அழிந்து வரும் குருவி இனங்களை காக்க வேண்டும்
திரும்பிய திசையெல்லாம் நம் காதுகளில் இனிதாய் ஒலிக்கும் சிட்டுக் குருவிகளின் இனிமையான குரல் எவருக்குத்தான் பிடிக்காது?!
உருவத்தில் சிறியதாய் இருந்தாலும், அதன் இனிய குரல் மட்டும் என்னவோ ஊர் முழுக்க கேட்கும். கேட்பவர்களை ரசிக்க வைக்கும். அப்படி மனிதரோடு ஒன்றி வாழ்ந்த இந்தக் குருவிகள் இனம் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
ஓட்டு வீடுகளிலும், கூரை வீடுகளிலும் இவை கணக்கிலடங்காமல் வசித்த காலம்போய், இப்போது இளைய தலைமுறையினருக்கு இந்தக் குருவிகளை அடையாளம் காட்டுவது என்பதே அரிதான காரியம் ஆகிவிட்டது.
இவை அழிவை சந்திப்பதற்கு பழைய வீடுகள் எல்லாம் இப்போதும் மாட மாளிகைகளாகவும், கான்கிரீட் அபார்ட்மென்ட்களாகவும் வளர்ந்துவிட்டதும், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுமே காரணம்.
கடந்த 2008-2009 ல் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்படி கேரளத்தில் குருவிகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கேரளத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர், கொல்லத்தில் உள்ள எஸ்.என் கல்லூரி விலங்கியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் ஜைய்னுத்தீன் கூறியுள்ளார்.
நம் வீட்டு சின்னக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தனது கீச்சு குரலால் மகிழ்வை ஏற்படுத்திய இந்தக் குருவிகள் நகர்ப்புறங்களில் வசிக்கும் மனிதர்களால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
உலக அளவில் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவது, அதிக அளவில் ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, தட்பவெட்ப நிலை மாறுவது உள்பட பல்வேறு காரணங்களால் ஏராளமான பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.
உலக அளவில் சுமார் ஆயிரத்து 226 பறவை இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் 88 ரக பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வரும் உலக அளவிலான அமைப்பு கூறுகிறது. இதுகுறித்து அவர் கூறியது:
குருவி இனம் அழிவதற்கான காரணம் மற்றும் அவற்றை காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுபுழு பூச்சிகளை உணவாகக் உட்கொண்டு வாழ்ந்து வரும் இந்தக் குருவிகள் பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு மாசுக் காரணிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றன. பெட்ரோல் எரியும்பொழுது அதிகஅளவில் மெத்தில் நைட்ரேட் வெளிப்படுகிறது.
அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த வாயுவால் பாதிக்கப்படும் சிறுபூச்சிகளை இந்தக் குருவிகள் உண்ணுவதில்லை. இதனால் அதற்கு சரியான உணவு கிடைப்பதில்லை. வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், வீடுகளில் அடிக்கப்படும் வார்னிஷ்கள் போன்றவற்றால் காற்றில் வெப்பம் அதிகரித்து வருவது, பறவைகள் வசிப்பதற்கு ஏற்றவகையில் இல்லாத கட்டடங்கள் போன்றவையும் இவையின் அழிவுக்குக் காரணமாகும்.
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் தாக்கமும் சமீப காலங்களில் இந்தக் குருவிகள் மரணத்தைத் தழுவ முக்கியக் காரணம் என நான் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதேபோல் இந்தக் குருவிகளுடைய கூடுகளின் அருகில் செல்போன் கோபுரங்கள் அமைத்துவிட்டால் அடுத்த பத்துநாள்களில் அவை அங்கிருந்து இடம்பெயர்ந்து விடுகின்றன.
வழக்கமாக 10 முதல் 14 நாள்களில் இவை அடைகாத்து குஞ்சு பொறித்துவிடும். ஆனால் செல்போன் கோபுரங்களின் அருகில் இருக்கும் குருவிகள் 30 நாள்கள் வரை அடைகாத்தபோதும் குஞ்சு பொறிப்பதில்லை. இந்தக் குருவிகளை பாதுகாக்க காற்று, நீர், தாவரங்கள் ஆகியவை நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
இந்தக் குருவி இனங்களின் அழிவு இப்போதுள்ள நகர்ப்புற சூழல்கள் மனிதர்களுக்கு வசிப்பதற்கு உகந்ததல்ல என்பதையே காட்டுகிறது. பிரிட்டனில் உள்ள பறவைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அழிந்து வரும் பறவையினங்கள் குறித்த பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சிட்டுக்குருவி இனம் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பும் சிட்டுக் குருவி இனங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. எனவே இவற்றைப் பாதுகாக்க புதிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் இந்திய அஞ்சல் துறை பறவையினங்களைப் பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
குருவி இனத்தை பார்க்காமலேயே வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர்கள் குருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர். கடையநல்லூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தான் சந்திக்கும் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் குருவி வளர்ப்புக்கு அட்டை பெட்டி வழங்கி வீடுகளில் வைத்து குருவிகளை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்.
அட்டைப் பெட்டிகளில் குருவி சென்று வர ஓட்டை அமைத்து உள்ளே உமி மற்றும் வைக்கோல் வைத்து அடைக்கப்பட்டுள்ள இந்த கூடு தற்போது கடையநல்லூர் பகுதியில் பிரபலமாகி வருகிறது. எனவே, வருங்கால சந்நதியினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குருவி உள்பட அழிந்து வரும் அனைத்து பறவைகளையும் பாதுகாப்பது மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.