திருமணத்திற்கு மூன்று அம்சங்கள் உண்டு.
1. இறைவன் வழங்கியுள்ள உலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவது திருமணமே. சந்ததிகளை உருவாக்கும் முதல் அடி (first-step) அதுதானே!
2. கணவன் பொருள் தேடுகின்றான். மனைவி குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரிக்கின்றாள். பொருளுக்கு ஓர் ஆணும், பொறுப்புக்கு ஒரு பெண்ணும் தேவை. அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மனைவி தேவை; ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவன் தேவை.
3. ஒவ்வொரு நபருக்கும் விருப்பு வெறுப்புகளையும், ஆழ்ந்த உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள மற்றொருவர் தேவை. உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றுபட்ட இருவராலேயே அவ்வாறு பகிர்ந்து கொள்ள இயலும். ஒருவர் மனத்தால் மற்றொருவர் சிந்திக்கின்ற சிறப்பு கணவன் மனைவியராகிய ஆண் பெண்களுக்கு இடையேதான் தோன்றுகின்றது.
முதல் அம்சம் ஆத்மிகம். இரண்டாவது அம்சம் பொருளாதாரம் பற்றிய சமூக உறவு. மூன்றாவது அம்சம் அன்பும், தியாகமும் நிறைந்த மனித உறவைப் பற்றியது. கணக்கில் சேராத, எழுத்தில் விவரிக்க இயலாத பலதரப்பட்ட திருமண நிலைகளை இங்கு தவிர்த்து, வாழ்க்கையின் நெறிக்கும், மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்ட மனிதர்களின் நிலையை மட்டுமே கருதி இதை எழுதுகின்றேன்.
ஆத்மிக அம்சம் மனித வாழ்க்கைக்கும் முக்காலும் பின்னணியாக இருப்பதால், அது பெரும்பாலோரை அதிகமாகப் பாதிப்பதில்லை. இரண்டாவது அம்சத்தில் பொருளாதார அமைப்பில் குறை இல்லை என்றால், அநேகமாகப் பிரச்சினை இருக்காது. ஆனால், ‘கணவனுக்கு வருமானம் இல்லை. மனைவிக்குக் குடும்பப் பொறுப்பு இல்லை’ என்ற நிலை ஏற்பட்டால், அந்தப் பற்றாக்குறைப் பிரச்சினை குடும்பத்திற்குள் வந்து தாம்பத்ய உறவைப் பாதிக்கும். பற்றாக்குறை நீங்கினால் பிரச்சினையும் நீங்கும். மூன்றாவது அம்சம் நிறைவான அம்சமாக அமைந்துவிட்டால் குடும்பம் இனிதாக இருக்கும். கலகலப்பும், மகிழ்ச்சியும் அங்கே நீங்காமல் குடி இருக்கும்.
திருமணம் பலருக்குச் சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்துவிடுவதை நம்மால் எண்ணிப் பார்க்காமலும், வருந்தாமலும் இருக்க முடியவில்லை.
கணவனுடன் வாழமறுத்துத் தன் பிறந்தகம் சென்ற மனைவி, மனைவியைக் கைவிட்டு நீண்ட காலமாக விலகி இருக்கும் கணவன் இவர்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வழியே இல்லையா? இருக்கின்றது.
‘தாயார், தகப்பனார் முகத்தில் நீ விழித்தால் நான் உன்னோடு வாழ மாட்டேன்’ என்று சபதமிட்டு, சபதத்தை நிறைவேற்றிய பெண்களும் உண்டு. ஆனால், நம் சமூகத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மனைவியால் புறக்கணிக்கப்பட்ட ஆண்களைவிட அதிகம்.
கணவன் மனைவி பிரச்சினைகள் பெரும்பாலும் தோன்றுவது மேற்கூறப்பட்ட அம்சங்களுக்கு மாறுபட்ட குறைபாடுகளால்தாம். இந்த அம்சத்தின் பகுதிகளை, தன்மை, குணம், சுபாவம், பண்பு என்ற வகைகளாகப் பிரிக்கலாம்.
கணவன் கருமியாக இருப்பான்; மனைவி தாராளம் தண்ணீர்பட்ட பாடாக இருப்பாள். மனைவி முழுச் சோம்பேறியாக இருப்பாள்; கணவன் சுறுசுறுப்பானவனாக இருப்பான். மனைவி பொறுமைசாலியாக இருப்பாள்; கணவன் முன்கோபியாக இருப்பான். கணவன் பண்பிற் சிறந்த குடியில் பிறந்தவனாக இருப்பான்; மனைவி சிற்றினக் குடும்பத்தில் பிறந்தவளாக இருப்பாள். இந்த மாறுபட்ட குண இயல்புகளால் பிரச்சினைகள் பூதாகாரமாகத் தோன்றிவிடுகின்றன.
இந்த மாறுபாடுகள் நண்பர்களிடமோ, அண்டை அயலாரிடமோ, தொழில் பங்காளிகளிடமோ, உடன் வேலை செய்பவர்களிடமோ தோன்றினால், உறவைக் குறைத்துக் கொள்ளலாம்; அவசியமானால் முறித்துக் கொள்ளலாம். ஆனால், உறவினர்களிடம் அந்தக் கண்டிப்பைக் காட்டிவிட முடியாது. பெரும்பாலும் உறவினர்கள் ஒருமித்த குண இயல்பு உடையவர்களாக இருப்பதால், இந்த மாறுபாடுகள் அதிகம் இருக்காது. நெருங்கிய உறவுக்குள் திருமணம் நடந்தால், இந்த மாறுபாடுகள் விரிசலாகும் அளவுக்கு விபரீதமாக மாட்டா. புது உறவு, தூரத்துச் சொந்தம் போன்ற சம்பந்தங்களில்தாம் இந்தக் குறைபாடுகள் அதிகமாகக் காணப்படும்.
‘கணவன் மனைவி என்ற பந்தம் ஏற்பட்டபிறகு, உறவுதான் முக்கியம். அந்த உறவு பலப்படுவதற்கான காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். பலவீனப்படுத்தக் கூடிய எதையும் செய்துவிடக் கூடாது’ என்பது யாருக்குத்தான் தெரியாது? என்றாலும் குடும்பத்தில் ஏதாவது முக்கிய நிகழ்ச்சி வரும் பொழுது, சமயம் பார்த்துக் கொண்டு தயாராக இருக்கும் பிரச்சினை, தலை நீட்ட ஆரம்பித்துவிடும்.
ஒரு சுகாதார அதிகாரியின் மாப்பிள்ளை ஒரு விபத்தில் இறந்துவிட்டான். தந்தி வந்தது. எல்லோரும் அலறிப் புடைத்துக் கொண்டு கிளம்பியபொழுது, பெரிய இடத்தில் பிறந்த அவருடைய மருமகள் தனக்கு வரப்பிடிக்கவில்லை என்று சொன்னதுடன், கோபத்துடன் மாடிக்குப் போய்விட்டாள்! வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை, ‘எப்பொழுது புறப்படப் போகிறீர்கள்?’ என்று கேட்கும் பண்பற்ற கணவனைப் பற்றி, பண்புள்ள குடும்பத்தில் பிறந்த மனைவி என்ன நினைப்பாள்?
இத்தகையச் சிறிய சிறிய முரண்பாடுகள் வாழ்க்கையில் முட்டுக்கட்டைகளாக நிலைத்துவிடுவதும் உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் போக்கு இருந்தால் போரும், பூசலும் இல்லை. அதற்கு மாறாக, ஒருவர் விட்டுக்கொடுக்க, மற்றொருவர் பிடிவாதமாக இருந்தால், முடிவு மோசமாகத்தான் இருக்கும்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்ற பல திருமணங்கள் சோகத்தில் முடிவதற்கு இந்த மாறுபாடுகளும், வேறுபாடுகளுமே காரணங்களாக அமைந்துவிடுகின்றன. வாழ்க்கை கலைத்துப் போடப்பட்ட சீட்டுகளாகிவிடுகின்றது.
கணவனும் மனைவியும் மாறுபட்ட திசைகளில் வேறுபட்டவர்களாகப் போய்க் கொண்டு இருக்கின்றார்கள்.
யாரும் விரும்பிப் போகவில்லை. வெறுத்துத்தான் போகின்றார்கள். விருப்பமான வாழ்க்கையைப் பெற இந்த வெறுப்பு உதவுமா?
‘மண வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தாம்’. எத்தனை மோசமான கணவனாக இருந்தாலும், மனைவிக்கு அவன்தான் மகுடம். மகுடத்தைக் காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் ‘வாழ்க்கை’ என்ற ராஜ்யம் ஏது?
கைவிடப்பட்ட மனைவிக்கு ஆராய்ச்சியும், உபதேசமும் பயன்படா. அதுவே பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தால் பயன்படும். அதற்கு முதல் வழி-சிறந்த வழியும்கூட-மனைவி, தன்னைத் தானே அறிதல். அதாவது கணவனோடு முறிவு ஏற்படுவதற்குத் தான் எந்த அளவு காரணம் என்பதை அறிதல் வேண்டும். அதன் பின்னர் அந்தக் காரணத்தையும் அதனால் ஏற்பட்ட கோபதாபங்களையும் முழுதுமாக விலக்க வேண்டும். கணவனின் தவற்றை மறக்க வேண்டும். முறிவு ஏற்படும் அளவுக்கு, தான் பொறுமை இல்லாமல் நடந்து கொண்டதை எண்ணி வருந்த வேண்டும். எந்த நிலையிலும் கோபதாபங்கள் முண்டிக் கொண்டு வாராத அளவுக்கு மனத்தைத் துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பக்குவ நிலையில் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டால், இன்ஷா அல்லாஹ், கைமேல் பலன் கிடைக்கும். கைவிட்ட கணவன், அவள் காலடியில் வந்து நிற்பான்.
ஓர் ஆடிட்டருக்கு 5 குழந்தைகள் பிறந்தபிறகு பதவி உயர்வு கிடைத்தது. மனைவி மீண்டும் கருக் கொண்டாள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் அவர். ஆனாலும், படிப்பு அவரை உச்சிக்கு உயர்த்திவிட்டது. படிப்பும், பதவியும் இருக்கவே, பெரிய இடத்துச் சம்பந்தமாகக் கிடைத்தது. இருந்தாலும் அவருடைய பெற்றோர்களுக்குத் திருப்தியே ஏற்படவில்லை. “அப்பொழுது அந்தப் பதவிக்கு அந்தக் கல்யாணம். இப்பொழுது கிடைத்து இருக்கின்ற பெரிய பதவிக்கு ஏற்ற மாதிரி இன்னொரு கல்யாணம். உன் மனைவியைத் தள்ளி வை. இலட்சாதிபதி வீட்டில் பெண் எடுக்கலாம். நகையும், பணமும் ஏராளமாகக் கிடைக்கும்” என்று அவர்கள் ஆசையைத் தூண்டிவிட, ஆடிட்டரும் சம்மதித்தார். ‘இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டால் சிறைக்குப் போக வேண்டும்’ என்பதைக்கூட அறியாத பரிதாபத்திற்கு உரியவராக இருந்தார் அவர்.
மனைவி தாய் வீட்டுக்குப் பிரசவத்திற்குப் போனாள். கணவர் பெண் பார்க்கப் போனார்! எப்படியோ இந்த விஷயம் மனைவியின் காதுகளுக்கு எட்டியது. அவர் துடித்துப் போனார். அதிசயம்; அதற்கு ஏழாவது நாள் கணவர் அவரைத் தேடி வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டார்.
இந்த உண்மைக் கதையில் கணவர் தவறு செய்ய இருந்தார். மனைவி அதற்காகக் குமுறி வெடிக்காமல் கணவர் செய்ய இருந்த தவற்றைப் புறக்கணித்து, தமக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று பொறுமையாக இறைவனிடம் கையேந்தினார். அவருக்கு வேண்டியது கிடைத்தது. இதை விட்டுவிட்டு ‘தவறே செய்யாத மனைவி கணவனின் தவற்றை எதற்காக மன்னிக்க வேண்டும்?’ என்று குதர்க்கமாகக் கேட்டால், அதற்கு நியாயமான பதிலே இல்லை.
30, 35 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய இடத்துப்பெண்ணுக்கு வரன் தேடினார்கள். 40 வரன்களுக்குமேல் வந்து போனார்கள். கடைசியில் ஒரு வேலை இல்லாத பட்டதாரியைத் தேர்ந்து எடுத்தார்கள். பிள்ளை வீட்டார் அந்தச் சம்பந்தத்தை முடிக்க, அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டினார்கள். நிச்சயதார்த்தம் நடந்தது. அன்றிரவே பிள்ளையின் தகப்பனார், ‘நிச்சயத்தை ரத்துச் செய்ய வேண்டும். எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் இல்லை’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். பெண் வீட்டார்கள் கலகலத்துப் போய்விட்டார்கள். நிச்சயதார்த்தப் பத்திரிகை எழுதும் வரையில் உற்சாகம் காட்டிய அவர், இப்பொழுது ஏன் கத்திரித்துக் கொண்டு போக நினைக்கின்றார்? காரணம் புரியவில்லை. இந்த நிலையில் சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுப் போய்விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள்.
நாலைந்து நாட்களுக்குப்பிறகு பிள்ளையின் தந்தை, “வீடு எழுதி வைத்தால் கல்யாணம். இல்லையேல் கல்யாணம் இல்லை” என்று பெண்ணின் தகப்பனாருக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்து இருந்தார்.
நிச்சயதார்த்தம் வரை உவகையோடு உறவாடியவர், அதே நட்புடன் ஒரு வீட்டைச் சீதனமாகக் கொடுக்கும்படிக் கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு ஏன் இப்படிக் கிரிமினல் புத்தியோடு போராடுகிறார்? யாருக்கும் எதுவும் புரியவில்லை. வீட்டில் உள்ள ஒரு பெரியவருக்கு மட்டும் அது புரிந்திருந்தது. “இது கர்மம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்ணின் தாயார் தம் தம்பிக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அந்தப் பாவம் இன்று அவருடைய பெண்ணை நோக்கி வந்து இருக்கின்றது” என்றார் அவர்.
50 வயதுள்ள ஒரு செல்வருக்கு 5 பிள்ளைகள். வயது வந்த பிள்ளைகளையும், மனைவியையும், மிகப் பெரிய சொத்தையும் விட்டுவிட்டு, தலைக்கு மீறிய பிள்ளைகளையும், தலை நரைத்த கணவனையும் உதறித் தள்ளிவிட்டு வந்த ஒரு பெண்மணியை ஊர் அறியக் கல்யாணம் செய்து கொண்டு ஆரவாரமாக விழாக் கொண்டாடினார். அவருடைய முதல் மனைவி, “யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை. அன்று என் தாயார் இதையே செய்தார். இன்று என் கணவர் அதைத் திரும்பச் செய்கின்றார்” என்றார்.
ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையைக் குறுக்கே புகுந்து குழறுபடி செய்து தம் பெண்ணுக்கு மணம் முடித்தார் ஒருவர். அவருடைய கடைசிப் பெண், திருமணமான 5 ஆண்டுகள் கழித்துக் கணவனால் விலக்கப்பட்டு வாழாவெட்டியானாள்.
பிரச்சினையின் தோற்றுவாயான காரணம் தெரிந்ததாக இருந்தாலும் சரி, தெரியாததாக இருந்தாலும் சரி, இன்றைய நிலை என்ன? ‘கணவன் கைவிட்டுச் சென்று ஓராண்டு காலமாகின்றது. போனவர் போனவர்தானா? அல்லது திரும்பி வருவாரா? தெரியவில்லை. எதிர்காலத்தை நினைத்தால் இருள் மயமாக இருக்கின்றது. நினைக்கவே பயமாக இருக்கின்றது. இந்தக் குழப்பமான நிலையில் எதைச் செய்வது? எதை நினைப்பது? எதை நினைத்தாலும் கசப்பாக இருக்கின்றது. குழந்தையின் மேல்கூடக் கோபம் கோபமாக வருகின்றது. அவ்வளவு ஏன்? தன் மேலேயே வெறுப்பு ஏற்படுகின்றது. யாராவது ஆறுதலாகப் பேசினால்கூட, “இவர்கள் எல்லாம் ஏன் இப்படி உயிரை வாங்குகின்றார்கள்?” என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஏன் பிறந்தோம்? எத்தனைக் காலத்திற்கு இந்தச் சித்திரவதை? என்பவை போன்ற விரக்தியான நினைவுகள் சவுக்கைச் சுழற்றுகின்றன. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை.
இப்படி எல்லாம் அலையிடை அகப்பட்ட துரும்பைப் போல அல்லற்படும் மனம் இறைவனை நினைத்தால், ஆறுதலோடு அமைதி கிடைப்பதையும், உள்ளத்தில் குளிர்ச்சி பரவுவதையும் உணர முடியும். தாங்க முடியாத அளவுக்கு இருந்த மனப்பாரம், பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவில் குறைந்து போகும். ‘இந்த ஆறுதல், அமைதி, பொறுமை போன்றவை மனத்திலே எழுந்துவிட்டால், பிரச்சினை விலகுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றிவிட்டன’ என்று பொருள்.
posted by: Abu Safiyah