உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டவர்கள்
صحيح البخاري 3695 – عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي بِحِفْظِ بَابِ الْحَائِطِ فَجَاءَ رَجُلٌ يَسْتَأْذِنُ فَقَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَإِذَا أَبُو بَكْرٍ ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ فَقَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَإِذَا عُمَرُ ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ فَسَكَتَ هُنَيْهَةً ثُمَّ قَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى سَتُصِيبُهُ فَإِذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவருக்காக அனுமதி கேட்க) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (நான் அவரிடம் சொல்லச் சென்ற போது) அம்மனிதர் அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாக இருந்தார்கள்.
பிறகு மற்றொருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் அனுமதி கேட்க,) ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (நான் அவ்வாறே சொல்லச் சென்ற போது) அந்த மனிதர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாக இருந்தார்கள்.
பிறகு, இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். (நான் சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கதவைத் திறக்க அனுமதி கேட்ட போது) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு பிறகு, ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (நான் சென்று கதவைத் திறந்த போது) அவர் உஸ்மான் இப்னு அஃப்பான் அவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 3695)
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சுவனம் வாக்களிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பையும், அவர்கள் பற்றிய ஒரு முன்னறிவிப்பையும் கீழ்வரும் ஹதீஸ் கூறுகின்றது.
صحيح البخاري 3686 – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُحُدٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَضَرَبَهُ بِرِجْلِهِ قَالَ اثْبُتْ أُحُدُ فَمَا عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدَانِ
(ஒருமுறை) அபூ பக்ர், உமர், உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோர் தம்முடனிருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹுது மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தம் காலால் அடித்து, ‘உஹுதே! அசையாமல் இரு! உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் தான் உள்ளனர்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 3686.
‘உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் தான் உள்ளனர்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதிலிருந்து தாம் கொல்லப்படப் போகிறோம் என்ற செய்தி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதே நேரம் தான் கொல்லப்படமாட்டேன். ஆனால் உமரும், உஸ்மானும் கொல்லப்படுவார்கள் என்பது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தெரிந்து விட்டது.
மேலே பார்த்த ஹதீஸ்களிலிருந்து கீழ்வரும் அம்சங்களை சாரமாக எடுக்கலாம்.
1. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து மலக்குமார்கள் வெட்கப்படுகின்றார்கள். இது அவருக்குரிய தனிப்பட்ட சிறப்பைக் காட்டுகின்றது.
2. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சுவனம் வாக்களிக்கப்பட்டவர்.
3. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சோதனைகளைச் சந்திப்பார்.
4. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்படுவார்.
பொதுவாகவே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம் சோதனைமயமானது என்பதை நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
مسند أحمد بن حنبل- 8522 أبو حبيبة أنه دخل الدار وعثمان محصور فيها وانه سمع أبا هريرة يستأذن عثمان في الكلام فأذن له فقام فحمد الله وأثنى عليه ثم قال اني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : انكم تلقون بعدي فتنة واختلافا أو قال اختلافا وفتنة فقال له قائل من الناس فمن لنا يا رسول الله قال عليكم بالأمين وأصحابه وهو يشير إلى عثمان بذلك
எனக்குப் பின்னால் குழப்பங்களையும், முரண்பாடுகளையும் நீங்கள் சந்திப்பீர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே அக்காலத்தில் எங்களுக்காக யார் இருப்பார்?’ என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சுட்டிக் காட்டி இந்த நம்பிக்கையாளரோடும், அவரின் தோழர்களோடும் சேர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத் 8522)
مسند أحمد بن حنبل- 24610 عن عائشة قالت …..قال يا عثمان أن الله عز و جل عسى أن يلبسك قميصا فإن أرادك المنافقون على خلعه فلا تخلعه حتى تلقاني يا عثمان إن الله عسى أن يلبسك قميصا فإن أرادك المنافقون على خلعه فلا تخلعه حتى تلقاني ثلاثا فقلت لها يا أم المؤمنين فأين كان هذا عنك قالت نسيته والله فما ذكرته قال فأخبرته معاوية بن أبي سفيان فلم يرض بالذي أخبرته حتى كتب إلى أم المؤمنين أن اكتبي إلي به فكتبت إليه به كتابا
உஸ்மானே அல்லாஹ் உங்களுக்கு ஓர் ஆடையை அணிவிக்கலாம். நயவஞ்சகார்கள் அதைக் கழைய முனைந்தாலும் என்னைச் சந்திக்கும் வரை அதை நீர் கழையவேண்டாம். என உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தோளைத் தட்டியவாறு நபியவர்கள் மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத் 24610)
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதை கீழ்வரும் செய்தியும் உறுதி செய்கின்றது.
مسند أحمد بن حنبل5953 – عن بن عمر قال : ذكر رسول الله صلى الله عليه و سلم فتنة فمر رجل فقال يقتل فيها هذا المقنع يومئذ مظلوما قال فنظرت فإذا هو عثمان بن عفان رضي الله تعالى عنه
பின்னால் நடக்கவிருக்கும் குழப்பமொன்றைப் பற்றி நபியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் அவ்விடத்தைக் கடந்து சென்றார். அப்போது நபியவர்கள் அம்மனிதரைப் பார்த்து ‘போhத்திக்கொண்டு செல்லும் இவர் அந்நாளில் அநியாயமாகக் கொல்லப்படுவார்’ என்று கூறினார்கள். (உடனே நான் அவரைப் பார்த்தேன் அவர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத் 5953)
மேலுள்ள ஹதீஸ்களனைத்தும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஏற்படவிருந்த நிகழ்வுகளை முன்னறிவிப்புக்களாக எடுத்துக் கூறுகின்றன.
இன்ஷா அல்லாஹ், தொடரும்.