அன்று நீ…!
அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் !
அதுதான் உன் மரணநாள்
அன்று நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று!
அன்று நீ கண்மூடும் முன் பார்த்த பார்வையும்
உன் இறுதிப் பார்வையென எண்ணியிருக்கமாட்டாய்!
அன்று உன் உறவினர்களும் நண்பர்களும் அழுதாலும்
உன்னைக் காப்பாற்ற யாராலும் இயலாது!
அன்று அனைவரின் அழுகையும் உன் முடிவினால் என்றாலும்
நீ உலகைப் பிரியும் கடைசி நொடி – உனக்குள்
அன்று நீ அழுவதோ/சிரிப்பதோ
உன் நல்ல/தீய செயல்களைப் பொறுத்தே அமையும்!
அன்று உன்னால் குளிக்க இயலாது – ஆனால்
நீ குளிப்பாட்டப்படுவாய்!
அன்று உன்னால் ஆடை அணிய இயலாது – ஆனால்
நீ ஆடை அணிவிக்கப்படுவாய்!
அன்று நீ யாரையும் பார்க்க இயலாது – ஆனால்
நீ அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுவாய்!
அன்று உன்னால் பள்ளிக்குச் செல்ல இயலாது – ஆனால்
நீ பள்ளிக்கு கொண்டுச் செல்லப்படுவாய்!
அன்று உன்னால் தொழ இயலாது – ஆனால்
நீ முன்னால் வைக்கப்பட்டு உனக்காக தொழுகை நடத்தப்படும்!
அன்று உன்னால் இறைவனிடம் பிரார்த்திக்க இயலாது
நீ ஈடேற்றம் அடைய உனக்காக பிரார்த்திக்கப்படும்!
அன்று முதல் உன் குடும்பத்தினரோடு பஞ்சணையில் உறங்க இயலாது
நீ மண்குழிக்குள் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவாய்!
அன்று உன்னால் வீட்டிற்கு திரும்பி வர இயலாது – ஆனால்
உன்னை விட்டுவிட்டு உன் உறவினர்கள் வீடு திரும்பிவிடுவார்கள்!
அந்த ‘அன்று’ இன்றாகக் கூட இருக்கலாம் – அதற்காக
உன் ஏக இறைவனை அஞ்சி தயாராகிக்கொள்!
அல்குர்ஆனின் சில வசனங்கள்:
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!” [அல்குர்ஆன் 4:78]
மனிதர்களே! உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துக் கொள்ளுங்கள். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் அவ்விருவரிலிருந்து, ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்; எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 4:1]
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சித்துப் பார்ப்பதற்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். [அல்குர்ஆன் 21:35]
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம். மேலும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வரவேண்டியிருக்கிறது. [அல்குர்ஆன் 50:43]
அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் எனக் கருதியோர் நிச்சயமாக நஷ்டம் அடைந்துவிட்டனர். திடீரென அந்த (மறுமை நாள்) நேரம் அவர்களிடம் வரும்பொழுது ‘உலகில் நாங்கள் வரம்பு மீறி நடந்துக் கொண்டதால் எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே!’ என்று கூறுவார்கள். மேலும் தங்கள் முதுகுகளின் மேல் தங்கள் (பாவச்)சுமைகளை அவர்கள் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 6:31]
source: http://payanikkumpaathai.blogspot.com/2011/06/blog-post_17.html#more