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்துக் காட்டினார்கள்.)
எழுபது பெரும், பெரும் விஷப் பாம்புகள் அவன்மீது ஏவப்படும். அந்த பாம்புகளில் ஒன்று இந்த பூமியின்மீது தன் (விஷ) மூச்சை விட்டால், கியாமநாள் வரை அந்த இடத்தில் புல் பூண்டே முளைக்காது. அந்த பாம்புகள் அவனைக் கடித்துப் பிய்த்துப்பியத்துத் தின்று கொண்டிருக்கும்.
கப்ரு ஒன்றிருந்தால் அது ஓர் உல்லாச (சுவர்கப்) பூங்காவாக இருக்கும், அல்லது நரக எரி குண்டங்களில் ஓர் எரி குண்டமாய் இருக்கும். (நூல்: திர்மிதீ)
சொற்பொழிவு: 15
தாயிஃபைச் சேர்ந்த பனூ ஷனீப் என்ற கூட்டத்தார் தங்களைத் தாங்கள் வசித்துவந்த ஊரைவிட்டுத் துரத்திவிட்டதாக பனூ முராத் என்ற கூட்டத்தினர் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முறையிட்டனர். அப்போது நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரையாகும் இது.
இந்த உலகின் பாக்கியங்கள் (நிஃமத்துகள்) அனைத்தும் அல்லாஹ்விடத்தில் வெயில் நேரத்தில் மணலிலிருந்து மிண்ணும் அணுக்களைவிடவும் அற்பமானவையாய், சிறியவையாய் இருக்கின்றன. ஒரு கொசுவின் இறக்கை அளவாவது இந்த பாக்கியங்களை அல்லாஹ் மதித்திருந்தால் ஒரு முஸ்லிம்கூட ஏழையாய இருக்கமாட்டார். ஒரு காஃபிர்கூட இங்கே இன்பம் அனுபவித்து வாழ இச்சைப்படமாட்டான். மனிதனுக்கு (அல்லாஹ் குறித்துள்ள) அவன் தவணை மட்டும் (முன் கூட்டியே) தெரிந்திருக்மேயானால் அவன் வாழ்நாட்களே அவனுக்கு மிகவும் சங்கடமானவையாய் தோன்றும். தான் (இப்போது) சுவைக்கும் உல்லாசபோகங்கள் தனக்கு (மறுமையில்) உதவியளிக்க மாட்டாது என்பதை அவன் கண்டுகொள்வான். எனினும், அவனது தவணை மறைத்து வைக்கப்பட்டு ஆசாபாசங்கள் (மட்டும்) அவன்முன் விரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
உங்களுக்கு முந்திய காலம் ‘ஜாஹிலிய்யத்தான (வழி தவறிய) காலம்’ என்று ஏன் பெயரிடப்பட்டுள்ளது? அப்போது இருந்தவர்களின் செயல்(அமல்)கள் யாவும் சரியான அடிப்படையின்மீது அமைக்கப்படவில்லை. (அதனால்தான் அக்காலத்துக்கு ‘வழி தவறிய’ காலம் என்று பெயரிடப்பட்டது.) அவர்கள் அறியாமையிலேயே மூழ்கிக் கிடந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.
இஸ்லாத்தை ஏற்று புனிதமடைந்த ஒருவர் பண்பட்ட அல்லது பண்படாத சொந்த நிலம் வைத்திருந்தால் அவர் (ஷரீஅத்தால்) விதிக்கப்பட்ட அதற்குரிய பாகத்தை (வரியை) செலுத்த வேண்டும். மீதமுள்ள நில வருவாய் அவருக்கே சொந்தமாகும். இந்த வரியையோ அல்லது வருவாயில் பத்தில் ஒரு பங்கையோ செலுத்துவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும், திம்மி மீதும் கடமையாகும். (முஸ்லிம் ஆளுகையின்கீழ் இருந்துவரும் முஸ்லிமல்லாத பிரஜைகள் திம்மி என்று அழைக்கப்பட்டார்கள்.)
ஜாஹிலிய்யத்தான காலத்தவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை வணங்கி வந்தனர். எனவே, அவர்கள் தங்களின் செய்கைக்கான தண்டணையை நிச்சயம் பெற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்களுக்கான தண்டணை கியாமநாள் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் மாபெரும் சர்வ அதிகாரம் படைத்தவனாகவும், சக்தி மிக்கவனாகவும் இருந்தும்கூட நிராகரிப்போருக்குச் சிறிது அவகாசத்தை அருளியுள்ளான். அதனால்தான் பலம் பெற்றிருப்பவர்கள் பலகீனர்களை ஆக்கிரமிக்கின்றனர். பெரிய சமுதாயமுள்ளவர்கள் சிறு பகுதியினரைக் கபளீகரம் செய்கின்றனர்.
அல்லாஹ் மிகப்பெரியவனும், சர்வ சக்தியுள்ளவனும் ஆவான். வழி தவறிய காலத்தின் கொலைக் குற்றங்களும், ஆகாத செயல்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன. சென்று போனதை எல்லாம் அல்லாஹ் மன்னித்தே விட்டான். எனினும், இனிமேலும் இவ்வாறு (குற்றமுள்ள காரியங்களைச்) செய்பவர்களை அல்லாஹ் நிச்சயமாக தண்டித்தே தீருவான். அல்லாஹ் மாபெரும் சக்தியுடையோனாகவும், தண்டனை வழங்கக்கூடியவனாகவும் இருக்கிறான். (அல் மவாஹிப்)
சொற்பொழிவு: 16
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹு தைபிய்யா சமாதான ஒப்பந்தத்துக்குப்பின் பல நாட்டு மன்னர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அவ்விதம் கஸ்ஸான் அரசனான ஷர்ஜிலுக்கு எழுதப்பட்ட கடிதத்தை ஹாரித் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்டு சென்று அந்த அரசனிடம் சமர்ப்பித்தார்கள். அவ்வரசன் வெகுண்டெழுந்து நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதரான ஹாரித் பின் உமைர் (ரளி) அவர்களை கொன்றுவிட்டான். ஒரு நாட்டின் தூதரை கொல்லக்கூடாது எனும் சர்வதேச சம்பிரதாயத்தை கஸ்ஸான் மன்னன் மீறிவிட்டான்.
ஹிஜ்ரி எட்டில் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கஸ்ஸான்மீது போர் தொடுக்க மூவாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையை அனுப்பினார்கள். அச்சமயம் அந்த படைவீரர்களை நோக்கி நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரையாகும் இது.
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்துவிட்டு) சொன்னார்கள்: ‘ஜைத் பின் ஹாரிஸே இந்த படையின் தளபதியாவார். அவர் போரில் கொல்லப்படுவாரேயானால் பிறகு எனது சிறிய தந்தையின் மகன் ஜஅஃபர் உங்கள் தளபதியாக வேண்டும். அவரும் ஷஹீதாகிவிட்டால் பின்னர் அப்துல்லாஹ் பின் ரவாஹா படைத்தளபதியாக வேண்டும். கவனியுங்கள்! முதலில் நீங்கள் எதரிகளை இஸ்லாத்தில் சேருமாறு அழைக்க வேண்டும். அவர்கள் அதை நிராகரித்துவிட்டால்தான் (நீங்கள்) போர் புரிய வேண்டும். எச்சரிக்கை! நீங்கள் உடன்பாட்டை (சமாதான ஒப்பந்தங்களை) ஒருபோதும் மீறக்கூடாது. நம்பிக்கை துரோகமிழைக்கக்கூடாது. பெண்கள், சிறுவர்கள்மீது கை நீட்டக்கூடாது. வயோதிகர்களையும், நோயாளிகளையும் கொல்லக்கூடாது. எதிரிகளின் மரங்களைக்கூட காரணமின்றி வெட்டி எறியக்கூடாது. பயிர்களையும் எரிக்கக்கூடாது. ஆடு, மாடு, ஒட்டகங்களை கொல்லக்கூடாது.
போரிலிருந்து ஒதுங்கித் தங்கள் வீடுகளில் புகுந்து கதவைத் தாழிட்டுக்கொண்டவர்களோடும் போரிட வேண்டாம். தங்கள் வணக்கஸ்தலங்களுக்குள் நுழைந்து சரணடைந்து பாதுகாப்புத்தேடி ஒதுங்கிக் கொண்டவர்களோடும் போரிடாதீர்கள். நமது தூதரான ஹாரிஸ் பின் உமைர் கொல்லப்பட்ட இடத்திற்குச்சென்று அவசியம் நீங்கள் உங்கள் ஒத்துழைப்பைத் தெரிவிக்க வேண்டும். அல்லாஹ்வின் கருணையும், அருளும் உங்கள் புறத்திலிருக்குமாக! (நூல்: புகாரி)
– அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.