[ முஸ்லிம்களில் பலர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரால் பாவங்களை மன்னிப்பவரே! படைப்பினங்களை பாதுகாப்பவரே! நெருக்கடியே நீக்குபவரே! தீமையே விட்டும் பாதுகாப்பவரே! என்றெல்லாம் கூறுகின்றனர்.
”இவையெல்லாம் இணைவைப்பு, அல்லாஹ் மட்டும் தான் மன்னிப்பவன், பாதுகாப்பவன், நெருக்கடியே நீக்குபவன்” என்று கூறினால் அவர்கள் கேட்பார்கள் ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்வது தவறா..?”
நாம் அதற்கு பதில் அளிக்கையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், ”கிருஸ்தவர்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள் என்று கூறியுள்ளார்கள்” என்றால், அதற்கு அவர்கள் கூறுவார்கள் ”நாங்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கிருத்தவர்கள் இறைவனுடைய அந்தஸ்தில் வைத்ததை போன்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் வைக்கவில்லை” என்கின்றனர் (அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் என்று கூறவில்லை).
இணைவைப்பு என்பது ஒருவரை அல்லாஹ் என்று பெயர் கூறி அழைப்பதனால் மட்டும் இணைவைப்பு அல்ல, அல்லாஹுவின் பண்புகளை அல்லாஹ் அல்லாதவர்கள் மீது கற்பனையாக இட்டுக்கட்டி நம்புவதும் இணைவைப்பு தான்.]
ஏக இறைவனின் திருப்பெயரால்…….
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்:
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)
இணைவைப்பு என்றால் என்ன….?
பொதுவாக நம்மில் பலர் இணைவைப்பு என்றால் சிலைவணக்கம் என்றும், சிலைவணக்கம் அல்லாமல் உயிருள்ள, மற்றும் உயிரற்ற படைப்பினங்களை இறைவன் என்று பெயர் கூறி அழைத்தாலே மாத்திரம் இணைவைப்பு என்று விளங்கியுள்ளனர். இது தவறானதாகும். இணைவைப்பு எனும் பாவமான காரியத்தை சரியாக விளங்கி கொள்ளாத காரணத்தினால் தான் நமது சமுதாயத்தில் கப்ரு வணக்கம் போன்ற கலாச்சாரத்தை இன்னும் மக்கள் பின்பற்றி கொண்டிருகின்றனர். மேற்கூறிய விசயங்கள் அல்லாமல் இணைவைப்பு என்ற செயல் நிறைய வகைப்படும் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் மட்டும் அல்ல, அல்லாஹ் அல்லாதவைகளும் உண்டு என்று நம்புவது மட்டும் இணைவைப்பு இல்லை, அல்லாஹுடைய வல்லமையை அல்லாஹ்வுக்கு நிகராக அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றை ஆக்குவதும் இணைவைப்பாகும்.
கிறித்துவர்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹுவின் மகன் என்று கூறியதாலும், அல்லாஹுவின் பண்புகள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உள்ளதால் அவரும் இறைவனாகிவிட்டார் என்று கூறியதாலும் கிறித்துவர்கள் இணைவைத்துவிட்டனர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர் இது சரியானதாகும்.
அதே சமயம் முஸ்லிம்களில் பலர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரால் பாவங்களை மன்னிப்பவரே! படைப்பினங்களை பாதுகாப்பவரே! நெருக்கடியே நீக்குபவரே! தீமையே விட்டும் பாதுகாப்பவரே! என்றெல்லாம் கூறுகின்றனர். இவையெல்லாம் இணைவைப்பு.
நாம் அதற்கு பதில் அளிக்கையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், கிருஸ்தவர்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள் என்று கூறியுள்ளார்கள் என்றால், அதற்கு அவர்கள் கூறுவார்கள் நாங்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கிருத்தவர்கள் இறைவனுடைய அந்தஸ்தில் வைத்ததை போன்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் வைக்கவில்லை என்கின்றனர் (அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் என்று கூறவில்லை).
இணைவைப்பு என்பது ஒருவரை அல்லாஹ் என்று பெயர் கூறி அழைப்பதனால் மட்டும் இணைவைப்பு அல்ல, அல்லாஹுவின் பண்புகளை அல்லாஹ் அல்லாதவர்கள் மீது கற்பனையாக இட்டுக்கட்டி நம்புவதும் இணைவைப்பு தான்.
உதாரணத்திற்கு;
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) மற்றும் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாகக் கருதுவது இணைவைப்பாகும்.
ஒரு உயிருள்ளதையோ அல்லது உயிரற்றதையோ அவைகளின் சக்திக்கு மீறி அவ்விரண்டிலும் இல்லாத ஒன்றை அல்லாஹுவிற்கு இருகின்ற பண்புகளை போன்று கற்பனையாக அவைகளுக்கும் இருப்பதாக நம்புவது தான் இணைவைப்பாகும்.
உயிருள்ள ஒரு மனிதனின் தன்மையை பற்றி நாம் பார்போம். மனிதன் பார்க்ககூடிய திறனும், கேட்கக்கூடிய திறனும் உடையவனாக படைக்கப்பட்டுள்ளான். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட இவ்விரு அருட்கொடைகளையும் நாம் சரியாக விளங்கி கொண்டாலே இணைவைப்பின் அடிப்படை விளங்கி விடும்.
உயிருள்ள மனிதன் உயிரற்றவைகளை விட ஆற்றலால் உயர்ந்தவன்….
உயிருள்ள மனிதனுக்கு உள்ள ஆற்றலில் ஒன்று பார்வையாகும். அவனுடைய பார்வை திறனில் அவனுடைய பார்வைக்கு எட்டிய அனைத்தையும் பார்க்ககூடியவனாக இருக்கின்றான். இது மனிதனின் இயல்பான பார்வை திறனாகும். மனிதனின் இயல்பான பார்வை திறனுக்கு மீறி மனிதனுடைய பார்வைக்கு எட்டாத ஒன்றை அல்லாஹ் பார்ப்பதை போன்று பார்க்கின்றான் என்று நம்புவது இணைவைப்பாகும். வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன் மட்டும் தான் மனிதனுக்கு எட்டியவைகளையும், மனிதனுக்கு எட்டாதவைகளையும் பார்க்ககூடியவனாக உள்ளான்.
அதே போன்று மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் ஒன்று செவியேற்கும் திறன். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வரும் ஓசையை ஒரு நேரத்தில் ஒரு ஓசையை மட்டும் கேட்கக்கூடிய நிலையில் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதல்லாமல் அல்லாஹ் செவியேர்ப்பதை போன்று மனிதனின் செவிபுலணிற்கு எட்டாத தூரத்தில் இருந்து வரும் ஓசையை மனிதன் செவியேர்கின்றான் என்று நம்புவது இணைவைப்பாகும்.
மனிதன் உயிருடன் இருக்கும்போதும் சரியே! மரித்த பிறகும் சரியே! அவனுடைய பார்வை, மற்றும் செவித்திறன் அல்லாஹுவின் பண்புகளுக்கு நிகராக உள்ளது என்று கற்பனையாக எண்ணுவதே இணைவைப்பாகும்.
யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாக நம்பி, அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
அல்லாஹ்
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல் குர்ஆன் 42 : 11.)
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:04)
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)
இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே.
மறைவான விஷயங்களை அறிபவன் அல்லாஹ்வே.
பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ்வே.
பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வே.
உயிரை உண்டாக்குபவனும் அல்லாஹ்வே.
மரிக்கச் செய்பவனும் அல்லாஹ்வே.
மரித்தோரை மீண்டும் எலுப்புவோனும் அல்லாஹ்வே.
ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ்வே.
எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ்வே.