அல்லாஹ் முஃமின்கள் மீது பேரன்பு கொண்டவன்
அல்லாஹ் மிகப்பெரும் கருணையாளன், நீதியாளன். அல்லாஹ் வெருமனே முஃமின்களை சோதித்துவிட்டு இருந்துவிடுவதில்லை. மாறாக அதற்கான பரிசுகளையும் வழங்கும் இறைவன் நம்மீது பேரன்பும், நிகரற்ற கருணையும் வைத்துள்ளான் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் (ஹதீஸ்குத்ஸி) சான்று பகர்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
”என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனதிற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன்.
அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான வானவர்கள் நிறைந்த சபையில் அவனை நினைவு கூறுகிறேன்.
அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன்.
அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன்.
என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன்.” (நூல்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ் கூறினான்;
o ‘அடியார்களே! அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.
o என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.
o என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.
o என் அடியார்களே! உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.
o என் அடியார்களே! நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்பை தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.
o என் அடியார்களே! எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.
o என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.
o என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.
o என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்பு ஏற்படாது.
o என் அடியார்களே! நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும். (நூல்: முஸ்லிம்)